பெண்களின் சம உரிமை!

திண்ணையில் தூங்கிக் கொண்டிருந்த மூர்த்தி விழித்துக் கொண்டு சமையலறையில் இவர்கள் பேசுவதை அரை குறையாகக் கேட்டுக் கொண்டிருந்தான் . இடையில் வந்து சடாலென்று பேச்சில் கலந்து கொள்வதைவிடச் சற்றுப் பொறுத்திருந்து எழுந்து போகலாம் என்று நினைத்து அங்கேயே படுத்திருந்தான்.

பாலு புதுப் பள்ளிக்கூடத்தில் சேர இருப்பது அவனுக்கு மகிழ்ச்சியைத் தந்தது. அடுத்த வீட்டுக்குள் போய் பவானியுடன் பேசுவதற்கு ஏதாவது ஒரு சாக்கு வேண்டாமா?

பாலு கூறியதைக் கேட்டதும் கல்யாணம், ”அதற்கென்ன அப்பா டவுனில் இருக்கும் முனிசிபல் ஹைஸ்கூலில் சேர்த்தால் போச்சு. நாளைக்குப் போய் ரைட்டரைக் கேட்டு டி.ஸி. வாங்கி வந்துவிடு" என்றார் .

"அவனை ஏன் போகச் சொல்ல வேண்டும்? நானே போய் வாங்கி வருகிறேன்" என்றாள் பவானி.

திண்ணையிலிருந்த மூர்த்தி மெதுவாகக் கூடத்தை அடைந்தான். பேச்சு சுவாரஸ்யமான கட்டத்துக்குத் திரும்புகிறது என்பதை அறிந்ததும் அடுத்தாற்போல் இருந்த சமையலறைக்குள் அவன் நுழைவதற்கு அதிக நேரம் பிடிக்கவில்லை .

இது வரையில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த பவானி தயக்கத்துடன் எழுந்து நின்றாள்.

”நோ, நோ -- நீங்கள் பேசாமல் உட்கார்ந்து கொள்ளுங்கள் இந்தக் காலத்தில் -- அதுவும் ஈக்வாலிட்டி ஏற்பட்டிருக்கும் இந்த நாளில், ஒரு ஆணைப் பார்த்துப் பெண் எழுந்து நின்று மரியாதை செய்வது எல்லாம் எனக்குப் பிடிக்காது. உட்காருங்கள்" என்றான் மூர்த்தி .

பவானி தயங்கிக் கொண்டே உட்கார்ந்தாள்.

"நீ பாட்டுக்கு உட்கார் பவானி. அவன் உன் உடன் பிறந்தவன் மாதிரி" என்றாள் பார்வதி.

”சே! சே! சுத்தத் தவறு! உடன் பிறந்தவன் எதிரில் உட்காரலாம்; அன்னியன் எதிரில் உட்காரக் கூடாதாக்கும்! - பெண்கள் சுதந்திரம், சம உரிமை எல்லாம் சும்மா பேச்சளவிலே இருக்கிறதே தவிர, நடை முறையில் வரக் காணோமே" என்று அலுத்துக் கொண்டான் அவன்.

"அதெல்லாம் நடைமுறையில் வருவதற்கு முன்பு வாலிபர்களின் மனம் நன்றாகப் பண்பட வேண்டும். அது தெரியுமா உனக்கு மூர்த்தி? பேச்சிலே ஒழுங்கு இருந்தால் மட்டும் போதாது. செய்கையிலும் நடத்தையிலும் ஒழுக்கமும் பண்பாடும் நிரம்பி இருக்க வேண்டும். அது எல்லோரிடமும் இருக்கிறதா அப்பா? பெண்களை நிமிர்ந்து பார்க்காமல் போகிறவனை அசடன் என்றும், அப்பாவி என்றும் கேலி செய்கிறகாலம் ஆயிற்றே இது?" என்றார் கல்யாணராமன் .

மூர்த்தியின் முகம் சட்டென்று வாடிப் போயிற்று. "என்ன மாமா இது? நான் ஏதோ பேசப் போக நீங்கள் என்னவோ சொல்லுகிறீர்களே" என்று பேச்சை மாற்றினான்.

பவானிக்கு இந்தப் பேச்செல்லாம் பிடிக்கவில்லை. பஞ்சாயத்துப் பள்ளிக்கூடத்து ரைட்டரிடமிருந்து டி.ஸி வாங்குவது ’சிவனை நேரில் தரிசித்து வரம் வாங்கும் விஷயமாகவல்லவா இருக்கிறது?' என்று கவலைப்பட்டு உட்கார்ந்து கொண்டிருந்தாள்.

தலையைக் குனிந்து சிந்தனையில் மூழ்கி இருந்த பவானியின் தோற்றத்தை மூர்த்தி தன் ஒரக் கண்களால் அளவெடுத்துக் கொண்டான். கனகாம்பர வர்ணத்தில் மெல்லிய கரை போட்ட கைத்தறிப் புடவையை உடுத்தி, வெள்ளைச் ’சோலி' அணிந்திருந்தாள் அவள். அலை அலையாகப் படிந்து வளர்ந்திருந்த கூந்தலை முடிச்சிட்டி ருந்தாள் பவானி.

நீண்ட அவள் கண் இமைகள் இரண்டும் மை தீட்டப் பட்டவை போலக் கருமையுடன் விளங்கின. அவள் வேண்டுமென்று கண்களைச் சுழற்றுவது இல்லை. ஆனால், மனத்திலே குமிழியிடும் துயரம் அவள் கண்களில் தேங்கி அவைகளைச் சஞ்சலத்தில் ஆழ்த்தி அங்கும் இங்கும் சுழல வைத்தன.

'யாருடன் பேசினால் என்ன தவறு நேர்ந்து விடுமோ? யாரைப் பார்த்தால், ஏதாவது களங்கம் வந்து விடுமோ' என்றெல்லாம் அவள் மனம் தவித்துக் கொண்டிருந்தது. அழகாகப் பிறந்தது அவளுடைய குற்ற மில்லை. அழகை ஒரு பெண்ணுக்கு அள்ளி அளித்த ஆண்டவன் அவள் வாழ்க்கையைச் சூன்யமாக்கி விட்டானே. அவனுடைய குற்றம்தானே அது?

தண்ணீர் கொண்டு வருவதற்குக் குளத்துக்குப் போனால் அறுபது வயசான சேஷாத்ரி ஏதாவது காரணத்தை வைத்துக் கொண்டு அவளிடம் பேச வருகிறார்.

”பையன் நன்றாகப் படிக்கிறானா? வாசு போன அப்புறம் உன் அண்ணா இந்தப் பக்கமே வரவில்லையே? கூடப் பிறந்தவர்களே அப்படித்தான் அம்மா" என்று ஏதாவது பேசிக் கொண்டு நிற்பார் குளத்தங் கரையில்.

”என்னோடு பேசாதீர்கள். இதெல்லாம் என்ன அனாவசியமான பேச்சுக்கள்!" என்று அவரிடம் சொல்லி விட வேண்டும் என்று பவானி துடிப்பாள். ஆனால் ஊரில் நாலு பெரியவர்களுடைய உதவி தனக்குத் தேவையாக இருக்கும் என்று எண்ணி ஒரு பரிதாபச் சிரிப்புச் சிரித்து விட்டு அங்கிருந்து வீட்டுக்கு வந்து விடுவாள்.

தலையைக் குனிந்து கொண்டு அவள் உட்கார்ந்திருந்தாலும் அவளுடைய சிந்தனை பூராவும் பாலுவின் வருங்காலத்தை எப்படி உருவாக்குவது என்பதில் முனைந்திருந்தது. பவானி இப்படி திடீர் என்று மௌனியாகச் சிந்தனையில் மூழ்கி விடுவதை பார்வதியும் கல்யாணமும் கவனித்திருக்கிறார்கள். ஆனால் மூர்த்தி மட்டும் தன்னைப் பார்த்துத்தான் அவள் தலை குனிந்து உட் கார்ந்து இருக்கிறாள் என்று விகல்பமாக நினைத்துக் கொண்டு அந்த அதர்மமான கற்பனைக்கு உருவம் கொடுக்க ஆரம்பித்தான்.