Chapter 4
கல்கத்தாவுக்கு வந்து சில தினங்களிலிருந்து விட்டு, பாரிஸாலுக்குப் போய்ச் சேர்ந்தேன். அங்கு போய் வழி விசாரணை செய்து கொண்டு அசுவினி குமார தத்தருடைய வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தேன். வீட்டு வாயிலில் ஒரு பெங்காளி பாபு நின்றுகொண்டிருந்தார். அவரிடம் "அசுவினி பாபு இருக்கிறாரா?" என்று கேட்டேன்.
"இல்லை. நேற்றுத்தான் புறப்பட்டுக் காசிக்குப் போயிருக்கிறார்" என்றார்.
"அடடா!" என்று சொல்லித் திகைத்து நின்றேன். எனது காஷாய வுடையைக் கண்ட அந்த பாபு உபசார மொழிகள் கூறி உள்ளே அழைத்துப் போய், தாகசாந்தி செய்வித்து விட்டு, "யார், எவ்விடம்” என்பதை யெல்லாம் விசாரணை செய்தார்.
நான் எனது விருத்தாந்த மெல்லாம் தெரிவித்துவிட்டு, என் மனதிலிருந்த நோக்கத்தையும் சொன்னேன். “பாரும், பாபு, நம்மில் ஆறி லொரு பங்கு ஜனங்களை நாம் தீண்டாத ஜாதியாக வைத்திருப்போமானால் நமக்கு ஈசன் நல்ல கதி கொடுப்பாரா?' என்று என் வாயிலிருந்து வாக்கியம் கேட்டவுடனே அவர் முகத்தில் மிகுந்த வருத்தம் புலப்பட்டது. முகத்தைப் பார்த்தால் கண்ணீர் ததும்பி விடும்-போலிருந்தது.
தீண்டாத வகுப்பினரின் நிலையைக் கருதித்தான் இவ்வளவு பரிதாப மடைகிறார் போலுமென்று நான் நினைத்து “ஐயா, உம்முடைய நெஞ்சுபோல இன்னும் நூறு பேருடைய நெஞ்சிருக்குமானால் நமது நாடு செம்மைப் பட்டு விடும்.” என்றேன்.
“ஸ்வாமீ, தாங்கள் நினைக்கிறபடி அத்தனை கருணை யுடைய நெஞ்சம் எனக்கு இன்னும் மாதா அருள் புரியவில்லை, ஹீன ஜாதியாரைக் காக்கவேண்டு மென்ற விஷயத்தில் எனக்குக் கொஞ்சம் சிரத்தை யுண்டென்பது மெய்யே, அசுவினி பாபுவுடன் நானும் மேற்படி வகுப்பினருக்கு நன்மை செய்வதில் சிறிது உழைத் திருக்கின்றேன், ஆயினும் என் முகத்திலே தாங்கள் கவனித்த துக்கக் குறி நம்மில் ஆறிலொரு பங்கு ஜனங்கள் இப்படி அவலமாய் விட்டார்களே யென்பதைக் கருதி ஏற்பட்டதன்று. தாங்கள் சொன்ன வாக்கியம் சில தினங்களுக்கு முன்பு இங்கு வந்திருந்த ஒரு மந்த்ராஜி[#] யம்மாளின் வாயிலிருந்து அடிக்கடி வெளி வரக் கேட்டிருக்கிறேன், தாம் அது சொன்னவுடனே எனக்கு அந்த அம்மாளின் நிலை ஞாபகம் வந்தது. அவளுடைய தற்கால ஸ்திதியை நினைத்து. வருத்த முண்டாயிற்று. அடடா! என்ன குணம்! என்ன வடிவம்! இவ்வளவு பாலியத்திலே நமது தேசத்தினிடம் என்ன அபரிமிதமான பக்தி!" என்று சொல்லித் திடுக்கென்று பேச்சை நிறுத்திவிட்டார்,
[#] “மந்திராஜி யம்மா' என்பது மதிராஸ் பிரதேசத்து ஸ்திரீ என்று பொருள் படும். மதிராஸ் என்பதற்கு வட நாட்டார் மந்திராஜ் என்பார்கள்.
அப்பால் என் முகத்தை ஓரிரண்டு முறை நன்றாக உற்று நோக்கினார். (அவருடைய பெயர் ஸதீச சந்திர பாபு என்பதாக ஏற்கெனவே சொல்லி யிருக்கிறார்.)
"ஸதீச பாபு, ஏன் இப்படிப் பார்க்கிறீர்?” என்று கேட்டேன்,
“ஸ்வாமீஜி, க்ஷமித்துக்கொள்ள வேண்டும். நீங்கள் ஸந்யாஸி, எந்த தேசத்தில் பிறந்தவ ரென்பதைக்கூட நான் இன்னும் தெரிந்துகொள்ளவில்லை. ஆயினும், உங்கள் முகத்தைப் பார்க்கும்பொழுது எனக்கு அந்த யுவதியின் உருவம் கலந்திருப்பது போலத் தோன்றுகிறது. உங்களிருவருடைய முகமும் ஒன்றுபோலிருப்பதாக நான் சொல்லவில்லை. உங்கள் முகத்தில் எப்படியோ அவளுடைய சாயல் ஏறியிருப்பது போலத் தோன்றுகிறது” என்றார்.
மதிராஸ் பக்கத்து யுவதி யென்று அவர் சொன்ன வுடனேயே என் மனதில் ஏதோ ஒருவிதமான பதைபதைப் புண்டாயிற்று. அதன் பின்னிட்டு அவர் சொல்லிய வார்த்தைகளைக் கேட்டவுடன் அந்தப் பதைபதைப்பு மிகுதி யுற்றது. (ஸந்யாஸி உடை தரித்திருந்தேன். நெடுநாளாகத் துறவையே ஆசரித்து வந்திருக்கிறேன். வேஷத்தி லென்னடா இருக்கிறது, கோவிந்தா, வேஷத்தி லென்ன இருக்கிறது?)
“மீனாம்பாள்?... அட, போ! மீனாம்பா இறந்து போய் இரண்டு வருஷங்களுக்கு மேலாகிறதே . . . . . ஐயோ, எனது கண்மணி என்ன கஷ்டத்துடன் இறந்தாள்' ......... என்பதாக, ஒரு க்ஷணத்திலே மனப்பேய் ஆயிர விதமான கூத்தாடிற்று.
"ஸதீச பாபு, நானும் மதிராஸ் பக்கத்திலே ஜனித்தவன்தான். நீர் சொல்லும் யுவதியைப் பற்றிக் கேட்கும்போது எனக்குத் தெரிந்த மற்றொரு பந்துவைப் பற்றி ஞாபகம் வருகிறது. நீர் சொல்லிய பெண் யார்? அவள் பெயரென்ன? அவள் இப்போது எங்கே யிருக்கிறாள்? அவள் இங்கே என்ன நோக்கத்துடன் வந்திருந்தாள்? அவளுடைய தற்கால ஸ்திதியைக் குறித்து உமக்கு வருத்த முண்டாவதேன்? அவளுக்கு இப்போது என்ன கஷ்டம் நேரிட்டிருக்கிறது? எனக்கு எல்லாவற்றையும் விவரமாகத் தெரிவிக்க வேண்டும்" என்றேன்.
கதையை விரிக்கத் தொடங்கினார் ஸதீச சந்திர பாபு, ஒவ்வொரு வாக்கியமும் என்னுள்ளத்திலே செந் தீக்கனலும் இரும்புத் துண்டுகளை எறிவது போல விழுந்தது. அவர் சொல்லிய கதையினிடையே என்னுள்ளத்தில் நிகழ்ந்தனவற்றை யெல்லாம் இடையிட்டுக்கொண்டு போனால் படிப்பவர்களுக்கு விரஸமா யிருக்குமென் றஞ்சி இங்கு அவர் சொல்லிய விஷயங்களை மட்டிலும் குறிப்பிடுகிறேன். என் மனத் ததும்புதல்களைப் படிப்பவர்கள் தாமே ஊஹத்தாற் கண்டு கொள்ள வேண்டும்.
ஸதீச பாபு சொல்லலாயினர்:
"அந்த யுவதிக்குத் 'தாஞ்சோர்'', [தஞ்சாவூர்] அவள் பெயர் எனக்குத் தெரியாது. நாங்க ளெல்லோரும் அவளைத் தீன மாதா என்று பெயர் சொல்லி யழைப்போம். அவளுடைய உண்மைப் பெயர் அசுவினி பாபுவுக்கு மாத்திரந்தான் தெரியும். ஆனால், அந்தத் தேவியின் சரித்திரத்தை எங்களுக்கு அசுவினி பாபு அடிக்கடி சொல்லியிருக்கிறார், அதை உம்மிடம் சொல்லுகிறேன், கேளும்.
"அவள் ஒரு போலீஸ் பென்ஷன் உத்தியோகஸ்த ருடைய குமாரியாம். தனது அத்தை மகனாகிய ஒரு மந்தராஜ் நகரத்து வாலிபனுக்கு அவளை விவாகம் செய்து கொடுக்கவேண்டு மென்ற தீர்மானம் செய்யப் பட்டிருந்ததாம். அவ் வாலிபன் “வந்தே மாதரம்” கூட்டத்திலே சேர்ந்து விட்டான்.
“அதிலிருந்து தகப்பன் அவளை வேறொரு போலீஸ் உத்தியோகஸ்தனுக்கு மணம் புரிவிக்க ஏற்பாடு செய்தான். கடைசித் தருணத்தில் அவள் கனவில் ஏதோ தெய்வத்தின் கட்டளை பெற்று, ஒரு பச்சிலையைத் தின்று விடவே அவளுக்குப் பயங்கரமான ஜ்வர நோய் கண்டு விவாகம் தடைப்பட்டுப்போய் விட்டது. அப்பால், தகப்பனாரும் இறந்து போய்விட்டார். இதனிடையே அவளுடைய காதலனாகிய மந்த்ராஜ் வாலிபன் என்ன காரணத்தாலோ அவள் இறந்துவிட்டதாக எண்ணி ஸந்யாஸம் வாங்கிக் கொண்டு வெளியேறி விட்டானாம்"......
"ஏழை மனமே, வெடித்துபோய் விடாதே. சற்றுப் பொறு என்று என்னால் கூடிய வரை அடக்கிப் பார்த்தேன். பொறுக்க முடியவில்லை.
'ஐயோ, மீனா! மீனா!' என்று கூவினேன். *
பிறகு "ஸதீச பாபு, அவளுக்கு இப்போது என்ன கஷ்டம் நேரிட்டிருக்கிறது? சொல்லும். சொல்லும்" என்று நெரித்தேன்.
ஸதீச சந்திரருக்கு உளவு ஒருவாறு துலங்கி விட்டது. "இப்போது ஒன்றுமில்லை; செளக்கியமாகத்தா னிருக்கிறாள்” என்றார்,
"இல்லை யில்லை. என்னிடம் நீர் உண்மை பேச மயங்குகிறீர். நான் உண்மை தெரிந்தால் மிகத் துன்பப்படுவே னென்றெண்ணி நீர் மறைக்கிறீர். இதுவே என்னை நரகவேதனைக்குட்படுத்துகிறது. சொல்லி விடும். சொல்லி விடும்” என்று வற்புறுத்தினேன்.
மறுபடியும் ஸதீச பாபு ஏதோ பொருளற்ற வார்த்தைகளைப் போட்டுக் குழப்பி எனக்கு ஸமாதான வசனம் சொல்லத் தலைப்பட்டார்.
"பாரத தேவியின் ஹிருதயத்தின் மீதும், பகவத் கீதையின் மீதும் ஆணையிட்டி-ருக்கிறேன். என்னிடம் உண்மையை ஒளியாமல் சொல்லும்" என்றேன்.
இந்த ஸத்தியம் நவீன பங்காளத்தாரை எவ்வளவு தூரம் கட்டுப்படுத்து மென்பது எனக்குத் தெரியும். இங்ஙனம் நான் ஆணையிட்டதிலிருந்து, அவருக்குக் கொஞ்சம் கோப முண்டாயிற்று.
“போமையா, மூட ஸந்யாஸி. என்ன வார்த்தை சொல்லிவிட்டீர்! இதோ உண்மை தெரிவிக்கிறேன். கேட்டுக்கொள்ளும். அந்தப் பெண் இங்கு நாம் சூத்திரர்களைப் பஞ்சத்திலிருந்து மீட்கப் பாடுபட்டதில் தீராத குளிர் ஜுரங் கண்டு, வைத்தியர்கள் சமீபத்தில் இறந்து விடுவாளென்று சொல்லிவிட்டனர். அதற்கு மேல், அவள் காசியிற் போய் இறக்க விரும்பியது பற்றி அசுவினி பாபு அவளைக் காசிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். உண்மை சொல்லி விட்டேன். போம்" என்றார்.
"காசிக்கா ?”
"ஆம்."
“காசியில் எந்தக் கட்டத்திலே?"
"அஸீ கட்டத்தில்.”
"அஸீ கட்டத்தில் எந்த இடம்?”
"அஸீக்குத் தெற்கே 'நர்வா என்ற இடமிருக்கிறது. அதில் பல தோட்டங்களும், பங்களாக்களும் உண்டு. அதில் தைப்பூர் மஹாராஜா பங்களாவில் அசுவினி பாபு இறங்கி யிருக்கிறார்” என்றனர்.
“ரயில் செலவுக்குப் பணம் கொடும்” என்றேன். ஒரு பத்து ரூபாய் நோட்டை எடுத்து விசிறி யெறிந்தார்.
மானத்தைக் கண்டதார்? மரியாதையைக் கண்டதார்? அங்கிருந்து அந்த க்ஷணமே வெளியேறி விட்டேன். வழி யெல்லாம் தின்பதற்கு நெஞ்சத்தையும், அருந்துவதற்குக் கண்ணீரையுமே கொண்டவனாய்க் காசிக்கு வந்து சேர்ந்தேன்.

