Chapter 2

வேணுவின் தந்தை சுந்தரமும் தாய் ரமணியும் இருபத்தைந்து வருடங்களுக்கு முன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் காதலித்துத் திருமணம் செய்து கொண்டவர்கள். இருவரும் வெவ்வேறு ஜாதியினர் என்பதால் பெற்றோரை விரோதித்துக்கொண்டே அவளைக் கைப்பிடித்தார் சுந்தரம்.

ரமணியம்மாள் சிறு வயதில் கான்வென்ட்டில் படித்து வெள்ளைக்காரப் பாணியில் வளர்க்கப்பட்டவள். மேற்கத்திய கலாசாரத்தில் அவளது குடும்பமே திளைத்தது. அக்காலத்தில் சுந்தரத்திற்கு அவளிடம் ஏற்பட்ட ஈடுபாட்டிற்கு அதுவே கூடக் காரணமாக இருந்திருக்கலாம்.

அந்த ஈடுபாட்டின் காரணமாகப் பெற்றோரையும் விரோதித்து அவளைக் கலப்பு மணம் புரிந்து கொண்ட பின் இரண்டாண்டுக் காலம் பெற்றோருடன் தொடர்பே இல்லாதிருந்தார் சுந்தரம். இரண்டு வருஷங்களுக்குப் பின் வேணு பிறந்தான்.

புத்திர பாசத்தைத் துறந்திருந்த சுந்தரத்தின் தந்தை கணபதியாப் பிள்ளையும் அவர் மனைவி விசாலமும் பேரக் குழந்தையைப் பார்க்க கிராமத்திலிருந்து ரயிலேறிப் பட்டணத்துக்கு ஓடி வந்தார்கள்; கொஞ்சம் கொஞ்சமாய்ப் பகைமை விலகி சுந்தரத்திற்கும் அவன் பெற்றோருக்கும் உறவுப் பாலம் அமைத்தவன் வேணுதான்.

வேணுவுக்கு ஆறு வயதாகும்போது கணபதியாப் பிள்ளை பேரனைத் தான் அழைத்துச் செல்வதாகக் கூறினார். எவளோ ஒருத்திக்கு, ஏதோ ஒரு நாகரிகத்துக்குத் தாங்கள் ஆசாரமாக வளர்த்த பிள்ளையைப் பறி கொடுத்து விட்டோமே என்ற நிரந்தர ஏக்கத்திற்கு ஆளாகிப் போன கணபதியாப் பிள்ளை அதை ஈடுசெய்து கொள்வதைப்போல் பேரனை ஸ்வீகரித்துக்கொண்டார். வேணு தாத்தாவின் வீட்டிலேயே வளர்ந்து படித்துக் கொண்டிருந்தான். பெற்றோரின் வீடு என்பது அவனுக்கு எப்போதாகிலும் லீவிலே வந்து தங்கிச் செல்லும் உறவுக்காரர்களின் குடும்பம் போலாயிற்று.

சுந்தரத்தின் தந்தை கணபதியாப் பிள்ளை வீர சைவம்; தமிழ்ப் புலமையுடையவர். சிவ பக்தர். அவர் மனைவி விசாலம் சென்ற நூற்றாண்டுத் தமிழ்ப் பெண்மையின் கடைசிப் பிரதிநிதி. புருஷனின் முன்னே உட்கார்ந்து பேச மாட்டாள்.

வேணு எப்போதேனும் லீவுக்குத் தாய் தந்தையரிடம் வரும்போது அவர்களின் வாழ்க்கைமுறை, நடை உடை யாவும் ஓர் அந்நியத் தன்மை கொண்டு அவர்களே தனக்கு மிகவும் அந்நியமானவர்கள் போல உணர்ந்தான். சிறு வயதில் எல்லாம் அந்த அனுபவம், தாத்தா-பாட்டியிடம் போய்ச் சிரிக்க சிரிக்க விளக்கிச் சொல்லிப் பரிகசிக்கவே அவனுக்கு உதவிற்று. பின்னர் வயது ஏற ஏற அவன் தாத்தா-பாட்டியோடு, தாய் தந்தையரை ஒப்பிட்டுப் பார்க்க ஆரம்பித்தான். அவன் மனத்தில் தாத்தாவும் பாட்டியும் லட்சியத் தம்பதியாகவும், நமது பண்பாட்டின் ஆதர்சமாகவும் ஏற்றம் பெற்றனர்.

என்னதான் பாசமிருந்த போதிலும் அவனுக்குத் தன் தாய் தந்தையர் மீது உயரிய மதிப்புத் தோன்றவில்லை.

வேணு ஹைஸ்கூல் படிப்பை முடித்துவிட்டுப் பக்கத்து டவுனாகிய சிதம்பரத்தில் கல்லூரியிலும் சேர்ந்தான். அவன் கல்வி எவ்வளவுதான் நவீன முற்றிருந்த போதிலும் அவனது வாழ்க்கை நவீன முறைகளுக்கு இலக்காகவில்லை.

இப்போது கல்லூரிப் படிப்பு முடிந்த பின் அவன் சென்னைக்கு வந்து சில மாதங்கள் தான் ஆயின…

அவனால் தாத்தாவையும் பாட்டியையும் பிரிந்து வரவே முடியவில்லை.

“நான் ஒண்ணும் உத்தியோகம் பார்க்க வேணாம்… படிச்சவங்க எல்லாம் நகரத்துக்கும் உத்தியோகத்துக்கும் போறதனாலேதான் நம்ப தேசம் இப்படி இருக்கு. நான் இங்கேயே இருந்து விவசாயத்தைப் பார்த்துக் கொள்கிறேனே” என்று அவன் தாத்தாவிடம் எவ்வளவோ சொல்லிப் பார்த்தான்; அவன் யோசனை பாட்டிக்கும் கூடப் பிடித்திருந்தது.

ஆனால், வெகுநேரம் கண்களை மூடிக்கொண்டு சாய்வு நாற்காலியில் உட்கார்ந்திருந்த தாத்தா பாட்டியிடம் பதில் சொன்னார்: “நீயும் என்ன அவனோட சேர்ந்து பேசறே? நம்ம பையனை விட்டுட்டு இருந்தப்போ உன் மனசு கேட்டுதா? அது மாதிரிதானே அவனைப் பெத்தவளுக்கும் இருக்கும். படிப்புன்னு ஒரு காரணத்தை வெச்சி இவ்வளவு காலம் இருந்தாச்சு. இப்ப அவன் பெத்தவங்களுக்குப் பிள்ளையா அங்கே போயி இருக்கறதுதான் நியாயம்.”

“நான் வரலேன்னு அங்கே யாரும் அழலே!” என்று மறித்துச் சொன்னான் வேணு.

“வேணு! நீ எங்களோட இருக்கறதிலே உன்னைவிட எங்களுக்கு சந்தோஷம்னு நான் சொல்லணுமா? இப்ப நீ கொஞ்ச நாள் போய் இரு. அப்புறம் போகப் போகப் பாப்பம்… இவ்வளவும் சொல்றேனே… நீ அந்தப் பக்கம் ரயிலேறிப் போனப்பறம் நானும் உன் பாட்டியும் எப்படி நாளைத் தள்ளப் போறமோ?… அதுக்கென்ன, நீ லீவிலே போவியே அந்த மாதிரிப் போயி கொஞ்ச நாள் அங்கே இரு… என்ன நான் சொல்றது?” என்று அவர் எவ்வளவோ சமாதானங்கள் கூறிய பின்னரே அவன் சென்னைக்கு வரச் சம்மதித்தான்.

முன்பெல்லாம் லீவு நாட்களில் வந்து முழுசாக இரண்டு மாதங்கள் தன் தாய் தந்தையோடு தங்கி இருந்தபோது ஏற்படாத சலிப்பு இப்போது இரண்டே வாரங்களில் ஏற்பட்டது! அவனுக்கு ஒன்றுமே பிடிக்கவில்லை.

தன் தாயும் தந்தையும் டைனிங் டேபிளில் எதிர் எதிரே உட்கார்ந்துகொண்டு சாப்பிடுவதும், காலையில் எட்டு மணி வரைக்கும் அவள் தூங்குவதும், தன் தந்தை ஓடி ஓடித் தாய்க்கு ஊழியம் செய்வதும் அவனுக்கு அருவருப்பாக இருந்தன.

அவன் மனதில், அறுபது வயதாகியும் அதிகாலையில் எழுந்து நீராடி மஞ்சளும் குங்குமமுமாய்த் திகழும் பாட்டியின் உருவமே அடிக்கடி எழுந்தது. அவள் தாத்தாவுக்கு இந்த வயதிலும் பணிவிடை புரியும் மகத்துவத்தை எண்ணி எண்ணி ஒவ்வொரு நிகழ்ச்சியாகக் கற்பனையில் கண்டு இவர்களின் நடைமுறையோடு அவன் பொருத்திப் பார்த்தான்.

‘இந்த அப்பா சரியான பெண்டாட்டிதாசன்!’ என்று தோன்றியது அவனுக்கு. இந்த அம்மா பாட்டுக்குச் சினிமாவுக்குப் போவதும் லேடீஸ் கிளப்புக்குப் போவதும் அதைப் பற்றி அவர் ஒன்றுமே கேட்காமலிருப்பதும், அதே மாதிரி அவரைப் பற்றி இவளும் அக்கறையில்லாமலிருப்பதும் – ஐயே! என்ன உறவு? என்ன வாழ்க்கை? என்று மனம் சலித்தது.

“சரி! நமக்கென்ன போயிற்று. தாத்தாவின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டுக் கொஞ்ச நாள் இருந்து விட்டுக் கிராமத்தோடு போய்விட வேண்டியதுதான்” என்றிருந்த வேணுவுக்கு மேலும் அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் அருவருப்பையும் மூட்டத்தக்க அந்தச் சம்பவம் சென்ற வாரம் நடந்தது.

இரவு எட்டு மணி இருக்கும். டெலிபோன் மணி அடித்தது. சுந்தரம் அப்போது மாடியில் இருந்தார். வேணு ரிஸீவரை எடுத்தான்.

“ஹலோ!” – அவன் போன் நம்பரையும் சொன்னான்.

“நான்தான் வத்ஸலா பேசறேன்… காலேஜிலேயே மீட் பண்ணனும்னு வந்தேன்… நீங்க அதுக்குள்ளே போயிட்டீங்க… ‘ஸவுண்ட் ஆப் ம்யூஸிக்’ இன்னிக்கித்தான் கடைசியாம்… நைட் போலாமா?… என்ன ஒண்ணும் சொல்ல மாட்டேங்கறீங்க!”

வேணுவுக்கு ஒன்றும் புரியவில்லை. அது ஒரு ‘ராங் நெம்பர் கால்’ என்று அவன் ஆரம்பத்தில் கொண்ட சந்தேகம், காலேஜில் மீட் பண்ண வந்ததாகக் கூறியதில் அடிபட்டுப் போயிற்று! எதுவும் செய்யத் தோன்றாமல் ரிஸீவரை டெலிபோன் மீது வைத்து விட்டு, அந்த அறையை விட்டே ஓடிப் போய்விட்டான் வேணு. பக்கத்தறைத் தனிமையில் போய் உட்கார்ந்து கொண்ட வேணுவின் மனம் அலை பாய்ந்தது.

‘அப்பாவைத் தவிர வயது வந்த ஓர் ஆணின் குரல் வேறு யாருடையதாகவும் இருக்காது’ என்ற தைரியத்தில் வழக்கமாகப் பேசுகின்ற ஒருத்தியாகத்தான் அவள் – அந்த வத்ஸலா – இருக்க வேண்டும் என்று அவன் உறுதியாக நம்பினான்.

சற்று நேரத்தில் மீண்டும் மணி அடித்தது. அடித்துக் கொண்டே இருந்தது! வேணு இருந்த இடத்தை விட்டு நகரவில்லை.

மாடியிலிருந்து இறங்கி வந்த சுந்தரம் தானே போய் ரிஸீவரை எடுத்தார்.

“ஹலோ?”- டெலிபோன் நம்பரைச் சொன்னார்.

வேணு மௌ¢ள எழுந்து சென்று டெலிபோன் இருக்கின்ற ஹாலுக்கும் அவன் இருந்த அறைக்கும் இடையேயுள்ள பலகையில் காதை வைத்துக்கொண்டு உரையாடலைக் கவனித்தான்; ஆம்; ஒட்டுக் கேட்டான். அவன் தந்தை ஆங்கிலத்தில் சொல்லிக் கொண்டிருந்தார்.

“இல்லையே, நான் மாடியில் இருந்தேன்…ம்…த்சொ…”

“……..”

“இட் இஸ் ஆல்ரைட்…”

“…….”

“ஒரு வேளை என் மூத்த மகனாக இருக்கலாம்… ஆமா! அவன் ஊர்லேயே இருந்தான்… இப்பதான்…. ஆமாம்…”

“…….”

“வேறு யாரும் ‘அடல்ட்’ இல்லையே!”

“…….”

“சரி… நான் சமாளித்துக் கொள்கிறேன்… ஓ.கே!….”

“…….”

“டோண்ட் ஒரி!”

“…….”

“ஓ… வாட் ஆர் யூ டாக்கிங்?…”

“…….”

“பை….”

சம்பாஷணை முடிவடைகின்ற தருவாயில் வேணு அறையிலிருந்து நழுவி வெளியேறி விட்டான்.

அந்தச் சம்பவத்துக்குப் பிறகு இன்றுவரை அவன் அவர் முகத்தில் விழிக்கவில்லை. ஒரே வீட்டில் இருந்தும் மிக சாமர்த்தியமாக அவர் கண்ணில் படாமல் அவன் தப்பித்துக் கொண்டிருந்தான்.

சில நாட்களுக்கு முன் வீட்டில் யாருமில்லாத நேரத்தில் அவன் மாடியில் உள்ள தன் தந்தையின் தனியறைக்குச் சென்றான். தனது ஐயத்தை உறுதிப்படுத்திக்கொள்ள அவனுக்கு மேலும் சில துப்புகள் தேவைப்பட்டன.

மாற்றுச் சாவிகள் போட்டு அவரது மேஜை, அலமாரி முதலியவற்றைத் திறந்து துருவினான். அவ்விதம் ஒரு திருடனைப்போல் நடந்து கொள்வதில் அவனுக்கு அவமானமேதும் ஏற்படவில்லை. அதனினும் பெருத்த அவமானத்துக்கு அவனை ஆளாக்கத்தக்க சில துப்புகள் கிடைத்ததால் அந்தத் தனது காரியம் சரியே என்று அவன் நினைத்தான்.

“நான் ஏன் பயப்பட வேண்டும்? தப்பு செய்கிற அப்பாவைக் கண்டு நான் ஏன் ஒளிய வேண்டும்… இதைப்பற்றி அவர் புத்தியில் உறைக்கிற மாதிரி நான் எடுத்துக் கூறி அவரைத் திருத்த வேண்டும்… இது என் கடமை… எப்படி எங்கே அவரிடம் இதைப் பற்றிப் பேசுவது?… வீட்டில் பேசினால் அம்மாவுக்கு விஷயம் தெரிந்து போகுமே!… அவரை வெளியில் எங்காவது சந்தித்துப் பேச வேண்டும்…. என் பேச்சை அவர் ஏற்றுக்கொள்ளாவிட்டால்?… அதைப் பற்றி பிறகு யோசிக்கலாம். முதலில் தைரியமாக இது விஷயமாய் அவரிடம் உடைத்துப் பேசிவிட வேண்டும்…” என்று இரவு பகலாக இந்த விவகாரம் குறித்து நெஞ்சு பொருமி, நினைவு குழம்பி இறுதியாக நேற்று அவன் ஒரு தீர்மானத்துக்கு வந்தான்.

“எப்படியும் நாளைக்கு அவரிடம் நேருக்கு நேர் உடைத்துப் பேசிவிடுவது. இதில் நான் பயப்பட என்ன இருக்கிறது? நான் என்ன குழந்தையா? ஐ ஆம் அன் அடல்ட்!”