காட்சி-1
(நடுவம் கிராமத்தில் பெரிய ஆலமரத்தை யொட்டிய ஓர் ஓட்டுக் கட்டிட வீடு. வீட்டு வாசலில் கோழி தானியத்தைக் கொத்திக் கொண்டிருக்கிறது.
வாசலில் ..)
பன் : ஐயா!... ஐயா!...
செங் : யாரது?
பன் : நாந்தாங்க பன்னாரி...
செங் : பன்னாரியா? யாருன்னு தெரியலியே! என்ன விஷியம்?
பன் : முத்துக்காளை அவுங்க இருக்காங்களா?
செங் : ஏண்டா! என்னமோ பேரு வச்சவன் மாதிரில்ல மண்டைல அடிச்சாப்ல சொல்றே...எலேய்! ஒளுங்கா ஓடிரு...இல்லே தோலெ உரிச்சு உப்புக் கண்டம் போட்டுப்புடுவேன்... ஆம்மாம்!
சிங் ; என்னம்மா நீ! அவரு யாரோ எவரோ! இப்பிடி எடுத்தெறிஞ்சு பேசுறியே! ஒனக்கே நல்லா இருக்குதா?...நீ நடந்துக்கிட்ட மொறை சரியா யில்லே !
செங் : ஏண்டி! எனக்கே புத்தி சொல்றியா? ஒனக்கு அம்புட்டு தூரம் துணிச்சலா? போடி உள்ளே! வயசு வந்த பொண்ணு வாயக் காட்டாதடி...யாருகிட்ட எப்படிப் பேசணும்னு எனக்குத் தெரியும்... பெரிய வங்களுக்கு புத்தி சொல்றத இன்னையோட வுட்டுப்புடு . ஒன்னச் சொல்லி குத்தமில்லே! எந்தலைவிதி!
சிங்: ஒனக்த, அந்தப் படைச்ச கடவுள் தான் பொறுமையையும் நிதானத்தையும் கொடுக்கணும்... அது, இந்தப் பெறவில வரும்னு எனக்குத் தோணலை... சரி! சரி! நான் உள்ளே போய்த் தொலைக்கிறேன் ...நீ மொதல்ல கத்தறத நிறுத்து!
செங் : வாயக்கொறடி வாயாடி! உள்ளபோயும் என்ன பேச்சு? யேய் முண்டாசு கட்டினாப்புல முடி வச்சு கிட்டு, தெருக்கூத்துல இருக்றாப்ல படுதாவக் கட்டு கிட்டு நிக்ற பெரிய மனுசா!...கருமம்! போய்யா... இன்னமே இங்க நின்னுகிட்டேயிருந்தே மரியாதை கெட்டுப்போயிடும் ஆமாம்! ஜாக்ரதை! வெட்டி மடவாய்ல வச்சுப் புடுவேன்! இந்த செங்கமலத்தப் பத்தி ஒனக்கு ஒண்ணும் தெரியாது...
(முத்துக்காளை வந்து கொண்டே)
முத் : என்ன செங்கமலம்? யாரு பய? ஏன் இங்க வந்து குத்துக்கல்லு மாதிரி நிக்கறான்...எதுக்கு வந்தானாம்? அவனுக்கு ஏதாவது போதாத காலமா?
செங் : ஒன்னியத்தான் தேடி வந்திருக்கானாம்... இந்தப் பயலுவளையெல்லாம் நம்பாதே மச்சான்! முன்ன ஒருபய இப்பிடித்தான் வந்தான்.. வூட்டுக்குள்ள போய் திரும்பறத்துக்குள்ள நம்ப கோளிக்குஞ்சு ரெண்டைக்காணோம்...ஜாக்ரதை! கண்ட பயலுவ கிட்டல்லாம் வாய் கிளிய பேசித் தொலைக்காதே!
பன் (தனக்குள்) : போயும் போயும் கோளிக்குஞ்சுதான் திருடணுமா? (முத்துக் காளையை நோக்கி) ஐயா! நான் யாருன்னு தெரிஞ்சுகிட்டா இப்பிடியெல்லாம் பேச மாட்டீங்க...
முத் : நீ யாரா இருந்தா என்னய்யா! தொறக்காதே வாயை!
செங் : மூணாவது வூட்லதானெ நாட்டாமை இருக்காரே! அவுருகிட்ட இளுத்துக்கிட்டு போய் வுடு...பெரிய மனுஷன்... வெவரந் தெரிஞ்சவரு... இவுனுவகளுக் கெல்லாம் புரியராப்லசொல்லுவாரு... நமக்கெதுக்கு ஊர்ப் பொல்லாப்பு...
முத் : ஆமாம் புள்ளை ! நமக்கு எடுத்த ஒடனே ஆத்திரந் தானெ வருது... அவரு படிச்சவரு...நெதானமா பேசுவாரு .. நாமதான் ரெண்டெளுத்து படிக்காம போய்த் தொலஞ்சுப் புட்டோம்....
செங் : - சரி! சரி! வளத்தாம சீக்கரமா பேசிப்புட்டு வேசுமா வா! ஒனக்கு நின்னாக்க நின்ன எடம் .. போனாக்க போன எடம்...ஒனக்குக் களுத்த நீட்டுன நாள்ளேருந்து எனக்கு ஒபத்திரவந்தான்!
முத் : வந்தர்ரேன் புள்ளே...உள்ளெஎலப்புள்ளி நோய்க்கு மருந்து வச்சிருக்கேன்... கிராமசேவக்கு எப்பிடியோ தெளிக்கச் சொன்னாங்க ..மறந்து தொலஞ்சுப் புட்டேன்... இந்தக் கொதிகஞ்சி சிங்காரி கிட்ட கொடுத்து படிக்கச் சொல்லி பக்குவமா தெளி! நான் வந்தர்ரேன்.... நடய்யா !
பன் : இதோ வந்து கிட்டே இருக்கேன்...
முத் : ஓடுனே! மூஞ்சி மொகரைய பேத்துருவேன்...
பன் : (தனக்குள்) இவரப் பார்த்தாலே பாவமாயிருக்குது ...எம் மூஞ்சிய பேக்கறாராம்!
பன் : (முத்துக்காளையை நோக்கி) நாந்தான் ஒங்க பின்னாடியே வந்துகிட்டே இருக்கேனே! அப்பரம் என்ன ?

