புதுப் பள்ளிக்கூடம்

சற்று முன் விசிறிக் காம்பால் பவானி தன்னை அடித்ததை பாலு அடியோடு மறந்து விட்டான். அதைப் போலவே மகன் செய்த துஷ்டத்தனத்தைப் பவானி அறவே மறந்து. அவனை உபசரித்து உணவு பரிமாறினாள்.

பவானி குனிந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த பாலுவையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள். எலுமிச்சை வண்ண உடலும், அகன்ற பெரிய விழிகளும், சுருள் சுருளான கேசமும் கொண்ட அந்தப் பாலகன் உண்மையிலேயே அழகானவன். துரு துருவென்று பார்க்கும் அந்தப் பார்வையில் அவன் துடுக்குத் தனம் எல்லாம் தெரிந்தது . இப்படி அழகான ஒரு குழந்தையைப் பெற்றெடுத்து வளர்ப்பதே ஒரு பேறு என்று அவள் நினைத்தாள். ஆனால் ஊரார் அதை ஒப்புக் கொள்கிறார்களா? எப்படியாவது பாலுவை ஒரு நல்ல பள்ளிக் கூடத்தில் சேர்த்து விட்டால் அவன் விஷமங்களும் துடுக் குத்தனங்களும் ஓய்ந்து போகும். இந்தப் பஞ்சாயத்துப் பள்ளிக்கூடத்தில் குழந்தைகளைக் கவனிப்பதே இல்லை என்று நினைத்துக் கொண்டாள்.

பாலு சாப்பிட்டு விட்டுத் தட்டை எடுத்துக் கொண்டு கொல்லைப் புறம் சென்று கை அலம்பிக் கொண்டு உள்ளே வந்தான் வந்தவன் தாயின் இலையைக் கவனித்து விட்டு, "என்ன அம்மா! குழம்புச் சாதத்தை அளைந்து கொண்டு எந்தக் கோட்டையையோ பிடிக்க முயன்று கொண்டிருக்கிறாயே. சாதம் ஆறிப்போய் இருக்குமே" என்று கேட்டான். பவானி அதற்கு ஒன்றும் பதில் கூறவில்லை.

"ஏண்டா அப்பா! பள்ளிக்கூடம் திறக்க இன்னும் பதினைந்து தினங்கள் தானே இருக்கிறது? உன்னை வேறு பள்ளிக் கூடத்தில் சேர்க்க வேண்டுமே. பேசாமல் இருக்கிறாயேடா?" என்று கேட்டாள்.

பாலுவிற்குப் புதுப் பள்ளிக்கூடம் என்றதும் உற்சாகம் பொங்கி வந்தது. அவன் தாயின் அருகில் வந்து உட்கார்ந்து கொண்டு, "ஓ! அதுக்கென்ன அம்மா! சேர்ந்தால் போச்சு. டி. ஸி. தான் வாங்கணும். ரைட்டரைக் கேட்டால் கொடுப்பார். டி.ஸி. வாங்க நாளைக்குப் போகட்டுமா?" என்றான் ஆவலுடன்.

பவானிக்கு ஒரே கவலை. புதுப் பள்ளிக் கூடத்தில் அவனைச் சேர்ப்பதற்கு யாராவது பெரியவர்களாக ஏற்றுக் கொண்டு செய்தால் தேவலை என்று நினைத்தாள்.

அடுத்த வீட்டுக் கல்யாணராமன் அவளுக்கு எது வேண்டுமானாலும் செய்வார். ஒவ்வொன்றிற்கும் போய் அவரைத் தொந்தரவு செய்ய வேண்டுமே என்று யோசித்தாள் பவானி. வேறே அவளுக்காக உதவ அந்த ஊரில் யார் இருக்கிறார்கள்? மாசம் பிறந்தவுடன் நாலாம் தேதியன்று ஊரிலிருந்து ஐம்பது ரூபாய் வந்து கொண்டிருந்தது. மணியார்டர் கூப்பனில் ஒரு நாலு வரிகள் எழுதியிருப்பான் நாகராஜன். "பவானிக்கு ஆசீர்வாதம். பாலு சமத்தாகப் படித்துக் கொண்டிருப்பான் என்று நினைக்கிறேன். உனக்கு மேலும் பணம் ஏதாவது தேவையானால் எழுதவும்" என்று இருக்கும்.

இரண்டு பேர் சாப்பிட மாதம் ஐம்பது ரூபாய்க்கு மேல் ஆகிவிடுமா? கல்யாணராமன் பவானியிடமிருந்து ஒரு சல்லிக் காசுகூட வாடகைக்கு என்று வாங்கிக் கொள்வதில்லை. வீட்டை வாங்கி இப்படி இனாமாக விடுவார்களோ என்று நாலு பேர் பேசிக் கொண்டார்கள். "அதெல்லாம் என் இஷ்டம், உங்களுக்கு என்ன ஐயா?"

என்று அடித்துப் பேசினார் அவர்.

"அது ஒரு அரைப் பைத்தியம். ராஜா மாதிரி மருமகன் இருக்கிறான். அவனுக்குக் காலா காலத்தில் கல்யாணம் பண்ணி வைத்து. இருக்கிறதை அவனுக்குக் கொடுக்கக் கூடாதா? மேட்டுக் கழனியிலிருந்த மனையைப் பள்ளிக்கூடம் கட்டத் தானம் பண்ணி விட்டதாமே!" என்று சிலர் பேசிக் கேலி செய்தார்கள்.

"இந்தக் காலத்தில், தான தருமம் செய்து அது பத்திரிகைகளிலும் வெளியானால் தான் சார் பெருமை!" என்றார் ஒரு பொறாமைக்காரர்.

இவர்கள் இப்படிப் பேசுவதைக் கேட்டு பார்வதி அவரிடம், "மூர்த்திக்கும் வயசாகிறதே, நல்ல இடமாக வந்தால் பாருங்களேன்" என்றாள். மூர்த்தியைக் கல்யாணராமன் கவனிக்கவில்லை என்று ஊரார் சொல்வது பார்வதியின் காதில் விழுந்தது. அதனால் அவள் கணவனைத் தொந்தரவு செய்ய ஆரம்பித்தாள்.

"நீயும் நானும் பார்த்துச் செய்து வைக்கிற கல்யாணத்துக்கு அவன் இசைந்து வருவானா? அவனுக்கு 'லவ்' இல்லாமல் கல்யாணம் பண்ணிக் கொள்ளவே பிடிக்காதே" என்றார் அவர்.

பார்வதிக்கு இந்தக் காலத்து வழக்கங்களெல்லாம் சிறிது தெரியும். கணவர் என்ன சொல்கிறார் என்பது அவளுக்குப் புரிந்தது. நாற்பத்தைந்து வயதுக்கு மேல் ஆகியிருந்தாலும் முகத்தில் வெட்கம் படர.."உங்களுக்கு என்ன வேலை? எதையாவது சொல்வீர்கள். அப்படி அவன் யாரையாவது 'லவ்' பண்ணுகிறான் என்று தெரிந்தால் அதன்படியே செய்து விட்டுப் போகிறது" என்றாள்.

"ஆகட்டும். பார்க்கலாம். கல்யாணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர் போன்றது. இந்தப் பிள்ளைக்கு ஏற்ற ஒரு பெண்ணைத் தேடுவது மிகவும் சிரமம். பேச்சிலும் செய்கையிலும் ஒழுங்கு தவறியவன். அவனைத் திருத்தி நல்வழிப்படுத்த ஒரு பண்புள்ள பெண் தான் வேண்டும்" என்று மனைவியைச் சமாதானம் செய்தார் கல்யாணராமன்.

மூர்த்தி பசுமலைக்கு வந்த நாட்களாக அவனைப் பற்றி அதிகம் கவலைப்பட்டவர் கல்யாணராமன் தான். நாலு இடங்களுக்குப் போய் விட்டு வந்தவன் கௌரவமாகவும் கண்யமாகவும் நடந்து கொள்வான் என்று எதிர்பார்த்தார் அவர். ஆனால் அவனுடைய போக்கு சிறிதும் மாறவில்லை என்று தெரிந்ததும் அவர் மனம் வருந்தினார். அன்று காலையில் தெருவில் நடந்த சில்லறைச் சண்டைக்கு அப்புறம் அவர். மூர்த்தி பவானியின் வீட்டுக்குள் போய் விட்டு வந்ததை விரும்பவில்லை. "இவன் தத்துப் பித்தென்று பேசிக் கொண்டு அங்கே போவானேன்?' என்று தான் அவர் நினைத்தார். மூர்த்தி தெருத் திண்ணையில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தபோது கல்யாணம் தாகத்துக்குச் சாப்பிட உள்ளே சென்றார். அங்கே பார்வதி வெள்ளரிப் பிஞ்சுகளைத் துண்டங்களாக நறுக்கி, மிளகும் உப்பும் சேர்த்துப் பொடி செய்து அதில் துண்டங்களைப் பிசிறி இரண்டு கிண்ணங்களில் எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்.

"ஏது வெள்ளரிக்காய்? வாங்கினாயா என்ன?" என்று கேட்டுக் கொண்டே கல்யாணம் மணையில் உட்கார்ந்து கொண்டார்.

"ஆமாம். மேட்டுக் கழனியிலிருந்து அந்தப் பெண் பச்சையம்மாள் கொண்டு வந்தது. மூர்த்திதான் விலை பேசி வாங்கினான். அவன் தான் என்னமாகப் பேரம் பேசுகிறான் என்கிறீர்கள்? அந்தப் பெண்ணிடம் குழைந்து குழைந்து பேசி வாங்கினான்" என்று மருமகன் சமர்த்தை மெச்சி வாயாரப் புகழ்ந்து கொண்டாள் பார்வதி.

கல்யாணத்துக்கு இதைக் கேட்கவே அருவருப்பாக இருந்தது. எந்தப் பெண்ணைப் பார்த்தாலும், இப்படிப் பல்லைக் காட்டும் மூர்த்தியின் மேல் அவருக்கு ஆத்திரமாக வந்தது.

"இந்தா! சிறிசுகள் வந்தால் நீ பேரம் செய்து வாங்குவாயா? மூர்த்தி வாங்கினான் கீர்த்தி வாங்கினான் என்கிறாயே! அந்தக் கல்யாண விஷயம் மறந்துவிட்ட தாக்கும் உனக்கு! நீதான் எதையும் லேசில் மறந்து போகிறவளாயிற்றே' ' என்று கண்டித்தார் அவர்.

பார்வதி பதில் கூறுவதற்குள் கொல்லைக் கதவை திறந்து கொண்டு பவானியும் பாலுவும் உள்ளே வந்தார்கள். பாலு கல்யாணத்தின் அருகில் சென்று உட்கார்ந்து வெகு சுவாதீனமாகக் கிண்ணத்திலிருந்த வெள்ளரி துண்டுகளை எடுத்துச் சாப்பிட ஆரம்பித்தான்.

பவானி பார்வதியின் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டாள். சிறிது நேரம் அங்கிருந்த யாருமே பேசவில்லை. பனியன் கூடப் போடாமல் வெற்றுடம்பாக அறையில் நிஜாருடன் உட்கார்ந்திருந்தான் பாலு. காய்களை நறுக்கி முடித்ததும் அரிவாள் மணையை ஒருபுறமாக வைத்துவிட்டுத் திரும்பிய பார்வதியின் கண்களில் பாலுவின் விலாப்புறம் தெரிந்தது. வரி வரியாக விசிறிக் காம்பால் அடித்த அடிகள் அங்கே அந்தப் பொன்மேனியில் கன்றிப்போய்த் தென்பட்டன. ஒரு மகவுக்காகத் தவமிருந்த அந்தப் பெண் உள்ளத்தில் வேதனை நிரம்பியது. பச்சைப் பாலகன், ஒன்றும் தெரியாத வயசு. இப்படி அடியும் உதையும் வாங்க அந்தக் குழந்தை செய்த தவறு தான் என்ன என்று நினைத்துப் பார்வதி கண் கலங்கினாள். புடவைத் தலைப்பால் கண்களைத் துடைத்துக் கொண்டு அவள், "பவானி! குழந்தையை அடித்தாயா?" என்று கேட்டாள்.

கல்யாணராமன் அப்பொழுது தான் பாலுவைக் கவனித்தார். வரிவரியாகத் தெரிந்த அந்த அடிகளைப் பார்த்ததும் அவர் பவானியை ஏறிட்டுப் பார்த்தார். அந்தப் பார்வையில் பிள்ளையைப் பெற்று விட்டால் மட்டும் போதாது. எப்படி வளர்க்க வேண்டும் என்றும் தெரிந்து இருக்க வேண்டும் எனும் பாவம் தொனித்தது. வயசான அத்தம்பதி தன்னை ஒரு தினுசாகப் பார்ப்பதை உணர்ந்து வெட்கித் தலை குனிந்தாள்,

"ஆமாம் மாமி. பாலுவை அடித்து விட்டேன். ஊரார் சொன்னதை நீங்கள் கேட்டிருந்தால் நான் அடித்தது சரியா தவறா என்று தெரிந்து கொண்டிருப்பீர்கள்" என்றாள் பவானி.

”ஊரார் என்ன சொல்லி விட்டார்கள் பவானி? தகப்பன் இல்லாத பிள்ளை என்று தானே சொன்னார்கள். வாஸ்தவம்தானே அம்மா அது ? வாசு இருந்திருந்தால் பாலுவை நீ இப்படி அடித்திருப்பாயா?" என்று கேட்டார் கல்யாணம்.

தன்னை அடித்ததற்காக அம்மாவை எல்லோரும் கண்டித்துப் பேசுவதைப் பாலு விரும்பவில்லை. ஆகவே அவன் கணீரென்ற குரலில்.."அம்மா அடித்தால் பரவா யில்லை மாமா. அதற்குப் பதிலாக எனக்கு இரண்டு பங்கு உருளைக் கிழங்கு பொடிமாஸ் போட்டு விட்டாள். அத்தோடு என்னைக் கட்டிக் கொண்டு, 'என் கண்ணே, ஏண்டா நீ விஷமம் செய்கிறாய்?' என்று கேட்டுக் கண்ணீர் விட்டாள்" என்றான் பாலு.

வெப்பத்தால் சுடும் மணல் வெளியின் அடித்தனத்திலே ஓடும் குளிர்ந்த நீரைப் போல தாயின் கருணை இதயத்தின் ஆழத்திலே தேங்கிக் கிடக்கிறது. சமயம் நேர்ந்தபோது அது பொங்கிப் பிரவாகமாக வெளியே வருகிறது. அழகிய சுனைகளையும் நீர் ஊற்றுக்களையும் வற்றாத ஆறுகளையும் தன் அகத்தே கொண்டிருக்கும் பூமிதேவி. குமுறும் எரிமலைகளையும், கொதிக்கும் ஊர் றுக்களையும் கூடத் தாங்கியிருக்கிறாள். தாயின் உள்ளத்தில் கருணையும் கண்டிப்பும், அன்பும் கோபமும் ஒன்றோடொன்று பிணைந்து தான் இருக்கும்.

அம்மா வேண்டுமென்று தன்னை அடிக்கவில்லை. ஊரார் ஏசுகிறார்களே என்று குமுறித்தான் அடித்தாள் என்பதை அந்த பிஞ்சு மனம் புரிந்து கொண்டதோ இல்லையோ? ”என் கண்ணே!" என்று அவள் அவனை அன்புடன் அணைத்துக் கொண்டவுடன் அவன் அடியை மறந்து விட்டான். இனிமேல் விஷமம் செய்யக் கூடாது.. என்று தீர்மானித்துக் கொண்டான்.

கல்யாணராமன் தன்னையே நொந்து கொண்டார் ஒரு கணம். விரிந்த கடலைப் போல வியாபித்து நிற்கும் தாயின் அன்புக்குச் சற்று முன் களங்கம் கற்பிக்க முனைந்தார் அல்லவா?

பார்வதி மட்டும் அருகில் இருந்த அலமாரியைத் திறந்து தேங்காய் எண்ணெயை எடுத்துப் பஞ்சில் தோய்த்து பாலுவின் விலாப் புறத்தில் தடவிக் கொடுத்தாள். பவானிக்குப் பாலுவின் விலாவைப் பார்க்கும் போதெல்லாம் இதயம் வலுத்தது.

”நாளைக்குச் சரியாகப் போய்விடும் மாமி', என்றான் பாலு அலட்சியமாக.

"என்ன சரியாகப் போகிறதோ, போ! ஆடு மாடுகளைக் கூட இப்படி அடிக்கக் கூடாது" என்றாள் பார்வதி சற்று உஷ்ணமாகவே.

"அப்படியா மாமி! எங்க பள்ளிக்கூடத்து வாத்தியார்கள் இதைவிடக் கேவலமாக அடிப்பார்கள். ஒரு வாத்தியார் பிரம்பால் அடித்தால் வெளியே வரி வரியாகத் தெரிந்து விடும் என்று தலையில் 'நறுக்' 'நறுக்' சென்று குட்டுவார். ஒருவர் காதைப் பிடித்துத் திருகுவார். ஒருவர் வாய்க்கு வந்தபடி ஏசுவார்" என்று பாலு தன் பள்ளிக்கூடத்தைப் பற்றிப் பேச ஆரம்பித்தான். பிறகு அவன், "மாமா, அடுத்த தடவை என்னை வேறு பள்ளிக்கூடத்தில் சேர்த்து விடுங்கள். அதைப்பற்றிக் கேட்கத்தான் நானும் அம்மாவும் இங்கே வந்தோம்' என்றான்.