கொம்பும் கொடியும்

நாகராஜன் ஊருக்குக் கிளம்பு முன் ஒரு நூறு ரூபாய் நோட்டை எடுத்துத் தங்கையிடம் கொடுத்தான்.

"எதற்கு அண்ணா இது? என்னிடம் கொஞ்சம் பணம் இருக்கிறதே. தேவையானால் எழுதி வாங்கிக் கொள்கிறேன்" என்றாள் பவானி.

”இருக்கட்டும் பவானி. இன்னும் பத்து நாட்களில் பாலுவுக்குப் பள்ளிக் கூடம் திறந்து விடுகிறார்கள். புஸ்தகம் வாங்கிச் சம்பளம் கட்ட வேண்டாமா? வைத்துக் கொள்."

பவானி சிரித்தாள்.

"மருமகன் பெரிய படிப்பு படிக்கிற மாதிரி தான் உன் எண்ணம். ஒண்ணாவது படிக்கிறவனுக்குப் புஸ்தகம் வாங்க நூறு ரூபாய் வேண்டுமா என்ன?"

பவானி இப்படி ஒவ் வொரு விஷயத்துக்கும் தர்க்கம் செய்து பேசுவது கோமதிக்குப் பிடிக்கவில்லை. புருஷன் போய் விட்டான். பிரமாதமாகச் சொத்து ஒன்றும் அவன் வைத்து விட்டுப் போகவில்லை. கூட வருவதற்கு ஆயிரம் ஆட்சேபணைகள் சொல்லிவிட்டாள். பள்ளிக் கூடம் திறந்தால் இருக்கட்டும் என்று பணம் கொடுத்தால் ”இது எதற்கு?' என்கிறாள். கர்வம் பிடித்தவள் என்று நினைத்து கோமதி கணவனைக் கோபமாக விழித்துப் பார்த்தாள்.

இடையில் அடுத்த வீட்டிலிருந்து கல்யாணம் வந்தார். வந்தவர் பேசாமல் இருந்தாரா? அப்படி இருப்பது தான் மனித சுபாவமே இல்லையே!

'என்ன ஸார்! ஊருக்குக் கிளம்புகிறீர்களா?" என்று கேட்டு வைத்தார் .

"ஆமாம் ஸார்! வந்த வேலை ஆயிற்று. கிளம்ப வேண்டியதுதானே?" என்று சலிப்புடன் நாகராஜன் கூறினான்.

"ஹும்... ஊருக்குக் கிளம்புகிறீர்கள். ஆமாம்..... ஆபீஸ் என்றும், வேலை என்றும் ஒன்று இருக்கிறதே. எத்தனை நாட்களுக்கு ஒரு இடத்தில் இருக்க முடியும்? அவரவர் வேலையை அவரவர் செய்தாக வேண்டுமோ இல்லையோ ஹும்..."

’தங்கையைத் தனியாக விட்டு விட்டுப் போகிறாயே அவளுக்கு ஏதாவது ஏற்பாடு செய்து விட்டுப் போக வேண்டாம் நீ' என்று கேட்பதற்குப் பதிலாக அவர் ஏதோ சுற்றி வளைத்துப் பேசுகிறார் என்பது கோமதிக்குப் புரிந்து போயிற்று.

"அவரவர் வேலையை அவரவர் இருக்கிற இடத்தில் இருந்து கொண்டுதானே மாமா செய்ய வேண்டும்? இன்னொரு இடத்தில் வந்து உட்கார்ந்து செய்ய முடியுமா? அதுவும் வியாபாரத் தொழிலில் ஈடுபட்டவர்களுக்கு ஒரு நாள் கூட வெளியே போக முடியாது. பத்து தினங்களாக இங்கே இருந்ததே மேல். இன்னும் எத்தனை நாட்கள் இருப்பது?" என்று கேட்டு விட்டுக் கோமதி. அருகில் நின்று கொண்டிருந்த பவானியை ஒரு மாதிரியாகப் பார்த்தாள்.

இந்தப் பத்து தினங்களில் கல்யாணம் கோமதியின் சுபாவத்தை நன்றாகப் புரிந்து கொண்டவர். வீட்டிலே பிறந்த பெண். மணத்தை இழந்து வாடும்போது தன்னுடைய சுகத்தில் ஒன்றும் குறைவு ஏற்படக்கூடாது என்று நினைப்பவள் கோமதி.

கல்யாணராமன் கோமதிக்கு ஒன்றும் பதில் கூறவில்லை. அவருடைய சிந்தனை வேறு எங்கோ லயித்துக் கிடந்தது. உற்றாரும் உறவினரும் இருந்தும், ஒரு பெண்ணுக்கு தனிமை என்பது எப்பொழுது ஏற்படுகிறது என்று சிந்திப்பதில் முனைந்திருந்தார் அவர். உடன் பிறந்த அண்ணனும், பெற்று வளர்த்த பெற்றோரும் இருந்தால்கூட. கட்டிய கணவன் இல்லாமல் போகும் போது அவள் தனிமையில் சிக்கி வாடுகிறாள்.

ஒரு பெரிய நந்தவனம். அதில் மல்லிகை, இருவாட்சி, ரோஜா, கனகாம்பரம், மருக்கொழுந்து முதலிய மலர்ச் செடிகள் நிறைந்திருக்கின்றன. தோட்டக்காரன் ஒரு முல்லைக் கொடியை நட்டுப் பயிர் செய்கிறான். கொடியும் செழித்து வளர ஆரம்பிக்கிறது. கப்பும் கிளைகளுமாகப் புதருடன் மண்டி வளருகிறது. அப்பொழு-தெல்லாம் தோட்டக்காரன் கவலைப்படுவதில்லை. எல்லாச் செடிகளையும் போலச் செழுமையாக வளருகிறது என்றே நினைத்து ஆறுதல் அடைகிறான்.

ஆனால் சில மாதங்களுக்கு அப்புறம் அந்தச் செடியிலிருந்து தனித்தனியே பல கொடிகள் தோன்றுகின்றன. மெல்லிய காற்றிலே அசைந்தாடுகின்றன. பற்றிக் கொண்டு படர ஊன்று கோல் இல்லாமல் தவிக்கின்றன. தோட்டக்காரன் சிந்தனை செய்கிறான். நல்ல கொம்பாக ஒன்றைத் தேடி எடுத்து வந்து அருகில் நட்டு அதன் மீது கொடிகளைச் சேர்த்துப் படர விடுகிறான். முல்லைக் கொடி கொழு கொம்பைப் பற்றிக் கொண்டு பந்தலின் மீது படர்ந்து வெள்ளை மலர்களைத் தாங்கி நிற்கிறது.

ஒரு பெண்ணும் அண்ணன் தம்பிகளுடன் ஒரு குடும்பத்தில் பிறக்கிறாள். அவர்களிடையில் வளருகிறாள். அவள் மங்கைப் பருவத்தை அடையும் வரை அவளைப் பற்றிப் பெற்றோர் அவ்வளவாகக் கவலைப் படுவதில்லை. தள தளவென்று வளர்ந்து வாளிப்பாகத் தன் முன் நிற்கும் மகளைப் பார்த்து தாய் முதலில் கவலைப் படுகிறாள். ”பார்த்தீர்களா நம் மகளை? எப்படித் திடீரென்று வளர்ந்து விட்டாள் ! இனிமேல் நீங்கள் கவலையில்லாமல் தூங்க முடியாது" என்று கணவனை எச்சரிக்கிறாள். தந்தையும் மகளைப் பார்த்துப் பிரமித்துத்தான் போகிறார். மண்ணில் சிறு வீடுகள் செய்து விளையாடிய பெண்ணா இவள்? பந்துக்காகச் சகோதரர்களிடம் சண்டை-யிட்டவளா இவள்? ’அப்பா' என்று அழைத்து மடியில் உட்கார்ந்து கதை பேசிய கண்மணியா இவள்? எப்படி வளர்ந்து விட்டாள்!' என்று ஆச்சரியம் ததும்ப மகளைப் பார்க்கிறார்.

”நல்ல இடமாக வந்தால் பாருங்கள். காலத்தில் கல்யாணம் செய்து கொடுத்து விடலாம்" என்கிறாள் தாய்.

நல்ல நாயகனை, கொடிக்குத் தேவையான கொழு கொம்பைத் தேடுகிறார் தந்தை. மணமுடித்து வைக்கிறார். மனதிலே ஆறுதலும் திருப்தியும் அடைகிறார்கள் பெற்றோர்.

ஆனால் முல்லைக் கொடிக்கு ஆதாரமாக ஊன்றிய கொழு கொம்பை ஒரு பேய்க்காற்று, புயல், சூறாவளி அலைக்கழித்துத் தரையில் சாய்த்து விட்டுப் போய் விடுகிறது. முல்லைக் கொடி பற்றிப்படரக் கொம்பில்லாமல் தவக்கிறது. காற்றிலே ஊசலாடுகிறது.

இதைப் போலத்தான் இருக்கிறது பவானியின் வாழ்க்கை என்கிற தீர்மானத்துக்குக் கல்யாணராமன் வந்த போது. கூடத்தில் நின்றிருந்த கோமதியைக் காணோம். அவள் வண்டியில் போய் ஏறிக் கொண்டு விட்டாள். நாகராஜன் மட்டும் அவர் அருகில் நின்றிருந்தான்.

“ஊருக்குப்போய்விட்டு வருகிறேன் மாமா. பவானியைப் பார்த்துக் கொள்ளுங்கள். அவசியமானால் அவளைப் பற்றி எனக்கு ஏதாவது செய்தி இருந்தால் தெரிவிக்க அஞ்சாதீர்கள்" என்று அவரிடம் கூறி விடை பெற்றுக் கொண்டான்.

தமையனும் மன்னியும் ஏறிச் செல்லும் வண்டி தெருக் கோடியைத் தாண்டிப் போகும் வரையில் பார்த்துக் கொண்டே நின்றிருந்தாள் பவானி. அவள் அருகில் வந்து நின்ற பார்வதியைச் சிறிது நேரம் பவானி கவனிக்கவில்லை .

"பவானி! என்ன அப்படி ஒரேயடியாக எதைப் பார்த்துக் கொண்டிருக்கிறாய்?" என்று அன்புடன் கேட்டு அவள் சிந்தனையைக் கலைத்தாள் பார்வதி.