Chapter 5
காசியில் ஹனுமந்த கட்டத்திலே எனக்குத் தெரிந்தவர்க ளிருக்கிறார்கள். எனது நண்பர் ஒருவருடைய பந்துக்கள் அங்கு வாசம் செய்கின்றனர். இதைப் படிக்கும் தமிழர்கள் காசிக்குப் போயிருப்ப துண்டானால், நான் சொல்லப்போகிற இடம் அவர்களுக்குத் தெளிவாகத் தெரியும். தமிழர்க ளெல்லோரும் பெரும்பாலும் ஹனுமந்த கட்டத்திற்கே போயிறங்குவ துண்டு. அங்கு, கீழ்மேற் சந்து ஒன்றிருக்கிற தல்லவா? அதில் கீழ்மேற்கு மூலையி லிருந்து மூன்றாம் வீடு. அந்த வீட்டிற்குச் சிவமடம் என்று பெயர். யாத்திரைக்காரர்கள் போய் இறங்கக்கூடிய வீடுகளைக் காசியிலே மடங்கள் என்கிறார்கள்.
சிவமடத்தில் போய் இறங்கி ஸ்நாநம் செய்துவிட்டு, மடத்தார் கொடுத்த ஆகாரத்தை உண்ட பிறகு, அப்பொழுதே அந்த மடத்துப் பிள்ளைகளில் ஒருவரைத் துணைக் கழைத்துக் கொண்டு நர்வா கட்டத்திற்குப் போனேன். அங்கே தாய்ப்பூர் ராஜா பங்களா எது என்று விசாரித்துப் பங்களாவிற்குப் போய்ச் சேரும்போது வேளை இரவு ஏழு மணியாகிவிட்டது. வாயிலில் ஒரு குதிரைவண்டி வந்து நின்றது. அந்த வண்டி புறப்படுந் தறுவாயி லிருக்கிறது.
வண்டியின்மேல் ஆங்கிலேய உடை தரித்த ஒரு பெங்காளி உட்கார்ந்து கொண்டிருந்தான். வண்டிப் பக்கத்திலே ஒரு கிழவரும் வேறு சிலரும் நின்று கொண்டிருந்தார்கள். அசுவினி குமார தத்தரின் சித்திரம் நான் பல இடங்களில் பார்த்திருக்கிறபடியால் இந்தக் கிழவர்தான் அசுவினி பாபு என்று தெரிந்து கொண்டேன். நான் போனவுடனே, அசுவினி பாபு பக்கத்திலிருந்த மனிதனை நோக்கி, "யாரோ ஒரு ஸந்யாஸி வந்திருக்கிறார். அவரைத் தாழ்வாரத்தில் உட்காரச் சொல். நான் இதோ வருகிறேன்” என்றார். தாழ்வாரத்தில் போட்டிருந்த இரண்டு நாற்காலிகளில் நானும் என்னுடன் வந்திருந்த வாலிபனும் போய் உட்கார்ந்தோம். அசுவினி பாபுவும் வண்டிக்குள்ளிருந்தவரும் பேசியது என் செவியில் நன்றாக விழுந்தது.
அசுவினி பாபு: "டாக்டர் ஸாஹப், நேற்றைக் காட்டிலும் இன்று சிறிது குணப்பட்டி-ருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது. தமது கருத்தென்ன?"
டாக்டர்: "மிகவும் துர்ப்பல நிலையிலேதா னிருக்கிறாள், இன்னும் இருபத்து நான்கு மணிநேரம் இருப்பது கஷ்டம். அந்த நேரம் தப்பினால், பிறகு விபத்தில்லை ” என்றார்.
காதில் விஷத் தடவிய தீ யம்புபோல இந்த வார்த்தை கேட்டது. 'மீனா! மீனா! மீனா!' என்றலறினேன். வண்டி புறப்பட்டுவிட்டது. அதற்குள் நான் தன்னை மீறி அலறிய சத்தம் கேட்டு அசுவினி பாபுவும் அவரைச் சேர்ந்தவர்களும் நானிருந்த பாரிசமாக விரைந்து வந்தனர். அவர் வருதல் கண்டு, நான் மனதை ஒருவாறு தேற்றிக்கொண்டு எழுந்து நின்று வணங்கினேன்.
அவர், "ஸ்வாமிக்கு எவ்விடம்? இங்கு வந்த கருத்தென்ன! ஏன் சத்தம் போட்டீர்கள்” என்று ஹிந்துஸ்தானி பாஷையிலே கேட்டார்.
"பாபு, நான் ஸந்யாஸி யல்ல. நான் திருடன். நான் மஹா நிர்ப்பாக்கிய முடைய பாவி. மீனாம்பாள் தம்மிடம் கோவிந்தராஜன் என்ற பெயர் சொல்லியிருப்பா ளல்லவா? அந்தப் பாவி நான்தான்” என்றேன்.
உடனே என்னை அவர் மேன்மாடத்தி லுள்ள ஒரு அறைக்குத் தனியாக அழைத்துச் சென்றார். அங்கு என்னை நோக்கி, "நேற்றெல்லாம் நான் உம்மை அடிக்கடி நினைத்துக் கொண்டிருந்தேன். நீர் இங்கு வரக்கூடு மென்ற சிந்தனை எனக்கு அடிக்கடி தோன்றிக் கொண்டிருந்தது" என்றார்.
பிறகு என்னிடம் “கிழக்கு முகமாகத் திரும்பி உட்காரும்” என்றார். அப்படியே உட்கார்ந்தேன். "கண்ணை மூடிக்கொள்ளும்" என்றார். இரண்டு கண் களையும் மூடிக்கொண்டேன். பிறகு எனது நெற்றியைக் கையால் தடவி ஏதோ முணுமுணுத்துக் கொண்டிருந்தார். எனக்கு உறக்கம் வருவது போலிருந்தது.
'அடடா! இன்னும் மீனாம்பாளைப் பார்க்கவில்லை. எனது உயிரினு மினியாள் மரணாவஸ்தையி லிருக்கிறாள். அவளைப் பார்க்கு முன்பாக உறக்கம் வருகிறதே. இவர் என்னை ஏதோ மாய மந்திரத்துக் குட்படுத்துகிறார். எனது பிராண ரத்தத்தைப் பார்க்காதபடி கெடுத்து விட முயலுகிறார். இந்த மாயைக் குட்படலாகாது கண்விழித்து எழுந்து நின்றுவிட வேண்டும்' என்று சங்கற்பஞ் செய்துகொண்டு எழுந்து நிற்க முயன்றேன். 'ஹும்' என்றொரு சத்தம் கேட்டது. கண்ணை விழித்துப் விழித்துப் பார்த்தேன். திறக்க முடியவில்லை, மயக்கம் மேன்மேலும் அதிகப்பட்டது. அப்படியே உறங்கி விழுந்துவிட்டேன்.
ஃ ஃ ஃ
விழித்தபிறகு நான் இரண்டு நாள் உறங்கிக் கிடந்ததாகத் தெரிந்தது. பக்கத்திலிருந்த ஒரு சேவகன் சொன்னான். "மீனா எங்கே? மீனா சவுக்கியமா யிருக்கிறாளா?” என்று அந்தச் சேவகனிடம் கேட்டேன்.
"எனக்கு ஒன்றுமே தெரியாது” என்று மறுமொழி கூறினன்.
சாதாரணமாக எப்போதும்போல இருந்தேனாயின், அந்தச் சேவகனை உதைத்துத் தள்ளி, இடையே வந்தவர்களை யெல்லாம் வீழ்த்திவிட்டு, ஓடியே மீனா ளிருக்குமிடம் போய்ப் பார்த்திருப்பேன். ஆனால் இந்த நேரம் என்னுடலில் மிகுந்த அயர்வும், உள்ளத்தில் மிகுந்த தெளிவும் அமைதியும் ஏற்பட்டிருந்தன. மனதிலிருந்த ஜ்வரம் நீங்கிப்போ யிருந்தது.
பாரிஸால் கிழவன் செய்த சூதென்று தெரிந்து கொண்டேன். அரை நாழிகைக் கெல்லாம் அசுவினி பாபு தாமே நானிருந்த அறைக்குள் வந்து என்னெதிரே ஒரு நாற்காலியின்மீது வீற்றிருந்தார். என்னை யறியாமல், எனதிரண்டு கைகளும் அவருக்கு அஞ்சலி புரிந்தன.
"ஓம்" என்று கூறி ஆசீர்வாதம் செய்தார்.
“பால ஸந்யாஸி, கபட ஸந்யாஸி, அர்ஜுன ஸந்யாஸி; உன் பக்கம் சீட்டு விழுந்தது” என்றார்.
மீனா பிழைத்துவிட்டாள் என்ற தெரிந்து கொண்டேன்.
"முற்றிலும் சௌக்கியமாய் விட்டதா?" என்று கேட்டேன்.
"பூர்ணமாக சௌக்கியமாய் விட்டது. இன்னும் ஓரைம்பது வருஷத்திற்கு ஸமுத்திரத்திலே தள்ளினாலும் அவளுக்கு எவ்விதமான தீங்கும் வரமாட்டாது" என்றார்.
"அப்படியானால், நான் போகிறேன். அவள் இறந்துபோகப் போகிறா ளென்ற எண்ணத்தினாலேதான் என் விரதத்தைக்கூட மறந்து, அவளைப் பார்ப்பதற்காகப் பறந்தோடி வந்தேன். இனி, அவளைப் பார்த்து, அவளுட. னிருக்கவேண்டுமென்ற எண்ணம் எனக்கில்லை, நான் போய்வருகிறேன்” என்று சொன்னேன்.
அசுவினி பாபு கடகடவென்று சிரித்துவிட்டுப் பக்கத்தி லிருந்த சேவகனை நோக்கி “இவருக்குக் கொஞ்சம் பால் கொணர்ந்து கொடு" என்றேவினார்.
அவன் முகம் கழுவ நீரும், அருந்துவதற்குப் பாலும் கொணர்ந்து கொடுத்தான். அசுவினி குமாரர் அந்தப் பாலை விரலால் தீண்டி என்னிடம் கொடுத்தார். அந்தப் பாலை உட்கொண்டவுடனே, திருக்குற்றாலத்து அருவியில் ஸ்நாநம் செய்து முடித்ததுபோல், எனது உடலிலிருந்த அயர்வெல்லாம் நீங்கிப் போய் மிகுந்த தெளிவும், செளக்கியமும் அமைந்திருக்கக் கண்டேன்.
"இப்பொழு தென்ன சொல்லுகிறாய்? புறப்பட்டுப் போகிறாயா?" என்று அசுவினி பாபு புன்னகையுடன் கேட்டார்,
"அவளை ஒருமுறை பார்த்துவிட்டு, அவளிடம் விடை பெற்றுக்கொண்டு செல்லுகிறேன்” என்றேன்.
திடீரென்று அசுவினி பாபுவின் முகத்தில் இருந்த புன்னகை மாறி சிரத்தாரூபம் தோன்றியது. அப்பால் என்னிடம், “மகனே, நீ மீனாம்பாளை மணஞ் செய்து கொள்வாய். நீங்களிருவரும் சேர்ந்து வாழ்ந்து, முற்காலத்தில் ரிஷியும் ரிஷி பத்தினியுமாக தேவயக்ஞம் செய்ததுபோல, உங்கள் வாழ்நாள் முழுதும் மாதாவுக்குப் பிரீத்யர்த்தமாக ஜீவயக்ஞம் புரியக் கடவீர்கள்" என்றார்.
"காளி தேவியின் கட்டளை என்னாகிறது?" என்று கேட்டேன், இந்த ஜன்மத்திலே நீ கோவிந்தராஜனை மணஞ் செய்து கொள்ளலாகாதென்று காளி தேவி மீனாளுக்கு கூறி, அவளை விஷந் தின்னும்படியாகக் கட்டளை யிட்ட செய்தியை அவருக்கு நினைப் புறுத்தினேன்.
அதற்கவர், “அந்தச் செய்தி யெல்லாம் நானறிவேன். மஹா சக்தியின் கட்டளையை மீனாம்பாள் நன்கு தெரிந்து கொள்ளாமல் உனக்குக் கடித மெழுதிவிட்டாள். மீனாம்பாளுடைய ஜன்மம் மாறுபட வேண்டு மென்று அம்மை சொல்லியதன் பொருள் வேறு. அவள் பச்சிலை தின்னும்படி கட்டளையிட்டது, மீனாம்பாளுக்கு ஜ்வர முண்டாய்த் தந்தை யெண்ணிய விவாகம் தடைப்படும் பொருட்டாகவே யாம்.
"அதற்கு முன்பு அவளுடைய ஜன்மம் வேறு. அதற் கப்பால் அவளுடைய ஜன்மம் வேறு. மாதா தெளிவாகத்தான் சொல்லினள்; ஆனால் மீனாள் தனக்கு வேண்டாத ஒருவனுடன் விவாகம் நடக்கப் போகிற தென்ற தாபத்தால் படப்படப் புண்டாகி, உனக் கேதெல்லாமோ எழுதி விட்டாள். நீயும் அவசரப்பட்டு காஷாயந் தரித்துக்கொண்டு விட்டாய். உனக்கு ஸந்யாஸம் குருவினால் கொடுக்கப்படவில்லை. ஆயினும், இது வெல்லாம் உங்களிருவருடைய நலத்தின் பொருட்டாகவே ஏற்பட்டது.
உங்களிருவருக்கும், பரிபூரணமான ஹிருதய சுத்தி உண்டாவதற்கு இப் பிரிவு அவசியமா யிருந்தது. இப்பொழுது நான் போகிறேன். இன்று மாலை நான்கு மணிக்குப் பூஞ்சோலையிலுள்ள லதா மண்டபத்தில் மீனாம்பாள் இருப்பாள். உன் வரவிற்குக் காத்திருப்பாள்" என்று சொல்லிப் போய்விட்டார்.
மாலைப் பொழுதாயிற்று. நான் ஸந்யாஸி வேஷத்தை மாற்றி, எனது தகுதிக்குரிய ஆடை தரித்துக் கொண்டிருந்தேன். பூஞ்சோலையிலே லதா மண்டபத்தில் தனியாக நானும் எனது உயிர் ஸ்திரீ ரூபம் கொண்டு பக்கத்தில் வந்து வீற்றிருப்பது போலத் தோன்றியவளுமாக இருந்தோம். நான்கிதழ்கள் கூடின. இரண்டு ஜீவன்கள் மாதாவின் ஸேவைக்காக லயப்பட்டன. பிரகிருதி வடிவமாகத் தோன்றிய மாதாவின் முகத்திலே புன்னகை காணப்பட்டது. வந்தே மாதரம்.
முற்றிற்று.
படிப்பவர்களுக்குச் சில செய்திகள்
புதுச்சேரியினின்றும் 1910 ஆகஸ்டு மாதம் பிரசுரமான கதை நூல் ஆறிலொரு பங்கு என்பதாகும்.
சமூகத்தில் ஆறிலொரு பங்கு மக்களைத் தீண்டத் தகாத சாதியாக வைத்துள்ள கொடுமையை மற்றவர்கள் உணர்ந்து கொண்டு திருந்தவும், ஹரிஜன முன்னேற்றத்தில் தமக்குள்ள பாசத்தை வெளிப்படுத்தவும் பாரதி "ஆறில் ஒரு பங்கு" கதையைக் கருவியாகக் கொண்டார்.
சொல்லப்போனால், பிறவி மாத்திரத்திலேயே உயர்வு-தாழ்வு என்ற எண்ணம் கூடாது என்று பாரதி இந்தக் கற்பனைக் கதையிலும் அழுத்தமாக வற்புறுத்துகிறார்,
இந்தக் கதையிலும், இடைக்கிடையே தேசியத் தலைவர்களான லாலா லஜ்பத்ராய், அசுவினி குமார தத்தர் - ஆகியோரின் சிறப்பியல்புகளையும் பாரதி தெளிவுறுத்தி யுள்ளார்.

