Chapter 1
பெங்காளம் என்று கூறப்படும் வங்க தேசத்திலே சாந்த்பூர் (சந்திரபுரம்) என்ற கிராமத்தில் மனோரஞ்ஜன பானர்ஜி என்ற ஒரு பிராமண வாலிபன் உண்டு. இவன் கல்கத்தாவிலே போய் பி.ஏ. பரீக்ஷைக்குப் படித்துக் கொண்டிருக்கையில் 1904-ம் வருஷம் டிஸம்பர் மாதம் ரஜாவின் பொருட்டாகத் தனது சொந்த ஊராகிய சாந்த்பூருக்கு வந்திருந்தான்.
மனோரஞ்ஜனன் வெகு சுந்தரமான ரூபமுடையவன். பார்ப்பதற்கு மன்மதனைப் போலிருப்பான். மேலும் குழந்தைப் பிராய முதலாகவே பள்ளிக்கூடத்துப் பந்தாட்டம் முதலிய விளையாட்டுக்களிலேயும், மற்றும் சிலம்பம், கர்லா முதலிய சுதேசீய தேகாப்பியாசங்களிலேயும் இவன் மிகுந்த தேர்ச்சி யுடையவனாகித் தன்னோடு ஒத்த வயதுள்ள வாலிபர்க ளெல்லாராலும் 'அர்ஜூனன்' என்றழைக்கப்பட்டு வந்தான்.
வயது இருபத்து மூன்று ஆயிருந்த போதிலும் இவனுக்கு என்ன காரணத்தினாலோ இன்னும் விவாகம் நடக்காமல் இருந்தது.
பெங்காளத்தார் மிகுந்த சொற்ப வயதிலேயே விவாகாதிகள் நடத்திவிடுவது முறைமை. இவன் விஷயத்தில் மட்டும் இவ்வாறு நடக்கவில்லை. இதற்கு வேறொரு உள் முகாந்திரமுண்டு.
மனோரஞ்சனனுடைய தந்தை உயிரோடிருந்திருக்கும் பக்ஷத்தில் இவனை இதற்கு முன் விவாகம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தி யிருப்பார். ஆனால் இவனுக்கு ஏழு வயதா யிருக்கும்போதே தந்தை இறந்து போய் விட்டார். தாய்க்கு இவன் ஒரே பிள்ளை யாதலால் அவள் இவன்மீது மிகுந்த அருமை கொண்டவளாகி, வீட்டில் இவன் சொன்னதற்கு மறுசொல் இல்லாமல் காரியங்கள் நடந்து வந்தன.
இந்தக் குடும்பத்திற்கு அதிக ஆஸ்தி இல்லாவிட்டாலும், உள்ள நிலத்தை விற்றுப் பணம் எடுத்துக்கொண்டு தான் கல்கத்தாவுக்குப் போய் பரீக்ஷைகள் தேறி வரவேண்டுமென்று இவன் சொன்னவுடனே தாய் யாதொரு ஆக்ஷே பமும் சொல்லாமல் சரியென்று சம்மதித்து விட்டாள். இதுபோலவேதான் எல்லா விஷயங்களிலும்.
அடிக்கடி இவனுடைய தாய் இவனைக் கூப்பிட்டு "குழந்தாய் ரஞ்ஜன்! உனக்கு வயதாய் விட்டதே. விவாகம் எப்போதடா செய்து கொள்வாய்?" என்று கேட்டால், இவன் முரட்டுத்தனமாக "அம்மா! அந்தப் பேச்சை மட்டிலும் என்னிடம் பேசாதே" என்று சொல்லிவிட்டு வெளியே போய்விடுவான்.
அந்தரங்கத்திலே இவன் வடக்கு வீதி ஸுர்யகாந்த பாபு என்ற பெருஞ்செல்வரின் குமாரத்தியான ஸ்வர்ண குமாரியின் மீது மோஹம் வைத்திருக்கிறா னென்ற விஷயத்தைத் தாயார் நன்றாக அறிவாள். ஆனால், இவனுக்கும் ஸ்வர்ணகுமாரிக்கும் ஒருபோதும் விவாஹம் நடப்பது சாத்தியமில்லை யென்பது அவளுக்கு நிச்சயந்தான். அப்படி ஒருவேளை அந்த விவாகம் நடப்பது ஸாத்தியமாகக் கூடுமானால் அதை இவள் கேட்டமாத்திரத்திலே இவளுக்குப் பிராணன் போய்விடும். தனது மகன் ஸுர்யகாந்த பாபுவின் பெண்ணை விவாகம் செய்து கொள்வதைக் காட்டிலும் அப் பிள்ளை இறந்து போவது விசேஷமென்று அவளுக்குத் தோன்றும்.
தனது குல தெய்வமான ஸ்ரீ கிருஷ்ணபகவானைத் தியானித்து இவள், "ஸர்வஜீவ தயாபரா! எனது பிள்ளைக்கு அந்த மிலேச்சனுடைய பெண் மீது இருக்கும் மோஹத்தை நீக்கி அவனுக்கு நல்ல புத்தி கொடுக்கலாகாதா?" என்று அடிக்கடி கண்ணீர் சொரிந்து பிரார்த்தனை புரிவாள்.

