பசுமலையும் பம்பாயும்

பார்வதி அம்மாளுடன் எழுந்து சென்ற மூர்த்தி, நேராகக் கொல்லைப் புறம் சென்று கை கால்களை அலம்பிக் கொண்டு உள்ளே வந்தான். அவன் பார்த்த இடங்களில் எல்லாம் ஏற்பட்டிருக்கும் மாறுதல்களுடன் இக்கிராமத்தையும் அந்த வீட்டையும் ஒப்பிட்டால் பசுமலை கொஞ்சம் கூட மாறவில்லை என்று தோன் றியது அவனுக்கு. அங்கங்கே மேடிட்ட நிலங்கள், அதன் வரப்பு ஓரங்களில் இருக்கும் கிணறுகள், அவற்றி லிருந்து இறைக்கப்படும் நீர் வாய்க்கால்களில் சுழன்று - ஓடி நிலங்களுக்குப் பாயும் காட்சி, வயல்களில் பாடுபடும் பாட்டாளி மக்கள். அவர்கள் வாழ்க்கை எள்ளளவாவது மாறி இருக்கிறதா என்றால் அதுதான் கிடை யாது. பம்பாயில் வானளாவும் கட்டிடங்களும், செல்வந்தர்கள் கூடிக் குதூகலிக்கும் ’நைட் கிளப்பு'களும் மூர்த்தியின் மனத்திரை முன்பு எழுந்தன. அங்கேதான் எத்தகைய மலர்ச்சி? அரம்பையர் போல் நாகரிகத்தில் மூழ்கித் திரியும் யுவதிகளும், யுவர்களும் அந்த நகரத்தை ஒரு பூலோக சுவர்க்கமாக அல்லவா மாற்றி இருக்கிறார்கள்!

பசுமலையின் மேட்டுக் கழனியில் தான் கிராமத்து ஏழை மக்கள் குடி இருந்தார்கள். பனை ஓலைகளால் வேய்ந்த குடிசைகள். காற்றினாலும் மழையினாலும் பிய்க்கப்பட்ட அதன் கூரைகளைப் பார்த்தால் பம்பாயின் பிரும்மாண்டமான மாளிகைக்குள் இருப்பவர்களும் இவர்களும் ஒன்றேதானா? மனிதனுக்கு மனிதன் வாழ்க்கைத் தரத்தில் இவ்வளவு வித்தியாசத்துடன் இருப்பதேன்? என்றெல்லாம் சிந்திக்கத் தோன்றும்.

ஆனால் மூர்த்தி ஒரு சீர்திருத்த வாதியோக உன்னத லட்சியங்களுக்கு இருப்பிட-மானவனோ அல்ல. கிராமத்தின் வாய்க்காலிலிருந்து அவன் மாமா வீடு வரையில் மாறவே இல்லையே என்று நினைத்துத்தான் அவன் வியப்பில் ஆழ்ந்து போனான்.

இந்த யோசனையுடன் அவன் கொல்லைத் தாழ்வாரத்தைத் தாண்டி வரும் போது வாசற்படியில் 'ணங்' கென்று தலையில் இடித்துக் கொண்டான்.

”தலையில் இடித்துக் கொண்டாயாடா மூர்த்தி? குனிந்து வரமாட்டாயோ?" என்று கேட்டுக் கொண்டே பார்வதி சமையல் அறையிலிருந்து எட்டிப் பார்த்தாள்.

"ஊர் தான் மாறவில்லை என்றால் வீட்டையாவது மாற்றிக் கட்ட மாட்டீர்களோ? வாசற்படிகளையாவது இடித்துப் பெரிதாக வைக்கமாட்டீர்கள்?" என்று சொல்லிக் கொண்டே மூர்த்தி சமையல் அறையில் போய் உட்கார்ந்தான்.

அவன் எதிரில் வாதாம் இலையைப் போட்டு முறுகலாக நாலு தோசைகளை வைத்தாள் பார்வதி அம்மாள். அதற்கு மிளகாய்ப் பொடியும் எண்ணெயும் போட்டுவிட்டு அவன் அருகில் மணையின் மேல் உட்கார்ந்தாள்.

ஊர் ஊராக ஓட்டல்களில் சாப்பிட்டு அலுத்துப் போயிருந்த மூர்த்திக்கு இந்தத் தோசையும் காப்பியும் அமிருதமாக இருந்தது.

”இப்படி நான் 'ஹோம்'லியாகச் சாப்பிட்டு எத்தனையோ வருஷங்கள் ஆயிற்று மாமி" என்று பரம திருப்தியுடன் சொன்னான் மூர்த்தி.

"அதென்னடா அது? என்னவோ எலி, பூனை என்று பேசுகிறாயே, பம்பாயிலே எலி உபத்திரவம் அதிகமா என்ன?" என்று கேட்டாள் பார்வதி அம்மாள். மூர்த்தி 'கட கட' வென்று சிரித்தான்.

அவன் சிரித்து முடிப்பதற்குள் கல்யாணம் இதைக் கேட்டுக்கொண்டு உள்ளே வந்தார்.

"ஆமாம், அங்கே எலிகள் உபத்திரவம் அதிகம் தான் நம் வீட்டு மச்சில் பூனைக்குட்டிகள் இருக்கின்றனவே. அதிலே ஒன்றை அவன் பம்பாய் போகும்போது கொடுத்து அனுப்பு!"

கணவர் தன்னைக் கேலி செய்கிறார் என்பது அவளுக்குப் புரிந்தது. முகத்தை ஒரு நொடிப்பு நொடித்து விட்டு அவள்.

”மூர்த்தி! உன் மாமா ஏதாவது கொஞ்சமாவது மாறி இருக்கிறாரா, பார்த்தாயா? அதே பேச்சு, அதே பரிகாசம்! இப்படித்தான் ஏதாவது பேசிக்கொண்டே இருக்கிறார்" என்றாள்.

”உன் மாமி மட்டும் ரொம்ப மாறி இருக்கிறாளோ? அப்படியே சின்னப்பெண் மாதிரி ஒடிசலான உடம்பும், படிப்படியான கூந்தலும், அப்படியே இருக்கிறாள். அன்று கழுத்திலே மூன்று முடிச்சுகள் போட்டு விட்டு அவளைப் பார்த்தபோது எப்படி என்னைப் பார்த்து முறுவலித்தாளோ அப்படியே இருக்கிறது இன்றும் அவள் சிரிப்பது!" என்று கல்யாணம் தம் மனைவியைப் பற்றிப் புகழ்வதில் ஈடுபட்டார்.

தெருவிலே ஒரே இரைச்சல் கேட்டது. பெரியவர்களும், பெண்களும், குழந்தைகளுமாக எல்லோரும் சேர்ந்து ஏகமாகச சத்தம் போட்டார்கள். கல்யாணராமன் உள்ளேயிருந்து வெளியே வந்தார். மூர்த்தியும் என்ன இரைச்சல் என்று பார்ப்பதற்காக வாசலுக்கு வந்தான். அங்கே பெரியவர்களாக ஆண்களில் நாலு பேர் நின்றிருந்தார்கள். நடுத்தர வயதுடைய பெண்களில் நாலைந்து பேர்; மற்றும் குழந்தைகளின் கூட்டம்.

"என்ன விஷயம்?" என்று விசாரித்தார் கல்யாணம் அமைதியை இழக்காமல்.

" என்ன விஷயமா? இந்தப் பையன் தினம் குளிப்பதற்கு எங்கே போகிறான் என்று உமக்குத் தெரியுமா?" என்று கேட்டுக் கொண்டே பாலுவைக் கையில் பிடித்து இழுத்துக் கொண்டு முன்னாலே வந்தார் சேஷாத்ரி என்கிற ஒரு பெரியவர்.

கல்யாணம் பாலுவை ஏற இறங்கப் பார்த்தார். தண்ணீரில் நனைந்து, பாதி உலர்ந்ததும் உலராததுமாக இருக்கும் கிராப்புத் தலை. இடுப்பிலே அரை நிஜார் சொட்டச் சொட்ட நனைந்திருந்தது. பயத்தால் அவன் திரு திருவென்று விழித்து எல்லோரையும் பார்த்தான்.

இதற்குள்ளாக இந்த இரைச்சலைக் கேட்டு பவானியும் வெளியே வந்தாள். அவள் வெளியே வராமல் இருந்தால் அதிகமாகப் பேச்சு வளராமல் போயிருக்கும். பாலுவின் தாயைப் பார்த்ததும் அங்கிருந்த ஸ்திரீகளின் கோபம் அதிகமாயிற்று. "இந்த மாதிரி ஒரு துஷ்டத்தனம் உண்டா ? நல்ல குழந்தை !" என்றாள் ஒருத்தி.

”குழந்தையை வளர்க்கிற லட்சணம் அப்படி!" என்று குழந்தை வளர்ப்பைப்பற்றி விமரிசனம் செய்தாள் மற்றொருத்தி.

"அடியே! கேட்டதில்லையோ நீ! கைம்பெண் வளர்த்த மகன் கழிசடை என்று" என்று ஒருத்தி எல்லை மீறிப்பேச ஆரம்பித்தாள்.

பவானி பிரமை பிடித்தவள் போல் நின்றிருந்தாள். கைம்பெண்ணாக இருந்தால் அவள் தான் பெற்ற குழந்தையைக்கூட வளர்க்க அருகதை அற்றவளாகப் போய் விடுகிறாளா? சமூகத்திலே பல்வேறு காரணங்களால் ஒதுக்கப்படவேண்டியவர்கள் தானா?

பாலு தாயைப் பயத்துடன் பார்த்துக்கொண்டே நின்றான்.

கல்யாணராமன் பேச ஆரம்பித்தார்.

”அந்தப் பையன் என்ன செய்தான் என்று ஒருத்தருமே சொல்லாமல், நீங்கள் பாட்டுக்குப் பேசிக் கொண்டே போகிறீர்களே?" என்று கேட்டார்.

”என்ன செய்தானா பொழுது விடிந்ததும் விடியாததுமாக இருக்கும்போதே இந்தப் பையன் வந்து என் பையனைக் கிணற்றில் குளிப்பதற்குக் கூப்பிடுகிறான் சார்! மிதந்து வைத்தால் யார் பதில் சொல்கிறது போலீஸுக்கு? சிவனே என்று உள்ளோடு கிடப்பவனை இதுகள் நடு வீதிக்கு இழுத்து விடும் போல் இருக்கிறதே! ஹும்" என்றார் சேஷாத்திரி பயங்கரமாகக் கண்களை உருட்டி பாலுவை விழித்துப் பார்த்தவாறு.

கல்யாணராமன் பாலுவின் கைகளைப் பற்றித் தம் அருகில் அழைத்தார்.

”ஏண்டா பாலு! நீ போய் இவர்களைப் கூப்பிட்டாயா அல்லது அவர்கள் உன்னை வந்து கூப்பிட்டார்களா? உண்மையைச் சொல்" என்று கேட்டார், அங்கு நின்றிருந்த பையன்களைச் சுட்டிக் காட்டி.

”அவன் தான் மாமா எங்களை வந்து கூப்பிட்டான்" என்றான் சேஷாத்ரியின் மகன்.

அவன் என்ன உளறி விடுவானோ என்று அவன் தகப்பனார் கவலையுடன் அவனையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தார்.

”டேய்! டேய் பொய் சொல்லாதே! கிணற்றிலே நீச்சல் சொல்லித்தரேன்னு நீ தானேடா பாலுவைக் கூப்பிட்டே?" என்று மற்றொரு பையன் அதை ஆட்சேபித்தான்.

கல்யாணராமனுக்கு விஷயம் விளங்கி விட்டது. எல்லோருமாகத்தான் கிணற்றில் இறங்கி அமர்க்களம் பண்ணி இருக்கிறார்கள். ஆனால் பழி சுமத்துவதற்குப் பாலு ஒருவன் தான் அகப்பட்டான் அந்த ஊராருக்கு!

"சார்!" என்று சேஷாத்ரியைக் கூப்பிட்டார் அவர்.

"இதிலே பெரியவர்கள் சண்டை போட விஷயமே ஒன்றும் இல்லை, கிணற்றங்-கரையில் இவர்கள் பேசிக் கொண்டு கிணற்றிலே இருக்கும்போது ஒரு கட்சியாக இருந்தார்கள். நடுவில் ஏதோ சண்டை வந்து விட்டது. இப்பொழுது இவர்களுள் ஒரு எதிர்க் கட்சி ஆரம்பிக்கிறார்கள். இன்னும் சற்று நேரத்துக்கெல்லாம் ஒன்றாகச் சேர்ந்து விளையாடுவார்கள். குழந்தைகள் சண்டையில் நாம் தலையிடுவது அவ்வளவு உசித மில்லை" என்று கல்யாணராமன் கூறியதும் அங்கு வேடிக்கை பார்க்கக் கூடியிருந்த-வர்களுக்கு சண்டை சப் பென்று போய் விட்டது. ஒவ்வொருவரும் தமக்குத் தோன்றியபடி பேசிக் கொண்டே அங்கிருந்து சென்றார்கள்.

பீதியினால் உலர்ந்த வாயுடன் பாலு வாசல்குறட்டிலேயே தயங்கி நின்றான். கல்லாய்ச் சமைந்து நின்ற பவானி அவனைக் கோபத்துடன் உருட்டி விழித்துப் பார்த்தாள். ”வாசற்படி தாண்டி நீ உள்ளே வா சொல்கிறேன்!" என்கிற பாவம் அவள் முகத்தில் தெரிந்தது.

கல்யாணம் பாலுவையும் பவானியையும் கவனித்தார். பிறகு கண்டிப்புடன் “உள்ளே போய் ஈர நிஜாரை அவிழ்த்து விட்டு வேறு போட்டுக் கொள். இனிமேல் கிணற்றிலும் குளத்திலும் இறங்காதே. உனக்கேனடா இந்த வம்பெல்லாம்?" என்று கூறிவிட்டு உள்ளே போய் விட்டார்.

"பாலூ!" என்று அழைத்தாள் பவானி.

தலையைக் குனிந்து கண்ணீரை மாலை மாலையாக உதிர்க்கும் அவனைப் பார்த்து அவள் மறுபடியும், ”பாலு! உன்னாலே நான் இந்த ஊரிலே மரியாதையுடன் வாழ முடியாது போல் இருக்கே" என்றாள் வெறுப்புடன்.

”கூப்பிடுகிறேன். பேசாமல் நிற்கிறாயேடா! வாடா உள்ளே !" என்று அவன் கைகளைப் பற்றித் தர தர வென்று இழுத்துக் கொண்டு உள்ளே சென்றாள். விம்மி விசும்பிக் கொண்டே பாலு உள்ளே போனான்.

அடுத்த வீட்டுத் திண்ணையில் நின்று இது வரையில் இந்தச் சண்டையைக் கவனித்து வந்த மூர்த்தி, பவானியின் வீட்டுக்குள் சென்றான். அங்கே கூடத்தில் கையில் பிடித்த விசிறிக் காம்புடன் பாலுவை மிரட்டிக் கொண்டிருந்தாள் பவானி. ஒன்றிரண்டு அடிகள் விழுந்து அவன் விலாப்புறத்தில் வரிகள் தென்பட்டன. அவைகளைத் தடவிப் பார்த்து அழுது கொண்டிருந்தான் பாலு.

பவானியின் முகத்தில் கோபமும் துயரமும் நிரம்பியிருந்தன. ஒன்றும் தெரியாத பாலகன். பாம்பைப் பிடிக்கும் வயசு, துடிப்பு நிறைந்த சுபாவமுடையவன். அவனைக் கண்டால் ஊராருக்கு ஆகவில்லை. எல்லாக் குழந்தைகளும் அப்படித்தான் இருக்கிறார்கள். புளியந் தோப்பில் நுழைந்து புளியம்பழம் உலுக்குகிறார்கள். கிணற்றில் குதித்து அமர்க்களம் பண்ணுகிறார்கள். ஆனால் அவர்களைப் பற்றி யெல்லாம் ஊரில் வம்பு கிளம்புவதில்லை. இந்தக் குழந்தை செய்யும் ஒவ்வொரு

விஷமத்தையும் அவர்கள் பூதக் கண்ணாடி வைத்துப் புகார் செய்யவும் வந்து விடுகிறார்கள். ஏன்?

"ஏன்?" என்று பவானி வாய்விட்டு உரக்கவே கேட்டுக் கொண்டாள் தன்னையே. அவள் பேச ஆரம்பித்ததும் மூர்த்தி சுவாதீனத்துடன் அங்கிருந்த ஊஞ்சலில் வந்து உட்கார்ந்து கொண்டு, ”ஏனா? இந்த ஊரில் இருப்பவர்களுக்கே வயிற்றெரிச்சல் அதிகம். புத்திசாலியாக ஒரு குழந்தையைப் பார்த்தால் இவர்களுக்கு ஆகிறதில்லை . இந்த விஷயம் உங்களுக்குப் புதிசு. எனக்குப் புதிசல்ல” என்றான்.

வலுவில் வந்து பேசியும் அவனுடன் பேசாமல் இருந்தால் மரியாதைக் குறைவு என்று நினைத்து பவர்னி பதில் கூறினாள்.

"பாலு எவ்வளவோ சாதுவாக இருந்தான். இப்பத்தான் ஒரு வருஷமாக அவன் பண்ணுகிற விஷமம் சகிக்கவில்லை. இவனை வைத்துக்கொண்டு நான் படுகிற பாடு கொஞ்சமல்ல. ஊரிலே தகப்பன் இல்லாத பிள்ளை என்று இளப்பம் வேறே."

மூர்த்தி திடுக்கிட்டு பவானியை ஏறிட்டுப்பார்த்தான். களை பொருந்திய அந்த நெற்றி குங்குமத்தை இழந்தும் தன் அழகை இழக்கவில்லையே என்று நினைத்தான். மருட்சியோடு மிரளும் அந்தக் கண்களில் குறும்பும். பரிகாசமும் மிதக்க வேண்டிய காலமல்லவா இது! அவை சதா சோகத்திலும், சஞ்சலத்திலும் ஆழ்ந்து நிற்பது

அவனுக்கு வேதனையாக இருந்தது.

பெண்தான் தன்னை எப்படியெல்லாம் மாற்றிக் கொள்ள முடிகிறது! காதலொருவனைக் கைப் பிடித்தவுடன் அவளுடைய சிரிப்பிலே, பேச்சிலே, நடையிலே அவள் செய்யும் ஒவ்வொரு வேலையிலே புது மாதிரியான, மாறுதல்களைச் சிருஷ்டித்துக் கொள்கிறாள். பள்ளிப் பெண்ணாகப் படித்துக் கொண்டிருக்கும்போது வெடுக் வெடுக்கென்று பேசித் திரிந்தவள் பேச்சிலே இப்போது இனிமை மிதந்து செல்கிறது. கலகல வென்று சிரித்துக் கும்மாளமிட்ட கன்னி, காதலனைக் கண்டவுடன் புன்சிரிப்புச் சிரித்து அவன் உள்ளத்தை கொள்ளை கொள்கிறாள். எத்தனையோ புதுமை பெண்கள் நிமிர்ந்து நடப்பவர்கள் எல்லாம் காதலனைக் கண்டால் கடைக் கண்ணால் தான் பார்க்கிறார்கள். ஆனால்... பெண்ணைத் துயரம் பற்றிக் கொள்ளும் போது அவள் எப்படி மாறி விடுகிறாள்?

பவானியின் கண்களிலிருந்து கண்ணீர் உருண்டு கன்னத்தில் வழிவதைப் பார்த்தான் மூர்த்தி.

”நீங்கள்..." என்று ஏதோ கேட்க ஆரம்பித்தவன், "ஏன் அழுகிறீர்கள்?" என்று கேட்டு முடித்தான்.

"ஆமாம். பாலுவுக்கு அப்பா இல்லை. அதனால் தான் அவனை ஊரில் யாருக்குமே பிடிக்கவில்லை. ஒன்றுக்குப் பத்தாக அவன் மேல் குற்றங்கள் வருகின்றன. அதற்கு நான் என்ன செய்யட்டும்?" என்றாள்.

அதற்கு மேல் பவானியின் கண்களிலிருந்து பிரவாகம் பெருகியது.

அடுப்பங்கரையிலிருந்து அவள் விசும்புவது. வெகு நேரம் வெளியே உட்கார்ந்திருந்த மூர்த்திக்குக் கேட்டது.