Chapter 3

பகல் முழுவதும் ஸ்வர்ண குமாரி தனது தந்தையின் கொடூரத்தை நினைத்து நினைத்து மனம் தயங்கிக் கொண்டிருந்தாள். இவளுக்கு ஒன்றுந் தோன்றவில்லை. இது போன்ற சமயங்களிலே தாய் இருக்கும் பக்ஷத்திலே எவ்வளவோ தைரியம் சொல்லுவாள், ஆனால், நமது ஸ்வர்ணத்திற்கோ தாயார் அதிபாலியத்திலே இறந்து போய்விட்டாள். வீட்டிலுள்ள ஸ்திரீக ளெல்லாம் தூர பந்துக்களே யல்லாமல் இவள் தன் மனதை யெல்லாம் சொல்லி முறையிடக்கூடியவாறு அத்தனை நெருங்கிய நட்புடையோர் யாரும் கிடையாது.

தனியே நெடுநேரம் யோசித்து யோசித்து இவள் பின் வருமாறு நிச்சயம் செய்து கொண்டாள்: 'தந்தையோ இரும்பு நெஞ்சுடையவர். மனோரஞ்சனனோ தனது தாயிருக்கும் வரை பிரம சமாஜத்திலே சேரப்போவது கிடையாது. நமக்கு இந்த ஹேமசந்திரனை விவாகம் செய்து கொள்ள வேண்டு மென்றே விதி யிருக்கின்றது போலும். மனோரஞ்சனனுடனேதான் வாழ்வே னென்று நான் தெய்வ சாக்ஷியாக விரதம் கொண்டாய் விட்டது. மனோரஞ்சனன் என்னை விவாகம் செய்து கொள்வதும் சாத்தியமில்லை. இனி தந்தை வீட்டிலிருந்து பிச்சைக்காரி போல வெளியே துரத்துண்டு ஏன் அவமான மடைய வேண்டும்? ஹேமசந்திரனையே விவாகம் செய்து கொள்வதாக இன்று மாலை சம்மதமளித்துவிட்டு, விவாகத்திற் கென்று குறிப்பிடப்பட்டிருக்கும் நாளில் விஷத்தைத் தின்று உயிரை மடித்துக் கொள்கிறேன், இதற்கிடையே ஏதேனும் அகஸ்மாத்தாக அனுகூலம் ஏற்பட்டால் பார்த்துக் கொள்வோம். இல்லாவிட்டால் மரணமே கதி' என இவ்வாறு மனவுறுதி செய்துகொண்டு விட்டாள்.

இந்த ஹேமசந்திரன் யார்? இவன் ஒரு பணக்கார ஜமீந்தார். பிரம் ஸமாஜத்தைச் சேர்ந்தவன். ஆனால் புராதன ஆசாரங்களைக் கைவிட்ட இவன் மற்ற பிரம் ஸமாஜிகளைப் போல அத்துடன் நிறுத்திவிடாமல், மதுபானம், கோமாமிச போஜனம் முதலிய புது ஆசாரங்களும் படித்துக் கொண்டு விட்டான். பார்ப்பதற்கு எருமைபோலே கொழுத்து வெகு குரூபியாக இருப்பவன், மஹாமூடன்; குரூர சிந்தை யுடையவன்.

இவனிடம் ஸ்வர்ண குமாரியின் தந்தை செல்வம் பற்றி விருப்புக் கொண்ட போதிலும் நமது ஸ்வர்ணத்தின் கோமள நெஞ்சு காதலுறுதல் எங்ஙனம் இயலும்? நிற்க.

மாலை 6 மணி ஆயிற்று. பெரிய வனம்போல விஸ்தாரமுடைய சோலையினிடையிலே ஓர் அழகிய கொடி வீட்டின் கண் ஸ்வர்ண குமாரி தனியே உட்கார்ந்திருக்கின்றாள். ஹேமசந்திரன் வந்து சேர்ந்தான்.

"பெண்ணே ! இப்பொழுது உன் மனது எப்படி யிருக்கிறது?"

"சரிதான்! சிறிது நாற்காலியைச் சற்றே விலகிப் போட்டுக் கொண்டு பேச வேண்டும்."

"அடடா! இந்தக் குணம் இன்னும் மாறவில்லை போல் இருக்கிறதே! ஸரிய பாபு நீ சரிப்பட்டு வந்து விட்டாயென்று சொன்னாரே."

"ஆமாம்! அவருடைய கட்டாயத்தின் பேரில் சரிப்பட்டு விட்டேன்."

"ஆனால், என்னை விவாகம் செய்து கொள்வதில் உன் மனதிற்குத் திருப்தி கிடையாதோ?

"கிடையாது."

"அது எப்படியேனும் போகட்டும். உன் தகப்பனார் பலவந்தத்தின் பேரிலாவது நீ என்னை விவாகம் செய்து கொள்ளப்போவது நிச்சயந்தானே"

"ஆமாம்."

"சபாஷ்! ஸ்வர்ணா, மெத்த சந்தோஷம், நீ இனி என் மனைவிதானே! அட்டா என்ன சௌந்தரியம்! என்ன செளந்தரியம்! உன்னைப் பெறுவதற்குப் பட்ட பாடெல்லாம் தகும்! தகும்! கண்ணே ஒரு முத்தம் தரமாட்டாயா?"

"நாற்காலியை விலகிப் போட்டுக் கொள்ளும்."

"நீ எனக்கு மனைவி யென்பதோ நிச்சயமாய் விட்டது. மூடபக்தியுள்ள ஹிந்துக்களைப்போல் நாம் விவாகச் சடங்குகளுக்குக் காத்திருப்பது அவசியமில்லை யல்லவா? விவாஹ பலனை இப்போதே ஏன் அனுபவித்துக் கொள்ளக் கூடாது? இனி உனது திவ்விய சரீரம் என்னுடையதுதானே!"

"விவாக தினத்திலேயே நான் இறந்து போய்விட்டால் எனது சரீரம் உமதாகமாட்டா தல்லவா?"

"அப்படியா யோசிக்கிறாய்? ஆனால் விவாகப் பயனை இப்பொழுதே நுகர்ந்தறிகின்றேன்" என்று சொல்லி ஹேமசந்திரன் பலவந்தமாகத் தழுவக் கையெடுக்கின்றான்.

ஸ்வர்ண குமாரி "கோகோ" என்றலறத் தொடங்கி விட்டாள்.

திடீரென்று கொடி மாடத்திற்குப் பின்னே புதரில் பதுங்கி நின்ற மனோரஞ்ஜனன் கையும் தடியுமாக வந்து ஹேமசந்திர பாபுவைப் பிடித்து வெளியே தள்ளி நையப் புடைத்தான். இந்தக் கலவரையிலே தந்தையாகிய ஸ்ரியகாந்த பாபுவும் வந்து விட்டார். மகள் கீழே மூர்ச்சை யுண்டு கிடக்கிறாள். வரும்போது குடித்து வந்த கள்ளின் வெறியாலும், அடிபட்ட கோபத்தாலும் ஹேமசந்திரன் ஏதோ வாய்க்கு வந்தபடி உளறினான்.

உடனே ஸுரியகாந்தர் மனோரஞ்ஜனனைப் பார்த்து "ஏதடா! பையலே நீ இங்கே ஏன் வந்தாய்? இதெல்லாம் என்ன குழப்பம்?" என்று கேட்டார்.

மனோரஞ்ஜனன் "ஐயா, உமது குமாரத்தி மூர்ச்சை யுண்டு விழுந்து கிடக்கிறாள், இன்னும் சிறிது நேரம் கவனியாம லிருந்தால் மிகவும் அபாயம் நேர்ந்துவிடும். அதற்கு வேண்டிய ஏற்பாடு செய்யும். மற்ற விஷயங்கள் பிறகு பேசிக் கொள்ளலாம்" என்றான்.

அதன்படியே ஸூரியகாந்தர் மகளை வீட்டிற் கெடுத்துச் சென்று வேண்டிய சிகிச்சைகள் செய்ததின் பேரில் ஸ்வர்ண குமாரிக்கு முர்ச்சை தெளிந்தது. இரண்டு மணி நேரத்திற்கப்பால் ஸுரிய பாபு வந்து மகளிடம் விசாரணை செய்தததில், அவள் உண்மையாக நடந்த விஷயங்களை யெல்லாம் தெரிவித்தாள்.

அவள் சொல்வதெல்லாம் மெய்யென்று அவருக்குப் புலப்பட்டு விட்டது. 'அடடா! நமது குடும்பத்திற்குப் பெரிய அவமான மிழைக்கத் தெரிந்த பாதகனுக்கா பெண் கொடுக்க எண்ணி யிருந்தேன்?" என்று தம்மைத் தாமே நொந்து கொண்டு ஸரியகாந்தர் சென்று விட்டார்.

மறுநாட் காலை மகளிடம் வந்து, "பெண்ணே உனது மனோரஞ்ஜனனை நான் நேற்றுதான் நன்றாக உற்றுப் பார்த்தேன், அவன் செல்வமில்லாது வறியனா யிருந்த போதிலும் ரூபத்தினாலும் அறிவினாலும் நமக்கு மருமகனா யிருப்பதற்கு யோக்கியதை யுடையவனாகவே காணப்படுகின்றான், அவன். ஹிந்து மார்க்கத்தினின்றும் நீங்கிப் பிரம்ம சமாஜத்தில் சேர்ந்து கொள்ளும் பக்ஷத்தில் உங்களிருவருக்கும் விவாஹம் முடித்து வைப்பதில் எனக்கு யாதொரு ஆக்ஷேபம் கிடையாதென்று அவனிடம் தெரிவித்துவிடு" என்று சொல்லிச் சென்று விட்டார்.

இது முறையே மனோரஞ்சனனுக்குத் தெரிவிக்கப் பட்டது. ஆயினுமென்ன பயன்? மனோரஞ்சனன் தான் பிரம்ம ஸமாஜத்தில் சேர்ந்து கொள்வானாயின் தனது தாய் மனமுடைந்து இறந்து போவாளென்பதை நன்றாக அறிவான்.

எனவே, தாயினிடத்து அன்பு ஒருபுறமும் ஸ்வர்ண குமாரியின் மீது மையல் மற்றொரு புறமும் அவனது மனதை இழுக்க இன்ன செய்வதெனத் தெரியாமல் திகைப்பா னாயினான். இவ்வாறே ஒன்றரை வருஷகாலம் கழிந்து விட்டது. இவன் கடைசிவரை பிரம்ம சமாஜத்தில் சேராமலே யிருந்துவிடும் பக்ஷத்தில் தான் விவாகம் செய்து கொள்ளாமலே யிருந்துவிட வேண்டுமென ஸ்வர்ண குமாரி நிச்சயித்துக் கொண்டிருந்தாள்.