பொழுது விடிந்தது
பொழுது பலபல வென்று விடிந்து கொண்டுவந்தது. பவானியின் அடுத்த வீட்டில் கொட்டில் நிறையப் பசுக்கள் கட்டியிருந்தன. அன்று வெள்ளிக்கிழமை யாதலால் அந்த வீட்டு அம்மாள் பசுக்களுக்கு மஞ்சள் பூசி, குங்குமம் இட்டுக் கொண்டிருந்தாள். இங்கொன்றும் அங்கொன்றுமாக நரைத்திருந்த கூந்தலை அள்ளி முடிச்சிட்டு, பசேலென்று மஞ்சள் பூசியிருந்தாள்.
எழுந்தவுடன் மகாலட்சுமி போல விளங்கும் அடுத்த வீட்டுப் பார்வதியைப் பார்த்ததும் பவானியின் மனதுக்கு ஆறுதல் ஏற்பட்டது. நாற்பத்தைந்து வயதுக்கு மேலாகியும் பார்வதியின் தோற்றத்தில் ஒருவித தனிக் கவர்ச்சி இருந்தது. அவளுடைய கணவர் கல்யாணராமன் அடிக்கடி அவளைப் பார்த்துக் கேட்பது வழக்கம்.
”நீ! இப்படிச் சின்னப் பெண் மாதிரி, மல்கோவா மாம்பழம் மாதிரி இருக்கிறாயே. அது என்ன ரகசியம்? ஏதாவது காயகல்பம் செய்து கொண்டாயா? சாப்பாடு கூட ஒரு வேளைதானே சாப்பிடுகிறாய்?"
"ஆமாம். காயகல்பமும், காயாத கல்பமும் எனக்கு எதற்கு? நீங்களாவது சாப்பிடு-வீர்கள்! இவளுக்குத்தான் குழந்தை இல்லையே. இன்னொரு தரம் கல்யாணம் செய்து கொள்ளலாமா என்று உங்களுக்குச் சபலம் இருக்கலாம்" என்று பார்வதி சிரித்துக் கொண்டே கூறுவாள்.
"இன்னொரு கல்யாணமா? உன்னை விட்டு விட்டா?" என்று அவர் அகமும் முகமும் மலரச் சொல்வதைப் பவானி தன் வீட்டுச் சமையலறையிலிருந்து எத்தனையோ முறை கேட்டிருக்கிறாள். அவர்களுடைய தாம்பத்திய வாழ்க்கையில் இருந்த நேச பாவத்தை நினைத்தவுடன், அவளுக்குத் தற்கால விவாகரத்துச் சட்டங்களும் ஜீவனாம்ச வழக்குகளும் ஒரு கேலிக் கூத்தாகவே தோன்றின.
அன்று காலையில் எழுந்தவுடன் பார்வதியைப் பார்த்ததும் பவானியின் மனத்துக்கு ஆறுதல் ஏற்பட்டது. இரண்டு வீடுகளுக்கும் இடையில் ஒருகாரைச்சுவர் தான் இருந்தது. இரண்டடி உயரத்தில் இருந்த அந்த சுவர் இருப்பதும் ஒன்றுதான், இல்லாமல் இருப்பதும் ஒன்றுதான். சுவருக்கு அடுத்தாற்போல் பார்வதியின் வீட்டில் ஒரு பவளமல்லிகை மரம் இருந்தது. அதன் கிளைகள் பவானியின் வீட்டுப்பக்கமாகச் சாய்ந்திருந்தன. அதில் மலரும் மலர்கள் யாவும் பவானி பின் வீட்டில் உதிர்ந்திருக்கும்.
“இந்த அதிசயத்தைப் பார்த்தாயா பவானி? தினமும் இரண்டுவேளை தண்ணீர் ஊற்றி வளர்ப்பவளை மறந்து விட்டு, இந்த மரம் உன் வீட்டில் பூவாகக் கொட்டுகிறதே!" என்று சொல்லிக் கொண்டு பார்வதி பவானியைப் பார்த்துச் சிரித்தாள்.
”அது தான் உலக வழக்கம்" என்று பவானி விரக்தியாகப் பதிலளித்து விட்டுக் கீழே உதிர்ந்திருந்த மலர்களைப் பொறுக்கி, பாத்திரத்தில் நிரப்பிப் பார்வதியிடம் கொடுத்தாள்.
இதற்குள் கொட்டிலில் கட்டியிருந்த பசு மாட்டைக் கறந்து விட்டுப் பால் செம்பை எடுத்துக் கொண்டு வெளியே வந்தார் பார்வதியின் கணவர் கல்யாணராமன். சுவருக்கு அந்தண்டை நிற்கும் பவானியைப் பார்த்ததும் அவர். "உள்ளே போய் ஒரு தம்ளர் கொண்டுவா அம்மா. குழந்தைக்கப் பால் தருகிறேன்" என்றார். பவானியின் மகன் பாலுவிடம் அவருகு அலாதி அன்பு. சின்னஞ்சிறு வயதில் தன்னந்தனியாக வாழத் துணிந்து விட்ட பவானியிடம் அவருக்கு மதிப்பும் வாஞ்சையும் ஏற்பட்டிருந்தன.
பவானி சிறிதுநேரம் தயங்கி நின்றாள். பிறகு தயக்கத்துடன் உள்ளே சென்று. பாலுக்காகத் தம்ளர் எடுத்து வந்தாள்.
"நேற்று மத்தியானம் வீட்டில் பால் இல்லையென்று குழந்தைக்கு நீ ஒன்றுமே தரவில்லையாமே?" என்று கேட்டுக் கொண்டே அவர். செம்பிலிருந்த பாலைத் தம்ளரில் ஊற்றினார். பிறகு அவளைப் பார்த்து. ”உனக்குத் தேவைப்படுகிற பாலை நான் கொடுத்து விடுகிறேன் அம்மா. நீ விலை ஒன்றும் கொடுக்க வேண்டாம்" என்றார்.
பவானிக்கு அவரை எதிர்த்து ஏதாவது சொல்லவே தயக்கமாக இருந்தது. ”பால் நான் தான் கொடுப்பேன். நீ வாங்கிக் கொள்ளத்தான் வேண்டும்" என்ற தோரணையில் அல்லவா பேசுகிறார்? அவரிடம் போய் எப்படி வேண்டாம் என்று சொல்வது என்று நினைத் தாள் பவானி.
இருந்தாலும், அவளுக்கு சுயகௌரவம் அதிகம். பிறத்தியாருடைய தயவிலே அவளுக்கு வாழ விருப்பமிருந்தால் அன்றே- அவள் கணவன் இறந்து போன தினமே-வருந்தி வருந்தி அழைத்த அவள் தமையனுடன், சென்னைக்குப் போயிருக்கலாம். ஆகவே பவானி விநயமாகக் கல்யாணராமனைப் பார்த்தாள். பிறகு தயக்கத் துடன், ”மாமா! காசில்லாமல் வெறுமனே இதை வாங்கிக் கொள்ள என் மனம் ஒப்பவில்லை. ஊரிலே மற்றவர்களும் ஏதாவது வம்பு பேசுவார்கள்" என்றாள்.
கல்யாணராமன் பவானியை விழித்துப் பார்த்தார். "பூ! பிரமாதம்! ஊரிலே நாலு பேர் நாலு விதமாகப் பேசுவார்கள் என்று தானே உனக்குப் பயம் அம்மா? உனக்கு என்னைப் பற்றியோ என் மனசைப் பற்றியோ சந்தேகம் ஒன்றும் இல்லையே? அப்படி இல்லை யென்றால் பேசாமல் பாலை வாங்கிக் கொள்."
கல்யாணராமன் வெள்ளை மனம் படைத்தவர். வடக்கே நல்ல வேலையில் இருந்து ஓய்வு பெற்றுக் கொண்டு சொந்தக் கிராமத்தில் வீடு வாங்கிக் கொண்டு வந்து விட்டார். அவர்களுடையது என்று சொல்ல வீடும் நிலபுலன்களும் மாடும் கன்றும் இருந்தன. ஆனால் ஒரு குழந்தை இல்லை. பால்யத்தில் திருச்செந்தூர் முருகனையும் பழனி ஆண்டவனையும் வருஷத்தில் இரு முறை தரிசனம் செய்து தங்கள் குறையை முறையிட்டனர் அத்தம்பதி. ஆனால், மகப்பேறு மட்டும் அவர்களுக்குக் கிடைக்க-வில்லை. கல்யாணராமன் தெளிந்த உள்ளத்தைப் படைத்தவர். ஆகவே, அவர் இந்தக் குறையை மறந்து விட்டார். பார்வதிக்கு இது ஒரு ஆறாத குறை. அவள் இருந்த விரதங்களும், தவங்களும் மேலும் அவளுக்குப் புது ஒளியைத் தந்தன.
அவர்களைப் பொறுத்த வரையில் அவர்கள் வீட்டில் வேலை செய்யும் பாக்கியத்தின் பிள்ளையும், அண்டை வீட்டில் இருக்கும் பவானியின் மகன் பாலுவும் ஒன்று தான். பாக்கியத்துக்கும் அன்றாடம் பார்வதி மோரும் பாலும் கொடுத்தாள். பவானிக்குக் கொடுத்தால் அவள் என்ன நினைத்துக் கொள்வாளோ என்கிற தயக்கத்தினால் தான் பார்வதி இதுவரையில் அதைப்பற்றி ஒன்றுமே கேட்கவில்லை.
கல்யாணராமன் கபடமில்லாமல் கேட்டு கொடுத்தும் விட்டார். பவானி, அத்தம்பதியின் உயர்ந்த மனப் பான்மையை வியந்து கொண்டே பால் தம்ளரை எடுத்துக் கொண்டு உள்ளே சென்றாள். குழந்தை எழுந்திருப்பதற்குள் அடுப்பைப் பற்ற வைத்துப் பால் காய்ச்சுவதில் முனைந்தாள்.
அடுப்பங்கரையின் சுவரில் ஒரு காலண்டர் தொங்கிக் கொண்டிருந்தது. அன்று தேதி பதினைந்து, அந்தப் பதினைந்தாம் தேதி தான் அவள் வாழ்க்கையில் எத்தகைய மாறுதல்களைச் சிருஷ்டித்து விட்டது! அவள் பார்வைக்கு எதிராகக் கொட்டையான எண்ணில் அது அவளைப் பார்த்து சிரித்தது. சரியாக இரண்டு வருஷங்களுக்கு முன்பு அந்தப் பதினைந்தாம் தேதிதான் அவளையும், அவள் கணவனையும் இந்த உலகத்தில் நிரந்தரமாகப் பிரித்த நாள். அந்தச் சனியன் பிடித்த எண் கண் முன்னால் தெரியவே பவானி அவசரத்துடன் எழுந்து 'சர்' ரென்று அந்தத் தாளைக் கிழித்து எரியும் கும்மட்டியில் போட்டாள்.

