Chapter 1
மீனாம்பாள் வீணை வாசிப்பதிலே ஸரஸ்வதிக்கு நிகரானவள், புரசபாக்கத்திலுள்ள எங்கள் வீட்டிற்கு அவள் வரும் சமயங்களி லெல்லாம் மேல் மாடத்து அறையை அவளுடைய உபயோகத்துக்காக 'காலி' செய்து விட்டுவிடுவது வழக்கம். நிலாக் காலங்களில் இரவு எட்டு மணிக்கெல்லாம் எங்கள் வீட்டில் போஜனம் முடிந்துவிடும். ஒன்பது மணி முதல் நடுநிசி வரை அவள் தனது அறையிலிருந்து வீணை வாசித்துக் கொண்டிருப்பாள்.
அறைக்கடுத்த வெளிப்புறத்திலே பந்தரில் அவளுடைய தகப்பனார் ராவ்பகதூர் சுந்தர ராஜூலு நாயுடு கட்டிலின் மீது படுத்துக்கொண்டு சிறிது நேரம் வீணையைக் கேட்டுக்கொண்டிருந்து சீக்கிரத்தில் 'குறட்டைவிட்டு நித்திரை செய்யத் தொடங்கிவிடுவார்.
ஆனால், - மஹாராஜன் - குறட்டைச் சத்தத்தால் வீணைச் சத்தம் கேளாதபடி செய்துவிடமாட்டார். இலேசான குறட்டைதான்.
வெளிமுற்றத்தின் ஒரு ஓரத்திலே நான் மட்டும் எனது *பிரமசாரி'ப் படுக்கையைப் போட்டுக் கொண்டு படுத்திருப்பேன். வீணை நாதம் முடிவுறும் வரை என் கண்ணிமைகளைப் புளியம் பசை போட்டு ஒட்டினாலும் ஒட்டமாட்டா. மீனாம்பாளுடன் அறையிலே படுத்துக் கொள்ளும் வழக்கமுடைய எனது தங்கை இரத்தினமும் சீக்கிரம் தூங்கிப் போய் விடுவாள். கீழே எனது தாயார், தகப்பனார், அவரது மனைவி முதலிய அனைவரும் தூங்கிவிடுவார்கள். எனது தமையனார் மனைவி வயிற்றிலே சோற்றை போட்டுக் கை கழுவிக் கொண்டிருக்கும்போதே குறட்டை விட்டுக் கொண்டிருப்பாள்! இடையிடையே குழந்தைகளின் அழுகைச் சத்தம் மட்டிலும் கேட்கும்.
தமையனாருக்குக் கோட்டையில் ரெவின்யூ போர்டு ஆபீஸில் உத்தியோகம். அவருக்கு நான்கு வருடங்களுக்கொரு முறை ஆபீஸில் பத்து ரூபாயும், வீட்டில் இரண்டு குழந்தைகளும் 'ப்ரமோஷன்'
ஃ ஃ ஃ
வசந்த காலம்; நிலாப் பொழுது; நள்ளிரவு நேரம்; புரசபாக்கம் முழுதும் நித்திரையி லிருக்கும். இரண்டு ஜீவன்கள்தான் விழித்திருப்பன. நான் ஒன்று; மற்றொன்று அவள்.
கந்தர்வ ஸ்திரீகள் வீணை வாசிப்பது போல மீனாம்பாள் வாசிப்பாள். பார்ப்பதற்கும் கந்தர்வ ஸ்திரீயைப் போலவே இருப்பாள். அவளுக்கு வயது பதினாறிருக்கும். கதையை வளர்த்துக்கொண்டு ஏன் போக வேண்டும்? மன்மதன் தனது அம்பொன்றின் முனையிலே என் பிராணனைக் குத்தியெடுத்துக் கொண்டுபோய் அவள் வசம் ஒப்புவித்துவிட்டான்.
அடடா! அவளது இசை எவ்வளவு நேரம் கேட்டபோதிலும், எத்தனை நாள் கேட்டபோதிலும் தெவிட்டாது. தினந்தோறும் புதுமை தோன்றும், அவள் முகத்திலே தோன்றுவதுபோல.
அவளுடைய தந்தையாகிய ராவ்பகதூர் சுந்தர ராஜுலு நாயுடு எனது தாயாருக்கு ஒன்றுவிட்ட அண்ணன். தஞ்சாவூர் முதலிய பல ஜில்லாக்களில் நெடுங்காலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் உத்தியோகம் பார்த்து ஸர்க்காருக்கு நன்றாக உழைத்ததினால் "ராவ்பகதூர்” என்ற பட்டம் பெற்றவர். சுதேசீயம் தொடங்கு முன்பாகவே இவர் வேலையிலிருந்து விலகிவிட்டவர். இதை எதன் பொருட்டாகச் சொல்லுகிறே னென்றால், அவருக்குக் கிடைத்த பட்டம் வெறுமே சில சுதேசீயத் தலைவர்களின் மீது “ரிப்போர்ட்” எழுதிக் கொடுத்துச் சுலபமாகச் சம்பாதித்த பட்டமன்று. யதார்த்தத்திலேயே திறமையுடன் உழைத்ததினால் கிடைத்த பட்டம். குழந்தை முதலாகவே மீனாம்பாளை எனக்கு விவாகம் செய்து கொடுக்கவேண்டு மென்பது அவருடைய கருத்து. அந்தக் கருத்து நிறைவேறுவதற்கு நேர்ந்த விக்கினங்கள் பல. அவ் விக்கினங்களில் பெரும்பான்மையானவை என்னாலேயே உண்டாயின.
நான் சுமார் பதினாறு பிராயம் வரை சென்னைக் கிறிஸ்தியன் காலேஜில் படித்துக்கொண்டிருந்தேன். “வேதகால முதலாக, இன்றுவரை பாரத தேசத்திலுள்ள ரிஷிக ளெல்லோரும் ஒன்றும் தெரியாத மூடர்கள். அர்ஜுனனும், காளிதாசனும், சங்கராசாரியாரும், சிவாஜியும், ராமதாஸரும், கபீர்தாஸரும், அதற்கு முன்னும் பின்னும் நேற்றுவரையிருந்த பாரத தேசத்தா ரனைவரும் நெஞ்சில் வளர்த்து வந்த பக்திக ளெல்லாம் இழிந்த அநாகரிகமான மூட பக்திகள்” என்பது முதலான ஆங்கிலேய ஸத்தியங்க ளெல்லாம் என்னுள்ளத்திலே குடி புகுந்து விட்டன.
ஆனால் கிறிஸ்தவப் பாதிரி ஓர் வினோதமான ஜந்து. ஹிந்து மார்க்கத்திலும், ஹிந்து நாகரிகத்திலும் பக்தி செலுத்துவது பேதைமை என்று ருஜுப்படுத்திக்கொண்டு வரும்போதே அவன் கொண்டாடும் கிறிஸ்து மார்க்கமும் மூடபக்தி என்று வாலிபர் மனதில் படும்படி ஏற்பாடு செய்துவிடுகிறான், மத விஷயங்களைப்பற்றி விஸ்தாரமான விவகாரங்க ளெழுதிப் படிப்பவர்களுக்கு நான் தலைநோவுண்டாக்கப் போவதில்லை, சுருக்கம், நான் எனது பூர்வ மதாசாரங்களில் பற்று நீங்கி - ஞானஸ்நாநம் பெறவில்லை - பிரம் ஸமாஜத்திலே சேர்ந்து கொண்டேன்.
சிறிது காலத்திற்கப்பால் பட்டணத்தில் படிப்பை நிறுத்திவிட்டு, வீட்டில் யாரிடமும் சொல்லாமல் கல்கத்தாவுக்குப் புறப்பட்டுப் போய், அங்கே பிரம் ஸமாஜத்தாரின் மார்க்க போதனை கற்பிக்கும் பாடசாலை யொன்றில் சேர்ந்து சில மாதங்கள் படித்தேன்: பிரம் ஸமாஜத்தாரின் உபதேசிகளி லொருவனாக வெளியேற வேண்டு மென்பது என்னுடைய நோக்கம். அப்பால் அங்கிருந்து பஞ்சாப், ஹிந்துஸ்தானம் முதலிய பல பிரதேசங்களில் யாத்திரை செய்து கொண்டு கடைசியாகச் சென்னப்பட்டணம் வந்து சேர்ந்தேன்.
நான் ஹிந்து மார்க்கத்தை விட்டு நீங்கியதாக எண்ணி எனது ஜாதியார் என்னைப் பல விதங்களில் இமிசை செய்தார்கள். இந்த இமிசைகளினால் எனது சித்த வுறுதி நாளுக்குநாள் பலமடைந்ததே யல்லாமல் எனக்கு மனச் சோர்வுண்டாகவில்லை.
எனது தகப்பனார் - இவர் பெயர் துபாஷ் ராமசந்திர நாயுடு - வெளி வேஷ மாத்திரத்தில் சாதாரண ஜனங்களின் ஆசார விவகாரங்களை வைத்துக் கொண்டிருந்தா ரெனினும், உள்ளத்தில் பிரம ஸமாஜப் பற்றுடையவர். ஆதலால், நான் வாஸ்தவமான பரமாத்ம பக்தியும், ஆத்ம விசுவாசமும், எப்போதும் உபநிஷத்துகள் படிப்பதில் சிரத்தையும் கொண்டிருப்பது கண்டு இவருக்கு அந்தரங்கத்தில் மிகுந்த உவகை யுண்டாயிற்று. வெளி நடிப்பில் என் மீது கோபம் பாராட்டுவது போலிருந்தாரே யன்றி, எனது பந்துக்கள் சொற்படி கேட்டு என்னைத் தொல்லைப்படுத்தவில்லை. ஸகல ஸவுகரியங்களும் எனக்கு முன்னைக் காட்டிலும் அதிகமாக நடக்கும்படி வீட்டில் ஏற்பாடு செய்து வைத்திருந்தார்.
ஆனால், எனது தமையன் மாத்திரம் என்னிடம் எக்காரணம் பற்றியோ மிகுந்த வெறுப்புப் பாராட்டினன். என் தலையிலே பஞ்சாபிகளைப் போலப் பாகை கட்டிக்கொள்வது வழக்கம். 15 ரூபாய் குமாஸ்தாக்களுக் கென்று பிரத்தியேகமான அழகு, அந்தம், ஆண்மை எதுவுமின்றி ஏற்பட்டிருக்கும் கும்பகோணத்துப் பாகை நான் கட்டிக்கொள்ளுவதில்லை. இதுகூடத் தமையனுக்குக் கோப் முண்டாக்கும். “ரஜ புத்ருடு வீடு தொங்கவிதவா! தலலோ மஹா ஆடம்பரமுக பகடி வீடி!” என்று ஏதெல்லாமோ சொல்லி ஓயாமல் திட்டிக் கொண்டிருப்பான்.
இப்படி யிருக்க, ஒரு நாள் எனது தகப்பனார் திடீரென்று வாயுக்குத்தி இறந்து போய்விட்டார். அவருக்குப் பிரம ஸமாஜ விதிப்படி கிரியைகள் நடத்த வேண்டுமென்று நான் சொன்னேன். எனது தமையன் சாதாரண ஆசாரங்களின்படிதான் நடத்த வேண்டுமென்றான்.
பிரமாத கலகங்கள் விளைந்து, நானூறு மத்தியஸ்தங்கள் நடந்தபிறகு ஸ்மசானத்தில் அவன் தனதிஷ்டப்படி கிரியைகள் நடத்தி முடிந்த பின்பு, நான் எனது கொள்கைப்படி பிரம் ஸமாஜ குரு ஒருவரை வைத்துக் கொண்டு கிரியைகள் செய்தேன். இதுவெல்லாம் எனது மாமா ராவ்பகதூர் சுந்தரராஜுலு நாயுடுவுக்கு என்மீது மிகுந்த கெட்ட எண்ணம் உண்டாகும்படி செய்துவிட்டது. ஆதலால் விவாகம் தடைப்பட்டுக் கொண்டே வந்தது. ஆனால், இறுதிவரை என்னை யெப்படியேனும் சீர்திருத்தி எனக்கே தனது மகளைப் பரணிக்ரஹணம் செய்துகொடுக்க வேண்டு மென்பது அவருடைய இச்சை.
ஃ ஃ ஃ
வசந்த காலம். நிலாப் பொழுது; நள்ளிரவு நேரம்; புரசபாக்கம் முழுமையும் நித்திரையி லிருந்தது. விழித்திருந்த ஜீவன்கள் இரண்டே ஒன்று நான், அவள் மற்றொன்று. இன்பமான காற்று வீசிக்கொண்டிருந்தது. மேல்மாடத்தில் மீனாம்பாளுடைய அறையிலிருந்து முறைப்படி வீணைத் தொனி கேட்டது. ஆனால், வழக்கப்படி குறட்டை கேட்கவில்லை. ராவ்பகதூர் குறட்டை. மாமா ஊரிலில்லை. வெளியே ஒரு கிராமத்துக்குப் போயிருந்தனர்.
நான் நிலா முற்றத்தில் எனது கட்டிலின் மீது உட்கார்ந்து கொண்டிருந்தேன். என்னுள்ளத்திலோ இரண்டு எரிமலைகள் ஒன்றை யொன்று சீறி யெதிர்த்துப் போர் செய்து கொண்டிருந்தன. இவற்றுள்ளே ஒன்று காதல்; மற்றொன்று பின்பு தெரியவரும். வீணைத் தொனி திடீரென்று நின்றது. சிறிது நேரத்தில் எனது பின்புறத்தில் ஒரு ஆள்வந்து நிற்பதுணர்ந்து திரும்பிப் பார்த்தேன். மீனாம்பாள்!
இப்பொழுதுதான் நாங்கள் புதிதாகத் தனியிடத்திலே சந்தித்திருக்கிறோ மென்றும், அதனால் இங்கு நீண்டதோர் காதல் வர்ணனை எழுதப்படுமென்றும் படிப்பவர்கள் எதிர்பார்க்க வேண்டாம். இவ்விதமாக நாங்களிருவரும் பல முறை சந்தித்திருக்கிறோம். மீனாம்பாள் தானும் மஞ்சத்தின் மீது வீற்றிருந்தாள்,
"மீனா, இன்று உன்னிடத்தில் ஒரு விசேஷம் சொல்லப் போகிறேன்” என்றேன்.
"எனக்கு அது இன்னதென்று ஏற்கனவே தெரியும்” என்றாள்.
"என்னது? சொல்லு.”
“நீ பிரமசரிய சங்கற்பம் செய்துகொள்ளப் போகிறா யென்ற விசேஷம்."
"ஏன்? எதற்கு? எப்படி? உனக்கு யார் சொன்னார்கள்" என்று கேட்டேன்.
"வந்தே மாதரம்” என்றாள்.
மீனாம்பாளுடைய அறிவுக் கூர்மை எனக்கு முன்னமேயே தெரியு மாதலால், அவள் சொல்லியதி லிருந்து அதிக வியப்புண்டாகவில்லை! அதன்பின் நான் அவளிடம் பின்வருமாறு கூறலாயினேன்.
“ஆம். பாரத தேசத்தை இப்பொழுது பிரமசாரிகளே ரக்ஷிக்க வேண்டும். மிக உயர்ந்திருந்த நாடு. மிகவும் இழிந்து போய்விட்டது. இமயமலை யிருந்த இடத்தில் முட்செடிகளும் விஷப்பூச்சிகளும் நிறைந்த ஒரு பாழுங் காடு இருப்பதுபோலாய் விட்டது. அர்ஜுனன் வாழ்ந்த மாளிகையில் வெளவால்கள் தொங்குவது போலிருக்கிறது. இதைப் பிரமசாரிகளே, காப்பாற்ற வேண்டும்.
“பொப்பிலி ராஜாவின் மகனாகவேனும், ராஜா ஸர் ஸவலை ராமஸாமி முதலியார் மகனாகவேனும் பிறக்காமல் நம் போன்ற சாதாரணக் குடும்பங்களிலே பிறந்தவர்கள் விவாகம் செய்துகொண்டால் இந்தப் பஞ்ச நாட்டில் அவர்களுக்கு மூச்சு முட்டிப்போகிறது. குருவியின் தலையிலே பனங்காயை வைப்பதுபோல இந்த நரிக்கூட்டத்திலுள்ள ஒரு வாலிபன் தலையிலே ஒரு குடும்ப பாரத்தைச் சுமத்தும்போது அவனுக்குக் கண் பிதுங்கிப்போய் விடுகிறது. அவனவனுடைய அற்பக் காரியங்கள் முடிவு பெறுவதே பகீரதப் பிரயத்தனமாய் விடுகிறது.
"தேசக் காரியங்களை இவர்கள் எப்படிக் கருதுவார்கள்? பிரமசாரிகள் வேண்டும். ஆத்மஞானிகள் வேண்டும். தம் பொருட்டு, உலக சுகங்களை விரும்பாத தீரர்கள் வேண்டும். இந்த சுதேசீயம் கேவலம் ஒரு லௌகிக காரியமன்று; இது ஒரு தர்மம். இதில் பிரவேசிப்பவர்களுக்கு வீர்யம், தேஜஸ், கர்மயோகத் தன்மை முதலிய அரிய குணங்கள் வேண்டும். நான் பிரமசரிய விரதத்தைக் கைக்கொள்ளலாமென்று நினைத்திருக்கிறேன். ஆனால்-"
மீனா "ஆனால், நான் அதற்கு ஒரு சனியாக வந்து குறுக்கிட்டிருக்கிறேனென்று சொல்லுகிறாய்.”
"பார்த்தாயா! பார்த்தாயா! என்ன வார்த்தை பேசுகிறாய். நான் சொல்ல வந்ததைக் கேள். எனது புதிய சங்கற்பம் ஏற்படு முன்னதாகவே என் உயிரை உனக்கு அர்ப்பணம் செய்துவிட்டேன். இப்போது எனது உயிருக்கு வேறொரு கடமை யேற்பட்டிருக்கிறது. அவ் விஷயத்தில் உனது கட்டளையை எதிர்பார்த்திருக்கிறேன்” என்றேன்.
அவள் ஏதோ மறுமொழி சொல்லப் போனாள். அதற்குள் வாயிற் புறத்தில் ஒரு வண்டி வந்து நிற்கும் சத்தம் கேட்டது.
“நாயன்னா வந்து விட்டார்; நான் போகிறேன்" என்று சொல்லி ஒரு முத்தத்துடன் பிரிந்தனள்.
குறட்டை நாயுடு கதவை யுடைத்து, உள்ளிருக்கும் குறட்டைகளை யெல்லாம் எழுப்பி, மேலே வந்து படுத்து அரைநாழிகைக் கெல்லாம் தமது தொழிலாரம்பித்து விட்டார்.
இரண்டு ஜீவன்கள் அன்றிரவு முழுதும் விழித்திருந்தன. ஒன்று நான்; அவள் மற்றொன்று.

