கருகும் எண்ணங்கள்து
கும்மட்டியில் ஜ்வாலை விட்டு எரிந்து கொண்டிருந்த நெருப்பு அந்தத் தேதித் தாளை அப்படியே பஸ்மமாகப் பொசுக்கி விட்டது. அது கருகிச் சாம்பலாகிப் போவதை பவானி பார்த்துக் கொண்டே உட்கார்ந்து கொண்டிருந்தாள். அந்தப் பதினைந்தாவது எண் கருகிப்போனதே ஒழிய அவள் மனத்துள் பதிந்து போன அந்தப் பழைய நினைவுகள், அடுப்பில் காற்று வேகத்தில் சுழன்று எரியும் தீயைப் போலச் சுழன்று எழுந்தன.
நான்கு வருஷங்களுக்கு முன்பு சித்திரை மாசத்தில் ஒருநாள். அன்று பதினைந்தாம் தேதி. அது தமிழ் மாசத்தின் பதினைந்தாம் தேதியோ அல்லது ஆங்கில மாசத்தின் பதினைந்தாவது நாளோ? அதைப்பற்றி அவ்வளவு தெளிவாகப் பவானிக்கு நினைவு இல்லை. அன்று அவள் கணவன் வழக்கத்தை விட சீக்கிரமாகவே எழுந்து விட்டான். பவானியின் மனமும் கடந்த பத்து தினங்களாகவே சரியாக இல்லை. இனிமேல் நம்பிக்கைக்கு இடமில்லை' என்று வைத்தியர் கூறி இருந்தார். ”இருதயம் பலவீனமாக இருக்கிறது; இருமினால் சளியுடன் ரத்தமும் கலந்து வருகிறது. இனிமேல் நான் என்ன செய்ய முடியும்?' என்று வைத்தியர் கூறியதைக் கேட்ட பவானியின் நெஞ்சம் துயரத்தால் வெந்தது. அவளுடைய மனம் துண்டங்களாகப் பிளந்து சிதறுவது போல் இருந்தது.
"டாக்டர்!" என்றாள் வேதனை தொனிக்கும் குரலில். டாக்டர் சிறிது நேரம் கையிலிருந்த ஸ்டெதஸ் கோப்பைச் சுழற்றிக் கொண்டே நின்றிருந்தார். இருபத்தைந்து வயது கூட நிரம்பாத பூங்கொடியாகிய அவள், இனிமேல் கணவனை இழந்து தனித்துத்தான் நிற்க வேண்டுமா? பிறைமதி போன்ற அவளுடைய நெற்றியில் வட்ட வடிவமாகத் துலங்கும் அந்தக் குங்குமம் அழிந்து தான் போக வேண்டுமா?
டாக்டர் சிந்தனையில் ஆழ்ந்திருந்தார். பவானி நீர் மல்கும் கண்களுடன் அவரை ஏறிட்டுப் பார்த்தாள். ”டாக்டர்! எப்படியாவது என் கணவரைக் காப்பாற்றி எனக்கு மாங்கல்யப் பிச்சை தாருங்கள்" என்று தன் மலர் போன்ற கரங்களை ஏந்தி அவரிடம் பிச்சை கேட்டாள் அந்தப் பேதை. டாக்டரும் பிறப்பு இறப்பு என்கிற இயற்கையின் நியதிகளுக்கு உட்பட்ட ஒரு மனிதப் பிறவிதான் என்பது பவானிக்கு மறந்து போய் விட்டது. பாவம்! வாழ்க்கையின் இன்பக் கோட்டில் நிற்க வேண்டியவள் துன்பத்தின் எல்லையைக் காணும்போது தடுமாறுவது இயற்கைதானே? விழிகளின் கோணத்தில் துளித்த நீரைக் கைக்குட்டையால் துடைத்துக் கொண்டே அவர். “நான் என்ன அம்மா செய்ய முடியும்? உயிருக்கு உடையவனாகிய அந்தக் கடவுள் கருணை வைத்தால் உன் கணவன் பிழைத்து எழலாம். என்னால் ஆனவரைக்கும் முயன்று பார்த்தாகி விட்டது" என்றார்.
டாக்டர் தம் மனசைத் தேற்றிக் கொண்டு வெளியே போய் விட்டார். அப்புறம் அவர் முன்னைப் போல் சிரத்தையுடன் பவானியின் கணவனைப் பார்க்க அடிக்கடி வருவதில்லை.
பவானி எந்த நாளை ஒவ்வொரு நிமிஷமும் எதிர் பார்த்துக் கலங்கி இருந்தாளோ அந்தப் பதினைந்தாம் தேதி வந்தது. அந்த நாள் வழக்கம் போலத்தான் விடிந்தது. கிழக்கே உதய சூரியன் பளீரென்று உதயமானான். மலர்கள் மலர்ந்தன. பறவைகள் உதய கீதம் இசைத்தன. தென்றல் வீசியது. பவானி சோர்ந்த உள்ளத்துடன் எழுந்தாள். பல் விளக்கி, முகம் கழுவி, கண்ணாடி முன் நின்று நெற்றியில் குங்குமம் இட்டுக் கொள்ள ஆரம்பித்தாள்.
”பவானி" என்று கூப்பிட்டு இருமிக் கொண்டே எழுந்து உட்கார்ந்தான் அவள் கணவன். குங்குமச் சிமிழை ஒரு கையில் பிடித்துக் கொண்டு நின்றிருந்த பவானி அவனைத் திரும்பிப் பார்த்தாள்.
செக்கச் செவேல் என்று ராஜாவைப் போல் இருந்த அந்த உருவம் தான் எப்படி வற்றி உலர்ந்து போய் விட்டது! சுருள் சுருளாக அலைபாயும் அந்தக் கிராப்பு எப்படிக் கலைந்து சிதறிப் போய் இருக்கிறது? பார்வையிலேயே தன் உள்ளத்தின் அன்பை வெளியிடும் அந்தக் கண்களின் காந்த சக்தி எங்கே மறைந்து போய் விட்டது? ஆஜானுபாகுவாக இருந்த அந்த நெடிய உருவம் எப்படிப் பூனை போல் ஒடுங்கிக் கிடக்கிறது?
இளமையையும் இன்ப வாழ்க்கையையும் படைத்த இறைவன் ஏன் இந்த நோய் என்னும் துன்பத்தையும் கூடவே படைக்க வேண்டும்? இத்தனை கோடி இன்பங்களைப் படைத்த இறைவன் ஏன் இப்படிப் பயங்கரமான வியாதிகளைப் படைத்து. அதற்குப் பலி ஆகிறவர்கள விதி என்று சொல்லித் தேற்ற வேண்டும்?
மதுவைப் படைத்தவன் நஞ்சைப் படைத்திருக்கிறான். மலரைப் படைத்தவன் முட்களைப் படைத் திருக்கிறான். மானைப் படைத்தவன் புலியைப் படைத்-திருக்கிறான். அது தான் சிருஷ்டியின் தத்துவம். யாரும் கண்டறிய முடியாத ரகசியம்.
முகத்தில் வேதனை விளையாட எதிரில் தங்கச் சிலை மாதிரி நிற்கும் பவானியை அவன் ஆசை தீரப் பார்த்த பிறகு அமைதியான குரலில் ”பவானி! இங்கே வாயேன், இப்படி வந்து என் பக்கத்தில் உட்கார்" என்று ஆசை பொங்க அழைத்தான்.
பவானி பதில் ஒன்றும் கூறாமல் அவன் அருகில் சென்று உட்கார்ந்தாள். மெலிந்து போயிருந்த தன் கையால் அவள் இடுப்பைச் சுற்றி அணைத்தவாறு அவன் அவள் கையிலிருந்த குங்குமச் சிமிழை வாங்கிக் கொண்டான். அன்புடன் அவள் முகவாயைப் பற்றித் தன் முகத்துக்கு நேராக அவள் முகத்தைத் திருப்பினான். ஆள் காட்டி விரலைச் சிமிழுக்குள் தோய்த்துக் குங்குமத்தை எடுத்து அவள் நெற்றியில் வட்ட வடிவமாகப் பொட்டு வைத்தான்.
பவானியின் கண்கள் குளமாக இருந்தன. உதடுகள் துடித்தன. நெஞ்சுக் குமிழ் திக் திக் கென்று அடித்துக் கொண்ட து.
”பவானி! ஏன் அழுகிறாய்?" என்று கவலை தொனிக்கக் கேட்டான் அவன். அவள் பதில் பேசவில்லை.
”பைத்தியம்! நான் போய் விடுவேன் என்று தானே அழுகிறாய்? பிறந்தவன் இறப்பது உறுதி என்று கீதை படித்து எனக்கு உபதேசம் செய்தாயே! அதற்குள்ளாகவே மறந்து விட்டாயே பவானி?"
"ஆம்" என்கிற பாவனையாக அவள் கண்ணீருக்கிடையில் தலையசைத்தாள்.
" நான் பூமியில் பிறந்தேன். இன்றோ நாளையோ இறக்கப் போகிறேன். நான் பிறந்தது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை இறக்கப் போவதும்..." என்று அவன் இன்னும் ஏதோ முணு முணுத்துக்கொண்டே இருந்தான்.
பவானி ஜன்னலுக்கு வெளியே தெரியும் ஆகாயத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அந்த நீலவானில் மேலே எழும்பி வரும் கதிரவனின் ஒளி வையகமெல்லாம் பரவிப் புத்துணர்ச்சியை ஊட்டிக் கொண்டிருந்தது.
நீள் விசும்பையும் வெட்ட வெளியையும் உற்று நோக்கிச் சிந்தனையில் ஆழ்ந்து போயிருந்த அவள் கவனத்தை குழந்தை பாலுவின் மென் குரல் கலைத்தது .
"அம்மா! அம்மா!" என்று அழைத்துக் கண்ணைக் கசக்கிக் கொண்டே பாலு தட்டுத் தடுமாறிய வண்ணம் அவளைத் தேடி அறையை விட்டு வெளியே வந்தான்.
பவானி திரும்பிப் பார்த்தாள். தூக்கக் கலக்கத்தில் தடுமாறி நடந்து வரும் அவனை, ”வாடா கண்ணு இங்கே!" என்று அவள் கணவன் அழைத்து அவனுடைய தளிர்க்கரங்களைச் சேர்த்துத் தன் கைக்குள் புதைத்துக் கொண்டான். அதனால் மட்டற்ற மகிழ்ச்சியையும் பரவசத்தையும் அடைந்தான். அவன் மகிழ்ச்சி பொங்கும் குரலில், ”பவானி. குழந்தையின் கைகளைப் பிடித்துப் பாரேன். உனக்கு அந்த ஸ்பரிசம் எவ்வளவு இதமாக இருக்கிறது என்பது தெரியும்" என்றான்.
பவானி ஆசையுடன் பாலுவின் கைகளைச் சேர்த்துப் பிடித்துக் கொண்டாள். மெத்து மெத்தென் றிருந்த அந்தப் பிஞ்சுக் கரங்களின் பராமரிப்பில் தன் கணவன் தன்னை விட்டுப் போவதாகவே நினைத்தாள்.
”அம்மா! எனக்குக் காப்பி வேணும் அம்மா" என்றான் குழந்தை. அப்பொழுது தான் பவானிக்குத் தான் இது வரையில் அடுப்பே மூட்டவில்லை என்பது நினைவுக்கு வந்தது. விடிந்து ஏழரை மணி ஆகிவிட்டது. இதுவரையில் வியாதிக்காரனுக்கும் ஆகாரம் ஒன்றும் கொடுக்காமல் என்னவோ நினைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்ததை நினைத்து வருந்திக் கொண்டே பவானி சமையலறைக்குள் சென்று அடுப்பைப் பற்ற வைத்தாள்.
பதினைந்து நிமிஷங்களில் காப்பி போட்டு எடுத்துக் கொண்டு அவள் வெளியே வந்தாள். படுக்கை அருகில் குனிந்து கணவனைப் பார்த்தாள். அவனுடைய நெற்றியில் முத்து முத்தாக வியர்வை அரும்பியிருந்தது. கண்கள் லேசாகத் திறந்திருந்தன. அருகில் கிடந்த துண்டினால் அவன் நெற்றியை லேசாகத் துடைத்து விட்டு, "என்ன, காபி கொண்டு வந்திருக்கிறேன். சாப்பிடுகிறீர்களா!" என்று கேட்டாள் பவானி.
அவன் பதில் பேசவில்லை. மெதுவாக அவன் நெற்றியில் கை வைத்துப் பார்த்தாள் பவானி. அப்பொழுதும் அவன் அசையவில்லை. மிகவும் நிதானமாக அவன் 'வளங் கையைத் தொட்டுப் பார்த்தாள். 'சில்'லென்று இருந்த அந்தக் கரம் அவளை நடுக்கத்துடன் பின் வாங்கச் செய்தது. அவள் பிடியினின்று துவண்டு அது படுக்கையில் விழுவதற்கும், அவள் சற்றும் எதிர்பாராத விதமாக டாக்டர் உள்ளே நுழைவதற்கும் சரியாக இருந்தது.
”எப்படி இருக்கிறார்?" என்று கேட்டுக் கொண்டே அவர் அருகில் சென்று அவன் கையை எடுத்தவுடன் வேதனையால் அவர் நெற்றியைச் சுருக்கிக்கொண்டார் .
”டாக்டர் அவர்?..." என்று பவானி திணறிக் கேட்பதற்கு முன்பு ”அவ்வளவு தான் அம்மா, நீ கொடுத்து வைத்தது. கடவுளின் கருணை உன் விஷயத்தில் வற்றிவிட்டது" என்று கூறினார்.

