விசிறிக் காம்பு

குழந்தை பாலுவுக்குப் பிடிக்குமே என்று செய்து வத்திருந்த முருங்கைக்காய் சாம்பாரும் உருளைக் கிழங்கு பொடிமாசும் சமையலறையில் அடுப்பின் கீழ் ஆறிப் போய்க் கொண்டிருந்தது. பவானி கன்னத்தில் கையை ஊன்றித் தூணில் சாய்ந்து உட்கார்ந்து விட்டாள்.

ஊஞ்சல் சங்கிலியைப் பிடித்துக் கொண்டு நின்றிருந்த பாலு விசிறிக் காம்பால் பட்ட அடிகளைத் தடவிப்பார்த்துக் கொண்டு நின்றிருந்தான். தெருவிலே சடுகுடு ஆடினால் தண்டனை. குளத்துக்குப் போனால் அடி. கிணற்றில் இறங்கினால் உதை. பள்ளிக்-கூடம் திறந்திருந்தால் இருக்கவே இருக்கின்றன புஸ்தகங்களும் வாத்தியார்களும்! இவ்வளவு பெரிய லீவைத் தந்து விட்டு அதைக் கழிப்பது எப்படி என்று சொல்லித் தராமல் இருக்கிறார்களே என்று நினைத்து ஏங்கிக் கொண்டிருந்தான். வயிற்றில் பசி. சற்று முன் உள்ளேயிருந்து வந்த முருங்கைக்காய் சாம்பாரின் வாசனை மூக்கைத் துளைத்தது. சாம்பார் சாதம் சாப்பிட வேண்டும் என்று அவன் நாக்கில் ஜலம் ஊறிற்று. ஆனால் பவானி அவன் நின்றிருந்த பக்கம் கூடத் திரும்ப வில்லை. என்னவோ பெரிதாக நடந்து விட்டதுபோல் முகத்தை 'உர்' ரென்று வைத்துக் கொண்டு உட்கார்ந்து விட்டாள்.

பாலுவுக்குக் கால்கள் வலி எடுக்கவே மெதுவாக ஊஞ்சலில் உட்கார்ந்து கொண்டான். பவானியின் கண்களிலிருந்து தாரை தாரையாகக் கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது. ஊராரின் கடுஞ்சொற்கள் அவள் நொந்த மனத்தில் வேல் கொண்டு குத்தித் துளைத்தன.

பாலு தாயைக் கவனித்துக் கொண்டே ஊஞ்சலில் சாய்ந்து தூங்க ஆரம்பித்தான். பசியினால் ஏற்பட்ட களைப்பினால் அவன் அயர்ந்து தூங்கிப் போனான். பாலுவின் உள்ளம் விழித்துக் கொண்டது. பசுமலையை விட்டு அவனும் அவன் அம்மாவும் ரயில் ஏறி சென்னைக்குப் போகிறார்கள். அங்கே ரயிலடியில் அவனுக்குப் பிரமாதமான வரவேற்பு மாமா நாகராஜனும், மாமி கோமதியும், அவர்கள் மகள் சுதியும் அவனை ஆசையுடன் வரவேற்றுக் காரில் வீட்டுக்கு அழைத்துப் போகிறார்கள். சுமதிதான் எவ்வளவு நல்ல பெண்! தன்னுடைய மேஜையிலேயே பாலுவின் புஸ்தகங்களை வைத்துக் கொள்ளச் சொல்கிறாள். தன்னுடைய விளையாட்டுச் சாமான்கள் அவனுக்குத்தான் என்கிறாள் அவள் கண்களைச் சுழட்டிப் பேசி கலீரென்று சிரிக்கும் போதெல்லாம் பாலு மெய்ம்மறந்து போகிறான்.

"ஏலே பையா! நீ நீச்சல் கத்துக்கொள்ளடா, உடம்புக்கு நல்லது" என்கிறார் மாமா நாகராஜன்.

பவானி வியர்க்க விறு விறுக்க வருகிறாள். "அண்ணா ! இந்த மாதிரியெல்லாம் அவனுக்கு இடங் கொடுக்காதே! அதெல்லாம் ஒன்றும் வேண்டாம். அங்கேதான் ஆற்றிலும் குளத்திலும் குதித்துக் கொண்டிருந்தானே! போதும் அண்ணா!"

"அதெல்லாம் வேண்டாம் மாமா" என்று பரிதாபமாகச் சொல்லிவிட்டு பாலு சுமதியிடம், "இந்த ஊரிலே விசிறிக்கு காம்பு நீளமா குட்டையா?" என்று கேட்கிறான்.

"ஏண்டா பாலு! விசிறியெல்லாம் இங்கே அடுப்பு விசிறத்தான் உபயோகப்படும். காற்று வேணுமா உனக்கு? இந்தா ...பட்..." என்று மின் விசிறியின் பொறியைத் தட்டி விடுகிறாள் சுமதி.

காற்று சுழன்று சுழன்று வேகமாக அடிக்கிறது.

”அப்பா! என்ன காற்று மனசுக்கு சுகமாக இதமாக இல்லையே” என்று பாலு திணறுகிறான். அந்தத் திணறலில் தவித்து ' பொத்' தென்று விழுகிறான்.

கண் விழித்துப் பார்த்தபோது பவானியின் மடியில் படுத்துக்கொண்டிருந்தான் பாலு.

"ஏண்டா கண்ணா ! உனக்குப் பசிக்கவில்லையா மணி இரண்டாகப் போகிறதே! சாப்பிட வாயேன்" என்று அழைத்தாள் பவானி.

"நீயும்தான் சாப்பிடவில்லை அம்மா, உனக்குப் பசிக்காதா? வா, நானும் நீயும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடலாம்" என்று சொல்லியபடி பாலு எழுந்து சமையலறைக்குள் புகுந்து இரண்டு தட்டுக்களை எடுத்து வைத்துத் தானே உணவு பரிமாற ஆரம்பித்தான்.

சற்று முன் கண்ணீரால் நனைந்து போயிருந்த பவானியின் கண்கள் இவ்வதிசயத்தைப் பார்த்து மகிழ்ந்தன. "நீ கொஞ்சம் உருளைக்கிழங்கு அதிகமாகவே போட்டுக் கொள்ளடா பாலு!" என்று மகிழ்ச்சி ததும்பச் சொல்லிக் கொண்டே பவானி தட்டின் முன்னால் உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தாள்.