Chapter 2
மேலத்தியாயத்தின் இறுதியில் குறிக்கப்பட்ட செய்தி நிகழ்ந்ததற் கப்பால், சில மாதங்கள் கழிந்து போயின. இதற்கிடையே எங்களுடைய விவகாரத்தில் பல மாறுபாடுகள் உண்டா யிருந்தன. 'வந்தே மாதரம்' மார்க்கத்தில் நான் பற்றுடையவ னென்பதை அறிந்த மாமா பகதூர் எனக்குத் தனது கன்னிகையை மணஞ்செய்து கொடுப்பதென்ற சிந்தனையை அறவே ஒழித்து விட்டார், சில மாதங்களாக அவர் தமது சாசுவத வாஸஸ்தானமாகிய தஞ்சாவூரிலிருந்து புரசலாக்கத்துக்கு வருவதை முழுதும் நிறுத்திவிட்டார்.
இதனிடையே மீனாம்பாளுக்கு வேறு வரர்கள் தேடிக் கொண்டிருந்ததாகவும் பிரஸ்தாபம் வந்து கொண்டிருந்தது. அவளிடமிருந்தும் யாதொரு கடிதமும் வரவில்லை, ஒருவேளை முழுதும் மறந்து போய்விட்டாளா? பெண்களே வஞ்சனையின் வடிவமென்று சொல்லுகிறார்களே, அது மெய்தானா? "பெண்ணெனப் படுவ கேண்மோ . . , , , , , , , உள் நிறைவுடையவல்ல, ஓராயிரமனத்தவாகும்" என்று நான் ஜீவகசிந்தாமணியிலே படித்தபோது அதை எழுதியவர் மீனாம்பாளை போன்ற ஸ்திரீயைக் கண்டு, அவளுடைய காதலுக்குப் பாத்திரமாகும் பாக்கியம் பெறவில்லை போலும் என்று நினைத்தேனே! இப்போது அந்த ஆசிரியருடைய கொள்கைதான் மெய்யாகி விட்டதா? நான் இளமைக்குரிய அறிவின்மையால் அத்தனை பெருமை வாய்ந்த ஆசிரியரது கொள்கையைப் பிழையென்று கருதினேன் போலும்!
'அட மூடா! உனக்கு ஏன் இதில் இவ்வளவு வருத்தம்? நீயோ பிரமசரிய விரதத்திலே ஆயுள் கழிக்க வேண்டுமென்ற எண்ணத்தை நாள்தோறும் மேன்மேலும் வளர்த்து வருகின்றாய்: மீனா மற்றொருவனை மணஞ்செய்து கொண்டால் உனக்கு எளிதுதானே? நீயோ வேறொரு பெண்மீது இல்வாழ்க்கையில் மையல் கொள்ளப்போவதில்லை. இவளொருத்திதான் உனது விரதத்திற்கு இடையூறாக இருந்தாள். இவளும் வேறொருவனை மணஞ் செய்து கொண்டு, அவன் மனைவியாய் விடுவாளாயின், உனது விரதம் நிர்விக்கினமாக நிறைவேறும். ஈசனன்றோ உனக்கு இங்ஙனம் நன்மையைக் கொண்டு விடுகிறான்? இதில் நீயேன் வருத்த மடையவேண்டும்? என்று சில சமயங்களில் எனதுள்ளம் தனக்குத்தானே நன்மதி புகட்டும்.
மீட்டும், வேறொருவிதமான சிந்தை தோன்றும். 'அவள் நம்மை மறந்திருக்கவே மாட்டாள். மாமா சொற்படி கேட்டு அவள் வேறொருவனை மணஞ்செய்து கொள்ளவே மாட்டாள். எனது பிராண னோடு ஒன்றுபட்டவ ளாதலால், எனது நெஞ்சத்திலே ஜ்வலிக்கும் தர்மத்தில் தானும் ஈடுபட்டவளாகி, அத் தருமத்திற்கு இடையூறுண்டாகு மென்றஞ்சி எனக்கு ஒன்றும் எழுதாம லிருக்கிறாள். ஆமடி, மீனா! உன்னை நான் அறியேனா? ஏது வரினும் நீ என்னை மறப்பாயா? அந்தக் கண்கள் உன்னை மறக்கவே மாட்டேனென்று எத்தனை முறை என்னிடம் பிரமாணஞ் செய்து கொடுத்திருக்கின்றன. அந்தக் கண்கள்! அந்தக் கண்கள்! ஐயோ, இப்பொழுதுகூட என் முன்னே நிற்கின்றனவே! அவை பொய் சொல்லுமா?"
அப்பால் ஒரு உள்ளம் .........
'அடா! நல்ல துறவடா உன் துறவு! நல்ல பக்தியடா உன் பக்தி! நல்ல தர்மம்! நல்ல சிரத்தை! ஆரிய நாட்டை உத்தாரணம் செய்வதற்கு இப்படி யன்றோ பிள்ளைகள் வேண்டும்! பீஷ்மர் இருந்த தேசமல்லவா? இப்போது அதற்கு உன்னைப் போன்றவர்கள் இருந்து ஒளிக் கொடுக்கிறார்கள்! சீச்சீ! நாய் மனமே, அமிருத வெள்ளத்தை விட்டு வெற்றெலும்பைத் தேடிப் போகிறாயா? லோகோத்தாரணம் பெரிதா, உனது புலனின்பம் பெரிதா? தர்ம ஸேவை பெரிதா, ஸ்திரீ ஸேவை பெரிதா? எதனைக் கைக்கொள்ளப் போகிறாய்? சொல்லடா சொல்!”
பிறகு வேறொரு சிந்தை - 'எப்படியும் அவளிடமிருந்து ஓர் உறுதி கிடைத்தால் அதுவே நமக்குப் பெரியதோர் பலமா யிருக்கும். 'நீ தர்ம பரிபாலனம் செய், என் பொருட்டாகத் தர்மத்தைக் கைவிடாதே. நான் மரணம் வரை உன்னையே மானஸிகத் தலைவனாகக் கொண்டு நோன்புகளிழைத்துக் காலங் கழிப்பேன். ஸ்வர்க்கத்தில் நாமிருவரும் சேர்ந்து வாழலாம்' என்று அவள் உறுதி தருவாளானால் இந்த ஜன்மத்தில் ஜீவயக்ஞம்[$] வெகு சுலபமா யிருக்கும்!
[$] வாழ்நாள் முழுதையும் தர்மத்திற்கு அர்ப்பணம் செய்தல்
அப்பால் - . . ,
'ஒரே யடியாக அவளுக்கு இன்னொருவனுடன் விவாகம் நடந்து முடிந்து விட்டதென்று செய்தி வருமானால், கவலை விட்டிருக்கும். பிறகு இகத் தொடர்பொன்றுமே யில்லாமல், தர்ம ஸேவையே தொழிலாக நின்று விடலாம்.'
பின் மற்றொரு சிந்தை .....
'ஆ! அப்படி யொரு செய்தி வருமானால் பின்பு உயிர் தரித்திருப்பதே அரிதாய் விடும். அவளுடைய அன்பு மாறிவிட்டதென்று தெரிந்தபின் இவ்வுலக வாழ்க்கை யுண்டா ?"
அப்பால் பிறிதொரு சிந்தை ...
'அவள் அன்பு! மாதர்களுக்கு அன்பென்பதோர் நிலையு முண்டா? வஞ்சனை, லோபம் இரண்டையும் திரட்டிப் பிரமன் ஸ்திரீகளைப் படைத்தான்.'
இப்படி ஆயிரவிதமான சிந்தனைகள் மாறிமாறித் தோன்றி என தறிவைக் கலக்கின. ஆன்ம வுறுதி யில்லாதவ னுடைய உள்ளம் குழம்பியதோர் கடலுக்கொப்பாகும்.
இதனைப் படிக்கின்ற தாம் ஒரு கணம் ஸாக்ஷிபோல நின்று தமது உள்ளத்தினிடையே நிகழும் புரட்சிகளையும் கலக்கங்களையும் பார்ப்பீராயின் மிகுந்த வியப்புண்டாகும். மனித வாழ்க்கையிலே இத்தனை திகைப்புகள் ஏனுண்டாகின்றன?
“மறப்பு நினைப்புமாய் நின்ற - வஞ்ச - மாயா. மனத்தால் வளர்ந்தது தோழி.”
இவ்வாறிருக்கையில் ஒரு நாள் திடீரென்று எனது கையில் மீனாம்பாளின் கடிதமொன்று கிடைத்தது. அதனை இங்கு தருகின்றேன். அதைப் படித்துப் பார்த்தபோது என்னுள்ளம் என்ன பாடு பட்டிருக்கு மென்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள்.
ஓம்.
தஞ்சாவூர்.
உடையாய்.
இக் கடிதம் எழுதத் தொடங்கும்போதே எனது நெஞ்சு பதறுகிறது. எனக்கு எப்படி யெழுதுகிறதென்று தெரியவில்லை . ஐயோ, இது என்னுடைய கடைசிக் கடிதம்! உன் முகத்தை நான் இனி இவ்வுலகத்திலே பார்க்கப் போவதில்லை.
நாயன்னா வருகிற தை மாதம் என்னை இவ்வூரில் புதிய இன்ஸ்பெக்டராக வந்திருக்கும் மன்னாரு என்பவனுக்குப் பலியிடவேண்டுமென்று நிச்சயம் செய்துவிட்டார். கலியாணத்துக்கு வேண்டிய சாமக்கிரியைக ளெல்லாம் தயாராகின்றன. உனது பெயரைக் கேட்டால் வேட்டை நாய் விழுவதுபோல விழுந்து காதால் கேட்க முடியாத கெட்ட வார்த்தைகள் சொல்லி நிந்திக்கிறார். நான் தப்பியோடி விடுவேனென்று நினைத்து என்னை வெளியேறாதபடி காவல் செய்து வைத்திருக்கிறார். நீ ஒரு வேளை இச் செய்தி கேட்டு இங்கு வருவாயென்று கருதி, நீ வந்தால் வீட்டுக்கு வரமுடியாமல் செய்ய அவரும் மன்னாரென்பவனும் சேர்ந்து நீசத்தனமான ஏற்பாடு செய்து வைத்திருக்கிறார்கள். அவன் நாயன்னாவின் பணத்தின்மீது கண்வைத்து, இந்த விவாகத்தில் ஆசை மூண்டிருக்கிறான்.
என்னுள்ளத்திலே அவனிடம் மிகுந்த பகைமையும் அருவருப்பும் உள்ளனவென்றும், இப்படிப்பட்ட பெண்ணை பலவந்தமாகத் தாலி கட்டினால் அவனுக்கு வாழ்நாள் முழுதும் துக்கமிருக்குமே யல்லாது சுகமிராதென்றும் சொல்லி யனுப்பினேன். அதற்கு அந்த மிருகம் எனக்கு அவளுடைய உள்ளத்தைப் பற்றி லஷ்யமில்லை. அதைப் பின்னிட்டு சரிப்படுத்திக் கொள்வேன். முதலாவது, பணம் என் கையில் வந்து சேர்ந்தால், பிறகு அவள் ஓடிப்போய் அந்த ஜெயிலுக்குப் போகிற பயலுடன் சேர்ந்து கெட்டுத் திரிந்துவிட்டுப் பிறகு சமுத்திரத்தில் விழுந்து சாகட்டும்' என்று மறுமொழி கொடுத்தனுப்பிவிட்டது.
அனேக தினங்களாக எனக்கு இரவில் நித்திரை யென்பதே கிடையாது. நேற்றிரவு படுக்கையின் மீது கண்மூடாமல் படுத்துப் புரண்டு கொண்டிருந்தேன். அப்போது கனவு போன்ற ஒரு தோற்றமுண்டாயிற்று. தூக்கமில்லாத பொழுது கனவெப்படி வரும்? அஃது கனவுமில்லை , நனவுமில்லை , ஏதோ ஒருவகையான காட்சி, அதில் அதிபயங்கரமான ரூபத்துடன், இரத்தம் போன்ற செவந்த விழிகளும், கரியமேகம் போன்ற மேனியும், வெட்டுண்ட தலைகளின் மாலையும், கையில் சூலமுமாகக் காளி தேவி வந்து தோன்றினள். நான் நடுங்கிப் போய் 'மாதா, என்னைக் காத்தருள் செய்ய வேண்டும்' என்று கூறி வணங்கினேன்.
உடனே, திடீரென்று அவளுடைய உருவம் மிகவும் அழகியதாக மாறுபட்டது. அந்த சௌந்தர்யத்தை என்னால் வருணிக்கமுடியாது. அவளுடைய திருமுடியைச் சூழ்ந்து கோடி ஸுர்யப் பிரகாசம் போன்ற ஒரு தேஜோமண்டலம் காணப்பட்டது. கண்கள் அருள் மழை பொழிந்தன.
அப்பொழுது தேவி எனக்கு அபயப் பிரதானம் புரிந்து பின்வருமாறு சொல்லலாயினள்: "குழந்தாய், உனது அத்தான் கோவிந்தராஜனை எனது ஸேவையின் பொருட்டாக எடுத்துக்கொள்ளப் போகிறேன். உனக்கு இம்மையில் அவனைப் பெறமுடியாது. நீ பிறனுக்கு மனைவியாகவும் மாட்டாய். உனக்கு இவ் வுலகத்தில் இனி எவ்வித வாழ்வுமில்லை. உங்கள் வீட்டுக் கொல்லையில் வடமேற்கு மூலையில் தனியாக ஓர் பச்சிலை படர்ந்திருக்கக் காண்பாய். நாளைக் காலை ஸ்நாநம் செய்து பூஜை முடிந்தவுடனே அதில் இரண்டு இலைகளை எடுத்துத் தின்றுவிடு. தவறாதே", மேற்கண்டவாறு கட்டளை கொடுத்துவிட்டுப் பராசக்தி மறைந்து போயினாள்.
காலையில் எழுந்து அந்தப் பச்சிலையைப் பார்க்கப் போனேன். வானத்திலிருந்து ஒரு காகம் இறங்கிற்று. அது அந்தப் பச்சிலையைக் கொத்தி உடனே தரையில் மாண்டு விழக் கண்டேன். தேவியின் கருத்தை அறிந்து கொண்டேன். இன்று பகல் பத்து நாழிகைக்கு, அந்த இலைகளை நான் தின்று பரலோகம் சென்று விடுவேன். நின் வரவை எதிர்பார்த்து அங்கும் கன்னிகையாகவே இருப்பேன். நீ உனது தர்மங்களை நேரே நிறைவேற்றி மாதாவுக்குத் திருப்தி செய்வித்த பிறகு, அவள் உன்னை நானிருக்கு மிடம் கொண்டு சேர்ப்பாள். போய் வருகிறேன். ராஜா! ராஜா! என்னை மறக்காதே. வந்தே மாதரம்."
இக் கடிதத்தைப் படித்துப் பார்த்தவுடன் மூர்ச்சை போட்டு விழுந்துவிட்டேன்.

