விவாக மகிழ்ச்சி- விபரீத நிகழ்ச்சி
பரிமளா தனக்கு விவாகம் சமீபித்து விட்டதால் மட்டற்ற மகிழ்ச்சியடைந்து அந்த நாளை ஆவலோடு எதிர் பார்த்துக் கொண்டிருந்தாள்.விவாகமானதும் தான் முன்னர் நாடகத்தில் நடித்த பாத்திரங்களைப்போல தினசரி வாழ்க்கை நடத்தப் பெரும் ஆர்வங் கொண்டிருந்தாள். அது விஷயமாகவே யோசித்துக் கொண்டிருக்கையில், பொன்னுசாமியும் பார்வதியம்மாளும் கல்யாண விஷயமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள்.
அச் சமயம் கேசவன் வெகு வேகமாகவும் தன்னை மீறிய ஆநந்தத்துடனும் ஓடி வந்து, வெகு வணக்கத்துடன் அக் கடிதத் தைத் தன் எஜமானர் கையில் கொடுத்து "தந்தையே! நமக்குச் சந்தோஷ காலம் பிறந்து விட்டது. இக் கடிதத்தைப் படித்துப் பாருங்கள்'' என்று கூறினான். உடனே பொன்னுசாமி கடிதத்தைப் படித்துப் பார்த்துப் பேராநந்தமடைந்து "கேசவா! உன் பக்கத்தில் கடவுள் எப்படி மறைந்து வேலை செய்கிறார் பார்த்தாயா! பரிமளாவின் அதிருஷ்டம்தான் எத்தனையோ வருடங்களுக்கு முன்பு மறைந்துவிட்ட தாயார் இவ்விதம் விவாக சமயத்திற்குச் சரியாக வந்து சேருகிறாள். ஆகா! என்ன ஆநந்தம்! கேசவா! உன் மனம் குளிர்ந்ததா ! நீ இப்போதே புறப்பட்டு, வண்டி எப்போது புறப்படுகின்றது என்பதை விசாரித்துப் பிரயாணத்திற்குச் சித்தமாயிரு. நான் இதோ சென்று பணங் கொண்டு வருகிறேன்" என்று கூறி விட்டுத் தன் வீட்டை நோக்கிச் சென்றார்.
கேசவன் பரிமளாவிடம் சென்று, "பரிமளா! நான் ஊருக்குச் சென்று வருகிறேன்; என் தாயார் எனக்குக் கடிதமெழுதி இருக்கி றாள். நமது எஜமானர்;சொல்லியது போல உன்னுடைய மகிமை தான் - பாக்யந்தான்-உன் மாமியார் விவாகத்திற்கு வந்து விடுகி றார்கள்; கண்ணே! பரிமளா! நான் சென்று என் தாயார், சகோதரிகள் ஆகியவர்களுடன் உடனே திரும்பி விடுகிறேன். எந்தக் காலத்திலும் நம்மிருவரையும் நிழல் போல ஆபத்துச் சூழ்ந்து கொண்டே இருக்கின்றது. நீ ஜாக்ரதையாக இரு; கவலைப்படாதே. தைரியமாக இரு, 'நமது திருமணத்தைக் கண்டு களிப்பதற்கு என் தாயார் இல்லையே! அனாதையைப் போல நான் மணம் செய்து கொள்ள நேர்ந்ததே!' என்று மிக்க விசனக் கடலில் ஆழ்ந்திருந் தேன். இச்சமயம் கடவுள் என் கவலையைத் தீர்க்கவே இக் கடிதத்தை எனக்கு அனுப்பினார். என்னுள்ளம் மகிழ்கின்றது. எல் லாம் இறைவனருள்" என்றான்.
பரிமள:- என் அன்பரே! எத்தகைய சந்தோஷம் தங்களுக்கு வந்த போதிலும் அதில் நானும் சமபாகம் பெற்றவளன்றா! தாங்கள் அன்று தெரிவித்தபோது என் மனம் என்ன சங்கடத்தை அடைந்தது தெரியுமா! அதைச் சொல்வதற்கே முடியாது. இப்போதுதான் பேராநந்தமாயிற்று. தாங்கள் எனக்குச் சொல்லியதுபோலத் தாங்களும் ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ளுங்கள்; சீக்கிரம் வந்து விடுங்கள்.
எவ்வளவு உயரிய பதவியிலிருந்தாலும் தன்னை விடத் தாழ்ந்த ஸ்திதியி லுள்ளவர்களின் வார்த்தைக்குப் பயந்து நடக்கவேண்டிய சந்தர்ப்பம் சில சமயங்களில் நேர்ந்துவிடுகின்றது.
கேசவன்:-நான் எதற்காகத் தாமதிக்க வேண்டும்? அங்கு சென்று அவர்களை அழைத்துக் கொண்டு உடனே திரும்ப வேண்டி யதுதான்; கடவுளின் அனுக்ரகம் பூர்ணமாக இருக்கும் பரியந்தம் குறைவென்ன! நான் சென்று வாட்டுமா! கண்மணி!" என்றான்.
அன்பு மீறிய பரவசத்தினால் அவர்களை யறியாமலேயே இருவர் கரங்களும் சந்தித்துக் கொண்டன. அடுத்த நிமிடம் கேசவன் தனிப்பட்டு வெளியே சென்று பிரயாணத்திற்கு ஆயத்தமானான். எஜமானரும் அவன் செலவுக்குப் பணத்தைக் கொடுத்து “அப்பா! சென்று ஜாக்ரதையாகத் திரும்பு. பணம் போதாவிடில் கடிதம் எழுது; நான் மணியார்டர் செய்கிறேன். ஜாக்கிரதை. இந்த தகவலை நாயுடுவிடம் தெரிவித்து விடலாமென்று அங்கு சென்றேன். நாயுடு ஊரிலில்லையாம்; வந்து விட்டேன்! ஜாக்ரதை!" என்று கூறி வண்டி ஏற்றி அனுப்பி விட்டார். பிற்கு கேசவன் அன்னையைப் பார்க்கச் செல்லும் பேராவலினால் தூண்டப்பட்டு “எப்போது தாயி னருகில் செல்வோம்?" "என்று எதிர்பார்த்தபடியே ரயிலில் செல்கிறான்.
சரியாய் இரவு 11 மணிக்கு அவன் செல்ல வேண்டிய ஊரில் ரயில் நின்றதும் இறங்கினான். முன்னே பின்னே சென்றறியாத ஊராகையினால் ரயிலடியிலேயே ஒரு வண்டியமர்த்திக் கொண்டு கடிதத்தில் குறிப்பிட்டுள்ள வீட்டிற்குக் கொண்டு நிறுத்தச் செய்தான். வண்டியும் அவ்வாறே வந்து நின்றது. அப்போதுதான் கலியாண வீட்டில் எல்லோரும் சாப்பிட்டு விட்டு வீதித் திண்ணையில் பேசிக் கொண்டே படுத்திருந்தார்கள்.
கேசவன் வண்டியை விட்டு இறங்கி, விவாக வீட்டிற்குச் சென்றான். எல்லோரும் புதிய மனிதர்களாகையினால் திடீரென்று தன் விவரத்தைக் கூறத்தியங்கினான். அங்குள்ளவர்கள் "நீங்கள் யார்? எங்கே வந்தீர்கள்? சம்மந்தி வீட்டாரைச் சேர்ந்தவர்களா, அவர்கள் அடுத்த வீதியில் இருக்கிறார்கள்." என்றார்கள்.
சிலருக்கு, கடித மெழுதுவதில் வெகு ஆசை. ஆனால் எவ்வித வக்கணை யுடன் எழுதவேண்டு மென்பது தெரியாமலும், இடம், காலம், மனிதர் முதலிய எதையும் கவனியாமலும் தோன்றினவாறெல்லாம் எழுதி விடுகி றார்கள். அதனால் சில சமயம் நிலைமையுண்டாய் விடுகின்ற தென்பதை அவர்கள் அறிவதில்லை.
கேசவ:- சம்மந்தி வீட்டுக்கு வரவில்லை. இந்த வீட்டில் வேலை செய்யும் அம்மாளைப் பார்க்க வந்தேன். அவர்கள் இங்கிருக்கிறார்களா? இருந்தால் தயவு செய்து கூப்பிடுங்கள் - என்றான். இதைக் கேட்ட அவர்கள் இங்கு வேலைக்காரி இல்லை; அவள் வீட்டிற்குப் போய் விட்டாள். அவள் விடியற்காலந்தான் வருவாள். ஆகையினால் இங்கு படுத்துத் கொண்டிரும், காலையில் பார்க்கலாம்," என்றார்கள்.
கேசவன் அதற்கிசைந்து வீதித் திண்ணையில் ஒரு புறமாகப் படுத்தான். அவனுக்குத் தூக்கமே கொள்ள வில்லை. ஏதேதோ எண்ண;மிட்டவாறு படுத்திருக்கிறான். "எப்போது விடியற்கால மாகும். எப்போது தன் தாயைக் காணலாம்?" என்கிற பேராவலினால் மிக்கக் களிப்புடன் எதிர் பார்த்தபடியே கண்ணயர்ந்தான்.
நள்ளிரவு ; நடுநிசி. மணி சுமார் இரண்டிருக்கலாம். அச்சமயம் உட்புறத்தில் பெண்கள் படுத்திருக்கும் இடத்தில் அபாரமான கூக்குரல் உண்டாயது. "ஐயோ! ஐயோ! திருடன்! திருடன்! பிடியுங்கள்! பிடியுங்கள்!" என்று உண்டான சத்தத்தைக் கேட்ட எல்லோரும் கண் விழித்துக் கொண்டு "எங்கே! எங்கே! எங்கே திருடன் !" என்று கூவிக்கொண்டே விளக்குகளைக் கொளுத்திக் கொண்டு நாற்புறமும் தேட வாரம்பித்தார்கள்.
வீடு பூராவும் தேடியலைந்தார்கள்; ஒருவரையும் காணவில்லை. பெண்கள் எல்லோரும் தங்கள் நகைகளைக் கவனித்துக் கொண்டு "ஐயோ என் சங்கிலியைக் காணவில்லை, என் சரடு காணவில்லை. என் ஒட்டியாணம்....என் ஐடைபில்லை.... என் ஜடைபில்லை, என் ராக் கடி.... காசுமாலை.... வைரமாட்டல்... வைரக்கம்மல்.... ஐயோ! குழந்தை யின் கைவளையல்கள், கொலுசு, வெங்கி; ஒன்றும் காண வில்லையே!" என்று பலபேர் பலவிதமாகக் கூக்குரலிட்டுக் கத்தினார்கள்.
பத்து மாதம் சுமந்து பலவித கஷ்டங்களுக்காளாகிப் பெற்று அதிக வாத்ஸல்யத்துடன் வளர்க்கும் குழந்தையாயினும், தான் ஒரு முக்கியமான காரியத்தில் ஈடுபட்டிருக்கையில் அக் குழந்தை ஏதாவது தடை செய்தால் தன்னை யறியாது கோபமும் வெறுப்பும் முதலில் பொங்கி, அப்புறமே சாந்த முண்டாகின்றது போல, சில சமயங்களில் நமது உறவினர்களாலோ, சிநேகி தர்களாலோ ஏதாவது ஒரு காரியத்திற்கு இடைஞ்சல் ஏற்படின் மேற்கண்ட உணர்ச்சிகள் நம்மை யறியாது உண்டாகின்றன.
வீதியில், பெருத்த கலாட்டா நடப்பது போலப் பலவிதமாகப் பேசிக் கொண்டார்கள். ரயிலில் வந்த அலுப்பினாலும், மனத்தில் கொண்டிருந்த கவலையினாலும் நமது; கேசவன் தன்னையறியாது தூங்கி விட்டதால் இந்த கலபையில் கூட கண் விழிக்க வில்லை. வீதியிலேயே பலமாகப் பேசிக் கொண்டு தாறுமாறாக ஓடியலைந்த சத்தம் கேட்ட பின்னர் விழித்துக் கொண்டு எழுந்தான்; என்ன விஷயம் இங்கு நடந்த தென்பதே அவனுக்குத் தெரியாதாகையினால் தலையணையாக வைத்திருந்த தன் மேல் துணியை எடுத்துக் கொண்டு எழுந்து உட்கார்ந்தான்.
அவ்வாறு துணியை எடுக்கையில் அதனடியில் இருந்த ஒரு சிறிய மூட்டை பொத்தென்று கீழே விழுந்து, முடிச்சு அவிழ்ந்து அதனுள்ளிருந்த நகைகள் பிரகாசமாய்ச் சிதறின. அப்போது அருகிலிருந்தோர் அவைகளைக் கவணித்தது போலவே நமது கேசவனும் "இதென்ன நகைகள்!" என்று திடுக்கிட்டான். நகை களைக் கண்டதுதான் தாமதம், அருகிலிருந்தவர்கள் "ஆ! இதோ! இதோ! நகைகளுடன் கள்ளன் அகப்பட்டுக் கொண்டான்.'' என்று கூச்சலிட்டுக் கொண்டே கேசவனின் கையைப் பிடித்துக் கொண்டார்கள். உடனே எல்லோரும் அவ்விடத்தில் வந்து சூழ்ந்து கொண்டு, நகைகளையும் எடுத்து வைத்துக் கேசவனைக் கெட்டியாகப் பிடித்து வளைத்துக் கொண்டு "அடேப் திருட்டுப் பயலே! இப்போ தல்லவோ உன்னுடைய மோசம் தெரிகின்றது. "வேலைக்காரி இருக் கிறாளா!' என்று வேஷம் போட்டுக் கொண்டு பெரிய மனிதன் போல வந்து இத்தகைய வேலையைச் செய்ததுமல்லாமல், பரம யோக்யன் போன்று நிம்மதியாக இத்தனை நாழிகை பரியந்தம் படுத்துக் கொண்டிருந்து மெல்ல நழுவிவிட நினைத்தாயோ! அடேய் திருட் டுப் பயலே!" என்று கண்டபடிப் பேச வாரம்பித்தார்கள்.
ஒரு பாபமும் அறியாத நிரபராதியான கேசவன் தீயை மிதித்தவன் போலத் துள்ளினான். "ஹா! கடவுளே! இதென்ன சோதனை! ஒரு குற்றமும் மனத்தினாலும் எண்ணியறியாத எனது தலைமீது இவ்வித பேரிடி போன்ற அபாண்டத்தை இடித்து விட் டாயே!....ஐயா ! ....இதென்ன அக்ரமம்! நான் ஒரு பாபமும் அறிய மாட்டேன். இங்கு நான் உண்மையில் வேலைக்கார அம்மாளைக் காண்பதற்கு வந்தேன்.வந்த விடத்தில் அவர்கள் இல்லாமையினால் இங்கு படுத்துக் கொண்டேன். அதுதான் எனக்குத் தெரியும். மற்றபடி நான் ஒருவித குற்றமும் அறியேன். கடவுள்மீது ஆணை யாக நான் நிரபராதி. வீணே மனத்தைப் புண்படுத்தும் வார்த்தைகளைக் கூறாதீர்கள். இந்த நகைகளை யாரோ வேண்டுமென்று என் தலைமாட்டில் கொண்டு வைத்திருக்கிறார்கள்" என்று கூறினான்.
அது கேட்ட மற்றையோர், "போடா போக்கிரி நாயே! திருட்டுக் கழுதைகளெல்லாம் தான் தப்பித்துக் கொள்ளும் வழியைக் கூறாமல், நான் திருடினேன் என்று சொல்வார்களா! வேண்டு மென்று உன் தலைமாட்டில் நகையைத் திருடி வைத்தார்கள்!! சீச்சீ! திருட்டு நாயே! பாரும் கவனியாமல் மூட்டையை அமுக்கிக் கொண்டு போகும் எண்ணத்தோடு வெகு சாதுவைப் போல இத்தனை கூக்குரல் அமர்க்களத்திலும் வாய் திறவாது உறங்குகிறவன் போல நடித்ததை உன் மூட்டையே வெளியாக்கிவிட்டது. மூட்டையைக் கவனித்துவிட்டதால் நீ ஆணையும் செய்து தப்பிக்க வழி செய்வாய்; அதற்கு மேலும் பேசுவாய். பாம போக்யன் போல வேலைக்காரியைத் தேடிக் கொண்டு வந்த திருட்டுப் பயலல்லவா நீ! என்று தாறுமாறாகக் கூறுகையில் ஒருவன் ஓடிச் சென்று போலீஸ் சேவகனை அழைத்து வந்து விட்டான்.
சிலர் தங்கள் ஆகாரம், நியமம், நிஷ்டை முதலியவற்றை ஒரு வாம்புக் குட்படுத்த முயன்று அவ்வாறு செய்தும் விடுகின்றார்கள். ஆனால் அவர்கள் தூக்கம் என்னும் பேயின் வசப்பட்டுவிடின் எல்லாம் கோணலாய் விடுகின்றன. தூக்கத்திற்கு அடிமையாகாமல் அதைத் தன் வயப்படுத்தினாஅல்லது எந்தக் காரியத்திலும் சித்தி பெற இயலாது.
அங்கு வந்த போலீஸ் சேவகன் கேசவனைப் பிடித்துக் கொண்டு விறைக்கப் பார்த்தான். இதற்குள் கேசவன் தாங்கமாட்டாத துயரத்தோடு 'ஐயோ! அனியாயமே! அக்ரமமே! இவ்விதம் பழி சுமத்துவது தருமமா! பாவிகளே! எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்துகொண்டு வேண்டுமென்று என்னை இவ்விதம் பழிக்குப் பாத்திரமாக்குகின்றீர்கள்! நான் ஒரு பாபமும் அறியாதவன். நான் யாரென்பதை யறியாது இவ்விதம் தாறுமாறான வார்த்தையை உபயோகிக்கின்றீர்கள். என்னுடைய பெயரைத் தமிழுலகமே அறி யும், நற்குண நாடக சபையில் நடிக்கும் கேசவன் நான்தான் என்பதை அறியுங்கள்; பொன்னுசாமியினுடைய புகழை, அவர் செய்துள்ள தர்மங்களின் கீர்த்தியை நீங்கள் அறியாதிருக்க மாட்டீர்கள். அவருடைய சிஷ்யனாகிய நானா இத்தகைய ஹீனமான வேலை செய்வேன் என்பதை நினைத்துப் பாருங்கள். இதோ இக் கடிதம் எனக்குக் கிடைத்தது. என் தாயாரைக் காணக் கூடிய பேராவலோடு நான் வந்தேன். ஐயா! போலீஸ் உத்யோகஸ்தரே! நீரேனும் இதைச் சரியாகப் படித்துப் பாரும்.'' என்று வெகு வீராவேசத் தோடு கூறி, கடிதத்தைக் கொடுத்தான்.
கடிதத்தை வாங்கிப் படித்த சேவகன், கேசவனின் சரிதையை விசாரித்தறிந்து கொண்டான். பிறகு வீட்டுக்காரர்களை நோக்கி "ஐயா! இவ் வீட்டு வேலைக்காரி எங்கே? அவளையும் விசாரித்துப் பிறகு நான் சொல்கிறேன்" என்றான். வீட்டுக்காரன் வேலைக்காரி வீட்டிற்கு ஆளையனுப்பி அவளை அழைத்துவரச் செய்தான். அவளைப் போலீஸார் விசாரித்ததில் கேசவனுக்கும் அவளுக்கும் ஒரு விதமான சம்பந்தமும் கிடையாதென்று விளங்கி விட்டது.
சில பிச்சைக்காரர்களைக் காண்கையில் அவர்களுக்கு ஏதாவது கொடுக்க வேண்டுமென்று கை தானாக ஜோபிக்குள் செல்கின்றது; ஆனால் அதே க்ஷணத்தில் மனமானது அதைத் தடுத்து கையை விலகச்செய்துவிடுகின்றது. இரண்டும் ஏகோபித்து பணத்தை எடுப்பதற்குள் பிச்சைக்காரர்கள் வேறிடம் சென்று விடுகிறார்கள்.
அவ்வாறு விளங்கியதும் கேசவன் திடுக்கிட்டான். உடனே போலீஸ் சேவகன், "ஓகோ! இப்போது தெரிகின்றது. நீ ஒருக்கால் அகப்பட்டுக் கொண்டால் இக் கடிதத்தைக் காட்டித் தப்பித் துக் கொள்ள வழி செய்யலாம் என்று இதை முன் கூட்டியே எழுதி வைத்திருக்கிறாய். இதில் கண்டபடி ஒரு விஷயமும் நிஜமல்ல என் பதை நன்றாகத் தெரிந்து கொண்டாய் விட்டது. நீ நாடகத்தில் நடிப்பவனாய் இருக்கலாம். பொன்னுசாமியின் சிஷ்யனாயுமிருக்கலாம். எப்படி இருப்பினும் நீ இதோ கையுங் களவுமாக அகப்பட்டுக் கொண்டிருப்பதிலிருந்து தப்ப முடியுமா என்று கேட்டுக் கொண்டே இருக்கையில் ஒரு கிழவி, "ஐயோ! யம்மாடி! யப்பாடா! என் போதாக் காலத்திற்குத்தான் விஷயம் இப்படி என்று தெரியாமல் ஒப்புக் கொண்டேன். அடே பாவி! நீ திருடன் என்று தெரியாமல் போயிற்றே! அடே சண்டாளா! என்னைச் சந்தியிலே இழுக்க வாடா பார்த்தே! நானு தெய்வமேன்னு கிடக்கறேன்....
ஐயா! போலீஸ்கார ஐயா! நான் ஒரு பாபமும் அறியமாட்டேன். நானு இந்த வீட்டில் கல்யாணத்துக்காக வேலை செய்ய வந்திருக்கிறேன். பத்துப் பாத்திரங்கள் தேய்த்து வைத்துவிட்டு வீட்டிற்குப் போய் படுத்துக்கொண்டேன். வேலை செய்த அலுப்பினால் தூங்கி விட்டேன். நடு நிசியில் தூக்கம் விழித்தது. அப்போது இந்தப் பாவி என்னருகில் வந்து "ஆயா! இந்த மூட்டையை வைத்துக் கொண்டிரு; நான் காலையிலே வாங்கிக்கிறேன்" என்றான். எனக்குத் தூக்கக் சலக்கத்திலும், இருட்டிலும் ஒன்றும் தெரிவில்லை; இவன் தோட் டக்காரன் என்று எண்ணி 'பக்ஷண மூட்டையா?' என்றேன். 'ஆமாம். வைத்துக் கொண்டிரு; அவுக்காதே" என்றான். 'சரிதான்' என்று நினைத்து வாங்கி தலைபின் கீழே வைத்துக் கொண்டு படுத் தேன்; இப்போ கண்ணை விழித்துக் கொண்டு பார்த்தால் திருட்டு சமாச்சாரம் கேள்விப் பட்டேன். மூட்டையில் பார்த்தால் நகைகள் காணப் பட்டன. பக்ஷணமில்லை அப்போதே என் வயிற்றில் இடி இடித்தது; ஒடி வந்தேன். இந்த கம்மனாட்டித் தடியன் செய்த வேலை இது," என்று பெரிய ராமாயணம் போலப் பேசிக் கொண்டே வந்து நகை மூட்டையை போலீஸ்காரனிடம் கொடுத்தாள்.
ஒரு முக்கியமான விஷயத்தைக் குறித்து விவரமாகவும் உருக்கமாகவும் எழுதவேண்டுமென்று பல நாட்களாகக் கோடிப்பது; ஆனால் அதைக் கடைசி தினம் வரையில் தாமதப் படுத்திப் பிறகு அதிக அவசரத்தில் அரை குறையாக எழுதி திருப்தியில்லாமல் முடித்துவிடவேண்டி வருகின்றது.
இந்த சம்பவம் சேசவன் மனத்தை ஈட்டி போலக் குத்தியது. கோபம் பொங்கி எழுந்த பார்வையுடன் “அடீ சண்டாளீ! உன் முகத்தையேனும் நான் பார்த்தேனா! பைசாசமே! நீ யாரோ! உன்னை நான் பார்த்தது மில்லையே! நீதான் இத்தனை நகைகளையும் திருடி என் தலைப் பக்கத்தில் பாதி நகைகளை மூட்டையாகக் கட்டிப் போட்டுவிட்டு நீ மிச்ச நகைகளை வைத்துக் கொண்டு வேண்டு மென்று இவ்வித சதி செய்திருக்க வேண்டும்! நான் என் தாயாரைக் காண வேண்டி இவ்விடம் வந்த நிரபராதி என்பதைக் கடவுள்தான் அறிவார்! சீச்சீ! துஷ்டையே! பழி சுமத்தாதே. இத்தனை வயதை விழுங்கிவிட்டு மதியற்ற முண்டமாகப் பேசுகிறாயா!" என்றான்.
இதற்குள் அருகிலுள்ளோர்கள் "ஐயோ பாவம்! கிழவியை ஏன் திட்டுகின்றாய்! அவன் உண்மையில் திருடி இருப்பின் அவளாக நகைகளைக் கொண்டுவந்து தாக்கல் செய்வாளா! மேலும் இக் கிழவி இவ்வூரிலேயே இருக்கிறவள். இவளை வெகு நாட்களாக நாங்களறிவோம். இவள் வெகு நல்லவள். இவள் அத்தகைய வேலை செய்யமாட்டாள்.'' என்று கூறினார்கள்.
கிழவி "அடே படுபாவி ! நீ செய்த வேலை ஜெரிப்பதற்கு என்னையும் துணைக்கு இழுக்கின்றாயா! சீச்சீ! உன் திருட்டுத் தனத்தைச் செருப்பாலடிக்க; நீ பெரிய யோக்யனன்று, ஐயா! போலீஸ்காரரே! நான் இதை உண்மையில் பக்ஷண மூட்டை என்று தான் எண்ணினேன்; அதோடு தூக்கக் கலக்கத்தில் எனக்கு ஒன்றும் தெரியவில்லை; இந்த திருடன் சொல்கிறதைக் கேட்காதீர்கள்! இவன் தன் அம்மாளைத் தேடுவதாயும், அக்காளைத் தேடுவதாயும் பொய் சொல்லிக் கொண்டு நகைகளைத் திருடவே வந்திருக்கிறான்." என்றாள்.
ஒரு வேலையை அவசரமாகச் செய்ய வேண்டுமென்ற எண்ணத்துடன் அதில் அநுபவமும் அக்கரையுமில்லாதவர்களிடம் கொடுத்துவிட்டுப் பிறகு அவர்கள் சரியாகச் செய்யவில்லையே, அதனால் நஷ்டமுண்டாய் விட்டதே!" என்று வருந்துவதில் பயன் யாது? சற்று நிதானமாயினும் நம்பிக்கை யுடையவரிடம் வேலை வாங்குவதுதான் உத்தமம்,
இதற்குள் பொழுதும் விடிந்து விட்டது. கேசவனை நோக்கி போலீஸா கேசவனை நோக்கி "ஐயா! நீங்கள் தற்போது குற்றவாளி தான்" என்று பலவித சாக்ஷிகளுடன் நகையும் கையுமாகப் பிடிபட்டிருப்ப தால் நாங்கள் உம்மை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்கிறோம். உங்களுடைய குற்றமற்றத் தன்மையை நீர் நிரூபிக்கும் பரியந்தம் நாங்கள் எங்கள் கடமைப்படிக்கு உம்மை ஜெயிலில்தான் வைத்திருப்போம். இந்த நகைகளின் மொத்த மதிப்பு ஆறாயிரம் ரூபாயிக்கு மேலிருக்கும். ஆகையினால் இது சாமானிய சில்லரைத் திருட்டல்ல! உம்மை நாங்கள் கைதியாக்கி விட்டோம்." என்று கூறி அவனுடைய வார்த்தையைச் சற்றும் எதிர் பார்க்காமல் அவனை ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றார்கள்.
அந்தோ! மகா உத்தமனும், பரம சாதுவுமான கேசவனின் மனம் படும் பாட்டை நாம் விவரித்து எழுதுதல் சாத்யமாகுமா! கோபாக்கினி ° ஒருபுறம் கொழுந்துவிட்டு எரிகின்றது. "இது வேண்டுமென்றே யாரோ செய்த சதியாலோசனை தான்!'' என்பது நன்றாக விளங்கிவிட்டது. விசனம் தாங்காது அவன் மூர்ச்சையானான்; பின்னர் தெளிந்து எழுந்தான். "ஹா! கடவுளே! உன்னை நம்பிய எனக்கு இந்த தண்டனையையும் படாப்பழியையும் நீ கொடுப்பது தருமமா! ஐயோ! நான் ஒன்று நினைத்தால் நீயொன்று செய்து விட்டாயே! என் அன்னையைக் கண்டு களிக்கும் பேராநந்தத்துடன் என்னை வரச்செய்து தீராத ஆபத்துக்கு இலக்காக்கிவிட்டாயே! திருடன் என்கிற அவமானத்தை எனக்குப் பகுமானமாய்க் கொடுத்துவிட்டாயே! என் செய்வேன் சர்வேசா!" என்று முட்டிக் கொள்கிறான்.
வயது முதிர்ந்த சிலர் தங்களுக்கு உற்சாகத்தை உண்டாக்கக்கூடிய சில காரியங்களைத் தாங்களே செய்வதற்கு அஞ்சியோ சங்கோஜப்பட்டோ சிறியவர் களைச் செய்யச் சொல்லித்தாம் இன்புறுவது. ஆனால் அதன் பலனாக அவர்கள் மிரட்டப்படுகையிலோ தண்டிக்கப்படுகையிலோ தாங்கள் அதில் சம்பந்தப்படா தவர்கள்போல நடந்துகொள்வது; இதுவும் ஒரு கெளரவம்போலும்.
போலீஸ் அதிகாரியை அழைத்து "ஐயா! நான் நிரபராதி, என்னை மோசமாக யாரோ வரவழைத்து இந்த கதிக்கு ஆளாக்கி இருக்கிறார்கள். ஆகையினால் இந்த அனியாய தகவலை என்னுடைய எஜமானருக்கு முதலில் தந்தி கொடுத்து வரவழைக்கவேண்டும். நான் நிரபராதி என்பதை நிரூபிக்காமல் தண்ணீரும் குடிப்ப தில்லை என்கிற விருதம் நான் எடுத்துக்கொள்ளப்போகிறேன். எனக்கு விவாகத்திற்கு நாள் வைத்திருக்கிறது.. இன்னும் 15 நாட்கள்தான் இருக்கின்றன. இத்தருணத்தில் வேண்டுமென்றே என்னை இக்கதிக்கு உள்ளாக்கும் நோக்கத்துடனேயே யாரோ செய்திருக்கிறார்கள். ஆகையினால் உடனே அவர் விலாசத்திற்குத் தந்தியடியுங்கள்; இந்த உபகாரமேனும் செய்யுங்கள்." என்று வேண்டினான்.
அந்த அதிகாரி அதற்கிசைந்து பொன்னுசாமிக்கு இவ்விஷயத்தைத் தந்தியடித்தார். பொன்னுசாமி பரிமளாவுக்கு விவாக பூஷணமாய்க் கொடுக்க வைர நெக்லேஸ் செய்வதற்கு வைரங்கள் பொறுக்கிக்கொண்டு இருக்கையில் இந்தத் தந்தி வந்தது, பொன்னுசாமி தந்தியை உடைத்துப் பார்த்ததும் தன்னையறியாது "ஹா! மோசம்!" என்று கத்திக்கொண்டே கல்லாய்ச் சமைந்தான்.
இந்த விபரீதமான செய்தியைக் கேட்ட வைரக்காரன் விசன முற்று வைரத்துடன் வீடு சேர்ந்தான். "ஐயோ! அனியாயமே! இங்குள்ள எதிரிகள் இங்கு வேலை செய்து பலிக்காமையினால் இவ்வித மோசமும் செய்துவிட்டார்களே! கேசவா! ஒண்டியாக அங்கு அகப்பட்டுக்கொண்டாயே! அன்னையைக் காண்பதாக அன்பு வலையை வீசி அதில் சிக்கவைத்து விட்டார்களே! இதைப் பரிமளா அறிந்தால் உயிர்துடிப்பாளே! ஐயோ! அனிபாயமே!" என்று பொன்னுசாமி தனக்குள் முட்டிக்கொண்டான். உடனே எழுந்து நாயுடுவுக்கு டெலிபோன் செய்து அவரை வரவழைத்தான்.
சிலர் தங்கள் சாமானை விலையாக்குவதற்காகக் கும்பலில் கூடியுள்ளவர்களில் யார் யாருக்கு எந்தெந்த பெயரைக்கேட்டால் ஒரு உணர்ச்சி ஏற்படுமோ அந்தப் பெயர்களையெல்லாம் ஒரு பொருளுக்கிட்டு அவர்களை மயக்கி விலையாக்கு- கின்றார்கள். இது ஒரு வியாபாரதந்திரம்
நாயுடுவும் வந்து இந்த விபரீதமான விஷயத்தைக் கேட்டு உள்ளம் துடித்தார்........"ஐயா! நான் ஊரிலில்லாத சமயம் பார்த்துத்தான் இந்த காரியத்தை எவனோ வேண்டுமென்று செய்திருக்கிறான். இதில் சற்றும் சந்தேகமே இல்லை. அக்கடிதமும் அவன் கையிலேதான் இருக்கின்றது. சரி; நாம் உடனே புறப்படுவோம். இவ்விஷயத்தை பரிமளாவுக்குத் தெரிவித்தால் மிக்க விசன மடைந்து தானும் வருவதாதத் தொந்தரவு செய்வாள். தெரிவிக்காவிடிலோ பத்திரிகையில் அறிந்து பரம வேதனையடைந்து நம்மையும் காணாமையினால் என்னவித மாறுதலை யடைந்துவிடுவாளோ! ஆகையினால் இதை அவளிடம் கூறித் தைரிய மொழிகள் சொல்லிவிட்டுத்தான் நாம் செல்லவேண்டும். ஆகையினால் வாருங்கள்; பரிமளாவின் வீட்டிற்குச் செல்வோம்" என்றார். உடனே இருவரும் பரிமளவல்லியின் வீட்டை அடைந்தார்கள்.
இந்த விபரீதமான விஷயத்தை யறியாத பரிமளா இருவரையும் சந்தோஷத்துடன் வரவேற்றான். பிறகு பொன்னுசாமியின் மனத்துயரத்தை முக மாறுதலினாலறிந்து கொண்ட பரிமளா "தந்தையே! இதென்ன முகம் ஏதோ ஒருவகையான மாறுதலடைந்திருக்கின்றது! அதோடு சுண்களும் நீரை உதிர்க்கின்றனவே! விஷயமென்ன?" என்று பரபரப்புடன் கேட்டாள்.
நாயுடு:- பரிமளா! நீ நல்ல புத்திசாலி; சாமர்த்தியசாலி. உனக்கு அதிகம் சொல்ல வேண்டியது எதுவுமே இல்லை: கடவுள் ஒரு மனிதரைப் பிறப்பிக்கின்றார்: அவ்வாறு பிறப்பித்தால் அவர்களுக்கு சுகமும் துக்கமும் கலந்து சரிசமமாகப் பங்கு செய்துதான் வைக்கின்றார். சுகம் வரும்போது அதிகமாய்ப் பொங்கிவிடலாகாது; துக்கம் வரும்போது அடியோடு இடிந்துவிடலாகாது. ஆகையினால் இச்சமயம் நீ எங்களைவிட அதிக தைரியசாலியாயும், நம் பிக்கையுடனும் இருக்கவேண்டும். சற்றும் அதைரியமோ, மனத் தாங்கலோ அடைவது கூடாது.
நாம் ஒருவரைப் பிரிந்திருக்கையில் அவர்களிடமிருந்து கடிதம் வரவில்லையே என்று மனக்கவலை யடைவதுடன் அவர்களைப்பற்றி குறைகூறுவது. பிறகு நேரில் விசாரிக்கையிலோ அவர்கள் முன்னதாகவே எழுதினதாகவும் அதற்குப் பதில் வரவில்லையேயென்று அவர்கள் கஷ்டப்பட்டதாகவும் அறிகின் றது. நடுவிலுள்ளமனிதர்களால் இரண்டு பேருக்கும் மனக்கஷ்டம் நேருகின்றது.
பரிமளா :- நாயுடுகாரு! என்ன இது பெரிய பீடிகை போடுகின் றீர்களே! எனக்கு விஷயம் ஒன்றுமே விளங்கவில்லையே! கடவுளின் சிருஷ்டியும் இன்பமும் துன்பமும் எல்லோருக்கும் சமத்வம்தானே; விஷயத்தை விளங்கக் கூறுங்கள்.
நாயுடு:-அவசரப்படாதே. இதோ இந்த தந்தியை நீயே படித்துப்பார்; பார்த்ததும் பதறாதே. இதில்தான் உன் மனோ வலிமையின் உறுதியைக் காணவேண்டும். கடவுள் இருக்கிறார். அவர் கிருபையில் யாதொரு குறைவும் வராது என்று கூறித் தந்தியைக் கொடுத்தார்.
பரிமளா தந்தி என்றதுமே திடுக்கிட்டவாறு, அதை வாங்கிப் படித்துப் பார்த்தாள். நாயுடு எத்தனை பீடிகைபோட்டு பேசி யிருந்தும் "ஹா! கேசவனுக்கா இந்த விபத்து! இத்தகைய அபாண்டப் பழி வந்தது! ஐயோ!....நாயுடுகாரு தந்தையே!" என்று ஏதோ பேச வாயெடுத்தாள். அதற்குள் நாயுடு தடுத்து "பரிமளா! என்ன இது! நான் இதுகாறும் சொல்லியதை எல்லாம் மறந்தனை போலும், நாங்களிருவரும் சொல்கிறபடியே நீ நடக்கவேண்டும். வீணாகக் கலங்காதே! அவன் நிரபராதி என்பதைக் கடவுள். அறிவார். அவர் கிருபையினால் அதைக் களைவதற்கு என்னை ஏவியு மிருக்கிறார்; ஆகையினால் நிதானி; பதறாதே. உன்னுடைய அன்பு எவ்வளவு தூரம் வேரூன்றியிருக்கின்றது என்பதை நான் அறிவேன்.இவ்விஷயத்தில் திடீரென்று பத்திரிகையில் பார்த்து என்ன நிலைமையை அடைவாயோ என்று நான் இப்போது உனக்கு முத வில் தெரிவித்தேன். இதோ இப்போதே நாங்கள் அவ்விடம் செல்கிறோம். நீ பயப்படாதே. கேசவன் நிரபராதி என்பதை நான் கட்டாயம் நிரூபிக்கின்றேன்; இது நிச்சயம். நீ எந்த விஷயத்திலும் கவலைப்படாதே. கடவுளையே நம்பு. அவரையே இடைவிடாது பிரார்த்தனை செய்துகொண்டு ஜாக்ரதையாக இரு. எனக்கு ஒருவிதமான ஆபத்துமில்லா திருக்கும்பொருட்டு இங்கு என் ஆட்களைக் காவல் வைத்துச் செல்கிறேன்; இவ்விடத்திலும் ஏதேனும் விஷயம் உனக்குத் தெரிந்தால் ஜாக்ரதையாகக் கவனித்துக்கொள். உன் சாமர்த்தியத்தால் நீ உன்னைக் காத்துக்கொள், கண்ணீர் விடாதே!
நமக்குக்கிடைத்துள்ள நேரத்தைக் கொஞ்சங்கூட வீணாக்காமல் உலக விஷயங்களைப் பற்றிக் கூடியமட்டும் விசாரித்தறிந்துகொள்ளவேண்டும். அஃதில்லா விடில் சில சமயங்களில் ஒரு சிறிய விஷயத்தைப்பற்றி அறியாதிருத்தலால் ஒரு நாள் முழுதும் வீணாகிவிடுவதோடு எல்லாக் காரியங்களும் கெட்டுவிடுகின்றன.
பொன்னு:-கண்ணே! பரிமளா! என் மன நிலைமையில் எனக்குப் பேசவுங் கூடவில்லை. வெண்ணெய் திரளும் சமயம் தாழி உடை வது போல உங்கள் கல்யாண சமயத்தில் இத்தகைய கஷ்டம் வந்து விட்டது. நமக்கு நாயுடு இருக்கையில் யாதொரு குறைவுமில்லை. நீ பயப்படாதே. வருத்தப்படாதே, தைரியமாயிரு. நாங்கள் சென்று வருகிறோம்.
பரிமளா:- என் தந்தையே! நாயுடுகாரு! நீங்கள் சொல்லியது போலவே நான் தைரியமாக இருக்கிறேன். இந்தப் பழி நீங்குமா! கேசவன் விடுதலையடைந்து விடுவாரா!.... தங்களுடன் நானும் வருகி றேனே, அவ்விடம் வந்து அவரைப் பார்த்துவிட்டு உடனே திரும்புகிறேன். என்னையும் அழைத்துச் செல்லலாகாதா!
நாயுடு:-பரிமனா! நீ என்ன விஷயமறியா தவளைப்போலப் பேசுகின்றாய். நீ இச்சமயம் அங்குவருவது கூடாது, நாங்கள் சென்று காரியத்தைக் கவனிக்கவேண்டும், நேரமாகிவிட்டது. உனக் குத் தேறுதல் கூறத்தான் நாங்கள் வந்தோம். ஆகையினால் அகக் கண்ணால் கேசவனைப் பார்த்துவிடு. தடுக்காதே! நாங்கள் சென்று கடிதம் எழுதுகிறோம்.-என்று கூறிவிட்டு இருவரும் விடை பெற் றுச் சென்றார்கள்.
ஒரு காரியத்தில் இறங்கினால் 'அதில் ஐயமுண்டாகுமோ ஆகாதோ என்று ஐயப்பட்டுச் சமயத்தில் பின் வாங்குவதைவிடக் கேவலமானது வேறொன்று மில்லை. அதைவிட முதலிலேயே அதில் ஈடுபடாமலிருப்பது கௌரவமானது.
பரிமளாவோ கூறவியலாத விசனத்துடன் எண்ணாததும் எண்ணி ஏக்கங்கொண்டு "கேசவனை மீண்டும் முன்போலக் காணப் போகின்றோமா!" என்று மனம் உடைந்து விட்டாள். அவளுடைய தாயாரும் சகோதரியும் அவ் விஷயத்தைக் கேட்டு விசனித்தார்கள். "என் மனோராஜ்யமெல்லாம் வீணாகி விட்டதே! குழந்தையைச் சந்தோஷமாக திருமணக் கோலத்துடன் கண்டு களிக்க எண்ணிய எண்ணம் வீணாயிற்றே! ஐயோ! கேசவனா இத்தகைய காரியம் செய் திருப்பான்! அவன் காலில் ஒட்டிய தூசுகூட இவ்விதம் செய்யாதே! உத்தமனென்றால் அவனுக்கன்றோ தகும்!" என்று பார்வதியம்மாள் புலம்புகின்றான்,
பரிமளா இவ் விஷயத்தினால் அன்றே சித்தம் சிதறியவன் போன்று ஆய்விட்டாள். அவள் ஆகந்தத்திற்கு ஏதோ பங்கம் வந்து விட்டதாகவே தோன்றி விட்டது. “ஆ! கடவுளே! என் அன்பனுக்கு ஒரு விதமான விபத்தும் நேராமல் காப்பாற்ற வேண்டும். மகா உத்தமன் குணசீலன் என்பதை யறிந்து நீ இத் தகைய அனியாயப் பழியை அவன் மீது சுமத்துவது தருமமா! இது உன் கருணைக்கு அழகா! அப்பனே! தீன சரண்யா! கேசவனுக்குற்ற மாசை யொழித்துக் காப்பாற்றுவாய்!" என்று வேண்டிக் கொண்டு படுத்து விட்டாள். அவளது மனத்திற்கு எவ்விதம் இருள் மயமான துக்கம் வந்து மூண்டு விட்டதோ அதே போல உலகமே இருள் மூடியவாறு அவளுக்கு ஆய்விட்டது. எந்தவிடத் தில் நோக்கினும் கேசவனின் முகம் சோகத்தினால் வாடி வதங்கிக் கண்ணீர் பெருக நிற்பதாகத் தெரிகின்றது. இத்தகைய கோரமான நிலைமையில் அன்று பொழுது போயிற்று.
எப்போது தனக்குக் கடிதம் வரும் என்று எதிர் பார்த்துக் கொண்டே இருந்தாள்: மறுநாள் பிற்பகல் பரிமளாவின் அறையில் விசனமே வடிவமாய் உட்கார்ந்திருக்கையில் வேலைக்காரி வந்து "அம்மா! யாரோ ஒருவர் தங்களுடன் முக்கியமான விஷயம் பேச வேண்டுமாம். அதற்காக வந்திருக்கிறார். கேசவன் விஷயம் என்றும் சொல்லச்சொன்னார்" என்றாள்.
அவசியமான சில விஷயங்களைப்பற்றி ஒருவருடன் பேசுவதற்காகச் சென்றும் சமயத்தில் முக்கியமானதை மறந்துவிடநேருகின்றது. மறதியே நமக்குப் பெரும் எமனாகின்றது. அதற்காக எப்பொழுதும் பேசவேண்டிய விஷயங்களைப்பற்றி முன்னதாகவே ஒரு குறிப்பு எழுதி வைத்துக்கொள்வது அதியவசியமாகும்.
இது கேட்ட பரிமளா கேசவன் விஷயம் என்றதும் மிக்க களிப்புற்று நாயுடுவின் ஆளாகவிருக்கு மென்று தனக்குள் தீர்மானித்து "உள்ளே வரச்சொல்லு" என்றாள். உடனே வெகு ஆடம்பரத்துடனும் படாடோபமான அலங்காரத்துடனும் ஓர் உல்லாச புருஷன் அவ்வறையில் நுழைந்தான். பரிமளா விசனமே உருவான பதுமையைப்போல தலைவிரிகோலமாக விருந்தாள். இந்த ஆடம்பர அலங்காரத்தையும், ஒய்யார நடையையும் பார்த்த உடனே அவளுக்கு மனம் சப்பென்று சலித்து ஓர்விதமான வெறுப்பு உண்டாகி விட்டது. "உட்காருங்கள்'' என்று ஒருபுறமாகத் திருப்பிக்கொண்டு கூறி "தாங்கள் யார்? கேசவன் விஷயமாக என்ன பேசவேண்டும்? அதை உடனே தெரிவிக்கலாம்" என்று முடுக்காகக் கேட்டாள்.
அது கேட்ட அந்த மனிதன் நகைத்துக்கொண்டே "பரிமனா! என்ன இது! கேசவன் விஷயமென்று கூறும்போதே இத்தகைய ஆத்திரமும், பரபரப்பும் உண்டாகின்றதே! ஐயோ பாவம்! நீ என்ன செய்வாய்! அவனிடத்தில் நீ நன்றாக ஏமாந்துவிட்டாய். இதோ இந்த பத்திரிகையில் வெளிவந்துள்ள விஷயத்தைப் படித் துப் பார்.'' என்று கூறித் தினசரி பத்திரிகையைக் கொடுத்தான்.
கேசவன் அபாண்டப் பழி பெற்றுள்ள விஷயந்தான் பத்திரிகையில் வெளியாகி இருக்கும் என்பது பரிமளாவிற்கு நன்றாகத் தெரியுமாதலால் அவள் அதைப்பற்றிச் சிறிதும் கலக்கமடைய வில்லை எனினும் அதுவிஷயத்தைப் பற்றி எவ்விதம் பத்திரிகையில் வெளியாகி இருக்கிறது பார்ப்போம் என்று படிக்கலானாள்.
============= சிறந்த நடிகன் திருடனாக மாறினான் கலியாண வீட்டில் களவு
==========
நாம் ஒரு காரியத்தைச்செய்கையில் அதனால் சில நிர்ப்பந்தங்களையடைய வேண்டி நேருமென்று நினைத்து அவற்றிற்குத் தக்க ஏற்பாடுகளைச் செய்கிறோம். பிறகு காரியம் ஒரு விக்கினமு மின்றி நிறை வேறினதும் நாம் அனாவசியமாகச் சில ஏற்பாடுகளைச் செய்தோம் என்று நினைத்துக் கொள்கிறோம். நாம் அவ்வளவு முன்ஜாக்கிரதையுடன் இல்லாவிடில் என்ன நேர்ந்திருக்குமோ என்பதைக் கவனிப்பதில்லை.
"நேற்று இரவு பசுபதி முதலியார் வீட்டில் சுமார் இரண்டு மணிக்கு ஆறாயிரம் ரூபாய் பெறுமான நகைகள் களவாடப்பட்டன. பசுபதி முதலியாரது குமாரத்தியின் கலியாணத்திற்காக அனேக ஸ்திரீகள் ஆபரணங்களுடன் வந்திருந் தார்கள். அவர்கள் அணிந்திருந்த ஆபரணங்களில் பலருடை யது களவாடப்பட்டன. கள்ளன் நகைகளைக் கழற்றிய போது ஒருவர் கண்விழித்துக்கொண்டு கூக்குரலிட்டவுடன் எல்லோருமாக எழுந்து பார்த்துப் பெரிய கலபை உண்டாகி விட்டது. அந்த வீட்டுத் திண்ணையின் கோடியில் படுத்திருந்த ஒருவன் எழுந்த உடனே அவன் தலைப்பக்கமுள்ள நகை மூட்டை கீழே விழுந்தது. அப்போதே அவன் தான் கள்ளனென்று அறிந்து அவனைப் பிடித்துப் போலீஸ்காரர் வசம் ஒப்புவித்தார்கள். அவன் திருடிய நகைகளை இரண்டு மூட்டைகளாகக் கட்டி ஒன்றை தன் தலைப்பக்கமும், மற்றொன்றை ஒரு கிழவியிடமும் கொடுத்திருந்தான். கிழவி திருட்டு நகை என்றறிந்ததும் அதைப் போஸீஸாரிடம் தாக்கல் செய்துவிட்டாள். பிறகு விசாரித்ததில் அந்த திருடன் பிரபல நாடகக் கம்பெனியாகிய நற்குண நாடக சபை யின் கீர்த்தி வாய்ந்த நடிகன் கேசவன் என்று தெரிந்தது. அதன்மேல் பின்னும் ஆராய்ச்சி செய்ததில் அவனுடைய ஜீவிய சரிதையும் கிடைத்தது.
நாம் ஒரு ஊருக்குச் சென்றால் அங்கு நமக்குத் தெரிந்துள்ளவர்களை யெல்லாம் ஒரு தடவை பார்க்கவேண்டுமென்ற அவா ஏற்படுகின்றது ஆனால் அவர்கள் நமது ஊருக்கு வருகையிலோ நம்மை எட்டிப்பார்ப்பதே கிடையாது. அன்பு பாஸ்பாம் இருந்தாலன்றோ விருத்தி யடையும்.
அவனுடைய தந்தை வேசிக்கள்ளனாம்; குடிகாரனாம். அவ னுடைய அண்ணன் பக்காத் திருடனாம். அவன் தாயார் இருக்குமிடம் தெரியாமல் ஓடிவிட்டாளாம். தந்தையைப் போலவும் தமயனைப்போலவும் கெடாதிருக்கும் பொருட்டு நாடகக் கம்பெணிக்காரர் நற்புத்தி புகட்டியும் பலனின்றி தனது அல்ப புத்தியினால் திருடவரம்பித்துவிட்டான். அவனைப் போலீஸார் கைது செய்திருக்கிறார்கள். அவனுடைய எஜமானருக்குத் தந்தியடித்திருக்கிறது. உன்னதமான கீர்த்தி யுடன் நாடக மேடையில் நடித்த மனிதன் திருடியது மிக்க வியப்பாக இருக்கிறது. மற்ற விவரம் பின்னர் வரும்”
என்று வரைந்திருந்ததைப் படித்த பரிமளா முன்னர் தெரிவித்தது போல எதுவும் பதில் பேசாது பத்திரிகையைக் கொடுத்து விட்டாள். பத்திரிகையை வாங்கிக் கொண்ட மனிதன் பரிமளா, "உன் கேசவன் பவிஷு எப்படியிருக்கிறது பார்த்தாயா! உனக்கு நான் இதற்கு முன் பல கடிதங்கள் எழுதியும் ஒன்றுக்கும் பதில் போடாது அலக்ஷ்யம் செய்தாய்! ஆனால் அப்போது திருட னாகத் தோன்றாத கேசவனின் நேசம் உன்னை யவ்வாறு செய்தது. இனிமேல் அந்த எண்ணம் மடியும் காலம் வந்து விட்டது. ஆதலால் தான் நான் நேரில் வந்தேன். பரிமளா! இனியேனும் என் கேள்விக்குப் பதில் சொல்லத் தடை செய்ய மாட்டாயல்லவா! மைனர் ஜமீந்தார் என்று வரைந்த பிரபு நான்தான்." என்று வெகு அட்ட காசமாய்க் கேட்டான்:
இதைக் கேட்ட பரிமளாவுக்கு அளவிட வியலாத வெறுப்பு உண்டாகி விட்டது. அவள் இந்த வார்த்தையை எதிர் பார்த்தாள். ஆகையினால் மன அதிர்ச்சி யடையவில்லை. வெகு உக்ரகத்தோடு பேசத் தொடங்கி "சீச்சி! வெளியே போ! மீசை முளைத்த ஆண் பிள்ளைகளாக உங்களை எல்லாம் ஈசன் பிறப்பித்தானே! அக்ரமப் பதரே! ஒரு பெண்பிள்ளை கடிதமெழுதாது எப்போது உதறித் தள்ளினாளோ, அதிலிருந்து மானமுள்ளவர்களாயின் மறுதரம் பேசுவார்களா! கேசவன் கதி யாதாயினும் உங்களைப் போன்றவர் களுக்கு என்ன வந்தது? இத்தகைய வார்த்தையை என்னிடம் பேச வேண்டாம்." என்று கூறிக் கொண்டே கட்டில் பக்கமாயிருந்த ஒரு பொத்தானை அழுத்தினாள்.
தூக்கம், மறதி இவ்விரண்டுக்கும் அடிமையாயுள்ளவர்களின் கதி அநோகதி தான். அவற்றை நமக்கு அடிமையாக்கினால்தான் காம் எந்தக்காரியத்திலும் வெற்றியடைய முடியும்.
உடனே இரு வீரர்கள்'உள்ளே நுழைந்தார்கள். அவர்களிரு வரும் நாயுடுவின் கையாட்கள். உடனே ஒருவன் துப்பாக்கியை, வந்த மனிதனின் முகத்திற்கு நேரே காட்டியபடி நின்றான். மற்றொருவன் சிறிய காமராவினால் ஒரு போட்டோ எடுத்து விட்டான். அதே சமயம் பரிமளா வெகு வீரத்துடன் எதிரில் வந்து "அடேய் திருட்டுப் பயலே! இந்த இடத்தை நீ என்ன வென்று எண்ணிக் கொண்டு வந்தாய்! இப்பொழுது நான் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லப் போகின்றாயா, அன்றி துப்பாக்கிக்கு இரையாகப் போகின்றாயா! இந்த நிமிடத்தில் உன்னுடைய உயிர் உன் வசமில்லை; என் கையில் இருக்கின்றது. ஜாக்ரதை." என்று கூறி விட்டுப் புகைப் படம் எடுத்த ஆசாமியை நோக்கி "ஐயா! அவனுடைய ஜேபிகளில் உள்ள கடிதங்களை வெளியில் எடும்" என்று ராணிபோல ஆக்ஞாபித்தாள்.
அச்சமயம் பரிமளவல்லியின் முகத்தில் தோன்றிய வீரத் தன்மை பொருந்திய ஜாஜ்வல்யமான களையைக் கண்டு அவ்விரு வீரர்களும் பிரமித்தார்கள். அல்லி ராணியாக அவள் முன்னர் நடித்ததை அப்போது அவளுடைய தோற்றம் நினைப்பூட்டியது. உடனே அந்த மனிதன் வந்த ஜமீந்தாருடைய சட்டையிலுள்ள சகலமான பைகளையும் பார்த்து அதிலுள்ள கடிதங்களை எடுத்துப் பரிமளாவினிடத்தில் கொடுத்தான். பரிமளா அவைளைப் படித்துக் கொண்டே வருகையில் முக்கியமான கடிதங்கள் சில கிடைத்தன. அவைகளில் ஒன்று பின் வருமாறு:-
இந்த காலத்தில் வெளிடம்பம் உள்ளவர்களே சுகமாகக் காலந்தள்ளுகி றார்கள். எவ்வளவு செல்வமும் செல்வாக்குமிருந்தாலும் வெளிப்பகட்டில்லா விடில் அவர்கள் பல விதமான தொல்லைகளுக் குள்ளாகின்றார்கள்.
“கனம் ஐயா! நீங்கள் சொல்லியதுபோல நான் இங்கு கல்யாண வீட்டிற்கு வந்து சேர்ந்து விட்டேன். இடம் வெகு சௌகர்யமாய் இருக்கிறது. நீங்கள் சொல்லிய படியே. அவன் தாயார் எழுதுவதுபோல எழுதி நேற்றைய தினமே தபாலில் போட்டு விட்டேன். அது போய்ச் சேர்ந்திருக்கும். இனி கவலை வேண்டாம்; என்னுடைய முதல் வேலையைச் செய்து விட்டேன். அதற்காக எனக்குச் சேர வேண்டிய மிச்சம் 500 ரூபாயை உடனே அனுப்பவும்; இல்லையேல் ஆபத்துதான்; ஜாக்ரதை!
முத்தன்"
அதைப் படித்ததும் பரிமளாவின் ரத்தம் கொதித்தது. வீர கர்ஜனை செய்தவாறு ;"அடே சண்டாளா! நான் நினைத்த வாறே முடிந்திருக்கிறது. மோசக்காரப் படுபாவி! வீனாச காலத் திற்குத் தான் விபரீத புத்தி! சீச்சி! வெட்கங் கெட்ட சோதாப் பயலே" என்று திட்டியபடியே மற்றொரு வீரனையும் துப்பாக்கி யைப் பிடிக்கச் செய்து வேறொரு கடிதத்தைப் படிக்கலானாள்.
"ஜம்புலிங்கம்!
என்னுடைய வார்த்தையை இப்போதாவது கேட்டு நடக் கப் போகிறாயா இல்லையா! ஊரார் வீட்டுப் பெண்ணை உன் : காலில் கட்டி விட்டு நாங்கள் பெருத்த கஷ்டத்தை அடைகின்றோம். இங்கு சாப்பாட்டிற்கு மில்லாது திண்டாடுகையில் உனக்கு தினம் நாடகம் என்ன! கூத்து என்ன! உன் அனியா யத்தைக் காதில் கேட்கக் கூடவில்லை. நீ இவ்விதமே செய்து கொண்டிருந்தால் தற்கொலை செய்து கொண்டு உயிரை விடப் போகிறேன். நீ செய்யும் அனியாயம் உனக்கு இப்பொழுது தெரியா விடினும் கடவுளின் முன்பு நீ ஒரு நாளைக்கு ஒப்புக் கொள்ள வேண்டு மென்பதை மறக்காதே! உன்னுடன் பிறந்த சோதரியை வயிறெரியச் செய்யும் பரிபவம் ஒன்றே போதுமானது. ஜாக்ரதை உடனே நீ இங்கே வந்து சேரு.
இங்ஙனம்
சோமு"
தினம் பத்திரிகைகளும் புத்தகங்களும் படிப்பதால் உலக ஞானம் விருத்தி யடைவதோடு ஒன்றினின்று வேறொரு விஷயம் மனத்தில் தோன்றுகின்றது. அதோடு பல திறப்பட்ட மனிதர்களுடன் பழகி அவர்களது கடையுடைபாவனை களைக் கவனிப்பதால் உண்டாகும் ஞானம் அபாரமானது. இதை எந்தப் பள்ளி யிலும் கல்லூரியிலும் கற்க முடியாது.
மற்றொன்று.
"உன்னைச் சகோதரன் என்று வாயினால் கூறவும் காத்தினால் எழுதவும் என் மனம் கூசி வெறுக்கின்றது, உடன் பிறந்தவனென்று பெயர்கொண்ட உதவாக் கட்டையே! ஆதியிலும் என்னை அடியோடு கெடுத்தீர்கள். நம்முடைய ஏழ்மை நிலைமையின் கொடுமையினால் என்னை ஒரு தனம் படைத்த கிழவனுக்குக் கொடுத்து என்னைப் பாழ்ப்படுத்தி விட்டீர்கள். கிழவனின் பொருளைக் கொள்ளை யடிக்க எண்ணியே என்னைக் கொள்ளை கொடுத்தீர்கள்! கிழவனின் பணத்தையும் கரைத் தாய்! கிழவனையும் எமனுலகம் அனுப்பினாய் இரண்டு குழந்தைகளுடன் சந்தியில் நின்ற கைம்பெண்ணைக் கலங்கச் செய்கிறாய்!
என்னுடைய சகல வாழ்வையும் பாழ்ப்படுத் தினாய்! என்னிடம் மிச்சமிருந்த சில நகைகளையும் திருடன் போல எடுத்துக் கொண்டு சென்றதுமன்னியில் அது விவ ரத்தைக் கேட்டதற்கு நிர்த்தாக்ஷண்யமாய் நல்லதங்காளைப் போல குழந்தைகளைக் கிணற்றில் தள்ளி நீயும் விழு' என்று கையும் மனமும் துணிந்து எழுதினாய்! அடேய் படுபாவி! உன் மனம் துணிந்தது போல உடன் பிறந்த பாசத்தினால் என் மனம் இன்னும் துணிவு கொள்ள மாட்டேனென்கிறது, இதுவே கடைசிக் கடிதம் என் வீட்டையும் அடகு வைத் தாய். அதற்கு வரி கட்ட என்னிடம் ஒரு காசும் இல்லை. வீட் டுக் கடன்காரன் வீட்டை ஏலத்திற்கு விடுவதாக நோட்டீஸ்
கொடுத்து விட்டான்; படு பாவி உன்னால் நான் உயிரிழக்கப் போகிறேன். இனி மேல் நான் தயை தாக்ஷண்யம் பார்க்கப் போவதில்லை. என்னுடைய மனம் முறிந்து விட்டது. நான் கட்டாயம் இனி மேல் உன் மீது வழக்கு தொடுக்கப் போகிறேன்; அம்மட்டு மின்றி நீ அந்த நாடகக்காரப் பொன்னுசாமி யைக் கொலை செய்ய நினைத்திருக்கும் பாதகருடன் சம்பந்தம் வைத்துக் கொண்டிருப்பதை நான் போலீஸாரிடம் உளவு கூறி உன்னைச் சந்தி சிரிக்கச் செய்வேன்! உன்னுடைய இந்த சதியாலோசனையை இன்றுதான் அறிந்தேன்! நீ இக்ஷணமே அதிலிருந்து விலகிக் கொள். இல்லையேல் அனியாயமாய் மாண்டு விடுவாய் ! உன்னுடைய மோசம் வெளியான விவரத்தை நேரில் தெரிவிக்கின்றேன். உடனே இவ்விடம் வந்து என் பணத்திற்கு ஓர் வழி செய். இல்லையேல் நீ அதோகதி யாவாய்.
இங்ஙனம்
உன் சோதரி"
நெருங்கிய உறவினராயிருந்தும் நமக்கு எதிரிடையாகவே பேசி நமது பெயருக்கு இழுக்கைத்தேடி வைத்துவிட்டு, நம்மிடம் அதிக பிரீதியுள்ளவர்கள் போல சிலர் நடிக்கின்றார்கள். அப்படியிருக்தும் அவர்களுக்கு நம்மாலான உதவி ஏதேனும் செய்ய மறுக்க நமது மனம் இடந்தருவதில்லை.
மற்றொரு கடிதம்
"என் ப்ராண நாதா!
இது பரியந்தம் உங்களுக்கு ஒரு கடிதங்கூட எழுதாம லிருந்த நான் இக் கடிதம் எழுதுவது கண்டு நீங்கள் வியப்புறலாம். இன்றுதான் ஒரு முக்கியமான விஷயம் தெரிந்ததால் நான் இதை எழுதலானேன். நீங்கள் அக்ரமமாக ஜெமீந்தார் என்கிற பட்டத்துடன் பரிமளாவை அபகரிக்க எண்ணி இருப்பதாக உங்கள் சினேகிதன் பாலனால் தெரிந்து கொண்டேன். அந்த அக்ரமத்திலிருந்து உங்களை விடுவிக்கும் பொருட்டும், பரிமளா யார் என்பதை உங்களுக்கு எடுத்துரைக்கும் பொருட்டும் நான் இக் கடிதம் எழுதலானேன்.
அடிக்கடி தன் வீட்டிற்கு வருபவர் சில காலம் வராவிடில் அவருக்கு என்ன அசௌக்கியமோ என்று காரணத்தைத் தெரிந்துகொள்வோமென்ற எண்ணம் முன்னகருக்குத் தோன்றாது அவரைப்பற்றி தப்பபிப்பிராயங்கொள்கிறார். பிறகு உண்மையான நிலைமையை அறிந்ததும் வருந்த நேரிடுகின்றது.
எனது தாயாருடன் பிறந்த மாமன் சொக்கலிங்கம் என்பவர் மகா பரிசுத்தவானாயும், சீலராயும் இருந்தார். அவருடைய பாரியாளான பார்வதியம்மாளும் வெகு நற்குணவதியாய் இருந்து வந்தாள். அவர் மிலிடரி வேலையிலிருந்தார். கோமளா சிறு குழந்தையாக இருக்கையில், அவரது மனைவி கர்ப்பவதியாயிருந்தாள். அச்சமயம் அவர் ஓர் யுத்தத்திற்குச் சென்று சண்டை செய்யும்படியாக மேலதிகாரிகளிடமிருந்து உத்தரவு வந்து விட்டது. அதையவர் பார்த்ததும் இடி விழுந்தவர் போலானார். "நான் யுத்தத்திற்குச் சென்றால் இனி திரும்புவதேது! என் காலம் முடிந்து விட்டது. ஐயோ! மனைவியையும் குழந்தையையும் நடுச்சந்தியில் விட்டுவிடுகிறேனே!" என்று மிக்க விசனித்துப் புலம்பினார். அதிகாரிகளின் உத்தரவுப்படி நடக்காவிடில் உடனே கடுந்தண்டனை யடைய நேரும். ஆதலால் தன் முடிவை யறிந்தே சென்றார்; சென்றவிடத்தில் மாண்டார்.
பிறகு என் மாமி கருப்பமாயிருந்தது பெண் குழந்தையாகப் பிறந்தது. இரு குழந்தைகளுடனும் நிற்க நிழலின்றி தத்தளித்து என் தாயாரிடம் அண்டினாள். அக் காலத்தில் என் தாயார் அவள் மாமியார், மாமனாரின் ஆக்கினைப்படி நடக்க வேண்டிய நிலைமையிலிருந்த- மையினால் அவள் பயந்து நடுங்கி நடந்தாள். கொஞ்ச நாளாகியதும் என் பாட்டியும் தந்தையும் அவர்களைத் திட்டி விரட்டி விட்டார்களாம். அன்று மனத் துயரத்துடன் சென்ற என் மாமியும் இரு குழந்தைகளும் சென்றவிடம் தெரியாமல் போய் விட்டது. இன்று விவரம் விசாரித்ததில் கோமளாவென்ற பெயரை பரிமளாவென்று மாற்றிக் கொண்டிருப்பதாயும் அவள் ஏழ்மையின் கொடுமையினால் நாடகத்தில் நடித்ததாயும், அவள் மகா உத்தமி என்றும் தெரிய வந்தது. அதை அறிந்ததும் என் மனம் தத்தளிக்கின்றது. என் தாயார் தள்ளாத கிழவியாகிவிட்ட போதிலும்
ஒருவரைப்பற்றி முதலில் ஒருவித நல்ல அபிப்பிராயம் ஏற்பட்டுவிடின் அவர்கள் அதற்கு மாறாக நடந்து கொண்டாலும் ஏதோ கால வித்தியாசத்தினால் அவ்வாறு நடந்தார்களென்று சிலர் தேத்தாவு செய்துகொள்கிறர்கள். மற்றும் சிலர் அவர்கள் வேண்டுமென்றே அவ்வாறு நடந்துகொண்டார்களென்று தங்கள் முதல் அபிப்பிராயத்தை மாற்றிக் கொள்கிறார்கள்.
தன் அண்ணியையும் அண்ணன் குழந்தைகளையும் பார்க்க நாளை புறப்படப் போகிறாள். நீங்கள் அவர்களை ஏதாவது செய்து பெரும் பாபத்திற்கும் துன்பத்திற்கும் ஆளாக வேண்டாம். அவள் சாதாரணமான நாடகக்காரியல்ல வென்பதை இனிமே தெரிந்து கொள்ளுங்கள். இந்தக் கடிதத்தை நிராகரித்தால் உங்கள் கதி வெகு பயங்கரமாக முடியும். என் தாயார் அங்கு வரும் முன்னர் உங்களுக்கு இச் செய்தி எட்ட வேண்டு மென்கிற எண்ணங்கொண்டு இதை எழுதினேன். உஷார்! உஷார்!!
இங்ஙனம்
உங்கள் மனைவி
என்ற கடிதத்தைப் படித்ததுதான் தாமதம் பரிமளாவின் மனம் அப்போதடைந்த மாறுதலுக்கும் உணர்ச்சிக்கும் உவமை கூறவே சாத்தியமன்று! தன் பிதாவின் சரிதை தெரிந்ததனால் இன்ன தென்று கூறவியலாத நிலைமையை அடைந்து, அப்படியே நாற்காலியில் அமர்ந்தாள். அவள் மனத்தில் உண்டாகிய உணர்ச்சிகளை வெளியில் காட்டிக் கொள்ளாமல் உள்ளடக்கிக்கொண்டு வெகு உக்ரத்தோடு "அடேப் அக்ரமப்பதரே! இக்கடிதங்களையெல்லாம் படித்து விஷயத்தையறிந்தபின்னரா இங்கு துர் எண்ணங் கொண்டு வந்தாய்! சீச்சி! மடையா! இப்போது இந்த முதல் கடிதத்தின் தகவல் என்ன? எனக்குத் தெரியவேண்டும். அதை விவரமாகத் தெரி வக்காவிடின் உன்னுயிர் போய்விடும். என்னைச் சாமான்ய நாடகக் காரி என்ற துர் எண்ணங்கொண்டல்லவா நீ இந்தவிடத்திற்கு வந்தாய்! நான் நாடகவேடந்தாங்கி நடிப்பதுபோலவே உன்னைக் கொன்றுப் போடுகின்றேன். கேசவனை இத்தகைய குற்றத்தில் சிக்க வைத்ததற்கு நீதான் காரணம் என்பது இக்கடிதம் விளக்கிவிட்டது. உண்மையைக் கூறு" என்று ஒரு விழி விழித்தாள்.
சிலர் பாடவேண்டுமென்ற ஆசையினால் தங்கள் காதால் கேட்டதை, பதங்களும் உச்சரிப்பும் சரியாக இருக்கின்றனவா என்பதைக் கொஞ்சமும் கவனி யாது, தமக்குத் தோன்றியவாறு இழுக்கிறார்கள். இதனால் அந்த பாட்டிற்கே அகெளரவம் ஏற்படுவதைப் பற்றி அவர்கள் நினைப்பதே இல்லை.
முதலில் மிக்க தடதடலான உற்சாகத்துடன் வந்தவன் அங்கு நடக்கும் எதிர்பாராத சம்பவத்தினால் நடுநடுங்கி விலவிலத்துப் போய்விட்டான். அவன் உயிர் முக்கால் பாகமும் போய்விட்டதென்று கூறலாம்; துப்பாக்கியைப் பார்த்தவுடனே தலை தொங்கி விட்டது. இந்நிலைமையில் பரிமளாவின் மனோ உறுதியையும் வீரதீர பராக்கிரமத்தையும் கண்டு பிரமித்தான். அவளுடைய கேள்விகளும், அதிகார தொனியும் அவனைக் கலக்கிப் பயமாகிய சாகரத்திலாழ்த்தின. ஆகையினால் அவன் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் சிறிது நேரம் தத்தளித்தான். பிறகு தன்னுயிர் நிலைக்க வேண்டு மென்கிற பயத்தினால் பரிமளாவின் முகத்தைப் பரிதாபகரமாக நோக்கினான். தன்னுடைய கேவலமான நிலைமையை நன்றாகத் தெரிந்துகொண்டான். "சீச்சீ! இந்த அநியய காரியத்திற்கு உடந்தையாகிவிட்டோமே!" என்று வருந்தியவாறு பரிமளாவை நோக்கி "அம்மணி! நான் செய்தது தப்பிதந்தான்; என்னை விட்டுவிட வேண்டும். இது என்னுடைய குற்றம் மட்டுமல்ல. இதில் சம்பந்தப்பட்டுள்ளவரின் பெயரைக் கூறினால் நீங்களே நம்பமாட் டீர்கள்; அவரால் நாங்கள் கெட்டோம். நான் உண்மையைக் கூறிவிடுகிறேன். தாங்கள்மட்டும் தனித்திருக்கையில் அதை வெளியிடுகிறேன்"
பரிமளா-ஒகோ! இனி உன்னுடைய விஷயத்தில் ரகஸ்யம் வேறு வேண்டுமா!........ சரி; வீரர்களே! இவனை இவ்வறையிலேயே போட்டுப் பூட்டிவிடுங்கள்! என் எஜமானரும் நாயுடுவும் வந்தபிறகு தான் இவனை விடவேண்டும்; ஜாக்கதை.- என்று கூறி அவனை அவ் வறையிலேயே போட்டுப் பூட்டிவிட்டாள்.
ரயில், மோட்டார் முதலியவற்றில் போகும் போது அந்தந்த கட்டணத்திற்கு வேண்டியதைச் சில்லரையாக வைத்துக்கொள்வதே உசிதம். இல்லாவிடில் சில சமயங்களில் சில்லரைக்காக கால தாமதமாவதுடன் அவசரத்தில் அதை வாங்க மறந்துவிடவும் நேருகின்றது. சில புண்ணியவான்கள் அம் மாதிரி சமயத்தில் சில்லரை வைத்துக் கொண்டும் இல்லை யென்று சொல்லி முழுப் பணத்தையும் வாயில் போட்டுக் கொள்கிறார்கள்.
பிறகு பரிமளா தன் தாயாரிடம் சென்று வெகு சாதாரண மாகப் பேசுவதுபோலப் பேசத்தொடங்கி "அம்மா! நான் நேற்றிரவு ஓர் கனவு கண்டேன், அக்கனவு எனக்கே ஆச்சரியமாயிருக்கிறது. அதாவது, - ஏதோ ஒரு உருவம் என் முன்பு தோன்றுகின்றது. அதைப் பார்த்து நான் பயப்படுகிறேன்; அந்த உருவம் பயப்படாதே! கண்ணே! கோமளா!. நான் தான் உன் பிதா. நான் அநியாயமாய்ச் சண்டையில் இறந்துவிட்டேன். உன் தாயின் கருப்பத்திலிருந்த குழந்தையும் பெண் சிசுவாகப் பிறந்ததாகக் கேள்வியுற்றேன். உங்களைப் பார்க்க நான் ஓடிவந்தேன். நான் உன்னையொன்றும் செய்யமாட்டேன்; பயப்படாதே" என்று கூறி மறைந்தது."அம்மா! நான் எத்தனை தரம் கேட்டாலும் நீ தந்தை யின் விஷயத்தைக் கூறுவதே இல்லையே! இந்த கனவில் தெரிந்த விஷயம் உண்மையா அம்மா! என் தந்தை சண்டையிலா உயிர் துறந்தார்?" என்று கேட்டாள்.
இதைக் கேட்டதே பார்வதியம்மாளுக்கு மனம் திடுக்கிட் டது. "இது உண்மையில் கனவாகவிருக்குமா! அன்றி இவளுக்கு உண்மை எப்படியாவது தெரிந்துவிட்டதா!" என்ற பெருத்த சந்தேகம் உண்டாய்விட்டது. அவ்வாறு உண்டாகிய சந்தேகத்தை அறிந்த பரிமளா "அம்மா! உன்னுடைய முகமே கனவு உண்மையென்று எடுத்துக் காட்டுகின்றது. இனி இவ்விஷயத்தை ஒளித்து என்ன பயன்? எங்களுக்கு அதை அறிவித்தால் விசனமென்று நீ நினைக்கின்றாய்; அது எந்த காலத்திலாவது தெரியவேண்டாமா! அவரவர் செய்த பாப புண்ணியத்திற் கேற்றவாறு தானம்மா எதுவும் அமையும்: இந்த விஷயம் உண்மையா, அல்லவா?" என்று குழந்தையைப் போலக் கேட்டாள்.
ஏழ்மை நிலைமையிலுள்ளவர்களுக்குத்தான் தம்மை விடக் கேவலமான ஸ்திதியிலுள்ளோருக்குத் தம்மாலான வரையில் உதவ வேண்டு மென்கிற எண்ண முண்டாகின்றது. ஏனெனில் அவர்கள் கஷ்டத்தை அநுபவித்திருப் பதால் மற்றவர்கள் எப்படி கஷ்டப் படுவார்களென்பதை யறிய இடமிருக் கின்றது.
பார்வதி- கண்ணே! இந்த விஷயம் நீ கனவிலறிந்ததாக எனக்குத் தோன்றவில்லை. இவ்விவரங்கள் உனக்கு யார் மூலமாகவோ தெரிந்திருக்கவேண்டும். கண்மணி! பரிமளா! இனிமேல் நானாகவே விஷயத்தை யறிவிக்கலாமென எண்ணினேன். உன் தந்தையின் கடமை யொன்று உளது. அதை நிறைவேற்றுதற்கு உனக்குத் தக்க தருணம் வரும்போது நான் விஷயத்தை உரைக்க நினைத்தேன். அதற்குள்ளாகவே நீ யறிந்துவிட்டாய்.
பரிமளா:- அம்மா! என் தந்தையின் கட்டளையா! அது யாது! அதை என் எனக்கு இதுகால பரியந்தம். எடுத்துரைக்க வில்லை.உடனே அதைத் தெரிவி.
பார்வதி - பரிமளா! என்னுடைய கதையை நான் சொன்னால் பட்ட மரமும் பால் வடிக்கும்; செத்த பிணமும் உயிர் பெற்று எழுந்து விசனிக்கும். ஆதிமுதல் நான் சிறுமைப்பட்டது கணக்கு வழக்கில்லை. உன் தந்தையினால் பதமடைய நினைத்தேன்; அதுவும் என் துரதிருஷ்டத்தினால் மண்ணாகிவிட்டது. உன் தந்தை எந்த வேலையும் கிடைக்காமல் மிக்க வருத்தப்பட்டுக்கொண்டிருந்தார். அத் தருணம் மிலிடரியில் வேலை கிடைத்தது. அதில் சேர மனமில்லாமலேயே சேர்ந்தார். சேர்ந்த சில காலத்திற்குப் பிறகு மிலிடரி கூட்டத்தார் மிருகங்களைக் கொல்வதற்காகவும் மற்றவர்களுக்கு துப்பாக்கி சுடுவதற்குக் கற்றுக் கொடுப்பதற்காகவும் காட்டிற்குச் சென்றார்கள். அதில் உன் தந்தையும் ஒருவராவர். அவர் ஒரு பன்றியைச் சுடுவதற்குத் துப்பாக்கியைப் பிரயோகித்தார்; அந்த துப்பாக்கிக் குண்டு பன்றிமேல் விழாமல் காட்டில் விறகுதலையன் ஒருவன் சென்றான்; அவன்மீது பட்டுவிட்டதாம். உடனே அவன் உயிர் துறந்தானாம். அந்த எதிர்பாராத கோரமான கொலையைத் தன் கையினாலேயே செய்துவிட்ட கலக்கம் அவரைப் பெரும்பாலும் வாட்டிவிட்டது; வேலையை விட்டுவிடவே நினைத்துவிட்டார்.
அத் தருணமே சண்டையும் வந்துவிட்டது. அதற்கு அவர் கட்டாயமாகச் செல்லவேண்டியிருந்தது. இல்லையேல் அவரை அவர்களே சுட்டுக் கொன்றுவிடுவார்களாம். அவர்கள் கையினால் இறப்பதைவிட அங்கு சென்றுதான் சாவது மேல் என நினைத்து "இனி நான் திரும்ப மாட்டேனென்றும், ஒருக்கால் திரும்பினால் பெருத்த புகழும் பதவியும் கிடைக்கும் என்றும் அப்படித் திரும்பாது இறந்துவிட்டால் எனது குடும்பத்திற்கு சர்க்கார் ஏதேனும் பொருள் உதவி தருவர் என்றும் அங்ஙனம் பொருள் கிடைத்தால் என் கையினால் கொல்லப்பட்ட மனிதனின் குடும்பம் என்னால் அதோகதியாகி விட்டதாகையினால் அந்தத் தொகையை அவர்களுக்குக் கொடுத்து விடு என்றும், நீ எவ்விதமாயினும் பிச்சை எடுத்துச் சாப்பிடு என்றும் கூறிச் சென்றார்.
இந்தக் காலத்தில் எந்த காரியமாகச் சென்றாலும் அங்குள்ள பணியாளர்களின் கையில் வெள்ளையப்பனை வைத்தால் தான், அக் காரியம் நிறைவேறுகின்றது. நமது கடமையை சரிவரச் செய்வோமென்கிற எண்ணம் அவர்களில் பெரும்பாலோருக்கு இருப்பதில்லை.
அவர் சென்ற சில மாதத்திற்குள்ளேயே உயிர் நீத்தார். அவருடைய வாக்கின்படியே நான் அவருக்காகக் கொடுக்கப்படும் தொகையை அந்த விறகுதலையனுடைய குடும்பத்திற்கே கொடுத்து வருகிறேன். இந்த விஷயத்தை இதுபரியந்தம் நான் பிறரிடமும் வெளியிடவில்லை; உங்களிடமும் கூறவில்லை. உன்னுடைய விவாகம் வரையில் அல்லது மைனர் நீங்கும் வரையில் தான் அந்தத் தொகை கொடுக்கப்படும் என்றும் பிறகு கொடுக்கப்படாதென்றும் முதலிலேயே சர்க்காரின் அறிக்கையாதலால் அந்தத் தொகை இன்னும் சில நாட்களோடு நின்றுவிடும். அதன் பிறகு அவர்களுக்கு நம்மால் ஏதேனும் உதவி செய்யவேண்டிய விஷயத்தை நாம் கவனிக்க வேண்டும். பரிமளா! உனக்குக் கடவுள் தன் அனுக்ரகத்தினால் அளவற்ற செல்வத்தைக் கொடுத்திருக்கிறார். சர்க்காரின் தொகை நின்றவுடன் அந்தத் தொகையை நாம் நமது ஆயுள்கால பரியந்தம் அவர்களுடைய குடும்பத்திற்கு ஆதரவு அளித்துவிட்டால் உன் தந்தையின் ஆன்மா சாந்தி யடைந்துவிடும். அவருடைய உதிரத் தில் பிறந்ததற்காக நீ இதைச் செய்யக் கடமைப்பட்டிருக்கிறாய். இதை உன்னிடம் சரியான சமயத்திலேயே சொல்ல வேண்டுமென்பது எனது எண்ணம், இன்று தெரிவித்தேன்" என்றாள்
நாம் யார் முன்பு அவர்கள் வீட்டில் கை கட்டி, வாய் புதைத்து அவர்கள் 'உட்கார்', என்று சொல்கிற வரையில் நின்று கொண்டிருக்க வேண்டி யிருக் கின்றதோ, அவர்களுடனேயே சில சமயங்களில் சமமாக உட்காரவும், மற்றும் சில சமயங்களில் காம் உட்கார்ந்து அவர்கள் நிற்கும் படியாகவும் நேருகின்றது. இடம், காலம் முதலியவை பல வித மாறுதல்கள் உண்டாக்குகின்றன.
இது கேட்ட பரிமளா மிக்க பரபரப்புடன் "அம்மா! இது விஷயத்தில் நீ மிக்க தாமதம் செய்து விட்டாய். இவ் விவரம் எனக்கு முந்தியே தெரியுமாயின் நான் இத்தனை நாளைக்கு என்னால் கூடிய எத்தனையோ உபகாரம் செய்திருப்பேனே! நமது போஷகர் வந்த பிறகு அதற்குத் தக்க வழி நான் செய்கிறேன்; கவலைப்பட வேண்டாம்" என்று தேற்றினாள்.
பிறகு நாயுடுவுக்கு உடனே வரும்படியாக ஒர் தந்தி அனுப்பினாள். கேசவனின் உருவமே அவன் கண் முன்பு தோன்றிக் கொண் டிருந்தது. அதே விசனத்துடன் கடவுளை வேண்டிக் கொண்டிருக்கை யில் "பார்வதீ! என் செல்வமே! கோமளா! எத்தனையோ வருடங்களுக்கு முன் பறிகொடுத்துவிட்ட உங்களைப் பார்க்கும்படியாக இன்று நேர்ந்ததே!" என்று பரிமளாவின் அத்தை கூறிக் கொண்டே வந்து பரிமளாவைக் கட்டிக் கொண்டாள். அவளுடன் அவளது மகளும், மகனும் வந்தார்கள். உள்ளே அடைபட்டிருக்கும் மனிதன் அவ்விருவரையும் சாளரத்தின் வழியாகப் பார்த்த உடனேயே அவனது வயிற்றில் இடி இடித்தது. அவன் தன் கதி இதோடு முடிந்து விட்டதாகவே எண்ணிச் சோர்ந்து விட்டான்.
சிலரைக் கண்டதும் காணாதது போலச் சில சமயம் நழுவி விடுபவர்கள் பிறகு ஒரு சமயத்தில் அவர்களோடு நெருங்கிப் பேச நேர்ந்து விட்டதும் தங்களது முந்தின நடத்தைக்காக வருத்தப் படுகின்றார்கள்.

