மொட்டைக் கடிதம்....!

வாசல் திண்ணையில் உட்கார்ந்து வெற்றிலை போட்டுக் கொண்டிருந்த கல்யாண-ராமன். மூர்த்தி அடுத்த வீட்டுக்குள்ளிருந்து வெளியே வருவதைப் பார்த்து திடுக்கிட்டார்! மூர்த்தி ஒருவரிடம் அனுதாபம் காட்டுகிறான் என்றால், அதில் சுயநலம் கலந்து இருக்குமே தவிர, தன்னலமற்ற தியாக உணர்ச்சி என்று அதை ஏற்றுக் கொள்ள முடியாது.

ஐந்தாறு வருஷங்களுக்கு முன்பு நடந்த சம்பவம் கல்யாணத்தின் நினைவுக்கு வரவே அவர் மனம் மேலும் வேதனையில் ஆழ்ந்தது.

மூர்த்திக்கு அப்போது வயது இருபத்தைந்து இருக்கும். பசுமலையிலிருந்து அடுத்த டவுனில் இருக்கும் காலேஜுக்கு அவன் சைக்கிளில் போய் வருவான். அவன் படிக்கும் காலேஜிலேயே அந்த ஊர்ப் பெண்ணொருத்தி படித்துக் கொண்டிருந்தாள். அவள் தினமும் மாட்டு வண்டியில் காலேஜுக்குப் போகிற வழக்கம். குடும்பத்துக்கு மூத்த பெண்ணாக இருந்ததாலும், பெற்ற தகப்பன் இல்லாததாலும் அவள் படித்து வேலைக்குப் போய்க் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அவள் தலையில் விழுந்திருந்தது. ஆகவே, அவள் அந்த எண்ணத்தில் உறுதியாக நின்று படித்து வந்தாள்.

மாட்டு வண்டி கிராமத்தின் எல்லையை அடைந்து டவுனுக்குப் போகும் ரஸ்தாவை அடைந்ததும், எங்கிருந்தோ மாயமாகக் குறுக்கு வழியாக வந்து மூர்த்தி சைக்கிளுடன் அவள் எதிரில் காட்சி அளிப்பான். பலரக சினிமாப் பாட்டுக்களையும், பாரதியின் காதல் கவிதைகளையும் பாடித் தீர்ப்பான்.

நம்முடைய செந்தமிழ் மொழியிலே அவனுக்கு ஏற்பட்ட அக்கறை கொஞ்ச நஞ்சமில்லை. அகநானூறில் காதலைப் பற்றி எத்தனை பாட்டுக்கள் இருக்கின்றன என்று அறிய அவனுக்கு அக்கறை ஏற்பட்டது. பாரதியாரின் குயில் பாட்டை அவன் தலை கீழாக ஒப்புவிக்கப் பயிற்சி செய்து கொண்டான். இவனுடைய காதல் வேதனையும், பைத்தியக்காரத் தனமான பாட்டுக்களும் அந்தப் பெண்ணுக்கு வேதனையையும் அருவருப்பையும் மூட்டின.

"என்ன ஐயா! ஒரு நாளைப் போல மாட்டுக்கு எதிரே சைக்கிளை ஓட்டுறீங்க?" என்று வண்டிக்காரன் அலுத்துக் கொண்டான்.

”சைக்கிள் மேலேயே விடப்பா நீ. இப்படிப் பட்டவங்களுக்கு தயை காட்டக் கூடாது" என்று கூட அவள் தன் எதிர்ப்பைத் தெரிவித்துக் கொண்டாள். மூர்த்திக்கு அவள் வாய் திறந்து பேசியதே பிரும்மானந்தமாக இருந்தது.

வண்டிக்காரன் வண்டியை அவன் மேல் ஏற்றினால் கூடத் தேவலை என்று நினைத்து அந்தப் பாக்கியத்துக்காக அவன் காத்துக் கிடந்தான். அதன் பிறகு அந்த யுவதி நேராகவே அவனிடம் தைரியமாகப் பேசினாள்.

”மிஸ்டர்! பாதை உங்களுக்குத் தான் சொந்தம் என்று நினைத்துக் கொள்கிறீர்களே. அது சுத்தத் தவறு!" என்று கண்டித்தாள் அவள். கோபத்தினால் சிவந்த அவள் முகம் பகமலைக் கிராமத்தில் இருக்கும் குளத்தில் அலர்ந்திருக்கும் செந்தாமரையை நினைவூட்டி யது அவனுக்கு.

மூர்த்தி திடு திப்பென்று ஒரு முடிவுக்கு வந்தான். அவனுடன் அவள் தைரியமாகப் பேசுகிறாள். அவன் அவள் வண்டியின் பின்னாலேயே சைக்கிளை ஓட்டி வருவதைப் பார்த்து ஒரு தினுசாகக் சிரித்திருக்கிறாள். வெட்டும் ஒரு பார்வையை அவன் பக்கம் வீசி விட்டு அவள் பாதையின் வேறு பக்கம் பார்த்தவாறு முகத்தைத் திருப்பி-யிருக்கிறாள். ஒருவேளை மூர்த்தியின் மேல் அவளுக்குக் காதலோ என்னவோ?

இப்படி நினைத்தவுடன் அவன் உள்ளம் மகிழ்ச்சிக் கடலில் நீந்தியது. அந்தத் தாமரை முகத்தாள் அவனைக் காதலிப்பது என்றால் அது சாமான்ய விஷய மில்லை அல்லவா? ஆகவே மூர்த்தி கடைசியாக அவளுக்குக் காதல் கடிதம் எழுதத் துணிந்தான். நறுமணம் ஊட்டிய அக் கடிதத்தை ஒரு தினம் அவள் வண்டிக்குள் வீசி எறிந்து விட்டு சைக்கிளை வேகமாகச் செலுத்திக் கொண்டு காலேஜுக்குப் போய்விட்டான்.

மாலை அவன் வீடு திரும்பியதும் கல்யாணம் அவனை, "வாடா குழந்தை!" என்று என்றுமில்லாமல் வரவேற்றார். அத்தோடு விட்டு விடாமல் , ”உனக்கு இதெல்லாம் எத்தனை நாட்களாகப் பழக்கம்!" என்று கேட்டும் வைத்தார். வீட்டிற்குள்ளிருந்து பார்வதி வெளியே வந்தாள்.அவள் பட்டவர்த்தனமாக, "ஏண்டா அப்பா! ஊரிலே எங்களை மானத்தோடு வாழ விடமாட்டாய் போல் இருக்கிறதே?" என்று கேட்டாள்.

அந்த வயசிலே காதல் கடிதம் எழுதுவது அவ்வளவு தவறு என்று யாருமே சொல்ல மாட்டார்கள். ’இந்த மாமாவுக்கும் மாமிக்கும் நம்மைக் கண்டால் ஆகவில்லை. ஏதாவது சொல்கிறார்கள். அந்த அசட்டுப் பெண் இதையெல்லாம் பெரியவர்களிடம் சொல்லுவாளோ?' என்று நினைத்தான் மூர்த்தி. அந்தப் பெண்ணின் தாய் சற்று முன்பு வீட்டுக்கு வந்ததும் அவனுடைய திருவிளையாடல்களைக் கூறி அந்தக் கடிதத்தைக் காண்பித்ததையும் அவன் அறியவில்லை . அவசரப்பட்டு எதுவும் பேசக் கூடாது என்ற தீர்மானத்துக்கு வந்தவனாக மூர்த்தி அன்றிலிருந்து பதினைந்து தினங்கள் வரையில் அந்தப் பெண்ணின் எதிரில் போகாமல் நடந்து கொண்டான்.

ஒரு தினம் மூர்த்தி காலேஜிலிருந்து வீட்டுக்கு வந்ததும் கல்யாணராமன், ”ஏண்டா! அந்தப் பெண்ணுக்குக் கல்யாணம் நிச்சயம் ஆகிவிட்டதாமே? உன் காதல் எல்லாம் ஊதலாகி விட்டது. பார்த்தாயா? இதற்குத் தான் யோசனை இல்லாமல் நடக்கக்கூடாது என்கிறது" என்றார்.

மூர்த்தி ஸ்தம்பித்து நின்றான். அவன் கால்கள் பூமியில் புதைந்து போன மாதிரி ஆடாமல் அசையாமல் நின்றன.

*என்ன! அவளுக்குக் கல்யாணமா?" என்று தனக்குத் தானே கேட்டுக் கொண்டான். உடலில் இருக்கும் ரத்தமெல்லாம் மூளைக்கு விறு விறு என்று ஏறிற்று. எப்படியாவது இந்தக் கல்யாணத்தை நிறுத்த வேண்டும் என்று துடித்தான் . மூன்று நாட்கள் சரிவரச் சாப்பிடாமல் ஆற்றங்கரையிலும் குளக்கரையிலும் திரிந்தான். அவளுக்கும் தன்னிடத்தே காதல் உண்டு என்று நினைத்து தன்னைத்தான் ஏமாற்றிக் கொண்டான் அவன். அவனிடம் தனக்கு உதித்தது உண்மையான காதலா அல்லது அந்த வயதின் சேஷ்டையா என்று அவன் சிந்தித்துப் பார்க்கவில்லை.

கல்யாண வீட்டில் அமளி. மாலையில் மாப்பிள்ளை அழைப்பு ஏற்பாடுகள் பலமாக நடைபெற்றுக் கொண்டு இருந்தபோது, மாப்பிள்ளைப் யையனிடம் ஒரு சிறுவன் கடிதம் ஒன்றைக் கொடுத்து விட்டுப் போனான். கடிதத்தின் வாசகம் ஒன்றும் பிரமாதமான விஷயம் இல்லை. இருந்தாலும் அந்தப் பெண்ணை மணக்கப் போகிறவனுக்கு அது பிரமாதமாகத்தான் தோன்றியது.

“நண்பரே,

தாங்கள் மணக்க முன் வந்திருக்கும் பெண் ஏற்கனவே என்னால் காதலிக்கப் பட்டவள். மனத்தை ஒருவனிடம் பறி கொடுத்து விட்டு அவள் உங்களிடம் உள்ளன்புடன் எப்படித்தான் வாழ்க்கை நடத்தப் போகிறாளோ? யோசித்து ஒரு முடிவுக்கு வாருங்கள்."

என்பது தான் கடிதத்தின் சாரம். இம்மாதிரி பயமுறுத்தல் கடிதங்களும், பிதற்றல்களும் சகஜமாக இருந்தாலும், மாப்பிள்ளை இதைப் படித்தவுடன், வெட்கமும் பயமும் அடைந்தான்.

மாப்பிள்ளை அழைக்க வீட்டில் எல்லோரும் கூடி இருந்தார்கள். மாப்பிள்ளை ஊர்வலக் காரில் ஏறு மறுப்பதாகச் செய்தி வந்தது. சிறிது நேரத்துக்கு அப்புறம்தான் விஷயம் தெரிந்தது . மாப்பிள்ளைக்கு வந்த கடிதம் பெண் வீட்டாரிடம் கிடைத்ததும் எழுதியவன் யார் என்பது உடனே விளங்கிவிட்டது.

கல்யாணராமன் தம் வீட்டுக்கு வந்து இம்மாதிரி ஒரு புத்திர ரத்தினத்தை தம் சகோதரி பெற்று வைத்து விட்டுப் போனதற்காகத் தலையில் போட்டுக் கொண்டார். காதல் கடைத் தெருவிலும், காப்பி ஹோட்டல் களிலும், நடைபாதைகளிலும் விற்கப்படும் ஒரு சரக்காக மாறி இருப்பதை நினைத்து இந்த நிலைமைக்குப் பொறுப்பாளி யார் என்பது புரியாமல் திகைத்தார். தாமே நேரில் சென்று மாப்பிள்ளையிடம் பெண்ணைப் பற்றியும், அவள் குடும்பத்தைப் பற்றியும் விவரமாகக் கூறி, விவாகத்துக்குச் சம்மதிக்கச் செய்து, தாமும் உடனிருந்து கல்யாணத்தை நடத்தி வைத்தார்.

மாமாவே பொறுப்பேற்று கல்யாணத்தை முடித்து வைத்து விட்டார். இனிமேல் தன் ஜம்பம் ஒன்றும் அங்கே சாயாது என்பது புரிந்ததும் மூர்த்தி பசுமலைப் பக்கமே ஒரு வருஷத்துக்குத் தலை காட்டவில்லை.

பசுமலையில் இருக்கும்போதே இவ்வளவு கண்ணியமாக நடந்து கொண்டவன். இப்பொழுது பம்பாய் என்றும் கல்கத்தா என்றும் பல பெரிய நகரங்களைப் பார்த்து விட்டு வந்திருக்கிறான். மூர்த்தியின் அறிவு பல விஷயங்களைப் பற்றியும் விரிவடைந்து தானே இருக்கும்?

'பெண்களிடம் நடந்து கொள்ளவேண்டிய முறையைப் பற்றியே அறியாதவன் பவானியின் வீட்டுக்குள் எதற்குப் போனான்? இதேதடா சங்கடம்?' என்று நினைத்துக் கொண்டு கல்யாணம் மனதுக்குள் அருவருப்பும் கவலையும் அடைந்தார்.

வெளியே வந்த மூர்த்தி மாமாவின் பக்கத்தில் வந்து உட்கார்ந்து அங்கிருந்த வெற்றிலைப் பெட்டியிலிருந்து வெற்றிலையை எடுத்துப் போட ஆரம்பித்தான் . கல்யாணம் கண்ணை மூடிக் கொண்டு யோசனையில் ஆழ்ந்து இருந்தார்.

"ஏன் மாமா!" என்று அழைத்தான் மூர்த்தி.

"உம்..." என்றார் கல்யாணம்.

“இந்தப் பெண், பாவம் --- இப்படி இந்த வயசில்... பார்க்கவே பரிதாபமாக இருக்கிறது மாமா..."

”பரிதாபமாக இருக்கிறதா? உம்...ஏண்டா . ! அவள் அப்படியெல்லாம் தன்னைப் பிறத்தியார் பார்த்துப் பரிதாபப் படும்படி நடந்து கொள்ள மாட்டாள். அவளைப் போல துன்பத்தை விழுங்கிக் கொள்ளும் சக்தி யாருக்குமே கிடையாதுடா. அதெல்லாம் அவளோடு போகட்டும். நீ பேசாமல் வேலையைப் பார்த்துக் கொண்டு போ."

”எங்கே மாமா போகிறது? என் ஆபீஸிலே என்னை மதராஸ் ராஜ்யத்துக்கு டிராவலிங் ஸேல்ஸ் மென்னாகப் போட்டிருக்கிறார்கள். என் ஜாகை இனி மேல் இங்கேதான். மாசம் - மாமியிடம் எழுபது ரூபாய் என் சாப்பாட்டுக்காகக் கொடுத்து விடுவேன் . பெற்றவர்களைப் போல் என்னை வளர்த்தவர்களை விட்டு எங்கே போகிறது!"

கல்யாணம் மூடியிருந்த கண்களைத் திறந்து அவனை நேருக்கு நேராகப் பார்தார். பிறகு கண்டிப்பு நிறைந்த குரலில்,

"உன்னை யாரடா ஊரை விட்டுப் போகச் சொன்னது? பிறத்தியார் வம்பிலே தலையிடாமல் உன் வேலையைக் கவனித்துக் கொண்டு இரு என்றுதானே சொன்னேன்" என்றார்.

"மாமா எப்பொழுதும் இப்படித்தான். அவருக்கு என்ன தெரியும்?" என்று நினைத்துக் கொண்டு மூர்த்தி மேலும் அவரிடம் பேச்சை வளர்த்தாமல் திண்ணையில் படுத்துத் தூங்க ஆரம்பித்தான்.