Chapter 4

இப்படி யிருக்க 1906-ம் வருஷம் கல்கத்தாவிலே காளிபூஜை திருவிழா நடந்து கொண்டிருந்த (நவராத்திரி) காலத்திலே ஸ்வர்ண குமாரி தனது வீட்டு அடியிலே ஒரு பஞ்சணை மீது சாய்ந்து கொண்டு "ஸந்தியா" என்னும் தினசரிப் பத்திரிகை படித்துக் கொண்டிருந்தாள். அதில் திடீரென அவளது கண்களுக்குப் பின்வரும் குறிப்புத் தென்பட்டது.

"சாந்த்பூர்வாசி யாகிய ஸ்ரீயுத மனோரஞ்ஜன் பானர்ஜி நேற்று மாலை பிரம ஸமாஜத்திலே சேர்ந்து விட்டார். இவர் மிகுந்த திறமையும் புகழுமுள்ள அதி வாலிபராதலால் இவர் ஹிந்து மார்க்கத்தினின்றும் பிரிந்து விட்ட விஷயம் எங்கே பார்த்தாலும் பேச்சாய் கிடக்கிறது."

மேற்கண்ட வரிகளைப் படித்தவுடனே ஸ்வர்ண குமாரிக்குப் புளகமுண்டாய் விட்டது. ஆனந்த பரவசத்திலே அமிழ்ந்து விட்டாள். உடனே மற்றோரிடத்தில் மனோரஞ்ஜனனுடைய பெயர் காணப்பட்டது. அதென்ன வென்று பார்த்தாள். அதிலே,

"சென்ற சில தினங்களாக லோகமான்ய பாலகங்காதர திலகர் புனாவிலிருந்து நமது நகரத்திற்கு வந்து சுதேசீயம், ஸ்வராஜ்யம் என்ற பெரு விஷயங்களைப் பற்றிப் பதினாயிரக் கணக்கான ஜனங்களின் முன்பு உபந்நியாசங்கள் புரிந்து வருகின்றார். இவருக்கு நடக்கும் உபசாரங்களும் சிறப்புக்களும் முடியரசர்களுக்குக்கூட நடக்கமாட்டார். அப்படி யிருக்க இவருடைய கோட்பாடுகளுக்கு விரோதமாகச் சில வாலிபர்கள் சாந்த்பூர் ஸ்ரீ மனோரஞ்ஜன் பானர்ஜியின் அக்கிராசனத்தின் கீழ் ஒரு எதிர்க் கூட்டங் கூடி இந் நகரத்தின் ஏதோ ஒரு மூலையில் சில நிந்தனைத் தீர்மானங்கள்

செய்து கொண்டார்களென அறிந்து விசன மடைகிறோம்"

என்று எழுதப்பட்டிருந்தது.

இதைக் கண்டவுடனே ஸ்வர்ண குமாரிக்கு மனம் பதைத்து விட்டது. இவள் குழந்தை முதலாகவே ஸ்ரீ பாலகங்காதர திலகரைத் தெய்வம் போலக் கருதி வந்தவள். இவளுக்கு மனோரஞ்ஜனனிடமிருந்த அன்பைக் காட்டிலும் சுதேசத்தின் மீதுள்ள அன்பு பதினாயிர மடங்கு வன்மை யுடையது.

'சுதேச பக்தர்களின் திலகமாகிய பாலகங்காதர திலகருக்கு விரோதமாக உழைக்கின்ற ஸ்வஜன விரோதியினிடமா நாம் இத்தனை நாள் காதல் கொண்டிருந்தோம்? இவனையா மாசற்ற குமரனென் றெண்ணி மதி மயங்கினோம்?' என்று பலவாறு யோசித்து மிகவும் வருந்துவாளாயினாள்.

இவள் நிலைமை இங்ஙனமாக, தன் கண்போல் வளர்த்த ஒரே ஆசைக் குமாரன் ஹிந்து மார்க்கத்தை விட்டு நீங்கி விட்டானென்று கேள்வியுற்ற வுடனே மனோரஞ்ஜன னுடைய தாய் மூர்ச்சித்து விழுந்து இறந்து போய் விட்டாள்.

இந்தச் செய்தி கேட்டவுடனே அலறிக்கொண்டு சாந்த்பூருக்கு வந்த மனோரஞ்ஜனன் தனது தாயின் கிரியைகளை யெல்லாம் ஹிந்து ஆசாரங்களின்படி ஒரு பந்துவின் மூலமாக நடப்பித்துவிட்டு ஸ்வர்ண குமாரியைப் பார்க்கச் சென்றான்.

அங்கே வீட்டில் ஸ்வர்ண குமாரி யில்லை. அவளுடைய தந்தை பின்வரும் கடிதத்தை மனோரஞ்ஜனனிடம் கொடுத்தார்,

"எனது காதலனா யிருந்த மனோரஞ்ஜனனுக்கு,

நெடுங்காலமாக உறங்கி நின்ற நமது சுதேச மாதா இப்போது கண்விழித்திருக்கிறாள். நமது நாடு மறுபடியும் பூர்வகால மஹிமைக்கு வருவதற்குரிய அரிய முயற்சிகள் செய்து வருகின்றது. இந்த முயற்சிகளுக்கு விரோதமிழைக்கும் ஸ்வஜனத் துரோகிகளின் கூட்டத்திலே நீயும் சேர்ந்து விட்டாயென்று கேள்வியுற்றவுடனே எனது நெஞ்சம் உடைந்து போய்விட்டது, இனி உன்னைப் பற்றி வேறு விதமான பிரஸ்தாபம் கேட்கும் வரை உன் முகத்திலே விழிக்கமாட்டேன். பெற்ற தாய்க்குச் சமானமான தாய்நாட்டின்மீது அன்பு செலுத்தாத நீ என்மீது என்ன அன்பு செலுத்தப் போகிறாய்? நமது வாலிப எண்ணங்களைப் பற்றி நீ திருந்திய பிறகு யோசனை செய்து கொள்ளலாம், நான் காசியிலே எங்கள் அத்தை வீட்டிற்குச் சென்று ஒரு வருஷம் தங்கியிருக்கப் போகிறேன். அங்கே நீ என்னை வந்து பாராதிருக்கும்படி பிரார்த்தனை செய்து கொள்ளுகிறேன்."

இங்ஙனம் இக் கடிதத்தைப் பார்த்தவுடனே மனோரஞ்சனன் மனம் தீயிலகப்பட்ட புழுவைப் போலத் துடிக்கலாயிற்று.

இப்போது மனோரஞ்ஜனன் புனாவிலே திலகரிடம் தேச பக்திப் பாடங்கள் படித்து வருகிறானென்று கேள்வி யுறுகின்றோம்.

படிப்பவர்களுக்குச் சில செய்திகள்

பாரதி எழுதிய சிறுகதை இதுவாகும். சொல்லப் போனால், 'பிரசார பாணியில் இந்தக் கதை எழுதப்பட்டுள்ளது.

பாரதியின் இரண்டாம் சிறுகதை என்பதும் இதன் விசேஷம். - இந்தக் கதை முதன் முதலாக இந்தியா 2-2-1907ஆம் தேதியிட்ட பத்திரிகையில் பிரசுரமானது.

இதை யடுத்துப் பாரதி பிரசுராலயத்தார் வெளியிட்ட கட்டுரைகள் தொகுதியில் இடம்பெற்றது.

இந்தக் கதை காதல் வயப்பட்ட ஸ்வர்ண குமாரி - மனோரஞ்ஜனன் ஆகிய இருவர் வாழ்க்கைச் சூழல்களுக்கிடையே காதலைக் காட்டிலும் சுதேசாபிமானமே மாணப் பெரிது என்பதை மிக அழகாக - ஆழமாக எடுத்துச் சொல்கிறது.

தேசபக்தி, திலகர் பக்தி - இந்த இரண்டையும் பாரதி இரு கண்களாகப் பாவித்தார் என்பதை இந்தக் கதை மூலம் நாம் அறிகிறோம்.