Chapter 4

“அம்மா!”

அவர்கள் பெற்ற பிள்ளைகளிலேயே ரமணியம்மாளை அம்மாவென்றும், சுந்தரத்தை அப்பாவென்றும் அழைப்பவன் வேணு ஒருவன் தான். மற்றவர்கள் அனைவரும் ‘மம்மி’ ‘டாடி’ தான்.

மாடி வராந்தாவில் வந்து நின்ற வேணு “அம்மா”வென்று அழைத்தபோது, ரமணி அம்மாள் சாவகாசமாக ஈஸிசேரில் சாய்ந்து, ‘ஜீலியன் ஹக்ஸ்லி’ எழுதின ஒரு புத்தகத்தைப் புரட்டி சுவாரஸ்யமான ஒரு பாராவைப் படித்துக் கொண்டிருந்தாள்.

வேணு அந்தப் புத்தகத்தின் அட்டையைக் கூர்ந்து பார்த்து வாய்க்குள் படித்துக் கொண்டான்.

‘நாலெட்ஜ், மொராலிட்டி, அன்ட் டெஸ்டினி!’

“அம்மா! நீ படிக்கறதுக்கு இடைஞ்சலா வந்துட்டேனா?”

“சீ சீ! இதென்ன ஃபார்மாலிட்டி? வா… இப்படி உக்காரு…” என்று கனிவுடன் அழைத்தாள் ரமணி அம்மாள்.

வேணு வராந்தாவில் கிடந்த ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்தான்.

அவனுக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை. ரமணியம்மாள் அவனை வாஞ்சையோடும், தனக்கு இவ்வளவு பெரிய பிள்ளை இருப்பதைத் திடீரென உணர்ந்த பெருமிதத்தோடும் பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் கை விரல்களின் நகத்தை பிய்த்தவாறு குனிந்த தலையோடு ஏதோ யோசித்துக் கொண்டிருந்தான்.

இத்தனை நாட்களுக்குப் பிறகு அவன் தன் மனத்தில் உறுத்திக்கொண்டிருக்கும் ஏதோ ஓர் அந்தரங்கமான அவனது பிரச்சினை குறித்துத் தன்னோடு விவாதிக்கவோ யோசனை கேட்கவோ வந்திருக்கிறான் என்பதாக எண்ணி ஒருவகைப் பூரிப்புக்கு ஆளாகி விட்டிருந்தாள் அவள்.

எனினும் அவன் பேசத் தயங்குவதைக் கண்டு அவளே ஆரம்பித்தாள்.

“என்ன வேணு… இங்கே உனக்கு லைஃப் ரொம்ப போர் அடிக்கிறதோ?”

“ம்…” என்று தலை நிமிர்ந்த வேணு “போர் அடிக்கறதுங்கறது இல்லே… எனக்கு இந்த லைஃப் பிடிக்கலே… நான் என்ன இருந்தாலும் ஒரு மொபஸல் டைப்தானே? நீங்கள்ளாம் ரொம்ப நாகரிகமா – அல்ட்ரா நாகரிகமா – வாழற வாழ்க்கை எனக்குச் சரிப்பட்டு வரலே…” என்று சொல்லிவிட்டு மீண்டும் தலை குனிந்து உள்ளங்கையில் விரலால் சித்திரம் வரைய ஆரம்பித்தான்.

சற்று நேர மௌனத்துக்குப் பின் ரமணியம்மாள் சொன்னாள்:

“உன்னுடைய குழப்பம் என்னன்னு எனக்குச் சரியா புரிஞ்சுக்க முடியலே… நாங்க இத்தனை வருஷமா எப்படி வாழ்ந்து வரோமோ அப்பிடித்தான் இருக்கோம்னு நான் நினைக்கிறேன். புதுசா பொருத்தமில்லாத ‘அல்ட்ரா’ நாகரிகம் ஏதும் வந்துட்டதா எனக்குத் தோணலே… உன் மனசிலே இருக்கிறதெ வெளிப்படையா சொன்னாத்தானே எனக்குப் புரியும்…” என்றூ அவனிடம் கேட்டுக் கொண்டிருக்கையிலேயே இவன் மனசில் என்னத்தை வைத்துக் கொண்டு இவ்விதம் குழம்புகிறான் என்றறிய அவளும் பிரயாசைப்பட்டாள்.

“எனக்கு இங்கே ஏண்டா வந்தோம்னு இருக்கு… யாரோ அந்நியர் வீட்டிலே இருக்கிற மாதிரி இருக்கு. இங்கேயுள்ள பழக்க வழக்கங்களும் எனக்கு ரொம்ப அந்நியமா இருக்கு… உங்க உறவுகளும் பாசமும் எல்லாம் வெளிப்பூச்சா இருக்கு. நீங்க ரொம்பவும் பொய்யானதொரு வாழ்க்கை வாழறீங்க. நான் திரும்பவும் தாத்தா வீட்டுக்குப் போயிடலாம்னு நெனைக்கிறேன்…” அவன் நிறுத்தி நிறுத்தித் தெளிவாகக் கூறியவற்றை அவளும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்தாள்.

பிறகு இருவருமே சற்று அமைதியாக இருந்தனர். அப்போது மத்தியான நேரம். மணி பதினொன்றாகி இருந்ததால், வீடு அமைதியாக இருந்தது. கீழே சமையல் அறையில் சமையற்காரப் பாட்டிகூடத் தூங்கிக் கொண்டிருந்தாள். வீடும் வீதியும் ஓவென்று வெறிச்சோடிக் கிடந்தது.

“வேணு… திடீர்னு உனக்கு இப்போ இது ஒரு பிரச்னையாகிப் போன காரணம் என்ன?… தாத்தா வீட்டு வாழ்க்கைக்கும், நம்ப வீட்டுச் சூழ்நிலைக்கும் நெறைய வித்தியாசம் இருக்கும்னு எனக்கும் புரியுது. ஆனா உன் வயசுக்கு நியாயமா அந்த வாழ்க்கைதானே ‘போர’டிக்கணும்! – சரி – ருசிகள்ங்கறதே பழக்கத்தினால் படிகிற பயிற்சிதானே… ஆனாலும் இதுதானே உன் வீடு. உனக்குப் பிடிச்சமாதிரி நீ இங்கே வாழறதெ யாராவது தடுக்கிறாங்களா என்ன? எது இருந்தாலும் இல்லேன்னாலும் இன்னொருத்தர் சுதந்திரத்திலே மற்றவர் தலையிடற, அதிகாரம் பண்ற, ஆட்டிப் படைக்கிற போக்கு மட்டும் நம்ப வீட்டிலே யாருக்கும் கெடையாது… உனக்கு ஞாபகம் இருக்குதோ, என்னமோ?… உங்க பாட்டியும் தாத்தாவும் இங்கே வந்துட்டுப் பொறப்பட்டப்போ – அவங்களோட போகணும்னு நீ அடம் பிடிச்சே!… அவங்களுக்கும் உன்னைக் கூட்டிக்கிட்டுப் போயி வெச்சிக்கணும்னு ஆசை!… உன் ஆசைக்காகவே தான் மனசொப்பி அனுப்பினேன்… அந்த அளவுக்கு இந்த வீட்டிலே குழந்தைகளின் சுதந்திரத்துக்குக் கூட அவ்வளவு மதிப்பு என்னைக்கும் உண்டு… உனக்கும் இங்கே உன் விருப்பப்படி இருக்கறதுலே என்ன தடை… ம்… சொல்லு வேணு!” என்று முகத்தைப் பார்த்தபோது அவன் மௌனமாக அவளை வெறித்துப் பார்த்தான்.

“அதனாலே – உனக்கு ஊருக்கே போகணுங்கறதுக்கு வேற ஏதோ காரணம் இருக்கணும்னு எனக்குத் தோணுது… என்ன சரிதானே?” என்று லேசான சிரிப்புடன் கேட்டாள் ரமணி அம்மாள்.

“ஆமாம்…வேற காரணம் இருக்கு…” என்று கூறித் தன் மனத்துள் கிடந்து அரிக்கும் தந்தையைப் பற்றிய உண்மைகளை அவளிடம் கூறுவதற்கு வார்த்தைகள் கிடைக்காமல் அவன் தவித்தான்.

“வேணு!… அதுவுமில்லாமல் நீ என்னென்னவோ சொல்றியே; ஏதோ வெளிப்பூச்சுன்னும் பொய்யின்னும் இந்த வாழ்க்கையைப் பத்தி ஏதோ சொன்னே… என்ன விஷயம்? நீ எப்படி எங்களைப் பத்தி அப்படி அவசரப் பட்டு ஒரு முடிவுக்கு வரலாம்… நீ எதை வெளிப்பூச்சுன்னு நெனைக்கிறே? எல்லா வாழ்க்கையிலும் ஏதோ ஒரு அளவுக்கு ஏதோ ஒருவிதமான வெளிப்பூச்சு இருக்கத்தான் செய்யும் வேணு. நீ எதைப்பத்தி சொல்றே? உன் மனசு ரொம்ப ஆழமாக் காயப்பட்டுத்தான் இப்படி ஒரு வார்த்தை உன் வாயிலிருந்து வருதுன்னு எனக்குத் தோணுது… என்ன நடந்தது சொல்லேன்…”

இப்போது அவன் சட்டைப் பையிலிருந்து கர்சீப்பை எடுத்து மூக்கையும் கண்களையும் அழுந்தத் துடைத்துக் கொண்டான். முகமே சிவந்து குழம்பியிருந்தது.

“அம்மா… எனக்கு அப்பாவின் நடத்தை புடிக்கலே…” என்று வானத்தை வெறித்தவாறு முகம் திரும்பிக் கூறினான். அவளிடமிருந்து பதிலில்லை. அந்தத் தைரியத்தில் அவள் முகத்தைத் திரும்பிப் பாராமல் தொடர்ந்து சொன்னான்:

“உனக்கும் அப்பாவுக்கும் மனஸ்தாபம் வருமே, உங்கள் குடும்பத்தின் அமைதி என்னாலே கெட்டுப் போகுமேன்னு நெனச்சி நெனச்சித்தான் நான் இத்தனை நாளா குழம்பிக்கிட்டே இருந்தேன். கெட்டுப்போகிற ஒரு குடும்பத்தின், அமைதி மட்டும் கெடாமலிருப்பது எத்தனை நாளைக்கு முடியும்?… அவர் உனக்குத் துரோகம் பண்றாரு அம்மா. இது எனக்குத் தெரிஞ்சும் நான் இதை உன்னிடம் மறைச்சு வெச்சா அந்தத் துரோகத்துக்கு நானும் உடந்தைன்னு அர்த்தம்… அதனால் தான் இந்த அவமானகரமான குடும்பத்திலே இருக்க எனக்குப் புடிக்கலே… அவரை நானா திருத்த முடியும்?… முடிஞ்சா நீ திருத்து… இது உங்க விஷயம்… நான் போறேன்” என்று படபடவென்று கூறிவிட்டு அதற்குமேல் அந்தத் தாயின் முகத்தைப் பார்க்கத் தைரியமில்லாமல் அவன் அங்கிருந்து ஓடிவிடத் துடித்தான்.

அவன் மனசில், அவள் அழுவாளோ, அழுதுகொண்டே அவரைப்பற்றிக் குத்திக் குடைந்து எதையாவது கேட்பாளோ, ஆத்திரப்பட்டு அந்தத் துரோகமிழைத்த கணவனைச் சபிப்பாளோ, தான் பல காலம் சந்தேகப்பட்டு மனசில் வைத்திருந்த விஷயம் மகன் வரைக்கும் தெரிந்து விட்டதே என்று அவமானத்தால் சாம்பி விடுவாளே என்று அஞ்சியே ஒரு குற்றவாளி மாதிரி அவன் அவளிடமிருந்து தப்பியோட யத்தனித்தான்.

“வேணு!” என்று அமைதியான, உணர்ச்சி மிகுதியால் சற்றுக் கனத்துவிட்ட அவனது தாயின் குரல் அவனைத் தடுத்தது.

அவள் முகத்தில் தான் எதிர்பார்த்த எந்தக் குறியுமில்லாமல் அவள் மிகுந்த கனிவுடன் புன்னகை காட்டி “உட்காரு” என்றதும் நாற்காலியிலிருந்து எழுந்த வேணு மீண்டும் உட்கார்ந்தான்.

“நீ ஏதோ உன் வாழ்க்கை சம்பந்தப்பட்ட பிரச்னை எதையோப் பேசப் போறேன்லு நான் நெனைச்சேன். அப்பாவைப் பத்திய பிரச்னையா அது!… நல்ல வேடிக்கை!” என்று அவள் கசிந்து சிரித்தாள்.

“அப்படின்னா உனக்கு ஏற்கனவே அதெப் பத்தியெல்லாம் தெரியுமா?” என்று முனகுவது போல் கேட்டான் அவன்.

“நான் அதெப்பத்தியெல்லாம் தெரிஞ்சிக்க விரும்பினதில்லே வேணு…” என்று ஆழ்ந்த சிந்தனையுடன் கூறினாள் அவள்.

அவள் தொடர்ந்து சொன்னாள்:

“இதோ பார். அவர் உன் அப்பாங்கிறது எவ்வளவு உண்மையோ – என் புருஷன்ங்கிறது எவ்வளவு உண்மையோ – அவ்வளவு உண்மை அவர் ஒரு புரபசர்ங்கிறதும், அவர் ஒரு பெரிய அறிவாளி, படிப்பாளி, சமூக அந்தஸ்து மிக்கவர்ங்கறதும்… இல்லியா?…”

அவன் ஒன்றும் பதில் சொல்லவில்லை.

அவளே சொன்னாள்:

“நீ எது எதுக்காக வெல்லாம் உன் அப்பாவை நினைச்சுப் பெருமைப்படலாமோ அதையெல்லாம் விட்டுட்டு, எதைப் பத்தி உனக்கு முழுசாத் தெரியாதோ, எது ரொம்பவும் அந்தரங்கமானதோ அதைக் குடைஞ்சு வருத்தப்படறதும் அவமானப்படறதும் சரின்னு தோணுதா உனக்கு?”

அவன் திடீரென்று கொதித்துப் போய்ச் சொன்னான். “முழுசாத் தெரிஞ்சுதான் அம்மா பேசறேன். ஐ ஹாவ் புரூப்ஸ்! என்னால் நிரூபிக்க முடியும்… அவருக்கு வந்த போன்கால்… அவர் பேசறதை நான் என் காதாலே கேட்டேனே… அன்னிக்கி ராத்திரி தியேட்டர்லே அதுக்காகவே போயி இந்தக் கண்ணாலே பார்த்தேனே… அவர் ரூமில் இருக்கிற டிராயர்லே அவருக்கு வந்த லவ் லெட்டர்ஸ் ஒரு பைலே இருக்கே… அவர் முகத்திலேயே அதை வீசி எறிஞ்சப்ப அவராலேயே அதை மறுக்க முடியலே…. அம்மா!”

“ஓ! இட் ஈஸ் எ ஷேம் ஆன் யூ! புரூப்ஸ் இருக்காம் புரூப்ஸ்! வேணு, பெரிய மனிதர்களையும் பிரபலமானவங்களையும் அவதூறு செய்யறதே தொழிலாகக் கொண்டிருக்கே சில மஞ்சள் பத்திரிகைங்க… அவங்ககிட்டேயும் அதுக்கெல்லாம் புரூப் இருக்கும். அதுக்கெல்லாம் புரூப் இருக்காதுன்னா அதை மஞ்சள் பத்திரிகைன்னு கௌரவமானவங்க ஒதுக்கறாங்க? அது ஒரு மனுஷனுடைய பெருமை திறமை எல்லாத்தையும் விட்டுட்டு அவனுடைய அந்தரங்கமான பலவீனங்களைப் பத்திப் பேசறதை ஒரு பிழைப்பா வெச்சிருக்கிறதனாலே சமுதாயத்துக்கோ நாகரிகத்துக்கோ கேடுதானே ஒழிய, லாபமில்லே. அதனாலே தான் நாம மஞ்சள் பத்திரிகைகளைக் கண்டா அருவருத்து ஒதுக்கறோம்?… இப்ப நீ பண்ணி இருக்கியே இதுக்கும் அதுக்கும் என்ன வித்தியாசம் சொல்லு. நீயும் அவங்க மாதிரிதான் ‘புரூப்’ இருக்கு என்கிறே…. வேணு… எனக்கு உன்னை நெனச்சி ரொம்ப வருத்தமா இருக்கு…. ஷேம். இட் ஈஸ் அ ஷேம் ஆன் யூ!” என்று ரமணியம்மாள் காதுகளைப் பொத்திக் கொண்டாள்.

“நீ நெஜமா, இப்படியெல்லாம் செய்தியா… வேணு… எவ்வளவு உயர்ந்த மனுஷனை எவ்வளவு கேவலமா நடத்திட்டே!” என்று கூறுகையில் உடலும் மனமும் அவளுக்குப் பதறின.

“இவள் என்ன மனுஷி! இவள் என்ன மனைவி!” என்று புரியாமல் திகைத்தான் வேணு.

“அம்மா – உன்னுடைய நல்லதுக்கும் இந்தக் குடும்பத்தோட நன்மைக்கும்தான் தப்புன்னு தெரிஞ்சும் நான் அவர் விஷயத்திலே அப்படி நடந்துகிட்டேன்…” என்று அவளுடைய நிலையைப் பார்த்து அவன் சமாதானம் கூற முயன்றான்.

“வேணு… எனக்கு ரொம்ப வருத்தமா இருக்குடா…. அவரை நெனச்சி இல்லே… உன்னைப் பாக்கறப்போ எனக்கு ரொம்ப வருத்தமா இருக்குடா… நீ அப்படி நடந்துக்கலாமா? ஒரு தகப்பன்கிட்டே ஒரு மகன்…. ஐயோ! என்னாலே கற்பனை செய்து பார்க்கக்கூட முடியலே வேணு!”

“அவர் உனக்குத் துரோகம் செய்யறார்னு தெரிஞ்சும்…”

“இட் இஸ் மை பிராப்ளம்!” என்று அவள் இடைமறித்துக் கூவினாள்: “அது என் விவகாரம்!… உனக்கு எங்க தாம்பத்தியம் பற்றிய அந்தரங்கத்தில் தலையிட என்ன உரிமை?” என்று அருவருத்து உடல் சிலிர்த்தாள்.

“சொல்றேன் கேள். நாங்க இருபத்தைஞ்சு வருஷம் அமைதியா வாழ்ந்திருக்கோம். கடைசிவரைக்கும் அப்படியே வாழ்வோம்… அதனால்தான் அந்த அமைதியை – அந்தச் சந்தோஷத்தைக் கெடுத்துக்கற எந்த விஷயத்திலேயும் நான் தலையிட விரும்பறது இல்லே… எனக்கும் லேசாத் தெரியும்… அதனால் என்ன? என்னை விட அவருக்கு இனிய துணை யாரும் இருக்க முடியாது… நீ சொல்றியே அதைப் பத்தி எனக்கு மனசுக்குள்ளே ஆழ்ந்த வருத்தம் உண்டுதான்.” இதைச் சொல்லும்போது எவ்வளவு அடக்கியும் அடங்காமல், அவளது இதயத்தில் பாறையாய் ரகசியமாய்க் கனத்துக் கிடக்கும் ஓர் ஆழ்ந்த துயரம் உருகிற்று… கண்களில் தாரை தாரையாய் வடியும் கண்ணீரை – மூக்குக் கண்ணாடியைக் கழற்றித் துடைத்தவாறே அங்கிருந்து எழுந்து சென்று வராந்தாவில் ஒரு நிமிஷம் நின்று தன்னைத் திடப்படுத்திக் கொண்டு மீண்டும் மகனின் எதிரே அமர்ந்தாள்.

“வேணு! நீ நினைக்கிற மாதிரி வாழ்க்கை அவ்வளவு ‘ஸிம்ப்பிள்’ இல்லேடா… அது ரொம்ப சிக்கலானது. குழப்பமானது வேணு. அந்தச் சிக்கலிலும் அந்தக் குழப்பத்திலும் எப்படி ஒரு குடும்பத்தை அமைதியாகவும் சந்தோஷமாகவும் நடத்தறதுங்கறதுதான் வாழ்க்கைக் கலை!… பொறுமையும் சகிப்புத் தன்மையும் இல்லேன்னா – அன்பு காதல்ங்கறதுக்கெல்லாம் அர்த்தமே இல்லை. உன்னை மாதிரி நான் நடந்துகிட்டிருந்தா இந்தக் குடும்ப அமைதியும் அவரோட கௌரவமும் குலைஞ்சு போறதுக்கு நானே காரணமாகிப் போயிருப்பேன்… என்னுடைய ‘பொஸஸ்ஸிவ்னஸ்’காக – என்னுடைய பிடியில் அவர் இருக்கணும்கறதுக்காக, இந்தக் குடும்பத்தோட அமைதியையும், அவரோட கௌரவத்தையும், என் குழந்தைகளின் எதிர்காலத்தையும் விலையாக் கொடுக்கிற அளவு நான் சுயநலக்காரியாகறது எவ்வளவு கேவலமானது!… இப்படியெல்லாம் நான் சொல்றதைக் கேட்டு நான் ஏதோ ரகசியமான சோகத்தை அனுபவிச்சிக்கிட்டு வாழறேன்னு நீ கற்பனை செய்து கொள்ளாதே! ஆனால், என் மனசிலே ஒரு சின்னத் துயரம் இல்லாமல் இல்லை. முழுமையான ஆனந்தம் என்பது அவ்வளவு சுலபமானதா என்ன?…”

“பேச எனக்கு உரிமை இருக்கா இல்லியாங்கறது பிரச்னையே இல்லே… அதனாலே என்ன பலன்னு யோசிக்க வேண்டாமா? இப்போ என்ன நஷ்டம்னு நான் யோசிச்சேன்… நான் அதைப் பத்தி பேசாதது ஒரு பண்பு வேணு… ஆமாம், ஒருத்தரை நாம் மதிக்கிறோம்கறதுக்கு என்ன அர்த்தம்? அவங்களோட அந்தரங்கத்தை – பிரைவஸியை – தெரிஞ்சுக்கறதுக்குப் பலவந்தமா முயற்சி செய்யாமே இருக்கறதுதான். ஒருத்தர் மேலே அன்பு செலுத்தறதுன்னா என்ன? அவங்களோட அந்தரங்கமான ஒரு பலவீனம் நமக்குத் தெரிஞ்சபோதிலும், அதுக்காக அவங்களோட மத்த தகுதிகளையும், பெருமைகளையும் குலைக்காமல், அந்தப் பலவீனமும் சேர்ந்தது தான் அவங்கன்னு புரிஞ்சுகொள்றது தான்…”

“ஓ! ஒருவரின் அந்தரங்கம் எவ்வளவு புனிதமானது! இட் இஸ் ஸம்திங் ஸேக்ரட் வேணு! இதிலே இன்னொரு இரண்டாவது நபரின் பிரவேசம் – அது யாராயிருந்தாலும் ரொம்பக் காட்டுமிராண்டித்தனமானது… அசிங்கமானது…”

“அம்மா…நீ அவரோட மனைவி!”

“ஸோ வாட்? அந்த உரிமையை நான் துஷ்பிரயோகம் செஞ்சா அந்த உரிமையே எனக்கு மறுக்கப்படலாம் இல்லையா?”

“உன் விஷயத்தில் அவர் அப்படி இருப்பாரா?”

“இருப்பாரான்னா கேட்டே? இருக்கிறார் வேணு… ஒரு புருஷன் தன் மனைவியையோ, ஒரு மனைவி தன் புருஷனையோ சந்தேகப்படறதுக்கும், பரஸ்பரம் அந்தரங்கமான விவகாரங்களை எல்லை கடந்து ஆராயறதுக்கும் காரணமே கெடையாது. ஒரே ஒரு காரணம் தான். அவங்க தங்களுக்கு அந்த உரிமை இருக்கிறதா நினைச்சிக்கறதுதான் காரணம்…”

“புருஷன்… மனைவி – மகன் – தாய் – தகப்பன் எல்லாருமே ஒரு உறவுக்கு உட்பட்டவங்கதான் – ஆனா ஒவ்வொருவரும் ஒரு ஸெபரேட் இண்டிவிஜிவல் – தனி யூனிட் இல்லியா? ஒவ்வொரு தனி மனுஷனுக்கும் ஒரு தனிப்பட்ட அந்தரங்கம் உண்டு. அதை கௌரவிக்கணும் வேணு… யார் மேலே நமக்கு ரொம்ப மதிப்போ அவங்க அந்தரங்கத்தை நாம் ரொம்ப ஜாக்கரதையா கௌரவிக்கணும்… உன் அப்பாவை நீ என்னன்னு நெனைச்சே?… என்னாலே நீ கேட்ட மாதிரி அவரைக் கேட்க முடியுமா? கற்பனை பண்ணக்கூடச் சக்தி இல்லேப்பா எனக்கு… ஓ! நீ என்ன செஞ்சுட்டே?”

“பரவாயில்லை. உங்க அப்பா ரொம்ப ஸ்ட்ராங் மேன்! இதைத் தாங்கிக்குவார்… அவர் தனது பலவீனங்களையும் தாண்டி வருவார்… நிச்சயம் தாண்டி வந்துடுவார். வாழ்க்கை நொம்பச் சிக்கலானது வேணு. வாழ்க்கையைப் புரிஞ்சுக்கணும். இந்தப் புத்தகத்தைப் படிச்சுப் பார் – உனக்கு இது மாதிரி சிந்தனைகள் விசாலமான பார்வையைத் தரும்.”

வேணுவுக்கு ஒரே குழப்பமாக் இருந்தது. அவன் மனத்தில் தாத்தாவும் பாட்டியும் மட்டும்தான் லட்சியத் தம்பதியாய்த் தோன்றினர்.

அவனுக்கு புரியவே இல்லை – அவர்கள் தாத்தாவும் பாட்டியுமாகவே கலியாணம் செய்து, தாத்தாவும் பாட்டியுமாகவே தாம்பத்யம் நடத்தி வாழ்ந்திருக்கவில்லை என்பது.