காட்சி-3

செவப்பாயியின் வீடு... காலை 6 மணி....

செவப் : (பெருக்கிக் கொண்டே பாடுகிறாள்) தலைவாரிப் பூச்சூட்டி உன்னைப்... பாடசாலைக்கு போவென்று சொன்னாள் உன் அன்னை...மலைவாழை யல்லவோ கல்வி...கடிகாரம் ஓடுமுன் ஓடு...

(மணிமேகலை வருகிறாள்)

மணி : என்ன செவப்பாயி... பாட்டும் கூத்தும் சோக்கா இருக்குதே...

செவப் : இருக்காதா பின்னே !... நாம் படிக்கறத பாத்து எம் மவன் கருக்கல்லயே எந்திரிச்சு கம்மாய்க்கு குளிக்க போயிட்டான்... அத்தோட அவங்கப்பாரு படிச்சு என்னடா செய்யப் போறேன்னு பொலம்பி கிட்டேயிருந்தவரு...சவுளி கடை மளிய கடைல போயி குந்துடான்னு சொன்னவரு...படீடான்னு சொல்லுறாரே...

மணி : எல்லாம் ஒன்னோட சாமார்த்தியந்தான் ... இத்தினி பேருல நீதான் வெரசா படிக்க கத்து கிடடே ...

செவப் : நீ புருசனை திருத்த கத்து கிட்டியே...

மணி : அது சரி... நீயா எப்படி சேத்து படிக்கறே?

செவப் , கா வை எடுத்துக்க, அக்கா, காகா, வருதா... பொறவு தேங்கா மாங்கா... இப்படி பளகணும்....

மணி : இப்ப பாரு ..பம்பு, பாம்பு பல்லு...பாலு இப்பிடி கூட சேக்கலாமில்லை ..

செவப் : அம்புட்டுதான்...இன்னோன்னு சொல்றேங் கேளு... நாட்டு நடப்பு, ஊருக்கு நல்லது, பயறு பச்சை... இந்த மாதிரி ரேடியோல கேக்கற வார்த்தை , அப்பரம் “ இருக்கறது வுட்டுப் பறக்கறது புடிக்காதே", "கொட்டி கொட்டி அளந்தாலும் குறுணி பதக்காவாது''. இது மாதிரி பளமொளிங் களை நெனப்பு வச்சுகிட்டு அதுங்க இருக்கற புத்தகங்களை படிச்சாக்க...வெரசா எளுத கத்துக் கிடலாம்.....

ஆச்சி : ஒங்கூட நேத்து அந்தப்பள்ளிகூடத்துக்கே வந்திருக்கலாம்... ஆடுபுலியாடி கையில இருந்த காசெல்லாம் போச்சுது... அடிக்க வேறவர்ரானுவ.. பந்தயம் வச்சு ஏவப்பட்ட தோப்பு...

செவப் : இந்த மொரட்டுத்தனம்... சூதாட்றபுத்தி, பட படப்பு...எல்லாம் போயி ஊத்துத் தண்ணி மாதிரி புத்தி தெளிவா இருக்கும் ..ஒளுங்கா சேரு...

ஆச்சி : எங்கிட்ட காசு கீசு கெடையாது...பொஸ்த்தகம் எல்லாம் வாங்க முடியாது...மேக்கொண்டு... இத்தினி வயசுக்கப்புறம் படிக்கப் போனா வெக்கமா இருக்குது... நாலு பேருக்கு முன்னால வாத்தியாரு சொன்னத திரும்பச் சொல்லாட்டி திட்டுவாரு... முட்டிபோடச் சொல்வாரு... முன்னமே தான் சொல்லியிருக்கேனுல்ல... செவப் : நீ பொழுது விடிஞ்சு தூங்கறப்போ ... நாலு பேரு பேசுவாங்களே... அப்ப வெக்கம் எங்க போவுது... கண்ட கண்ட நேரத்ல கண்ட கண்டத ஊதறத நிறுத்து... நீ ஒண்ணும் காசு கொடுக்க வாணாம்... பொஸ்த்த கம்... பலபம் ... செலேட்டு... ஒண்ணுமேவாங்கவாணாம்...பேசாம வந்து குந்திக்கிட்டிரு.... ஒனக்கே புரியும்...

ஆச்சி : இப்பவே போவோம்...

மணி : ஏ, கொதி அர்.சி...பொளுது சாஞ்சு...ரேடியோல மாநிலச் செய்தி முடியுது பாரு அப்பத்தான்... வந்து சேரு... இப்ப போயி பிஎச்.சி. பத்துசதம் கடைல வாங்கி களத்து மேட்ல ஐயா இருப்பாரு அவரு சொல்றபடி தெளி...

செவப் : பாத்தியா மணிமேகலை...வெவசாயம் சம்பந்தப் பட்ட விசயங்களை தெரிஞ்சுகிடத்தான் நான் இந்த முதியோர் கல்வீல சேர்ந்தேன்...இதுக்கு முன்னால ஒத்தரோட மொகத்த பாத்து மூஞ்சிய பாத்து இதுல என்ன எளுதியிருக்கு அதுல என்ன எளுதியிருக்குதுன்னு கெஞ்சி கூத்தாடி கேக்க வேணும்...இப்ப நம்ம கந்த வாத்தியார் கிட்டெ எப்ப வேணுமுன்னாலும் கேக்கலாம்... நாமகூட படிச்சுகிட்டும் வாரோம்...... -

மணி : எனக்கு இப்ப வந்து மண்வளப் பரிசோதனை, பயிர்ப் பாதுகாப்பு, ஊடுபயிர் மொறை, நெலத்தடித் தண்ணிய எப்பிடி கண்டு புடிக்கறது... இதுகளப் பத்தி தெரிஞ்சுகிட ரொம்ப ஆசையா இருக்குது... நம்ப நாட்டாமைகிட்ட சொன்ன ஒடனேயே அவரு விவசாய ஆபீசருக்கு எழுதி பல தகவலுங்களை வரவளைச்சிருக்காரு... நம்ப கந்த வாத்தியாரு அலுப்பு பார்க்காம பொறுமையா

வௌக்கி சொல்லப் போவறாராம்...

செவப் : இதுலேருந்து முதியோர் கல்வித் திட்டத்ல கால நேரம், மணியடிக்கறது, வேலை நிறுத்தம், விடுமுறை நாள்... இதெல்லாங் கெடையாதுன்னு தெரியுதா... அதனால நாம வூடு வூடாப் யோயி நம்ப சனங்க கிட்ட விசியங்களை எடுத்து சொல்லி அவங்களையும் படிக்க வச்சு உளுறவன் கணக்கு பாத்தா ஒளக்குக்கு மேல மிஞ்சும்னு மெய்ப்பிச்சுப் புடுவோம்.

மணி : ஆக கல்விக்கு வயசில்ல...சரிதானே,

செவப் : அதுலயும் முதியோர் கல்விக்கு முக்கியமா இல்லே .... அதுக்காவ... தள்ளாத வயசுல படிக்கணும்னு அருத்தம் இல்லே... மணி : ஏன் முடியாது...கட்டாயம் முடியும். சரிதான் னு இப்ப நல்லாப் புரியுது...