Chapter 2

ஸ்வர்ண குமாரியை மனோரஞ்ஜனன் மணம் புரிந்து கொள்வதிலே மனோரஞ்ஜனனுடைய தாயாருக்கு இத்தனை விரோதம் ஏன் இருக்கவேண்டு மென்பதை நமது கதாப்பிரியர்கள் அறிய ஆவலுறலாம். அதன் காரணம் பின்வருமாறு: ஸ்வர்ண குமாரியின் தந்தையாகிய ஸுரியகாந்த பாபு பிராமண குலத்திலே பிறந்த போதிலும், பிராமண ஆசாரங்களையும், அனுஷ்டானங்களையும், மார்க்க முறைகளையும், நம்பிக்கைகளையும் திலதர்ப்பணம் செய்துவிட்டு, "பிரம ஸமாஜம்" என்ற புதிய மார்க்கத்தைச் சேர்ந்து கொண்டு விட்டார்.

இந்த ஸமாஜத்தார் "ஜாதி பேதம் இல்லை, விக்கிரஹாராதனை கூடாது. பெண்களும் ஆண்களும் சமானமாக ஒத்துப் பழகலாம்" என்பது போன்ற நவீனக் கோட்பாடுகள் கொண்டிருப்போர்.

ஸ்வர்ண குமாரியின் தகப்பனார் எந்த ஜாதிக் காரனுடனும் கலந்து சாப்பிடுவார். அவர்கள் வீட்டு ஸ்திரீகள், பகிரங்கமாக வெளியே உலாவுவதும், கண்ட புருஷர்களுடன் சம்பாஷிப்பதும் பிழை யில்லை யென்று நடப்பவர்கள். ஸ்வர்ண குமாரிக்கு வயது பதினெட்டாகியும் இன்னும் விவாகமில்லை. இதுவெல்லாம் மிகுந்த புராதன இயற்கை கொண்ட மனோரஞ்ஜனன் தாயாருக்குக் காதால் கேட்கக்கூட வெறுப்பாக இருந்தது.

இங்ஙன மிருக்க ஸ்வர்ண குமாரியின்மீது தனது மகன் அடங்காத மையல் கொண்டிருக்கிறா னென்பதையும், அதன் பொருட்டாகவே வேறு விவாகத்தில் விருப்பமில்லா திருக்கிறா னென்பதையும் இந்த அம்மை பல முகாந்தரங்கள் மூலமாக ஊஹித்தறிந்து கொண்ட நாள் முதலாக இவள் மனதிலே தோன்றிய வருத்தங்களுக்கு அளவு கிடையாது. நிற்க.

இங்கே ஸ்வர்ண குமாரியின் நிலை, எப்படி யிருக்கிற தென்பதைக் கவனிப்போம். இவள் மனதிலே மனோரஞ்ஜனனுடைய வடிவம் என்றும் அகலாத சுந்தர விக்கிரஹமாகப் பதிந்து போய் விட்டது. வரம்பில்லாத செல்வமுடைய குடும்பத்திலே பிறந்து, ஸங்கீதம், ஸாஹித்யம் முதலிய கலைகளிலே யெல்லாம் சிறந்த பழக்கம் கொண்டவளாகித் தனக்கு இசைவான கணவனைத் தவிர மற்றப்படி சாதாரண மனிதன் எவனையும் மணம் செய்து கொள்ளக்கூடாதென்று இவள் ஒரே பிடிவாதமாக இருந்தாள்.

இவளது ரூபலாவண்யமோ சொல்லுந் தரமன்று. கருமை நிறங்கொண்ட அமிருதத்தின் கடல்களென்று சொல்லத்தக்க இவளுடைய நேத்திரங்களும், முல்லை போன்ற புன்சிரிப்பும், மூக்கும், கன்னமும், நெற்றியும், ஸ்வர்ணமயமான சரீரமும், இவளை என்னென்று சொல்வோம்! சுகப்பிரம ரிஷி பார்த்தபோதிலும் மயங்கிப் போய் விடுவார்.

இவளுக்கு மனோரஞ்ஜனன் பாலிய சினேகன். பள்ளித் தோழன். தேவரூபனாகிய இவனையே கடைசிவரை பள்ளித் தோழனாகவும் கொள்ள வேண்டுமென்று இவள் ஆசை கொண்டு விட்டாள்.

இதற்கு முன் எத்தனையோ முறை இவர்கள் அடிக்கடி சந்திப்பதும், காதற் சுவையிற் கனிந்து நிற்பதுவும் உயிரென நோக்கி உள்ளம் வாடுவதும் பொருளிலாத் தெய்விக மொழி பல புகல்வதும் - என இவ்வாறு தமது மோஹ நெருப்புக்கு நெய் ஊற்றிக் கொண்டே வந்திருக்கிறார்கள்.

இப்போது மனோரஞ்ஜனன் மறுபடியும் சாந்த்பூருக்கு வந்தவுடனே வழக்கம் போலவே இவர்களது சந்திப்புகள் தொடங்கி விட்டன.

இதை நமது ஸ்வர்ணத்தின் தந்தையாகிய ஸூரிய காந்த பாபு அறிந்து ஒரு நாள் இவளை அழைத்து, "மகளே, நீ நான் சொன்னபடி ஹேமசந்திர பாபுவை விவாகம் செய்து கொள்ளச் சம்மதிக்காம லிருப்பாயானால் இனி என் வீட்டை விட்டு வெளியேறி விட வேண்டும். கையிலே காசற்றவனும், விக்கிரகாராதனை செய்யும் மூட பக்திக் கூட்டத்தாரைச் சேர்ந்தவனுமாகிய அந்த மனோரஞ்ஜனப் பயலை நீ அடிக்கடி பார்த்துப் பேசுகிறா யென்ற வார்த்தை என் காதிலே படக்கூடாது. அடுத்த தை மாதம் உனக்கும் ஹேமசந்திர பாபுவுக்கும் விவாகம். நீ இப்போதே எனக்கு ஆகட்டுமென்ற வார்த்தை கொடுத்துத் தீரவேண்டும். நான் எத்தனையோ வருஷம் உன்னுடைய மூடத்தன்மையான பிடிவாதத்தைச் சகித்தாய்விட்டது. இனி ஒரு க்ஷணம் பொறுக்க மாட்டேன்.

"இன்று மாலை இங்கே ஹேமசந்திரர் வருவார், நீ தோட்டத்திலே யுள்ள பூஞ்சோலையில் 6 மணிக்குப் போயிரு. அங்கே அவரை வரச் சொல்கிறேன். நீ அப்போது அவரிடம் உன்னுடைய சம்மதம் தெரிவித்தே தீர வேண்டும். இல்லா விட்டால் உன்னைக் கையும் கப்பரையுமாக நாளைக் காலையில் வெளியே ஓட்டி விடுவேன்" என்று மஹா கோபத்துடன் படபடவென்று சொல்லிவிட்டு ஸுர்யகாந்த பாபு எழுந்து போய் விட்டார். தனது மகள் கண்ணீர் மாரிக்கிடையே தரைமீது சோர்ந்து விழுந்து விட்டதைக்கூட அவர் கவனிக்கவில்லை.