கிலியே கொல்லும்-புலியே வெல்லும்
நாயுடுவும் பொன்னுசாமியும் அங்கிருந்து நேரே அவ்வூர் போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்றார்கள். அங்கு அடைத்திருக்கும் கேசவன் விசனத்தினால் குன்றிப்போய் தன்னிரை அழிந்து சவம் போலக் கிடந்தான். அவர்கள் அங்கு சென்று கேசவனைத் தட்டி எழுப்பித் தங்கள் வரவைத் தெரிவித்தார்கள். இதை யறிந்த கேசவன் சிறு குழந்தையைப்போல விம்மி விம்மிப் புலம்பியபடியே "நாயுடுகாரு! தந்தையே! என் கதி அதோகதியாகி விட்டதே! நாள் இனி என்னவிதம் மானத்துடன் உயிர் வாழ்வேன்? அனியாபப்பழி என் தலைமீது வந்து விட்டதே! ஐயோ! எந்த சண்டாளர்கள் என்னை வேண்டுமென்றே இவ்விதம் செய்தார்களோ தெரியவில்லையே! நாயுடுகாரு! இந் பெரும் தீயினின்றும் தப்ப முடியுமா! என் பழி நீங்குமா ! இவ் விஷயம் பரிமளாவுக்குத் தெரியுமா! ஆ! அவள் இதைக் கேள்வியுற் றால் என்ன நினைப்பாள்! என் கதியை எண்ணி நான் அழுவதா! என்னை மனப் பூர்வமாக நேசித்த சிறுமியின் முன்பு ஓர் திருட னென்று பட்டம் பெற்ற பரிபவத்தை எண்ணி வருந்துவதா!" என்று ப்ரலாபிக்கத் தொடங்கினான்,
இவனுடைய பரிதாபத்தைக் கண்ட நாயுடுவும் பொன்னு சாமியும் முதலில் கண்ணீர் உதிர்த்தார்கள். பிறகு தாங்களே அதைரியப் படுவதாக கேசவன் நினைத்து விடுவானோ என்று எண்ணி கேசவனின் மனத்தைத் தேற்ற அவனுக்குத் தைரியம் கூறத் தொடங்கினார்கள்.
வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்குச் சிலர் தாங்கள் தங்களது பெரியோருக்கு அடங்கி ஒடுங்கி நடப்பதாகக் காண்பித்துக் கொள்கிறார்கள். ஆனால் அனுபத்திலோ நடத்தை வேறு மாதிரிதான்.
நாயுடூ:-கேசவா! நீ இந்த அபாண்டத்திற்கு வருந்துவது சகஜந்தான் எனினும் உன் மனத்தில் கடவுளிடத்து நம்பிக்கையும், தைரியமும் வேண்டும். இம்மாதிரியான குற்றங்களை நான் தீர்த்திருப்பது கணக்கில்லை. இந்த விஷயத்தில் நீ சிறிதும் பயப்படவேண்டாம். இதைவிட வேறு என்ன சொல்லப்போகிறோம், தைரியத்தைக் கைவிடாதே! பரிமளாவுக்கு விஷயம் நன்றாகத் தெரியும் அவளும் தைரியம் கூறும்படித் தான் தெரிவித்தான். "நமக்கு இத்தகைய குற்றப் பழி வந்துவிட்டதே இனிமேல் பரிமளா நம்மை மணம் செய்து கொள்வாளா!" என்று நீ நீனைக்கிறாய். உன் மீது குற்றம் ஒருக்கால் நீங்காமல் தண்டனை அடைந்து விட்டாலும் பரிமளா உன் விடுதலைக்குக் காத்திருந்து உன்னையே மாலையிடுவாளேயன்றி வேறு விதமாக அவள் மனம் மாறாது. இது சத்தியம். என்னிடம் அவள் சொல்லியனுப்பினாள். ஆகையினால் நீ மெலிய வேண்டாம்.
பொன்னு:- கேசவா! என்னுடைய இரு கண்களும் நீங்களிருவரும் என்று நம்பியுள்ள நான் அக்கண்ணில் ஒன்றிற்குப் பழுது வரும்படியாக நான் கண்டு சகிக்கமாட்டேன். உடனே அதைத் தீர்க்கும் முயற்சிதான் செய்வேன். எனக்குள்ள பொருள் எல்லாவற்றையும் இவ்வழக்கில் தோற்றாலும் தோற்பேன்; உன் மீது சார்ந்துள்ள அநியாயப் பழியைத் தீர்த்துவிட நான் பின்வாங்க மாட்டேன். இது விஷயத்தில் நீ கவலையே கொள்ள வேண்டாம். என்றைக் கிருப்பினும் பரிமளா உன்னுடைய பரிமளாதான். அவளைப் பற்றி நீ பயப்பட வேண்டாம். கடவுள் நம்மைக் கைவிட மாட்டார்: அவரையே தியானம் செய்து கொண்டிரு.
நாயுடு :- கேசவா! நான் கேட்கும் சில முக்கியமான விஷயங்களுக்குப் பதில் சொல்லு, நீ கல்யாண வீட்டிற்கு வந்த உடனே உன்னோடு யார் யார் எப்படிப் பேசினார்கள் என்ன நிலைமையில் நடந்து கொண்டார்கள்?
செக்குமாடு போலத் தனக்கு உழைத்துத் தனது மிருகாவேசத்திற்குப் பாத்திரமாக இருக்கும் வரையில்தான் வேண்டும் மனைவி. அதன் பலனாக அவள் நோய் வாய்ப்பட்டுத் தனக்கு உதவ அருகதை யில்லாவிடில் அவளை ஒழித்து விட்டு வேறெருத்தியின் கழுத்திற்குக் கயிற்றைத் தேடப் புத்தி போகின்றது சில புண்ணியாத்மாக்களுக்கு. மனைவி ஒரு மெஷினா?
கேசவன்:- பெரியவரே! நான் வந்த உடனே இத்தகைய விபரீதம் நடக்கு மென்று கனவிலும் கருத வில்லையாகையினால் அங்கு எதையுமே கவனிக்கவில்லை, நான் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளபடியே சாதாரணமாக ''வேலைக்காரி எங்கே?" என்று விசாரித்தேன். அவர்களும் சகஜமாகத்தான் பதில் தெரிவித்தார்கள். நான் படுத்துக் கொண்டேன். களைப்பினால் தூங்கி விட்டேன், பிறகு திடீரென்று கூக்குரல் கிளம்பியது. நான் அலறிக் கொண்டு எழுந்தேன். என் துணிகளை உதறியபோது அதிலிருந்து ஒரு துணி மூட்டை பொத்தென்று விழுந்தது. விழுந்த உடனே அங்கிருந்த ஒரு கருத்த மனிதன் "இதோ நகைகள். இதோ திருடன்" என்று கூறிக் கொண்டே என்னைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான். நான் அப்படியே ப்ரமித்துப்போய், தம்பித்து விட்டேன். விவரமே எனக்குப் புலப்படவில்லை. பிறகு நடந்த வரலாற்றிலிருந்து இங்கு திருட்டு நடந்ததாகத் தெரிந்தது. உடனே சேவகன் வந்து விட் டான். எனக்கு வந்த கடிதத்தைக் காட்டியும் அவர்கள் நம்ப வில்லை. நான் வேண்டு மென்று தயார் செய்த கடிதமென்று கூறி மறுத்து விட்டார்கள். பிறகு இங்கு அடைத்து விட்டார்கள். இதுதான் எனக்குத் தெரிந்த விவரம்." என்றான்.
அப்புறம் நாயுடு அவனோடு சில முக்கியமான விஷயங்களைப் பற்றிப் பேசிவிட்டுத் தைரியங்கூறிப் பின்னர் இருவரும் போலீஸ் அதிகாரிகளிடம் சென்றார்கள். அதிகாரியைக் கண்டு "ஐயா! இந்த வழக்கில் குற்றவாளியாக நீங்கள் கொண்டுவந்துள்ள மனிதன் உண்மையில் குற்றவாளியேயல்ல வென்பதை நாங்கள் திட்டமாய்க் கூறுவோம். நீங்கள் இந்த விஷயத்தில் நன்றாக ஆராய்ச்சி செய்ய வேண்டும். அந்தப் பையனுடைய யோக்கியதையைப்பற்றி நீங்கள் அறிந்திருக்கலாம். அவன் மகா உத்தமன். அவனுடைய தாயாரைத் தேடிக்கொண்டு இங்கு வந்திருக்கிறான் என்பதை நீங்கள் அக்கடிதமூலம் தெரிந்திருப்பீர்கள். அவனுடைய பரிசுத்தத் தன்மையைக் கூடுமானவரையில் விளக்கிக் காட்டுவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆகையினால் இது எதோ சாமானியமான திருட்டுக் கேஸ் என்று எண்ணி உடனே விசாரணை செய்துவிட லாகாது.எங்களுக்குச் சில தினங்கள் தவணை கொடுக்கவேண்டும். பிறகு நீங்கள் உங்கள் இஷ்டப்படிக்கு விசாரணை செய்யலாம்." என்று கேட்டார் நாயுடுகாரு,
நாம் நமக்கு மிகவும் ஆப்தமானவர்கள் என்று கருதியும், அவர்கள் நம்மீது உண்மையான அன்புடன் இல்லையே யென்று வருந்தி நமக்கு அவர்கள் மீதுள்ள அன்பைக் குறைக்கக் கூடாது; ஆனால் அதை அதிகப் படுத்தி அவர் களே தங்களது குறையை உணர்ந்து திருந்துவதற்குச் சந்தர்ப்பம் அளிக்க வேண்டும். அப்படியும் அவர்கள் திருந்தாவிடில் அவ்வளவுதான் பிராப்த மென்று தேத்தரவு கொள்ள வேண்டியதுதான்.
துப்பறியும் ராஜாராம் நாயுடுவை அறியாதார் யாருமில்லை. போலீஸ் இலாகாவிலேயே வெகுகாலமாகத் துப்பறியும் உத்யோகத்திலிருந்து வெகு சிக்கல் முக்கலான விஷயங்களை எல்லாம் விளக்கிக்காட்டி ஜெயம்பெறச் செய்திருக்கும் நாயுடுவை போலீஸாரே அறிவது வியப்பா! எனினும் அந்த அதிகாரி "ஐயா! நாயுடு காரு! இந்த வழக்கு விஷயமோ மகா சிறிது; கேவலமானது. தங்களைப்போன்ற துப்பறியும் புலிகளுக்கு இந்த துக்டா வழக்கில் வேலை என்ன இருக்கின்றது. பெருத்த கொலையா! கொள்ளையா! மோசடியா! நரசோரமா! ஒன்றுமில்லை பாருங்கள்; ஓர் சிறிய எலியை அடிப்பதற்கு - பிடிப்பதற்கு - ஒர் புவியைக் கொண்டு வருவதுபோல இருக்கிறது இது. இந்த வழக்கில் குற்றவாளி கையும் களவுமாகப் பிடிபட்டிருக்கையில் இதில் மறைவிடம் என்ன விருக்கிறது. இதற்கு முந்தி அவன் வெகு உத்தமனா இருந்திருக்கலாம். தற்போது ஏதோ போதாக் காலக் கொடுமையினால் இந்த வேலையைச் செய்திருக்கலாம். மேலும் அவன் இதில் ஒரு கிழவி யைக்கூட சம்பந்தப்படுத்த நினைத்தான்.
தனக்குத் தெரிந்தவர்களைக் காணும்போதெல்லாம் அவர்களுடைய யோக க்ஷேமங்களைப் பற்றி விசாரியாமலிருந்து விட்டு தனக்கு அவர்களால் ஏதேனும் காரியமாக வேண்டியிருக்கையில் மாத்திரம் அவர்களிடம் அடிக்கடி சென்று வெகு உருக்கத்துடன் விசாரிப்பது! இது என்ன சுய நலமோ!
அவள் விவரமறிந்ததும் நேரிலேயே வந்து நடந்ததை ஒப்பித்துவிட்டாள். இந்த வழக்கை நாளையே எடுப்பதாகத் தீர்மானித்திருக்கிறது. தாங்கள் கேட்பதால் இன்னும் 5 நாட்கள் தவணை கொடுக்கின்றோம். அதற்குள் உங்களா லாகிய வேலையைச் செய்யலாம்" என்றார்.
நாயுடு :- வெகு சந்தோஷம், எந்த விஷ்யம் மிகவும் அல்பமாக இருக்கின்றதோ அதில்தான் பெருத்த விஷயம் அடங்கி இருக்கும். ஒரு பாம்பு வருகிறது. எல்லோரும் பயந்து அதை அடித்து எறிந்து விடுகிறார்கள். "பாம்புதான் இறந்துவிட்டதே இனி என்ன” என்று நினைக்கின்றோம். அதை அடிக்கையில் அதன் தேகத்திலிருந்து ஒரு துளி விஷம் நாம் உட்கொள்ளும் எந்தப் பொருள் மீதிலாவது தெறித்திருக்கலாம். அதை எவரும் அறியாமல் அந்தப் பொருளைப் புசித்த வளவில் அடியோடு மோசம் வந்துவிடுகின்றது. அதற்காகத்தான், "பாம்பை அடித்தோமே அதன் விஷம் எங்கும் தெறிக்காமலிருந்ததா! அருகில் சாமான் எதுவும் இல்லையா! அதை அடித்தத் தடியை அலம்பி சுத்தம் செய்தோமா! அந்தக் கையோடு வேறு எதையேனும் தொட்டு விட்டோமா!" என்பது போன்ற விஷயங்களைத் தான் நாம் முக்கியமாகக் கண்டு பிடிக்க வேண்டும். அது போலவே கேசவனுக்கு விரோதிகள் இக் காரியத்தைச் செய்திருக்கலாம்; அதை ஆராய்ச்சி செய்யாமல் தீர்ப்பு செய்து விட்டால் அது எத்தனை மனிதர்களின் உயிரை வதைக்கும். எனக்குச் சிறிய விஷய மாயினும் சரியே, பெரிய விஷயமாயினும் சரியே, எல்லாம் சமத்வந் தான். நிரபராதிகளைத் தண்டிக்காமல் விடுதலை செய்யும் தொழில் என்னுடையது. அதையே இப்போதும் மேற்கொண்டுளேன். இதோ இந்த கடிதங்களைத் தாங்கள் தயவு செய்து படித்துப் பார்த்தால் நான் இந்த வழக்கில் சம்பந்தப்படுவது சரியா, தப்பிதமா என்பது தெரியும்" என்று கூறிக் கேசவனுக்கு வந்த கடிதத்தையும் பரிமளாவுக்கு வந்த கடிதங்களையும் அவரிடம் கொடுத்தார்.
ஒரு கடியாரத்தில் எல்லா சிறிய யந்திரங்களும் சரியாக வேலை செய்யினும். முக்கியமானது (Main spring) கெட்டுவிடில், கடியாரம் நின்று விடுகின்றது; ஆனால் சில குடும்பங்களில் குணங்களில் முக்கியமான அன்பு என்பது பரஸ் பாமாக இல்லா விடினும் சில சந்தர்ப்பங்களை உத்தேசித்து ஏதோ ஒருவாறு அக்குடும்ப காரியங்கள் கடை பெறுகின்றன.
அதிகாரி அவைகளைப் படித்துப் பார்த்தார். “நாயுடுகாரு! இதென்ன கடிதங்கள்! இதற்கும் திருட்டுக்கும் சம்பந்தம் எதுவும் இருப்பதாகத் தோன்றவில்லை. ஏதோ அந்தப் பெண்ணை மணஞ் செய்துகொள்ளும் விஷயத்தில் இது சிறிது சம்பந்தப் பட்டிருக்கின்றது. அதற்கு இவ்வழக்கு எப்படி சான்றாகும்?" என்றார்.
நாயுடு:-ஐயா! தாங்கள் எல்லாம் தெரிந்தவர்கள். தங்களுக்கு நான் தெரிவிப்பது சரியேயன்று: இந்தக் கடிதங்களைப் படித்த பிறகு, நடந்த விஷயங்களை ஒன்றுகூட்டி ஒத்திட்டுப் பாருங்கள். கேசவன் பரிமளாவை விவாகம் செய்துகொள்ளலாகாது என்பதைத் தடுக்கின்றது. பரிமளாவின் அன்பையும், மனோ பரிபக்குவத்தையும் கண்டு அவள் சாமான்யமாய்த் திரும்பமாட்டாள். கேசவனிடத் தில் ஒரு கசப்பை ஏற்படுத்தி மனத்தை முறியச் செய்துவிட்டால் அவள் தங்களை மணக்கலாம் என்கிற ஓர் யோசனையுடன் இந்த காரி யத்தைச் செய்திருக்கலாகாதா!
அதிகாரி.- நாயுடுகாரு! தாங்கள் சொல்வது ஒருபக்கம் சரி என்றாலும் நகைப்பு உண்டாகின்றது. இக்கடிதங்கள் வருவதும் இவைபற்றிய சம்பவங்கள் நடந்ததும் வேறு ஊர், இந்தவிடத்தில் நடந்த திருட்டுக்கும் அதற்கும் எவ்விதம் பிணைக்க முடியும்! இந்த ஊரும் வேறு; கல்யாண வீட்டாரும் அன்னியர்கள். சம்மந்தி வீட்டாரும் புதியவர்கள். இவர்கள்தான் அந்த விஷயத்தில் சம்மந்தப் பட்டவர்கள் என்பதை நீங்கள் எப்படி எதிர் பார்க்கலாம்?
நாயுடு-ஐயா! மன்னிக்கவேண்டும். நான் என் மனத்தில் தோன்றியதைச் சொன்னேன். இதுவிஷயத்தில் தாங்கள் எனக்குக் கொடுத்த தவணைக்குள் நான் என்னால் கூடியவரையில் தாங்கள் கேட்ட கேள்விகளுக்கு விடையணிக்கின்றேன்; தயவுசெய்து அந்த நகை மூட்டைகளிரண்டையும் எனக்குக் காட்டவேண்டும்" என்றார்.
கடன்காரர்களுக்குப் பதில் சொல்ல முடியாமலும், வெளியில் தலை காட்ட முடியாமலும் புருஷன் தத்தளிக்கையில் பெண்ஜாதி 40-50 ரூபாய் களைக் கொட்டி பட்டுப் புடவையில் மினுக்குவது, தனது புருஷனுக்கு ஏற்படும் கஷ்டத்தில் தனக்கும் சம பாகம் உண்டென்கிற எண்ண மிருப்பின் அவ்வாறு செய்வாளா?
உடனே அதிகாரி இரண்டு நகை மூட்டைகளையும் கொண்டு வந்து காட்டினார். நாயுடு நகைகளைக் கவனித்ததைவிடத் துணியையும், அத்துணியில் வண்ணான் சலவை செய்கையில் குத்தி இருக் கும் முத்திரையையும் நன்றாகக் கவனித்தார். அந்த துணி கைக் குட்டையினும் பெரிய அளவு உடையது. அதன் ஓரத்தில் பச்சை நூலினால் ஸ்ரீராமஜெயம்- என்ற எழுத்துக்கள் வேலை செய்யப்பட்டிருந்தன. இத்தகைய அடையாளங்களையும் மனத்தில் பதிய வைத்துக்கொண்டார். பிறகு "நான் சென்று வருகிறேன்" என்று அதிகாரியிடத்தில் உத்தரவு பெற்றுக்கொண்டு வெளியே இருவரும் சென்றார்கள்.
அவர்கள் எங்கே செல்வது என்பதை யறியாது சற்றுத் தியங்கினார்கள். ஒரு ஒட்டலில் சென்று தங்கள் போஜனத்தை முடித்துக்கொண்டு கேசவனுக்கும் இவர்களே போஜனம் கொண்டு அளித்தார்கள். ஒரு நிமிட நேரத்தையும் வீணாக்கக்கூடாதென்கிற நோக்கத்துடன் நாயுடுகாரு அந்த ஓட்டலிலேயே ஒரு அறையைச் சில தினங்களுக்கு அமர்த்திக்கொண்டார், பொன்னுசாமியை அவ் வறையில் இருக்கச் செய்துவிட்டு நாயுடு மட்டும் கல்யாணவீட்டிற்குச் சென்றார். அன்று கல்யாண வீட்டில் நாட்டியக் கச்சேரியாகையினால் திரள் திரளாக ஜனங்கள் கூடியிருந்தார்கள். நாயுடுதான் இன்னான் என்று ஒருவரும் தெரிந்துகொள்ளா வண்ணமாக மாறு வேடத்துடன், நாட்டியம் பார்க்கச் சென்றவர்போலப் போனார். அவர் மிக வும் ஏழ்மை நிலையில் உள்ள மனிதனாகக் காணப்பட்டார்: நாட்டியம் வெகு திறமையாக நடந்து கொண்டிருக்கிறது. அங்குள்ள சகலமான மனிதர்களையும் கவனிப்பதிலேயே நாயுடு கண்ணுங் கருத்து மாயிருந்தார். ஆண் பெண் அடங்கலும் வெகு அருமையான நாட்டி யத்தைக் கவனித்து மகிழ்ந்துகொண்டிருந்தார்கள். அந்த சத்திரம் வெகு பிரம்மாண்டமான தாகையினால் அதற்கு நான்கு பக்கங்களிலும் வாசற்படிகள் பங்களாவைப்போல அமைந்திருந்தன.
”நமது சமூகத்தில் ஸ்திரீகளுக்குச் சுதந்தர மில்லை அவர்கள் புருஷரின் அடிமைகளாக இருக்கிறார்கள்” என்று பழிப்பவர்கள் ஆராய்ந்து பார்த்தால், அநேக குடும்பங்களில் தமது சுய மதிப்பை இழந்து, தேக நலத்தையும் கருதாது, நாய் போல உழைத்துக் கிடைக்கும் வருமானத்தைப் பெண்ஜாதி யிடம் கொடுத்து விட்டுத் தாளம் போடும் புருஷர்களின் தொகையே அதிக மென்பதை அறிந்து கொள்வார்கள்.
சிறிது நேரங் கழித்து நாயுடு வெளியே வந்தார். கல்யாண வீட்டிற்கு இரண்டு வண்டிகள் விறகு வந்து, புறக்கடைப் பக்கமரக இறங்கியது. அதைப் பார்த்த நாயுடு சடக்கென்று தன் மேல் துணியைத் தலைக்குக் கட்டிக்கொண்டு வண்டியருகில் சென்று விறகுகளைக் கட்டுகட்டாகத் தோள்மீது தூக்கிக்கொண்டுபோய் சமையல் கட்டில் போடும் வேலையாட்களுடன் சமையல் கட்டிற்குள் நுழைந்து விட்டார். அங்கிருக்கும் மனிதர்களுக்கு விறகுதொட்டிக்காரன் அனுப்பிய ஆள்போல நடித்துவிட்டார். அங்கிருந்த சமையல்காரனை நோக்கி "ஐயா! பசிக்கின்றது; கல்யாண வீட்டில் பலகாரங்கள் ஒன்றுமில்லையா?" என்று வெகு தளுக்காகக் கேட்டார்.
இதுகேட்ட சமையல்காரன் உள்ளே இருந்து சில பலகாரங்களைக் கொடுத்துவிட்டு "எத்தனை ஜனங்கள் நாட்டியம் பார்க்கிறார்கள்! எங்கள் தலையெழுத்து அடுப்பங்கரையில் சாகவேண்டி இருக்கிறது. ஆகா! பாடல் என்ன அருமையாகக் காதில் விழுகின்றது!" என்றான்.
நாயுடு:-ஐயா! நீங்கள் சென்று நாட்டியம் பாருங்கள் : நான் இங்கு சமையலைக் கவனிக்கின்றேன். நானும் தவசுப்பிள்ளையாக இருந்து அடுப்பங்கரை உத்யோகத்தில் மெடல் பெற்றவன் தான். பிறகு அதை வெறுத்துவிட்டு இப்படித் திண்டாடுகிறேன். நான் கட்டைத்தொட்டி எஜமானனுக்குத் தெரிந்தவனாகையினால் அவர் என்னைக்கூட நமோதாக அனுப்பினார், நான் இங்கு பார்த்துக்கொள்கிறேன். நீங்கள் சற்று நேரம் நாட்டியம் பார்த்துவிட்டு வாருங்கள்; அடுப்பில் என்ன போட்டிருக்கிறீர்கள்?
ஒருவருடைய படிப்பிற்கும், பணத்திற்கும், செல்வாக்கிற்கும் மாத்திரம் கௌரவமும் மரியாதையும் ஏற்படுவதில்லை. எல்லாவற்றையும் விட முக்கிய மானது குணம் அதில்லாவிடில் யாவும் அழிந்து விடும். வேத பாராயணஞ் செய்தும் எவ்ளைவோ உயர்ந்த பதவி யிலிருந்தும் நற்குணம் இல்லாததனாலன்றோ ராவணன் அழிந்தான் என்பதைச் சிலர் கவனிப்பதில்லை,
சமையற்:- ஐயோ பாவம்! நாங்கள் பணத்தை வாங்கிக்கொள்வது; நீங்கள் சமையல் செய்வதா! வெகு அழகு. அடுப்பில் உருளைக் கிழங்கு வறுவல் ஆகின்றது. கத்தரிக்காய் சாம்பார் ஒரு அடுப்பில் கொதிக்கின்றது. ராத்திரி பலகாரம் பூரி, அல்வா போட வேண்டுமாம். பூரி செய்துவிட்டோம்; அல்வா செய்யவேண்டும். எங்க ளுக்கு ஏதய்யா சுகம்!
நாயுடு - ஐயா! மனித ஜென்மம் எடுத்த நாம் ஒருவருக்கொருவர் இந்த சில்லரை உதவிகூடச் செய்யாவிடில் என்ன உபயோகம்? எனக்குச் சம்பளமில்லையே என்று நீங்கள் யோசிக்கவேண்டாம். தினம் சாப்பாடு, பலகாரம் கிடைத்தால் போதும். நான் உங்களுக்கு உதவி செய்கின்றேன். என்னை யார் என்று வீட்டுக்காரர்கள் கேட் டால் “என் உறவினள் ஊரிலிருந்து வந்திருக்கிறான்: ஒத்தாசைக்கு அழைத்துக் கொண்டுவந்தேன்" என்று கூறிவிடுங்கள். இதனால் எனக்குச் சிரமமில்லை" என்று பின்னும் ஏதேதோ வெகு தந்திரமாகப் பேசி அவர்களை இணங்கச்செய்துவிட்டார்.
பிறகு அவர்கள் சம்மதித்து அவரிடம் கரண்டியைக் கொடுத்தார்கள். நாயுடு வெகு சுருசுருப்பாக வறுவலை வறுக்கவாரம்பித்தார். அல்வா செய்வதற்கும் அடுப்பில் தயார் செய்யத் தொடங்கினார். மற்ற சமையல்காரர்கள் சற்று வெளியில் சென்று நாட்டியம் பார்ப்பதும், உள்ளே வந்து சமையலைக் கவனிப்பதுமாக இப்படியே செய்யலானார்கள். நாயுடு விதியே என்று தன்னைப் பிறர் சந்தேகிக்காதபடி சமையலை வெகு மும்முரமாகச் செய்தார்.
தற்காலத்தில் நாகரிக மென்றால், நிமிடத்திற்கு நிமிடம் உடைகளை மாற்றி வேஷம் போட்டுக் கொண்டு வெளிப்பகட்டாக நடமாடுவதும், உள்ளொன்றும் புறமொன்றும் பேசுவதும் தான் என்று சிலர் கருது கின்றார்கள். நிரந்தரமான நாகரிகம் யாதெனில் சத்திய நெறி வழுவாது, எளியோரிடத்தில் அன்பு செலுத்தி, எல்லாம் வல்ல இறைவனைத் தொழுது, திரிகரண சுத்தியாகநடப்பதுதான்.
அன்று சுச்சேரி முடிந்தது. பிறகு போஜனமும் முடிந்தது. ஒவ்வொருவரும் தாம்பூலம் போட்டுக்கொள்ளும் சமயத்தில்மட்டும் நாயுடு அவர்களறியாதவாறு மறைந்து கவனித்து வந்தார். சிலர் வெற்றிலையைத் தமது வேட்டியிலேயே துடைத்துக் கொண்டார்கள்; சிலர் சவுக்கத்தில் துடைத்தார்கள். சிலர் கைக்குட்டையால் துடைத்தார்கள். இதைக் கவனிப்பதற்கே அவர் மறைந்திருந்தார். சற்று நேரம் கவனித்துப் பின்னர் தன் வேலைக்குச் சென்று விட்டார்.
அந்த விவாகம் மிகவும் பெரிய மனிதர் வீட்டி தாகையினால் இரவில் எல்லோருக்கும் பால் வழங்கப்பட்டது. அந்த வேலையில் நாயுடுவும் பங்கெடுத்துக் கொண்டார். அவர் மெத்தையில் உள்ளவர்களுக்குப் பால் கொண்டுபோகையில் வராண்டாவின் ஒரு பாகத்தில் இருவர் தனிமையில் பேசிக்கொண்டிருப்பதைக் கண்டார். அன்று கல்யாண வீட்டில் பேசியது முற்றும் முதல்நாள் திருட்டு நடந்த விஷயமாகவே இருந்தது. "இன்னும் என்ன நடக்குமோ!” என்று பெண்களெல்லாம் பயந்து நடுங்கியே பேசிக்கொண்டார்கள். நாயுடு அவ்விருவர் மட்டும் தனித்துப் பேசுவதால் சற்று சந்தேகங்கொண்டு அவர்களுக்குப் பாலை எடுத்துக்கொண்டு அவர்களின் பின்புறத்தில் மெதுவாகச் சென்றார்.
அச்சமயம் அவர்களில் ஒருவர் "என்ன செய்வது? காரியம் வெகு விபரீதமாகி விட்டதே! என் மனைவி திட்டமாகக் கூறுகின்றாள். நான் எப்படி அதை வெளியிடுவேன்?" என்று பேசிக்கொண்டே திரும்புகையில், நாயுடுவைப் பார்த்துவிட்டார். அவர்களுக்குப் பாலைக் கொடுத்துவிட்டு நாயுடு, பாத்திரங்களைப் பெற்றுக்கொண்டு அவர்கள் யார் என்பதை நன்றாகக் கவனித்துக் கொண்டு திரும்பிவிட்டார். அவர்கள் எந்த இடத்தில் படுத்துக்கொள்கிறார்கள் என்பதையே நாயுடு வெகு சூக்ஷ்மமாகக் கவனித்துக் கொண்டார்.
ஒரு ஆயிரம் ரூபாய் நஷ்டம் திடீரென்று ஏற்படின் 'இன்னும் அதிக நஷ்டம் ஏற்படுவதற்கு முன்னர் விழித்துக் கொண்டோமே;" என்று மனத்தைச் சாந்தி செய்து கொண்டு அதற்கப்புறமாது முன்ஜாக்கிரதையாக நடந்து கொள்வதுதான் உத்தமம், கைதவறின பண்டத்தைக் குறித்துக் கவலை கொள்வதில் பயனென்ன?.
மணி 11 ஆயிற்று. எல்லோரும் படுத்துக்கொண்டார்கள்; பிறகு நாயுடு சமையல் கட்டிற்கும் வீதிக்கும் அலைவதுபோல் நன்றாக மனிதர்களைக் கவனித்துக் கொண்டார். முதல் நாள் திருட்டு நடந்த கலபையினாலுண்டான பயத்தினால் ஒருவருக்கும் நித்திரையே கொள்ளாது எல்லோரும் பேசிக்கொண்டே இருந்தார்கள். மெத்தையில் தனிமையாகப் பேசிக்கொண்ட ஆசாமிகள் மட்டும் படுக்கையில் படுப்பதாகப் படுத்துவிட்டு உடனே எழுந்து போய்விட்டார்கள். அவ்வளவு ஜாக்ரதையாகக் கவனித்தும் அவர்கள் எங்கே போனார்கள் என்பதை யறியா நாயுடு ஏமாந்து விட்டார்:
அவர்களைக் காணாமல் போனதும் நாயுடு "ஐயோ! ஏமாந்து விட்டோமே!" என்று ஏக்கங்கொண்டு அவர்கள் படுத்த அறைக்குச் சென்று பார்த்தார். அவர்களுடைய படுக்கை போட்டபடியே இருந்தது. அவர்களுடைய பெட்டி ஒன்று இருந்தது. நாயுடு அதன் மீது நோக்கங் கொண்டு மெல்ல அவ்வறையில் புகுந்து உள்புறம் தாளிட் டுக்கொண்டு அப் பெட்டியை மாறு சாவியினால் திறந்து பார்த்தார்; அந்த மனிதர்களில் ஒருவர் இஞ்சினீயர் என்பது அதிலிருந்த சில கடி தங்களினால் தெரிந்து கொண்டார்: அதில் மற்றபடி எந்த சந்தேகாஸ்பதமான விஷயமும் கிடைக்கவில்லை. பொன்னுசாமி நாடகக் கம்பெனியின் பாஸ் ஒன்று மட்டும் பொன்னுசாமியின் கையெழுத்துடன் இருந்தது, இந்த பாஸ் இங்கு இருப்பதால் அவருக்கு வேண் டியவர்களாகவோ அன்றி வேறு ஏதேனும் சம்மந்தப் பட்டவர்களாகவோ இருக்கவேண்டும் என்பது மட்டும் தெரிந்துகொண்டு அந்த பாஸை மட்டும் எடுத்துக்கொண்டு வெளியே வந்துவிட்டார்.
ஒரு வருஷ முழுதும் மிகவும் கஷ்டப்பட்டு வாசித்துப் பள்ளியில் நல்ல பெயரெடுத்தாலும் பரீக்ஷை யன்று எதிற் பாராத தேக அசெனக்கிய மேற்பட்டு விடின் ஒரு வருஷத்துப் படிப்பும் ஒரே வேளையில், வருஷாத்திரப் பயிர் வெள்ளத்தில் அடித்துக் கொண்டு போவதுபோலப் போய்விடுகின்றது
பிறகு வீட்டை விட்டு வெளியே சென்று அந்த தவசுப்பிள்ளையின் கோலத்தை மாற்றிக் கொண்டு நேரே ஒட்டலுக்கு வந்தார். ஒட் டலில் பொன்னுசாமி நித்திரையே கொள்ளாமல் "நாயுடு எங்கே சென்றாரோ இன்னும் வரவில்லையே!" என்ற யோசனையோடு மிக்க விசனத்தை யடைந்து அவரது வரவை எதிர் பார்த்திருந்தார். அப்போது நாயுடு வந்ததைக் கண்டு பொன்னுசாமி "விஷயமென்ன?" வென்று விசாரித்தார்.
நாயுடு நடந்த சகலமான வரலாற்றையும் கூறி அவர் எடுத்து வந்த பாஸைக் காண்பித்தார், பொன்னுசாமி அந்த பாஸைக் கண்டு ஆச்சரியமடைந்து "ஆகா! இது நாகலிங்கத்துக்கு நான் கொடுத்த பாஸாயிற்றே! அவர் மகா உத்தமர். எஞ்சினீயர் வேலையில் இருப்பவர். அவர்தான் கேசவன் நம்முடைய கம்பெனியில் சேருவதற்கு முன்பு காப்பாற்றியவர். அவனைத் தமது வீட்டில் வேலைக்கு வைத் துக்கொண்டு ஆதரித்தவர். கேசவனிடத்தில் மிக்க அன்புடையவர். அவனுடைய பாடலையும், நடிகத் திறமையையும் கண்டு மெத்த சந் தோஷமடைந்து பல தரம் பரிசுகள் கொடுத்திருக்கிறார். அவருடைய அபிமானத்திற்காக ஓர் பாஸ் கொடுத்தேன்: அவர் இந்த விஷயத்தில் சம்மந்தப்பட்டவர் என்று நீங்கள் சந்தேகிப்பது சரியா?" என்றார்.
.
நாயுடு:-நான் சந்தேகிக்கக் காரணம் இருக்கின்றது. நன்மையிலோ தீமையிலோ இவருடைய சம்பந்தம் இருக்கின்றது. அதாவது, நேற்று போலீஸ் அதிகாரி காட்டிய நகைகள் கட்டின கைக் குட்டையைப் பார்த்தீர்களே நினைவிருக்கிறதா! அந்தக் குட்டையில் வரிசைக் கிரமமான நம்பரை நெசவுக்காரனே போட்டிருக்க வேண்டும். ஏனெனில் இரண்டு கைக்குட்டைகளிலும் ஒன்றில் 10 ஒன்றில் 8 என்று இருந்தது, பிறகு அங்கு பெண்கள் கூட்டத்தில் ஒரு அம்மா தன் முகத்தைத் துடைத்துக் கொண்டார்கள். அந்தக் குட்டையில் நம்பர் 7 இருந்தது. அதேமாதிரி அச்சு, அதேமாதிரி பெயர் போட்டது. அதைக் கண்ட மற்றொரு பெண்பிள்ளை "இந்த கைக்குட்டை வெகு அழகாக இருக்கிறதே! இது எங்கே வாங்கினாய்?" என்று கேட்டாள். அதற்கு அந்த அம்மாள், "போதும் வெட்கக்கேடு, நான் எந்த கல்யாணத்திற்குச் சென்றாலும் ஒரு டஜன் கைக்குட்டை வாங்கிக்கொண்டுதான் வருவேன். அதேபோல இந்த விவாகத்திற்கும் வருகையில் இதே மாதிரியாக ஒரு டஜன் கைக் குட்டைகள் ஒரே சதுரமாக நெசவு செய்தது கடையில் பார்த்து மிக்க ஆவலோடு வாங்கிக்கொண்டு வந்தேன். நேற்று கல்யாண தடபுடலில் இரண்டு குட்டைகள் எப்படியோ கெட்டுப் போய்விட்டன. என் எஜமானர் ஒன்று வைத்துக் கொண்டிருக்கிறார். இன்னும் மற்றவை என் பெட்டியில் இருக்கின்றன" என்றார்கள்.
அதே மாதிரி கைக்குட்டையினால் தாம்பூலத்தை இந்த பாஸின் சொந்தக்காரர் துடைத்தார். பிறகு அவர் பேசியதும் ஒரு விதமாக இருந்தது. அதனால்தான் நான் சந்தேகிக்கின்றேன். இந்தக் கைக்குட்டைகளினால் அந்த நகைகளை முடிவானேன்? மேலும் திருடவேண்டு மென்று வந்த கள்ளனாயின் ஒரு நகைகளும் விடாது இந்தக் கைக் குட்டையில் மூட்டை கட்டி இவன் படுத்திருக்கும் இடம் தேடியலைந்து வந்து அங்கு வைப்பானேன். இது எனக்குச் சந்தேகமாகவே இருக்கிறது. மேலும் அவ்விருவரும் அங்கு படுக்கையில் காண வில்லையே! எங்கே எழுந்து சென்றிருப்பார்கள்....எதற்கும் நாளைய தினம் இந்த சந்தேகங்களை நிவர்த்தி செய்துகொள்கிறேன்" என்றார்.
ஒரு சிறிய நெருப்புதானே என்று அலக்ஷ்யமாக விட்டு விட்டால் அது ஒரு பெரிய நதியின் வெள்ளத்தினாலும் அணைக்க முடியாதபடிப் பரவி விடுவது போல ஒரு பொய்யான அவதூறுச் சொல்லை முதலிலேயே தடுக்கா விடின் அது ஊர் முழுதும் பரவி உண்மை வெளியாகும் போது கூட சீக்கிரத்தில் மறைவதில்லை.
அன்று மறுநாளும் சமையல்காரனாகவே நடித்து,இரவு மிகுந்த சாப்பாடுகளை எல்லாம் வேலைக்காரர்களுக்குப் போடுகையில் நகை மூட்டையைக் கொடுத்த வேலைக்காரி யாரென்பதை விசாரித்தறிந்து கொண்டு அவளுக்குச் சாப்பாடு போடுகையில், அவளோடு ஏதோ பேச்சுக் கொடுத்துக் கொண்டே இருந்தார் நாயுடு. அவன் நோம்பிக் கொண்டிருக்கையில் அவனருகிலேயே நின்று வேடிக்கையாக "ஆகா! அந்த நகை மூட்டையை நீயாயிருக்கவே கொடுத்து விட்டாய். இன்னொரு திருட்டு முண்டையா யிருப்பின் அதைக் கொடுப்பாளா ! நீ நல்லவள். உன் கையில் எப்படித்தான் அம் மூட்டை யைத் தைரியமாய்க் கொடுத்தான் பாரேன்! ஆச்சரிய மாயிருக்கின்றது" என்றார்.
சிலர் விநியோக சமயத்திற்குக் கோயிலுக்குப் போலது போல, சிலர் கலியாண வீடுகளுக்கு தேங்காய், தக்ஷிணை கொடுக்கும் போது போகிறார்கள். இரண்டு கோஷ்டியினரும் தங்களுக்கு வேண்டியதைத் தண்டிக் கொள்ளச் செல்கிறார்களே தவிர வேறொரு விதப் பற்றும் அவர்களுக்கு இல்லை.
அது கேட்ட கிழவி "திருட்டுக் கழுதைகளுக்குப் பயம் வேறு இருக்கிறதா?" என்றாள்.
நாயுடு:-ஆயா! அந்த மனிதனை நீ இதற்குமுன் பார்த்திருக்கிறாயா! அவனை உனக்குத் தெரியுமா!
கிழவி:- நான் என்ன சொல்வேன்! எனக்கு நல்ல தூக்கம். இந்த மூட்டை நகையா அன்றி பக்ஷணமா என்று எனக்குச் சத்யமாகத் தெரியாது. தோட்டக்காரன் எப்போதேனும் மூட்டை ஏதேனும் கொடுப்பான். அதுதான் என்று நினைத்தேன். என் கையில் கொடுத்தது தோட்டக்காரன் தான் என்று எண்ணி வழக்கம் போல வாங்கிக் கொண்டேன். இந்த திருட்டு கலபை ஏற்பட்ட பிறகுதான் எனக்கு விஷயம் தெரிந்தது. அந்த திருடன் இப்படிச் செய்தானே என்று நான் மிக்க ஆச்சரியப்பட்டுவிட்டேன்.
நாயுடு:- ஆயா! கோபித்துக் கொள்ளாதே. நான் என் காதில் பட்டதைச் சொல்கிறேன். நேற்று இரண்டு போலீஸ்காரர்கள் பேசிக் கொண்டார்கள். அதாவது,- அந்தக் கிழவியேதான் நகையைத் திருடிவிட்டு இரண்டு மூட்டைகளாகக் கட்டித் தான் ஒன்று அமுக்கி விடலாம்; மற்றொன்றினால் இன்னொருவன் அகப்பட்டுக் கொள்ளட்டும் என்று செய்து விட்டாள். பிறகு வீட்டுக்காரர்களுக்கோ, யாருக்கோ தன் மீது சந்தேகம் உண்டாகி விட்டதை யறிந்த கிழவி தான் சாது போல தப்பித்துக் கொள்ளும்பொருட்டு இரண்டு மூட்டைகளையும் அவன் தலைமீது போட்டு விட்டாள். அந்தக் கிழவி தான் திருடினவள். அந்த வீட்டில் துணி துவைப்பதும் கிழவி தான். அந்த கல்யாணத்திற்கு வந்திருக்கும் ஒரு பெரிய எஞ்சினீயர் ‘தன் பெண்டாட்டியினுடைய கைக்குட்டைகள் இரண்டு காணப்படவில்லை என்று போலீஸில் எழுதி வைத்திருக்கின்றார்களாம். அதை அந்தக் கிழவிதான் துணி துவைக்கும் போது திருடிக் கொண்டாள். அந்த கைக் குட்டையிலேயே அந்த நகைகளைக் கட்டி இருப்பதால் திருடினவள் கிழவிதான் என்பது வியக்தமாகின்றது. அவளை இன்று கைது செய்து விட வேண்டும்." என்று பேசிக் கொண்டார்கள், ஐயோ;பாவம்!'' என்று நாயுடு மேலே சொல்வதற்குள், கிழவியின் முகம் பிணம் போலாய்விட்டது. "ஐயோ! சாமி! கடவுளே! அடே படு பாவி!" என்று கத்த வாரம்பித்தாள்.
வயது அதிகமாக ஆக சபல புத்தியை ஒழித்து, மனத்தைப் பரிசுத்தப் படுத்திப் பகவானைத் துதிப்போமென்கிற எண்ண மில்லாமல் சிலர் ''யௌவனம் திரும்பாதா" என்று ஏங்கி மனத்தைத் தீய வழியிலேயே செலுத்திப் பாப மூட்டையைப் பெரிதாக்கிக் கொள்கிறார்கள்.
இதைக் கண்ட நாயுடு, "ஏ ஆயா! என்ன இப்படி கத்து கிறாயே! இது கல்யாண வீடல்லவா.... அதோ வீதியில் போலீஸ்காரன் வந்திருப்பதாகத் தெரிகின்றது. ஆகையினால் நீ இங்கு சத்தம் செய்யாதே. புறக்கடைத் தோட்டத்திற்கு வா" என்று அவளுக்குச் சரியானபடி பயத்தைக் காட்டி அவளை இழுத்துக் கொண்டு தோட்டத்திற்கு ஓடினார். கிழவிக்கு நடக்கக் கூட மாட்டாமல் கால்கள் தத்தளிக்கின்றன. "ஆயா! நீ தள்ளாத வயதில் ஏன் இப்படிப்பட்ட வேலையைச் செய்தாய்?" என்றார்.
கிழவி:- ஐயோ விதியே! அனியாயமே! நான் என் கைலவச்சி பத்து வெரலாலே எதையும் திருடினவள் அல்ல. எனக்கு அந்த எண்ணமே இல்லை. ஐயோ! இப்படி எல்லாம் இவ்வளவு தூரத்திற்கு வருமுண்ணு நான் பார்க்கவில்லையே. என் விதியேண்ணு நான் இருந்தேன்; ஒரு கம்மனாட்டி வந்தான். அவன் எனக்கு முன்னே பின்னே தெரியாது. என் மகள் “என் புருஷன் அடிக்கிறான், இம்சை செய்கிறான். 50 ரூபாய் கொண்டு வந்து கொடுத்தல்தான் உன்னை வைத்துக் கொள்வேன்; இல்லா விட்டால் ஆத்தா வீட்டிற்குப் போ!" என்று வைகிறான்" என்று என்னிடம் சொல்லி யழுதாள்.
அதை அந்தப் பாவிமகன் பார்த்திருந்தான். அவன் "உன் கையில் 50 ரூபாய் கொடுக்கிறேன்; நான் கொடுக்கும். ஒரு மூட்டையை, நான் எவனைத் திருடனென்று சொல்கிறோனோ, அவன்தான் என்னிடம் கொடுத்ததாயும், தூக்கக் கலக்கத்தில் பக்ஷண மூட்டை தோட்டக்காரன் கொடுத்தான் என்று நினைத்து வாங்கியதாயும் சொல்லி விடு. "அவன் ஏற்கெனவே திருடன். அவ னைப் போலீஸார் பிடிப்பதற்கு இது தான் வழி. அவனை வெறுமனே விட்டு விட்டால் இன்னும் திருட்டு விபரீதமாகும். அந்தத் திருட னைப் பிடித்துக்கொடுப்போருக்கு 500 ரூபாய் இனாம் கொடுப்பதாகப் போலீஸார் சொல்லி இருக்கிறார்கள். ஆகையினால் அதில் ஒரு நூறு ரூபாய் உனக்குத் தருகிறேன். இதில் எந்த விதத்திலும் நீ அகப்பட் டுக் கொள்ள மாட்டாய்; நான் பார்த்துக்கொள்கிறேன். நான்தான் இப்படிச் சொன்னதாக நீ ஒருவரிடமும் சொல்லாதே" என்று கூறினான். 'திருடனைப் பிடிப்பதற்குத்தானே' என்று நான் ஒப்புக் கொண்டேன். ஐயோ! நான் என்ன செய்வேன்? போலீஸ்காரனா வந்து விட்டான்!" என்று கிழவி பெரிய ஒப்பாரி வைத்து அழ வாரம்பித்து விட்டாள்.
''உறவினரை விடச் சிநேகிதர்களுக்குத் தான் உதவுவதோ" என்று பழிக்கின்றார்கள் சிலர். அவர்கள் நடந்து கொள்ளும் மாதிரியினால் தான் உதவி புரிய மற்றவர்களுக்கு எண்ண முண்டாகுமேயன்றி உறவு அல்லது சிநேகித முறைக்காக மட்டுமல்ல வென்பதை அவர்கள் அறிவதில்லை.
நாயுடுவுக்கோ, சந்தோஷம் பொங்குகின்றது. அவர் கிழவிக் குச் சமாதானம் செய்தவாறு "ஆயா! நீ பயப்படாதே. நான் உன்னை என் தாயார் போலப் பாவிக்கின்றேன். ஆகையினால் உன்னை நான் காப்பாற்றுகிறேன். நீ எந்த சமயத்திலும் நான் சொல்வதுபோலக் கேட்க வேண்டும் அதாவது உனக்கு ரூபாய் கொடுத்த அந்த மனிதனை நீ அழைத்துக் கொண்டு பகல் 2 மணிக்கு உன் வீட்டிற்குச் சென்று அவனோடு "எனக்கு நூறு ரூபாய் போதாது, இன்னும் வேண்டும்" என்று கேட்டுக் கொண்டே இரு. அப்போது இரண்டு போலீஸ்காரர்களுடன் நானும் வருகிறேன்; நீ சற்றும் பயப்படா மல், அவர்களைக் கண்டு பயந்தவள் போல நடித்து "ஐயா! நான் ஒரு பாபமும் அறியேன்; இவர் நூறு ரூபாய் கொடுத்தது போதாது என்றுதான் கேட்டேன்; வேறு ஒன்றுமில்லை." என்று கூறி, நடந்த சகலத்தையும் சொல்லி விடு. உன்னை விட்டு விட்டு அந்த மனிதனைப் பிடித்துக் கொண்டு போய் விடுவார்கள்; நீ அப்படிச் செய்யாவிட்டால் உன்னையே பிடித்து விடுவார்கள். ஜாக்கிரதை. இதை வெளியிட்டாலும் உன்னைப் பிடித்து விடுவார்கள்" என்று நன்றாகக் கடுக்காய் கொடுத்து விட்டார்.
ஸினிமா, டிராமா முதலியவற்றிற்கு முதல் நாளே போவதை விடச் சில நாட்கள் கழித்துப் பொது ஜன அபிப்பிராயத்தைக் தெரிந்து கொண்ட பிறகு போவதே உசிதமானது. ஏனெனில் இக் காலத்தில் மிகவும் கேவலமானவற்றைப் படாடோபமான விளம்பரங்களினால் பிரசித்தி பெறச் செய்கிறார்கள் சிலர்.
தன் வேலை முடிந்து விட்டதால் அவர் நேரே பொன்னுசாமியினிடம் வந்தார். அப்போது நாயுடு எதிர்பாராவிதமாய் அங்கு எஞ்சினீயர் வந்து, பொன்னுசாமியினிடம் பேசிக்கொண்டிருப்பதைக் கண்டு வியப்புற்று அமர்ந்தார். நாயுடுவைப் பார்த்த பொன்னுசாமி "நாயுடுகாரு! உங்களைத்தான் நாள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். இவர் என்னுடைய சினேகிதர். நான் இங்கு வந்திருப்பதறிந்துவிசாரிக்க வந்தாராம். அதோடு இவர் கேசவனிடத்தில் மிக்க பற்றுடையவர். கேசவனுக்கு வந்துற்ற ஆபத்தை அன்று நேரில் கண்ணால் கண்டனராம்; அவர் வேறு என்ன செய்யக் கூடும். போலீ ஸாரிடத்தில் ரகஸியமாக ‘அவன் மகா;யோக்யன். என்னிடத்தில் வேலைக்கு இருந்தான். அவனைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும்" என்று எத்தனையோவிதம் எடுத்துக் கூறினாராம். அதற்குப் போலீஸார் “முன்னர் யோக்கியனாய், உத்தமனாய் இருந் திருக்கலாம்; இன்று நடந்த விஷயத்திற்காகவன்றோ நாங்கள் கைது செய்தோம்; ஆகையினால் விட முடியாது” என்று கூறி விட்டார்களாம். அவரும் உங்கள் வருகைக்குத்தான் எதிர் பார்த்திருக்கிறார்; என்ன விஷயம்! ஏதேனும் அனுகூலமாயிற்றா!" என்றார்.
"சிலர் முகத்தில் விழித்தாலும், அன்றி புறப்படுகையில் அவர்கள் எதிரில் வந்தாலும் அன்றைய காரியங்கள் யாவும் பாழ்தான்" என்பது வெறும் மூடக் கொள்கை யல்ல." என்பது ஒரு பட்டறிந்த அநுபவ சாலியின் அபிப்பிராயம்.
நாயுடு வெகு சந்தோஷமடைந்து, எஞ்சினீயரின் கைகளைக் குலுக்கி வந்தனம் செய்து விட்டு, "ஐயா! நான் தங்கள் விஷயத்தில் செய்த காரியத்தை நானே கூறி மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்; இந்த வழக்கு ஒருவாறு முடிந்து விட்டது. குற்றவாளி பிடிபட்டு விட்டான்" என்று கூறும்போதே எஞ்சினீயர் "என்ன! என்ன! குற்றவாளி பிடிபட்டானா! உண்மையாகவா! உண்மையாகவா! நிரபராதி யான கேசவன் தப்பினானா! ஆ! கடவுளின் கிருபையே கிருபை" என்று பூரித்தார். நாயுடுகாரு! நீங்கள் குற்றவாளியைக் கண்டு பிடித்து விடுவீர்களென்று எனக்கு நம்பிக்கையுண்டு. தாங்கள் குற்றவாளி யார் என்று பகிரங்கமாகக் கூறுவதற்கு முன்பு நானும் அதுவிஷயமாகக் குற்றவாளி இன்னானென்று கூறுகிறேன். இவ்விஷயத்தை உங்களிடம் தெரிவிக்கவே நான் வந்தேன். நான் கண்டுபிடித்த குற்றவாளியும், நீங்கள் பிடித்தவனும் ஒரே ஆசாமியா என்பதைப் பார்க்கவேண்டும். என்னுடைய பந்துவின் வீட்டு விவாகத்திற்கு நாங்கள் வந்தோம். நகைகள் களவாடப்பட்டுக் கண்விழித்தபோது என் மனைவி திருடனை நன்றாகப் பார்த்துவிட்டாளாம், அவனை இன்னாரென்றும் தெரிந்துகொண்டாளாம், அவளுக்குக் குலை நடுக்கம் எடுத்துக் கொண்டதாம். அதாவது- அந்த திருடன் என் தந்தையின் இளைய மனைவியின் புதல்வன். எனது தம்பி என்று சொல்வதற்கும் வெட்கமாக இருக்கின்றது. அந்தப் பையன் தாயாரின் உபதேசத்தினால் எங்களுடன் பகைத்துக்கொண்டான். எங்களுக்கும் அவர்களுக்கும் பேச்சு வார்த்தையே கிடையாது. அவன் தத்தாரியாயும் சோதா வாயும் திரிகின்றான். அந்த சனியனும் விவாகத்திற்கு வந்தது.
ஒரு மணி நேரத்தை மூடர்களோடு கூட கழிக்க வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டு விடின் "என்ன மணி இன்னும் கழிய வில்லையே" என்று ஏங்கிப் பிறகு மிகவும் சந்தோஷமான மனத்துடன் அவர்களைப் பிரிகிறோம், ஆனால் அதே நேரத்தைப் படித்த அறிஞர்களிடம் செலவிடில் "இதற்குள் ஒரு மணி நேரம் பறந்து விட்டதே"! 'என்று கலங்கி அவர்களைப் பிரிய மனமில்லாது வருந்த கேரிடுகின்றது.
இவன் இக்காரியம் செய்வதைப் பார்த்து நடுங்கிய என் மனைவி உடனே என்னை எழுப்பி என்னிடம் விஷயத்தைக் கூறினாள். நான் எப்படி இதை வெளியிடுவதென்று யோசிக்கையில் கேசவனைக் குற்றவாளி என்று கண்டுபிடித்து அழைத்துச் சென்றுவிட்டார்கள்: பிறகு இதுவிஷயமாக நான் என் நண்பரிடம் யோசித்ததில் அவர் "இதை நாயுடுவினிடமே தெரிவித்து. அவரே துப்பறிந்து கண்டு பிடித்ததாகக் காரியம் நடக்கட்டும்; குற்றமற்ற கேசவன் விடுதலை யாகட்டும்" என்று கூறினார். இதுதான் விஷயம்" என்றார்.
அவர் அவ்வாறான விஷயங்களைக் கூறப்போகிறார் என்று கனவிலும் கருதவில்லை- யாகையினால், நாயுடு மெத்த சந்தோஷித்தார். "ஐயா! நான் தங்கள் விஷயத்தில் சந்தேகித்தது ஒருவாறு அனு கூலமாகவே முடிந்தது" என்று தான் சமையல்காரனாகச் சென்றது முதல் இதுவரையில் நடக்கு சகலமான விஷயங்களையும் கூறி "தங்கள் பெட்டியைத் திறந்து பாஸ் எடுத்ததற்காக மன்னிக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.
இதைக் கேட்ட எஞ்சினீயர் "என்ன! என்ன! தாங்களா நேற்று எனக்குப் பால் கொடுத்தது! சாப்பாடு பரிமாறியது! என்ன ஆச்சரியம்! உங்கள் தொழில் முறையில் நீங்கள் செய்தது குற்றமென்ன! இத்தகைய குட்டையை அடையாளங் கண்டுகொண்டு இந்த விஷயத்தைக் கண்டுபிடித்ததுதான் வியப்பு! தங்களைப்போன்ற பெரிய உத்யோகஸ்தர்களுக்கு இந்த வழக்கு ஒரு பிரமாதமா! ஐயா! எப்படியாவது கேசவன் விடுதலையடையப் பெற்றால் போதும் என்று நான் இரவுபகலாக எங்கினேன்: இந்த இரண்டு நாட்களாக எனக்குத் தூக்கமே பிடிக்கவில்லை. சரி; இவ்விஷயத்தைப் போலீஸாரிடம் தெரிவித்து அவர்களையும் உடன் அழைத்துச்சென்று அந்த ஆசாமியைப் பிடித்துவிடுங்கள். நான் ஊருக்குப் போய்விடுகிறேன். எனக்குச் செய்தி பத்திரிகையில் தெரிந்ததாகவே நடிக்கின்றேன். நான் கேசவனைப் பார்த்துவிட்டுப்போகப் பிரியப்படு கின்றேன்" என்றார்.
ஒருவரிடத்து உண்மையான அன்பு ஏற்பட்டுவிடின் அவர்களுக்கு இஷ்டமான பொருளைக் கொடுப்பதற்காகக் கடும் வெயிலையும், கொடும் மழையையும், தெடுந் தூரத்தையும் கவனிக்க மனம் இடந்தருவதில்லை. ஆனால் மனப் பற்று இல்லா விடில் பக்கத்திலுள்ளதை எடுக்கவும் கை நாடுவதில்லை.
உடனே நாயுடு கேசவன் இருக்கும் இடத்திற்கு எஞ்சினீயரை அழைத்துச் சென்றார், கேசவன் தன்னுயிரே தன் உடலில் இல்லா தவன்போலத் தத்தளித்தவாறு கடவுளை நோக்கி,
1. எனக்கெனச் செயல்வேறிலை யாவுமிங் கொருநின்
றனக்கெனத் தகுமுடல் பொரு ளாவியுக் தந்தேன்.
மனத்தகத்துள வழுக்கெலா மாற்றி யெம்பிரானீ
நினைத்த தெப்படி யப்படியகுளுத னீதம்.
2. பாராயோ வென்று யாமெல்லா மையா
பகருமுன்னே தெரியாதோ பாவி யேன்முன்.
வாராயோ வின்ன மொருகால மானாலும்
மலர்க் காலேன் சென்னிமிசை வைத்திடாயே! -தாயுமானார்.
என்ற பாடல்களைப் பாடித் துதித்துக்கொண்டே கண்ணீரைக் கானாறாய் ஓடவிட்ட வண்ணம் இருக்கிறான். பரிமளாவின் உருவம் அவன் அகக்கண்ணிற்குத் தோன்றி "எதற்கும் பயப்படவேண்டாம்; அஞ்சவேண்டாம்'' என்று தைரியம் கூறுவது போன்றிருந்ததினால் சற்று ஆறுதலையடைகிறான். இந்த சமயத்தில் நாயுடு முதலியவர்கள் அங்கு போய்ச் சேர்ந்தார்கள். அவர்களைக்கண்டதும் கேசவன் "என் அன்பர்களே! ஏதேனும் வழி பிறந்ததா ! ஹா ! என்னை ஆதரித்த
ஹ! எஞ்சினீயரல்லவா! வாருங்கள்; என்னுடைO நிலைமையைப் பாருங்கள். அதோகதியாகிவிடக் காலம் வந்துவிட்டது. என் சரிதை எல்லாம் தாங்களறிந்திருப்- பீர்களன்றோ! ஒரு பாபமும் அறியாத என்னை இக்கதிக்கு ஆளாக்கவேண்டுமென்று எந்தச் சண்டாளன் கறம் வைத்திருந்தானோ!" என்று புலம்பினான்.
"என்று நமக்கு விடுமுறை கிடைக்கும்; அன்று படிப்புக்கும் விடுமுறை யளித்துவிட்டு வீட்டில் தண்ட போது போக்கித் துவம்சம் செய்யலாம்" என்று கோருவர் சிறுவர்கள். ஆனால் பெரிவர்களோ இந்த உபத்திரவ மில்லா மலரிப்பதற்காகவாவது விடுமுறை விடாமலிருக்க மாட்டார்களா?" என்று வேண்டுவர்.
எஞ்சி:-கேசவா! உன்னுடைய காலவித்யாசத்தினால் ஏதோ ஒரு விதமான பழி சார்ந்தது எனினும் மகா பெரும் புவியாகிய நாயுடு இருக்கையில் உனக்கு ஒரு வித குறைவுமில்லை. நாயுடு முகத்தில் சிரித்த களை பொங்குகின்றது. அதுதான் உன் ஜெயத்தை எடுத்துக் காட்டுகின்றது. நீ பயப்பட வேண்டாம். உன்னுடைய பழி நீங்கியது. குற்றவாளியை நாயுடு கண்டு பிடித்து விட்டார்." என்ற வாக்கியத்தைக் கேட்ட உடனே கேசவன் "ஹா! நான் நிரபராதி என்பது நிரூபிக்கப் பட்டதா! என் பழி அகன்றதா! கடவுளே நாயுடு உருவமாக வந்து இக் காரியத்தைச் செய்திருக் கிறார். இது நிச்சயந்தானா! என் அன்பர்களே! பிதாவே! இது உண்மைதானா! அல்லது என் மனம் தேறிக் களிக்கும் பொருட்டு இந்த வார்த்தையைக் கூறுகின்றீர்களா! உடனே உண்மையைக் கூறுங்கள்” என்று தத்தளித்தவாறு கேட்டான்.
கேசவனின் பதைப்பைக் கண்டு வியப்புற்ற நாயுடு "கேசவா! நான் பொய் யுரைப்பதாக நீ எத்தனை விஷயங்களில் கேள்வி யுற்றிருக்கிறாய்?. நான் என் வேலையில் வெற்றி பெற்றாலொழிய பொய்யுரைத்துப் பசப்புகின்றவன் நான் அல்ல வென்பதை நீ அறியாயா! செல்வா! உன் தலை மீது விழுந்த அபாண்ட இடி விலகியது. உண்மைக் குற்றவாளியை இன்னும் சிறிது நேரத்தில் பார்க்கப் போகிறாய். ஆத்திரப்படாதே! உன் பரிமளா உனக்கே தான் என்பதை இனியேனும் நம்பு, அந்த மாதாசியும் தாமரை யிலை நீர்த்துளி போல் தத்தளித்துக் கொண்டிருப்பாள். நாங்கள் சென்று வருகிறோம். நீ பல நாடகங்கள் நடித்த பிரபல நடிகனல்லவா! ராமதாஸ் வேடத்தில் சிறையில் இருந்தாய்; மாணிக்க வாசகராய்ச் சிறையிலிருந்தாய். இன்னும் எத்தனையோ நாடகங்களில் சிறையி லிருந்ததாக நடித்திருப்பது போல இதுவும் ஒன்று என நினைத்துக் கொள். கேசவா! பயப்படாதே. நாங்கள் சென்று வருகிறோம்" என்று கூறி விட்டு நேரே போலீஸ் ஸ்டேஷ னுக்குச் சென்று 'குற்றவாளி யகப்பட்டு விட்டான்; பிடிப்பதற்குத் தயாராக என்னுடன் வாருங்கள்" என்றார் நாயுடுகாரு.
பத்திரிகை வரும் நேரத்தை வெகு ஆவலுடன் எதிர் பார்த்துக் கொண்டிருக்கையில் அது வந்தவுடன் தாக்ஷண்யப்பட்டவர்கள் “இதோ ஒரு நிமிஷத்தில் தருகிறேன்." என்று எடுத்துக் கொண்டு போய் பிறகு கொடுக்காமலே இருந்து விட்டால் எவ்வளவு மனக் கஷ்ட முண்டாகிற தென்பதை அவர்கள் கவனிப்பதேயில்லை.
இதைக் கேட்டதே அதிகாரி வியப்புற்று "குற்றவாளி யகப்பட்டு விட்டானா! குற்றவாளி வேறு யாரையா !... கேசவனை விடுவிக்கும் பொருட்டு யாரையேனும் பிடித்துத் தயார் செய்து விட்டீர்களா!" என்றார்.
நாயுடு:- ஐயா! என்னுடைய உத்தியோகம் அதுவல்ல. பொய்க் கேஸ்கள் பலவும் ஜோடித்து வழக்கை நடத்தி ஜெயமும், அப ஜெயமும் அடைவது வேறு பேர்வழிகள் என்பது உங்கள் மனமறியும். உண்மைக் குற்றவாளியைக் கண்டு பிடிப்பதற்குத்தான் நான் தொழில் பூண்டேன். சரியாக பகல் இரண்டு மணிக்கு என் னுடன் வாருங்கள்'” என்று கூறி விட்டு ஓட்டலுக்குச் சென்றார்.
அப்போதுதான் நாயுடுவுக்கு ஒரு தந்தி வந்திருந்தது. அவர் அந்த தந்தியை வாங்கிப் பார்த்தார்.
"என்னரிய தந்தையே! நாயுகோரு! நீங்களிருவரும் உடனே வர வேண்டியது. விஷயம் வெகு முக்கியமானதும் அவசரமானதுமாகும். என்னுடைய வந்தனத்தையும் தைரியத் தையும் கேசவனுக்குத் தெரிவிக்கவும்.
பரிமளா”
என்றதைப் படித்த இருவரும் "பரிமளாவுக்கு ஆபத்து ஒன்று மில்லை. ஏதோ நல்ல விஷயந்தான் கிடைத்திருக்கிறது. அதனால் தான் இவ்விதம் தந்தி படித்திருக்கிறாள்" என்று எண்ணி, உடனே நாயுடுகாரு பரிமளாவுக்குக் கீழ்வருமாறு தந்தி யடித்தார்.
"செல்வீ பரிமளா !
உன் தந்தி கிடைத்தது. அது கிடைப்பதற்கு முன்பே துப்பு விளங்கி விட்டது. கேசவன் நிரபராதி என்பதை நிரூபித்தாய் விட்டது. குற்றவாளி பிடிபட்டான். நாங்கள் சீக்கிரத்தில் வந்து சேருகிறோம். கவலைப்படாதே!
நாயுடு”
தினந்தோறும் பத்திரிகை படிக்காவிடில் நமது ஊரில் நடக்கும் முக்கியமான விஷயங்களை யறிவதற்கில்லாமற் போய் விடுகின்றது. அதனால் சில சமயங்களில் அநாவசியமான கஷ்ட நஷ்டங்கள் உண்டாகின்றன. சிலர் தினம் பத்திரிகை படித்தும் முக்கியமான விஷயங்களைக் கவனிப்பதே இல்லை.
சரியாக மணி இரண்டடித்தது. போலீஸ் ஜெவான்களும் இன்ஸ்பெக்டரும் வந்தார்கள். நாயுடுகாருவும் அவர்களுடன் வேலைக்காரக் கிழவியின் வீட்டிற்குச் சென்றார். அப்போது கிழவியும் அந்த ஆசாமியும் நாயுடுவின் எச்சரிகைப்படிக்குப் பேசிக் கொண்டிருந்தார்கள். நாயுடு போலீஸாரிடம் "ஐயா! சற்று இவர்கள் சம்பாஷணையைக் கவனியுங்கள்" என்றார்.
கிழவி:- அடேய் படுபாவி! அந்த ஆசாமியை நீ திருடன் என் றும், வெகு நாளைய கொள்ளைக்காரன் என்றும், அவனைப் பிடித்துத் தருபவர்களுக்கு 500 ரூபாய் இனாம் போலீஸார் கொடுப்பதாக விளம்பரம் செய்திருப்பதாயும், அதனால் அவன் மீது பழியைச் சாட்டிப் போலீஸாரிடம் ஒப்புவிக்க வேண்டு மென்றும் கூறினாயே! இந்த முழு மோசத்தை நம்பி நானும் விஷய மறியாது இதில் மாட்டிக் கொண்டேனே!
குற்றவாளி:-நீ ஏன் இதற்குப் பயப்படுகிறாய்? அந்தப் பயல் தான் திருடன் என்று பிடித்து விலங்கு போட்டாயிற்று. இனி என்ன கவலை! உனக்கு வேண்டுமானால் நீ கேட்டது போல இன் னும் நூறு ரூபாய் தருகிறேன். இந்த விஷயத்தைப் பற்றிக் கவலையை விட்டு விடு, பயப்படவும் வேண்டாம்- என்றான்.
அப்போதுதான் போலீஸாருக்கு ஒருவித சந்தேகம் உண்டாகியது.
சிலர் ஒருவரிடத்துச் செல்கையில் '" ஒன்றுமில்லை; வெறுமனேதான் வந்தேன்" என்று சொல்லிக் கொண்டே யிருந்து விட்டுத் தான் வந்த காரியத் தைப் பற்றிச் சொல்லாமலிருந்து, அவர் வெளியில் போன பிறகு கையைப் பிசைவது:
அவர்கள் உடனே உள்ளே சென்று, "ஐயா! இனி கவலையே கிடையாது, எல்லாம் களிப்பாகவே முடிந்தது. நீர் போலீஸாரின் விளம்பரப்படிக்குக் கள்ளனைப் பிடித்துக் கொடுத்ததற்காக உங்களுக்கு மரியாதை செய்து அரசாங்கத்தினரின் விருந் தினராக அழைத்துச் செல்ல வந்தோம். வாரும். எழுந்திரும். ஏ கிழவி! எழுந்திரு.'" என்று அதட்டியபடி அந்த ஆசாமியைப் பிடித் துக் கொண்டார்கள்.
இவர்களைக் கண்ட கிழவி நடு நடுங்கிப் போய் 'ஐயா! நான் ஒரு பாபமும் அறியேன். நூறு ரூபாய் போதாது. நீ மட்டும் போலீஸாரிடம் ஐந்நூறு ரூபாய் வாங்கிக் கொள்கிறாயே! அதில் இன் னும் நூறு ரூபாய் கொடு. நான் அந்த மூட்டையைக் கொண்டு கொடுத்துக் கூறியதனாலன்றோ அவன் குற்றவாளியாக மதிக்கப் பட்டான்!" என்று தருமமாகக் கேட்டேன். நீங்களே அதை எனக்குக் கொடுத்து விடுங்கள். இவனுக்கு நான் சகாயம் செய்தும் இவன் என்னை ஏமாற்றப் பார்க்கிறான்." என்றாள்.
அந்த மனிதனுக்கோ உயிர் உடலை விட்டுக் கிளம்பியது போலவே ஆய்விட்டது. நெருப்பை மிதித்தவன் போல தத்தளிக்கின்றான்; எனினும் திடீரென்று வெறி கொண்டவன் போலச் சீறி, அங்கு வந்திருப்பது போலீஸார் என்றதையும் மறந்து, தன் மடியில் வைத்திருந்த கைத் துப்பாக்கியை எடுத்து சற்றும் எதிர் பாராத விதமாகக் கிழவியின் மீது ஒரு வெடியும், போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது ஒரு வெடியும் டப் டப் என்று இமைப் பொழுதில் சுட்டான். இந்த அசுர செய்கையைக் கண்டு எல்லோரும் பிரமித்து இமைப் பொழுது கலங்கி விட்டார்கள்.
சிலர் "நமஸ்காரம்" என்று வாயாற் சொல்கையில், கைகளை வேறு விதமாகக் காட்டுவது; அவர்களது முகமோ இரண்டுக்கும் சம்பந்தமில்லாத விதம் கோணுகின்றது. இப்படி ஒவ்வொன்றும் ஒவ்வொரு மூலைக்கு நவக்கிரகங்கள் போன்று வக்கரித்துக் கொண்டால் அவர்கள் மேற்கொண்டுள்ள காரியம் அதற்குத் தகுந்தாற் போலத்தான் நடக்கின்றது.

