அழைப்பு ........!
எண்ணங்களும், சிந்தனைகளும் முடிவில்லாமல் ஏற்படும் போது நாம் நம்மையே மறந்து விடுகிறோம். பவானி இவ்விதம்தான் தன்னையே மறந்த நிலையில் நின்றிருந்தாள். மனதுக்கு வேகம் அதிகம் என்று சொல்வார்கள். நுங்கும் நுரையுமாகக் கொப்புளித்துச் சுழன்று ஓடும் காட்டாற்றைவிட எண்ணங்களுக்கு வேகம் அதிகம். வாயு வேகத்தை விட மனோவேகம் வலிமை வாய்ந்தது. பவானி ஒரு கண காலத்தில் கடந்துபோன நாட்களை நினைவு படுத்திக் கொண்டு, அவை எழுப்பும் எண்ணச் சுழலில் சிக்கித் தவித்தாள். வில்லைப் போல் வளைந்து நெற்றிக்கே ஒரு சோபையைத் தரும் புருவங்களைச் சுளித்து அவள் யோசனையில் ஆழ்ந்திருந்தாள். அழகிய நீண்ட அவள் கண்கள் எங்கோ சூன்யத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தன.
நாகராஜன் சிறிது நேரம் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். பிறகு அமைதியான குரலில், ”பவானி! இனிமேல் நீ என்ன செய்யப் போகிறாய் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டியது என் கடமை அல்லவா? உன்னைப் பல முறைகள் கேட்டும் நீ பேசாமல் நிற்கிறாயே!" என்றான்.
பவானியின் கண்களில் கண்ணீர் நிறைந்திருந்தது.
”அண்ணா ! உன்னுடன் என்னை வரும்படிக் கூப்பிடுகிறாய். அவ்வளவு தானே? என்றைக்கும் ஒருவருடைய ஆதரவின் கீழ்தான் நான் வாழவேண்டும். இவை எல்லாம் எனக்குத் தெரியும். இருந்தாலும் அண்ணா ....." என்று சொல்லி முடிக்காமல் தேம்பிக் கண்ணீர் வடித்தாள்.
தமையன் வாஞ்சையுடன் அவள் அருகில் வந்து நின்றான். ஆதுரத்துடன் அவள் கண்ணீரைத் தன் கையால் துடைத்தான்.
"அசடே! என் வீட்டில் உனக்குச் சாப்பிடச் சாதம் இல்லாமலா போய்விட்டது? எதையோ நினைத்துக் கொண்டு வருந்துகிறாயே. பேசாமல் குழந்தையை அழைத்துக் கொண்டு என்னோடு புறப்படு அம்மா" என்று அழைத்தான்.
கூடத்திலே கோமதி உட்கார்ந்திருந்தாள். கொல்லையில் அண்ணனுக்கும் தங்கைக்கும் இடையில் நடக்கும் பேச்சுக்களைக் கேட்டுக்கொண்டு தான் இருந்தாள். அவளுக்குக் கல்யாணம் ஆனதிலிருந்து தனியாகவே, சுதந்திரமாக இருந்து வந்தவள். வீட்டுக்கு எஜமானி என்கிற எண்ணம் அவளுக்கு வளர்ந்து போயிருந்தது. அந்த வீட்டில் இன்னொருவர் சுதந்திரமாக வந்து தங்க வேண்டும் என்பதை அவள் விரும்பாதவள். தன்னுடைய புருஷனையும், குழந்தை சுமதியையும், தன்னையும் தவிர அவளுக்கு வேறு ஒருவருமே தேவையில்லாமல் இருந்தது.
செழித்து வளர வேண்டிய கொழு கொம்பிலிருந்து பிடுங்கித் தரையில் எறிந்த மாதிரி பூங்கொடியாகிய பவானியைப் பற்றி அவள் என்ன நினைத்தாள்?
நாத்திக்கும். மதனிக்கும் என்றும் ஒத்துக் கொள்ளாது என்று நினைத்து, அதற்கேற்ப கதைகளையும், சம்பவங்களையும் கேட்டும் படித்தும் அந்த எண்ணத்திலேயே ஊறிப் போயிருப்பவர்கள் நாம். நாத்தி என்ன பூவும் மணமுமாகவா அவள் இல்லத்தை நாடி வந்திருக்கிறாள்? அவள் எதிரில் ஒரு புதுப் புடவை உடுத்த முடியுமா? அவள் பார்த்துக் கோமதி கணவனுடன் பேசி மகிழ முடியுமா? அவள் விடும் பெருமூச்சு நெருப்பைவிட அதிகமாகச் சுட்டுப் பொசுக்கி விடுமே என்றெல்லாம் கோமதி நினைத்தாள்.
”இவருக்கு என்ன? வா என்று சுலபமாகக் கூப்பிட்டு விடுகிறார்! வீட்டிலே அனுபவிக்கப் போகிறவள் நான் தானே? காலையில் கம்பெனிக்குப் போனால், இரவு எட்டு மணிக்கு வீடு திரும்பும் இவருக்கு வீட்டில் நடப்பவை பற்றி என்ன தெரியப் போகிறது?"
கோமதி இவ்விதம் எண்ணமிட்டபடி ஊஞ்சலில் உட்கார்ந்து மெதுவாக ஆடிக் கொண்டிருந்தாள். எப்படியோ போகட்டும். அவர் கூப்பிட்டுப் பவானி வந்தால் அழைத்துத்தான் போய் ஆகவேண்டும். அண்ணன் வீட்டைப் பற்றிய பாத்தியதை மன்னிக்கும் உண்டு என்பதைப் பவானி மறந்து விடுவாளா என்ன? என்று மேலும் சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள் கோமதி.
அப்பொழுது கொல்லையிலிருந்து பவானியின் குரல் தெளிவாகக் கேட்டது.
”இப்பொழுது அங்கே வருவதற்கு என்ன அவசரம் அண்ணா? போகப் போகப் பார்த்துக் கொள்ளலாம். கொஞ்ச காலம் அவர் இருந்த இடத்திலேயே நான் இருக்க ஆசைப் படுகிறேன்” என்றாள்.
நாகராஜன் பதில் ஒன்றும் கூறவில்லை . அவன் உள்ளத்தில் எத்தனையோ கேள்விகளும் பதில்களும் எழுந்தன. அவைகளை அடக்கிக் கொண்டு, அப்படியானால் இந்த மூவாயிரம் ரூபாய் என்னிடம் இருக்கட்டும். மாசம் உனக்காக ஐம்பது ரூபாய் அனுப்பி வருகிறேன் பவானி, உனக்கு எப்பொழுது வரவேண்டும் என்று தோன்றுகிறதோ அப்பொழுது வரலாம். உன்னை இதற்கு மேல் தற்சமயம் வற்புறுத்த நான் ஆசைப்பட வில்லை " என்றான்.
நாகராஜன் அங்கே இருந்து உள்ளே சென்றதும். கூடத்தில் உட்கார்ந்து ஊஞ்சலாடும் மனைவியைக் கவனித்தான். கொல்லையில் நடந்த இவ்வளவு பேச்சுக்களையும் கேட்டுக் கொண்டு இருந்தவள் எழுந்து வந்து ஏதாவது ஒரு வார்த்தை பேசியிருக்கக் கூடாது? ஒப்புக்காகவாவது பவானியை 'வா' என்று அழைத்திருக்கக் கூடாதா? மனதில் பொங்கும் கோபத்துடன் அவன் மனைவியை விழித்துப் பார்த்து ”கோமு! நீ இங்கேயா இருந்தாய் இந்நேரம்? பக்கத்து வீட்டிற்குப் போயிருப்பதாக அல்லவோ நினைத்தேன்! உனக்கும் நம் வீட்டில் நடக்கும் விஷயங்களுக்கும் சம்பந்தம் இல்லை போல் அல்லவா நீ பேசாமல் இருந்து விட்டாய்?" என்று கேட்டான்.
கோமதியின் உதடுகளில் அலட்சியம் நிரம்பிய புன்னகை நெளிந்தோடியது. அவள் ஒரு மாதிரியாகச் சிரித்துவிட்டு.
"நீங்கள் தான் எல்லா ஏற்பாடுகளையும் கவனித்துச் செய்கிறீர்களே. இடையில் நான் வேறு குறுக்கே புகுந்து ஏதாவது பேச வேண்டுமா என்ன?" என்றாள்.
நாகராஜனின் கண்கள் கோபத்தால் சிவந்தன! அவன் படபடப்புடன்,
"அழகு தான் போ! என்ன தான் நான் பவானியை வருந்தி வருந்தி அழைத்தாலும் நீ கூப்பிடுகிற மாதிரி இருக்குமா கோமு?" என்றான்.
கோமதி அதற்குப் பதில் கூறுவதற்கு முன்பு பவானி பாலுவை அணைத்துப் பிடித்துக் கொண்டு கூடத்துக்கு வந்தாள்.
"இதெல்லாம் என்ன அண்ணா ? நீ கூப்பிட்டால் மன்னி கூப்பிட்டமாதிரி இல்லையா? அம்மாதிரியெல்லாம் நீ ஏன் கற்பனை செய்து கொள்கிறாய்? எனக்கு வர வேண்டும் என்று தோன்றும் போது கட்டாயம் வந்து விடுவேன்" என்றாள்.
ஆனால் பவானியின் உள்ளத்தில் குமுறும் எண்ணங்களையோ அவள் மனம் துடிக்கும் துடிப்புகளையோ அவர்கள் இருவரும் கவனிக்கவில்லை. அண்ணனுக்கும் மன்னிக்கும் தெரியாமல் அவள் வாசல் அறைக்குள் புகுந்து வெகு நேரம் வரையில் கண்ணீர் விட்டுக் கலங்கியதைக் குழந்தை பாலு ஒருவன் தான் அறிவான். கண்களில் நீர் வழிய உட்கார்ந்திருக்கும் அன்னையிடம் சென்று ஆசையுடன் அவள் கழுத்தைக் கட்டிக் கொண்டான் அவன்.
"அம்மா! அம்மா! நீ ஏன் அழுகிறாய்? அப்பா இல்லையே என்றா? நான் இருக்கிறேனே அம்மா" என்றான் குழந்தை. பவானி அழுகையினூடே சிரித்தாள். அவளுக்குத்தான் பாலு இருக்கிறானே!
பின் அவள் ஏன் அழ வேண்டும்?

