Chapter 3

கடற்கரையை ஒட்டிப் புதிகாகப் போடப்பட்டுள்ள உட்புறச் சாலையில் அந்த மோரீஸ் மைனர் காரை நிறுத்தினார் சுந்தரம். அவர் பக்கத்தில் உட்கார்ந்திருந்த வேணு முதலில் கதவைத் திறந்து கொண்டு கீழே இறங்கினான். அவன் பார்வை தூரத்துக் கடலை வெறித்தது… காற்றில் அலைபாய்ந்த வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு சற்றுத் தள்ளி மணலில் போய் நின்று கொண்டான் அவன். அவன் மனதில் கடந்த பத்து நிமிஷமாய் – த்ன் தந்தையைக் கல்லூரியில் சந்தித்து இங்கு வந்து சேர்ந்தது வரை – எப்படிப் பேச்சை ஆரம்பிப்பது என்ற குழப்பம்தான் குடிகொண்டிருந்தது. என்னதான் தப்பு செய்திருந்தாலும் ஒரு தந்தையிடம் மகன் பேசக்கூடாத முறையில், தான் ஆத்திரத்தில் அறிவை இழந்துவிடக் கூடாதே என்ற அச்சம் வேறு எழுந்தது.

காரிலிருந்து இறங்கிய சுந்தரம் தனது கோட்டைக் கழட்டி காருக்குள் மடித்து ஸீட்டின் மேல் போட்டுக் கண்ணாடிகளை உயர்த்திக் காரின் கதவுகளைப் பூட்டி விட்டு வந்தார்.

அவன் பக்கத்தில் வந்து நின்று கைக்கடிகாரத்தைப் பார்த்து “மணி ஐந்துதான் ஆகிறது” என்று அவன் காதில் படுகிற மாதிரி தானே சொல்லிக் கொண்டார் சுந்தரம்.

“அதுதான் கூட்டத்தைக் காணோம்” என்று வலிந்த புன்னகையுடன் அவனும் கூறினான்.

கடற்கரை மணலில் இன்னும் நிழல் இறங்கவில்லை.

அவர்கள் இருவரும் திடீரென மௌனமாகிச் சற்று மணலில் கடலை நோக்கி நடந்தனர். அந்த இருவரையும் பார்க்கும் யாருக்கும் அவர்கள் தந்தையும் மகனும் என்று தோன்றாது. அண்ணனும் தம்பியும் போலவோ, ஆசிரியரும் மாணவனும் போலவோதான் அவர்கள் இருந்தனர். முகச் சாயலில் இருவருக்கும் நிறைய ஒற்றுமை இருந்தது. தந்தையின் அளவே உயரமிருந்தும் அவரைப் போல் சதைப் பற்றில்லாத அவனது உருவம் அவரை விடவும் நெடிதாய்த் தோன்றியது.

அவன் தலைகுனிந்து நடக்கையில் மணலில் அழுந்திப் புதையும் தனது பாதங்களையே பார்த்தான்.

மனசில் இருந்த கனம் விநாடி தோறும் மிகுந்தது; நெஞ்சில் குமுறுகிற ஆத்திரம் திடீரென்று தொண்டைக்கு வந்து அடைக்கிறது. முகம் சிவந்து சிவந்து குழம்புகிறது. உதட்டை இறுக இறுகக் கடித்துக் கொள்கிறான்…

அவன் தலைநிமிர்ந்து தூரத்துக் கடல் அலையை வெறித்தபோது அவனது கண் இமைகளின் இரண்டு கடைக்கோடியிலும் கலங்கிய கண்ணீர் வீசியடித்த காற்றால் சில்லென இமைக் கடையில் பரந்து படர்கிறது…

அவர் அவனை மிகுந்த ஆதரவோடு பார்த்தார். ஒருமுறை செருமினார். அவன் அவரைத் திரும்பிப் பார்த்தபோது அவனைச் சாந்தப்படுத்தும் தோரணையில் அவர் புன்முறுவல் செய்தார். அவனது உதடுகள் துடித்தன.

“இங்கே உட்காரலாமா?” என்றார் அவர்.

அவன் பதில் சொல்லாமல் உட்கார்ந்துகொண்டான்.

- எப்படி ஆரம்பிப்பது?

அவன் அவர் முகத்தை வெறித்துப் பார்ப்பதும், பின்னந்தலை குனிந்து யோசிப்பதும், மணலில் கிறுக்குவதுமாகக் கொஞ்சம் நேரத்தைக் கழித்தான்…

அவன் எது குறித்துத் தன்னிடம் தனிமையில் பேச வந்திருக்கிறான் என்று சுந்தரம் அறிந்தே வைத்திருந்தார். அந்த ‘டெலிபோன் கால்’ சம்பவத்துக்குப் பிறகு இந்த ஒரு வாரமாய்த் தான் அவனைப் பார்க்கவேயில்லை என்ற பிரக்ஞை அவருக்கும் இருந்தது. எனினும் அவன் அதனால் பாதிக்கப்பட்டிருந்தும், வயது வந்த இளைஞன் என்ற காரணத்தால் நாகரிகமாக அது விஷயமாய் ஒரு சந்திப்பைத் தவிர்த்து வருகிறான் என்றும் அவர் கருதி இருந்தார்.

ஆனால், இப்போது அது சம்பந்தமாய் அவன் மிகவும் ஆழமாகப் பாதிக்கப்பட்டு அது குறித்துத் தன்னிடம் பேசவே தயாராகி வந்திருக்கின்ற நிலைமை அவருக்கு அவ்வளவு திருப்திகரமாக இல்லை என்றாலும், ஒரு கோழை போல் அந்தச் சந்திப்பைத் தவிர்க்க முயல்வது சரியல்ல என்பதனாலேயே அவனிடம் அவர் இப்போது எதிர்ப்பட்டு நிற்கிறார்.

எனினும் அவர் தானாகவே எதுவும் பேச விரும்பவில்லை.

அவன் திடீரென்று தனக்குத்தானே பேசிக்கொள்கிற மாதிரி முனகினான்: “ஐ ஆம் ஸாரி! – இது ரொம்பவும் வெட்கப்படத்தக்க அவக்கேடான விஷயம்” என்று ஆங்கிலத்தில் கூறினான். அதைத் தொடர்ந்து அவன் அவரிடம் கேட்டான்: “நான் எதைக் குறித்துச் சொல்கிறேன் என்று உங்களுக்குப் புரிகிறதா?”

அவர் கொஞ்சமும் பதற்றமில்லாமல் ‘புரிகிறது’ என்பதாகத் தலையை ஆட்டினார்.

அவரது பதற்றமின்மையைக் கண்டபோதுதான் அவனுக்கு ஓர் ஆவேசமே வந்துவிட்டது.

“நீங்கள் இப்படிப்பட்ட மனிதராக இருப்பீர்கள் என்று நான் கற்பனைகூடச் செய்ததில்லை…”- அவன் உணர்ச்சி மிகுதியால் முறுக்கேறிய தனது கைகளைப் பிசைந்து கொண்டான். காற்றில் தலை கலைந்து பரக்கக் குமுறுகின்ற உள்ளத்து உணர்ச்சிகளை அடக்கிக் கொண்டு மார்பு பதை பதைக்க, சீறிச் சீறி மூச்சு விட்டான்.

“வேணு! டோண்ட் பி ஸில்லி… நீ என்ன சின்னக் குழந்தையா?… பொறுமையா யோசி” என்று அவனது தோளில் தட்டிக் கொடுத்தார் சுந்தரம்.

“எஸ்…எஸ்… ஐ ஆம் அன் அடல்ட்” என்று பல்லைக் கடித்தவாறே சொன்னான். பிறகு தொடர்ந்து ஆங்கிலத்திலேயே கூறினான்.

- அந்த அந்நிய மொழியில்தான் ஒரு தகப்பனும் மகனும் இதுபோன்ற விஷயங்களை விவாதிக்க முடியும் என்று எண்ணினான் போலும்!

“உங்களுக்கு அந்த டெலிபோன் சம்பவம் நினைவிருக்கிறதா? அன்றிலிருந்து உங்களை நான் கவனித்தே வருகிறேன்… என்னுடைய தந்தை இப்படி ஒரு ஸ்திரீ லோலனாக இருப்பார் என்று நான் நினைத்ததே இல்லை. இது நம் குடும்பத்தைப் பற்றிய பிரச்னை அல்லவா?… உங்கள் வயதுக்கும் தரத்துக்கும் உகந்த செயலா இது?… இந்த அம்மா இருக்கே அது ஒரு அசடு! நீங்கள் அவங்களை வாழ்க்கை பூராவும் இப்படியே வஞ்சித்து வந்திருக்கிறீர்கள்!…” அவன் பேசும்போது குறுக்கிடாமல் சிகரெட்டைப் பற்றவைத்துப் புகைத்துக் கொண்டிருந்த அவர், திடீரென இப்போது இடைமறித்துச் சொன்னார்:

“ப்ளீஸ்! உன் அம்மாவை இது சம்பந்தமாய் இழுக்காதே! உனது அபிப்பிராயங்கள் – அது எவ்வளவு வரைமுறையில்லாமலிருந்தாலும் நீ சொல்லு – நான் கேட்கிறேன்… உன் அம்மாவை இதில் கொண்டு வராதே! உன்னைவிட எனக்கு அவளைத் தெரியும். உனக்கு என்னைத் தெரிந்திருக்கிறதே, அதற்கு மேலாக அவளுக்கு என்னைத் தெரியும் – நாங்கள் இருபத்தைந்து வருஷங்கள் தாம்பத்தியம் நடத்தியவர்கள்; எங்கள் இறுதிக்காலம் வரை ஒன்றாக வாழ்க்கை நடத்துவோம்… நீ மேலே சொல்லு!”

“நீங்கள் அம்மாவை வஞ்சித்து ஏமாற்றி ஒரு போலி வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்! நீங்கள் என்னை ஏமாற்ற முடியாது…”

உன்னை ஏமாற்ற வேண்டிய அவசியமே எனக்கு இல்லை என்பதுபோல் அவர் சிரித்துக் கொண்டார்.

“அந்த போன் நிகழ்ச்சியை மட்டும் வைத்து உங்களைப் பற்றி இந்த முடிவுக்கு நான் வந்துவிடவில்லை… இரண்டாவது முறை நீங்கள் போனில் பேசினீர்களே அந்தப் பேச்சை நான் கேட்டுக் கொண்டுதானிருந்தேன்… அதன் பிறகு இரவு ஒன்பது மணிக்கு மேல் காரை எடுத்துக்கொண்டு ஓடினீர்களே… உங்கள் இருவரையும் நான் தியேட்டரிலும் பார்த்தேன். இதனால் மட்டும் ஒருவரைச் சந்தேகித்துவிட முடியுமா?… அதனால்தான் உங்கள் அறையில் புகுந்து உங்கள் மேஜை டிராயர், அலமாரி யாவற்றையும் நான் சோதித்துப் பார்த்தேன்… உங்களின் காதல் கடிதங்கள் – ஒரு பைலே இருக்கிறதே- அதில் ஒன்று இதோ!” என்று அவன் ஆத்திரத்துடன் பாக்கெட்டிலிருந்து ஒரு காகிதத்தை எடுத்து அவர் மேல் விட்டெறிந்தான்…

பிறகு அவன் வேறு புறம் திரும்பிக்கொண்டு கண் கலங்கினான். தொண்டையில் அழுகை அடைத்தது.

கடற்கரைச் சாலையில் நீல விளக்குகள் எரிய ஆரம்பித்தன. மணல் வெளியில் ஜனக் கும்பல் குழுமி இருந்தது… ஒரு சிறு கும்பல் அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்தக் கும்பல் அவர்களைக் கடந்து செல்லும் வரை அவர்கள் மௌனமாக அமர்ந்திருந்தனர். பின்னர் வேணுதான் பேச்சை ஆரம்பித்தான்:

“நீங்கள் என்னைப் பெற்ற தகப்பன். உங்களுக்கு நான் இதையெல்லாம் சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டு விட்டதை எண்ணினால் எனக்கு வருத்தமாகத் தானிருக்கிறது… இனிமேலாவது நீங்கள் உங்கள் தவறுகளைத் திருத்திக் கொள்ள வேண்டும்… அதற்காகத்தான் சொல்கிறேன்…”

அதற்கு மேல் என்ன பேசுவதென்று புரியாமல் அவன் மௌனமானான். சுந்தரம் மௌனமாகப் பெருமூச்செறிந்தவாறு வானத்தைப் பார்த்தவாறிருந்தார்… இவனிடம் இது குறித்துத் தான் என்ன பேசுவது என்பதைவிட, என்ன பேசக்கூடாது என்பதிலேயே அவர் கவனமாக இருந்தார்.

அவன் திடீரென அவரைப் பார்த்துக் கேட்டான்:

“தாத்தா சொல்லியிருக்கிறார் – நீங்களும் அம்மாவும் காதலித்துக் கலியாணம் செய்து கொண்டீர்கள் என்று… இந்தக் காதல் விவகாரங்கள் எல்லாம் கடைசியில் இப்படித்தான் ஆகுமோ?” என்று சிறிது குத்தலாகவும் கேலியாகவும் கேட்டு அவர் முகத்தைக் கூர்ந்து பார்த்தான்.

சுந்தரம் சிகரெட்டைப் புகைத்தவாறு சற்றுக் குனிந்த தலையுடன் யோசித்தவாறிருந்தார். ஒரு பெருமூச்சுடன் முகம் நிமிர்ந்து வேணுவைப் பார்த்தார். எதைப்பற்றியோ அவனிடம் விளக்கிப் பேச நினைத்து, ‘வயது வேறு; அனுபவம் வேறு; அதிலிருந்து பெறுகின்ற முதிர்ச்சி வேறு!’ என்று அவருக்குத் தோன்றியதால், அவர் அவனுக்கு விளக்க நினைத்த விஷயத்தை விடுத்து வேறொன்றைப் பற்றிப் பேசினார்.

“சரி, இதுபற்றியெல்லாம் உன்னைப் பாதிக்கின்ற விஷயம் என்ன? அதைச் சொல்லு.”

அவர் இப்படிக் கேட்டதும் அவனுக்கு ஒரு பக்கம் கோபமும் இன்னொரு பக்கம் இந்த மனிதர் என்னதானாகி விட்டார் என்ற பரிதாபமும் ஏற்பட ஒரு சிறு புன்னகையுடன் சொல்ல ஆரம்பித்தான்.

“அப்பா!… நீங்கள் ஒரு புரபசர்; கௌரவமான குடும்பத்தில் பிறந்தவர். நான்கு குழந்தைகளின் தந்தை. இத்தனை வயதுக்குமேல் நீங்கள் ஒரு விடலைபோல் திரிவதனால் உங்கள் குடும்ப அந்தஸ்து, சமூக அந்தஸ்து இவை யாவும் சீர்குலைந்து விடுகிறதே – என்று உங்களின் வயது வந்த மகன் கவலைப்படுவது தப்பு என்கிறீர்களா? அதில் அவனுக்குச் சம்பந்தமில்லை என்கிறீர்களா?”

அவன் பேசும்போது அவர் மகனின் முகத்தை நேருக்கு நேர் கூர்ந்து பார்த்தார். அவன் முகத்தில் ஒரு பக்கம் வெளிச்சமும் மறுபக்கம் இருளும் படிந்திருந்த போதிலும் தன் முகத்தை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் அவனுடைய பார்வை நாலு புறமும் அலைவதை அவரால் கவனிக்க முடிந்தது.

“வேணு… நீ வயது வந்தவன் என்று சொல்லுகிறாய். அது உண்மையும் கூட. ஆனால், வயது வந்த ஒரு மனிதனுக்குரிய வளர்ச்சியை உன்னிடம் காணோமே… முதலில் ஒரு தகப்பன் என்ற முறையில் என்னுடைய ‘பர்ஸனல்’ விவகாரங்களை – அந்தரங்க விவகாரங்களை – உன்னிடம் பரிமாறிக் கொள்வது அவசியம் என்று எனக்குத் தோன்றவில்லை. நீ எனது சமூக அந்தஸ்து, குடும்ப அந்தஸ்து முதலியவை பற்றிக் கவலைப்படுவதாகச் சொல்கிறாய். ரொம்ப நல்லது. அந்த எனது தகுதிகளுக்கு ஒரு குந்தகமும் வராது. அதனைக் காப்பாற்றிக் கொள்வதில் உன்னைவிட எனக்கு அக்கறை உண்டு. அவற்றுக்கு இழுக்கு வரும் பட்சத்தில் அதனை எதிர்த்துச் சமாளிக்கும் வலிமை எனக்கு உண்டு என்பதை உனக்கு நான் எப்படி நிரூபிப்பது? ஏன் நிரூபிக்க வேண்டும்?…”

- அவர் குரல் தீர்மானமானதாகவும் கனமானதாகவும் இருந்தது. அவர் கொஞ்சம்கூடப் பதட்டமோ குற்ற உணர்ச்சியின் குறுகுறுப்போ இல்லாமல் தன்னிடம் பேசுகிறதைக் கேட்கையில் வேணுவுக்குத் தான் செய்வதுதான் தப்போ என்ற சிறு பயம் நெஞ்சுள் துடித்தது. இருந்தாலும் ‘இத்தனை வயதுக்குமேல் இவ்வளவு கேவலமாக ஒரு பெண்ணுடன் உறவு வைத்துக் கொண்டிருந்தும் என்ன தைரியத்துடன் தன்னிடம் வாய்ச் சாதுரியம் காட்டுகிறார் இவர்’ என்ற நினைப்பு மேலோங்கி வர, அவன் கோபமுற்றான்.

“எனக்கு ஏன் நிரூபிக்க வேண்டும் என்றா கேட்கிறீர்கள்? நான் உங்கள் மனைவியின் மகன். நீங்கள் அவளுக்குத் துரோகம் செய்கிறீர்கள்” என்று பல்லைக் கடித்துக் கொண்டு ஆங்கிலத்தில் கூறினான்.

“ம்… அவள் என்னைப்பற்றி உன்னிடம் புகார் செய்தாளா, என்ன?” என்று அவர் அமைதியாகக் கேட்டார்.

“இல்லை…”

“பின் எதற்கு நீ அத்துமீறி எங்கள் தாம்பத்திய விவகாரத்தில் குறுக்கிடுகிறாய்?…”

“ஐ ஆம் யுவர் ஸன்!… நான் உங்கள் மகன் – இது என் கடமை.”

“நோ ஸன்… இது உன் கடமை இல்லை! இதில் தலையிடும் அதிகாரம் ஒரு மகனுக்கு இல்லை மகனே!”

வேணு உதட்டைக் கடித்துக் கொண்டான். அவனுக்கு அழுகை வந்தது… அவரை வாய்க்கு வந்தபடி வைது தீர்த்து விட்டு இனிமேல் அவர் முகத்திலேயே விழிக்கக் கூடாத அளவுக்கு உறவை முறித்துக் கொண்டு ஓடி விடலாம் என்று தோன்றியது.

அவனுடைய தவிப்பையும் மனப் புழுக்கத்தையும் கண்டு அவருக்கு வருத்தமாக இருந்தது. தனக்குச் சம்பந்தமில்லாத, தன்னால் தாங்கமுடியாத விஷயங்களைப் பொருட்படுத்தாமல் ஒதுக்க முடியாத பலவீனத்தால் அந்த இளம் உள்ளம் இப்படி வதைபடுகிறதே என்ற கனிவுடன் அவன் கையைப் பற்றினார் அவர்.

“வேணு…”

சிறு குழந்தை மாதிரி பிணங்கிக்கொண்டு அவன் அவர் கையை உதறினான். இப்போது அவனுக்கு அழுகையே வந்துவிட்டது. அழுகை அடைக்கும் குரலில் அவன் நெஞ்சு இளகக் கேட்டான்…

“அப்பா… எனக்கு இந்த விஷயம் ரொம்ப அவமானமா இருக்கே… நீங்க… என்னத்துக்கு… இப்படியெல்லாம் நடந்து கொள்ளணும்…”

அவர் தன்னுள் சிரித்துக் கொண்டார்.

“மை பாய், வயது வந்த ஆண் பிள்ளை என்று மீசை முறுக்கற நீ இப்படி கேட்கலாமா? உன்னோட நல்ல உணர்ச்சி எனக்குப் புரியுது. என்னைப் பத்தித் தப்பாத் தோணினால், அதை மனசிலேயே அடக்கி வை… காலப் போக்கிலே எது சரி, எது தப்பு – எந்த அளவுக்கு எது தப்பு எது சரின்னு உனக்க்குப் போகப் போகப் புரியும்… நீ செய்த காரியங்களை எல்லாம் உன்மேல் பாசமுள்ள ஒரு தகப்பன்கிற முறையிலே நான் மன்னிக்கறேன். யோசிச்சுப் பார்… தகப்பனின் தனிப்பட்ட விஷயங்களைத் தெரிஞ்சுக்கறதுக்காக ஒரு மகனே அவனை உளவு பாக்கறதும், கள்ளத்தனமா அவனது அந்தரங்கங்களில் பிரவேசிக்கிறதும் ரொம்பவும் அவமானகரமானது இல்லையா?… நான் உன்னுடைய ஸ்தானத்தில் இருந்தா இந்தச் செயலுக்காக வாழ்க்கை முழுவதும் வெட்கப்படுவேன்…”

அவர் அவனை மன்னித்து விட்டதாகவும், அவன் செய்த குற்றத்துக்கு அவனை வெட்கப்படும்படியாகவும் கூறுவதை அவனால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. எனினும், தொடர்ந்து அவரிடம் தான் பேசி அவரைத் திருத்துவதோ, அவர் குற்றத்தை ஒப்புக்கொள்ளச் செய்வதோ தனது சக்திக்கு அப்பாற்பட்டது என்று அவன் உணர்ந்தான்.