Chapter 1

“ஒரு நிமிஷம் இருங்கள்; கூப்பிடுகிறேன்… நீங்கள் யார் பேசறது?” என்ற கேள்வி வந்ததும் பல்லைக் கடித்துக் கொண்டு பதில் சொன்னான்: “நான் – அவர் மகன் வேணு!”

சற்றுக் கழித்து அவனது தந்தையின் குரல் போனில் ஒலித்தது. “ஹலோ! நான் தான் சுந்தரம் …”

- அதுவரை இருந்த தைரியம், ஆத்திரம், வெறுப்பு யாவும் குழம்பி வேணுவுக்கு உதடுகளும் நெஞ்சும் துடித்தன. அவனது பேச்சு குழறிற்று; இருந்தாலும் சமாளித்துக் கொண்டு பேசினான்: “நான் வேணு பேசறேன்… நான் உங்களோடு கொஞ்சம் பேசணும்… ம் … தனியாப் பேசணும்.”

“சரி… இன்னும் கொஞ்ச நாழிலே நான் வீட்டுக்கு வந்துடுவேன்…”

“இல்லே… அதைப்பத்தி… வீட்டிலே பேச எனக்கு விருப்பமில்லே… நீங்க அங்கேயே இருக்கிறதானா, இப்பவே பத்து நிமிஷத்திலே நான் அங்கே வரேன்…”

“ஓ ஐஸீ! சரி… வாயேன்…”

“தாங்க்ஸ்…”

-ரிஸீவரை வைத்துவிட்டு நெற்றியில் பொங்கி இருந்த வியர்வையைத் துடைத்து விட்டுக்கொண்டான் வேணு. இன்னும் கூட அவனுக்கு நெஞ்சு படபடத்துக் கொண்டிருந்தது. அவன் என்னென்னவோ பேசத் தன்னைத்தானே ஒரு மகத்தான காரியத்திற்குத் தயார் செய்து கொள்கிற தோரணையில் உள்ளங்கையில் குத்திக் கொண்டு செருமினான்.

“ம்… இது என்னோட கடமை! இந்தக் குடும்பம் சீர் குலையாம பாதுகாக்க வேண்டியது என்னோட கடமை! ஒரு சின்னப்பையன் – தன் மகனே – தன்னைக் கண்டிக்கிற அளவு தான் நடத்தை கெட்டுப் போனதை அவர் உணர வேணாமா? மானக்கேடான விஷயம்தான்!… நான் ஆத்திரப்படாமல் நியாயத்தைப் பேசி, அவரோட கேடு கெட்ட ரகசியத்தை அவருக்கே மொதல்லே அம்பலப்படுத்தணும்…. ‘அதெல்லாம் இல்லை; அப்படி இப்படி’ன்னு அவர் மழுப்பப் பார்ப்பார்…. ம்ஹ்ம்! அவரோட மேஜை டிராயர்லே இருந்த அந்தக் கடுதாசியை… கர்மம்… காதல் கடிதம்… அதெ ஞாபகமா எடுத்துக்கறேன்… என் மேஜை டிராயருக்குக் கள்ளச்சாவி போட்டயோன்னு அவர் ஆத்திரப்படலாம். இவர் கள்ளக் காதலைக் கண்டுபிடிக்க நான் செய்த இந்தக் கள்ளத்தனம் ஒன்றும் பெரிய தப்பில்லை… முந்தாநாள் ராத்திரிகூட அவளோட ரெண்டாவது ஷோவுக்குச் சினிமாவுக்குப் போயிருந்ததைப் பார்த்த அப்புறம்தானே இந்தத் தொடர்பின் முழு உண்மையையும் கண்டு பிடிக்கணும்னு நானே அவர் அறையைச் சோதனை போட்டேன்!….”

-வேணு அவசர அவசரமாக உடையணிந்து வெளியே புறப்படுகிற சமயத்தில், லேடீஸ் கிளப்புக்குக் கிளம்பிக் கொண்டிருந்த அவன் தாய் ரமணியம்மாள் எதிர்ப்பட்டாள்.

சில நாட்களாகவே அவனது போக்கும் பேச்சும் ஒரு மாதிரியாக இருப்பதை அவளது தாயுள்ளம் உணர்ந்தது.

இப்போது அவனைத் திடீரெனப் பார்த்ததும் அவனது தோற்றத்தைக் கண்டு அவள் கலவரமடைந்தாள்.

“அவன் சரியாகச் சாப்பிடாமல் தூக்கம் கூட இல்லாமல் இருக்கிறானோ?” என்று, அவனது சோர்ந்திருக்கும் தோற்றத்தைக் கண்டு சந்தேகம் கொண்டாள். இவன் இளைத்துக் கறுத்துப் போயிருந்தான். க்ஷவரம் செய்து கொள்ளாததால் மேல் உதட்டிலும் மேவாயிலும் கன்ன மூலங்களிலும் இளரோமம் அடர்ந்திருந்தது… அவன் எதைக் குறித்தோ மிகுந்த மனோவியாகூலத்திற்கு ஆளாகி இருக்கிறான் என்று அவன் கண்களில் கலங்கிய சோர்விலும், கீழ் இமைகளுக்கடியில் படிந்திருந்த கருமையிலும் அவள் கண்டு கொண்டாள்.

அவன் வயது வந்த ஆண்மகன். அவனுக்கு ஏதேனும் அந்தரங்கமான பிரச்னைகள் இருக்கலாம். அதில் தான் தலையிடுவது நாகரிகமாகாது என்ற கட்டுப்பாட்டுணர்வுடன் அவள் அவனை நெருங்கி வந்தாள்.

“என்னடா வேணு… எங்கே கிளம்பிட்டே?” என்று ஆதரவாக அவன் தோள்களைப் பற்றினாள். அவனுக்கு உடம்பு கூசிற்று.

“கொஞ்சம் வேலை இருக்கு” என்று அழுத்தமாக அவன் பதில் சொன்னான்.

“வாட் இஸ் ராங் வித் யூ? சரி… என்னவாக இருந்தாலும் – நான் உனக்கு உதவ முடியும்னா சொல்லு…” என்று ஆங்கிலத்தில் கூறினாள்.

“தாங்க்ஸ்” என்று அவளைக் கடந்து போக யத்தனிக்கையில் அவனை நிறுத்தினாள் அம்மா.

“போ… போயி… என்னவோ ஸ்பெஷலா டிபன் பண்ணி இருக்கா சமையல்காரப் பாட்டி… சாப்பிட்டுட்டுப் போயேன்” என்று கொஞ்சி உபசாரம் செய்துவிட்டு, தனக்கும் நாழியாவதைக் கைக்கடிகாரத்தில் பார்த்துவிட்டு அவள் வெளியேறினாள்.

வேணு ஒரு விநாடி தலை குனிந்து யோசித்து நின்றான்.

“இந்த அசட்டு அம்மாவை இந்த அப்பாதான் எப்படி ஏமாற்றித் துரோகம் புரிந்து கொண்டிருக்கிறார்” என்று தோன்றியது வேணுவுக்கு. அதன் பிறகு, இந்த வயதிலும் இவள் செய்து கொள்ளுகிற அலங்காரமும் பவுடர் பூச்சும் உதட்டுச் சாயமும் கையுயர்ந்த ரவிக்கையும் கீச்சுக் குரலில் பேசுகிற இங்கிலீஷ் பேச்சும் காண வயிற்றைப் பீறிக்கொண்டு ஆத்திரமும் அருவருப்பும் பொங்கிற்று அவனுக்கு.

ஹாலில், அப்போதுதான் கான்வென்ட்டிலிருந்து வந்திருந்த அவனது இரண்டு தம்பிகளும் ஆறு வயதுத் தங்கையும் சோபாவில் அமர்ந்து ஷீசையும் ஸாக்சையும் கழற்றிக் கொண்டிருந்தனர். அவர்களைப் பார்க்கும்போது வேணுவின் நெஞ்சில் துக்கமும் பரிவும் பொங்கியடைத்தன.

“இந்தப் பொறுப்பற்ற தாயும் ஒழுக்கங்கெட்ட தந்தையும் இந்தக் குழந்தைகளின் எதிர்காலத்தைக் குட்டிச் சுவராக்கிவிடப் போகிறார்கள்” என்று நினைத்தபோது… இதற்குத் தான் என்ன செய்ய முடியும் என்று குழம்பினான் அவன்.

“இதற்கு நான் ஏதாவது செய்தாக வேண்டும்! அது என் கடமை… நான் என்ன இன்னும் சின்னக் குழந்தையா? எனக்கு இருபத்தியொரு வயதாகிறது… லீகலி, ஐ ஆம் அன் அடல்ட்!”

திடீரென்று அவன் தன்னை வளர்த்த தாத்தாவையும் பாட்டியையும் நினைத்துக் கொண்டான்.

“நல்ல வேளை! இந்தக் கேடுகெட்ட சூழ்நிலையில் வளராமல் போனேனே நான்!”