சினிமா நடிப்பு-இனிய சந்திப்பு

கோமதி,பாலா, கங்காதரன் ஆகியோர் “போலீஸ்” என்ற குரலைக் கேட்டு மிக்க கலக்கத்தை யடைந்து தத்தளிக்கின்றார்கள். கதவைப் பலமாகத் தட்டும் சத்தம் கேட்டதும் "ஐயோ! பேராபத்து வந்து விட் டதே! என்ன செய்வது? இவரை எவ்விதம் மறைப்பது?" என்ற கலக்கம் உண்டாகி விட்டது. "கதவைத் திறக்கின்றீர்களா, உடைத்து விடட்டுமா !" என்று வெளியில் குரல் கேட்டதும் பாலா ஒன்றுமே தோன்றாதவளாய் தம்பித்து விட்டாள்; எனினும் எப்படி யாவது தன் தந்தையை இச் சமயம் மறைத்து வைத்துத் தப்பித்துக் கொண்டு பிறகுதான் வேறு மார்க்கம் தேட வேண்டும் என்று தீர்மானித்து, உடனே ஒரு புடவையை எடுத்து கங்காதானுக்கு உடுத்தி, முட்டாக்கு இட்டுத் தன் தாயின் படுக்கையில் அவனைப் படுக்க வைத்து, தாயை எழுந்து தைரியமாய் உட்காரச் செய்து, கங்காதானின் கால் பாகத்தில் கோமதியும், தலைப் பாகத்தில் பாலாவும் உட்கார்ந்து கொண்டார்கள். கங்காதரனை பலமாக "ஐயோ! அப்பா!' என்று கத்தச் செய்ததோடு மஞ்சளும் சுண்ணாம்பும் குழைத்து முக க்ஷவரம் செய்த இடத்தில் அதை மறைக்கும் பொருட்டு நன்றாகத் தடவி விட்டதோடு "தலைவலி இன்னமும் தீர வில்லையா?" என்று கேட்டவாறு நீலாவைக் கதவைத் திறக்கச் செய்தாள்.

சிலர் பார்ப்பதற்கு வெகு முடுக்காகவும், கண்டிப்பாகவு மிருக்கிறார்கள். ஆனால் அவர்களுடன் நெருங்கிப் பழகிய பின் அவர்கள் மிகவும் இளகிய நெஞ்சை யுடையவர்களென்பது நன்றாகத் தெரிகின்றது.

நீலா கதவைத் திறந்த உடனே போலீஸ்காரர்கள் இரண்டு பேர் உள்ளே நுழைந்து “எங்கே! எங்கே! அந்த திருட்டுக் கொலைக்காரன் எங்கே!" என்று கூறிக் கொண்டே சுற்று முற்றும் தேடுகையில் "ஐயோ! என்னைக் காப்பாற்ற வேண்டும்; காப்பாற்ற வேண்டும்" என்று கூனிக் கொண்டே இரு பெண்களும், ஒரு ஆண்பிள்ளையும் அவ் வீட்டுப் புறக்கடைப் பக்கத்திலிருந்து ஓட்டமாய் ஓடிவந்து “ஹா! ஹா!" என்று தத்தளித்தார்கள்.

அவ்விதம் நடக்கும் என்று சற்றும் எதிர்பாராத பாலா, கோமதி முதலியோர் நடு நடுங்குகின்றார்கள். வந்த பெண் பிள்ளைகளை அந்த ஆள் இழுத்து பலாத்காரம் செய்கிறான். "ஐயோ! அம்மா!" என்று இருவரும் கத்திக் கதறிக்கொண்டு மூலை மூலையாக ஓடுகிறார்கள். "எனக்கு ஆபத்தில் ஆதரிப்போரில்லையா! கடவுளே!' என்று கத்தியவாறு ஒரு பெண் கீழே மூர்ச்சையாகி விழுந்து விட் டாள்.

இது கண்ட பாலா தட தடவென்று எழுந்து, "ஐயா ! இதென்ன அக்கிரமம்! போலீஸ்காரரின் முன்னிலையில் இத்தகைய அநியாயம் நடக்குமா? ஐயோ! போலீஸ்காரரே! இந்த சம்பவத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டு நிற்பதற்கா நீங்கள் வந்தீர்கள்! இந்த பெண்பிள்ளை மூர்ச்சித்து விட்டாளே! இந்த கதிகாலத்தில் இத்தகைய அக்கிரமங்கள் நடப்பது தான் தருமமா?" என்று கூறிக் கொண்டே இருக்கையில் இன்னும் இரண்டு தடியர்கள் வேகமாக வந்து போலீஸ்காரர்களைக் கட்டி உருட்டி விட்டார்கள். கீழே கிடக் கும் பெண்ணைப் பார்த்து, ஒருவன் "ஹா! கமலவல்லீ! பிண மானாயோ! சண்டாளன் கைக்கு இரையானாயோ!" என்று புலம்பிய வாறு தன் மடியிலிருந்த துப்பாக்கியை எடுத்து முன் வந்தவனைச் சுட முயன்றான்.

இந்த விபரீதச் செய்கையைக் கண்ட பாலா முதலிய எல்லோ ரும் நடு நடுங்கி விட்டார்கள்; எனினும் பாலா வெகு தைரியமாய் "ஐயோ! இதென்ன அக்ரமம்! நீங்கள் யார்? இவ்விதம் அன்னியர்களின் வீட்டில் வந்து இத்தகைய விபரீதச் செய்கைகளைச் செய்கின்றீர்களே! துப்பாக்கிப் பிரயோகமென்ன! கொலை செய்வதென்ன! இதென்ன விபரீதம்!" என்று கூறியவாறு துப்பாக்கி பிடித்திருக்கும் மனிதனின் கரத்திலிருந்து வெடுக்கென துப்பாக்கி யைப் பிடுங்கிக் கொண்டாள்.

எப்பொழுதும் தேனொழுகப் பேசி உபசாரஞ் செய்பவர்கள் உண்மையில் அதிக அழுத்தமும், கன்னெஞ்சு முடையவர்களா யிருக்கிறார்கள். "வெளுத்த தெல்லாம் பாலல்ல" என்பதை அது நிரூபிக்கின்றது.

அந்த மனிதன் பாலாவின் செய்கைக்கு நகைத்தவாறு, "ஆ! நான் விட்டேனா பாரு. இதோ கத்தி இருக்கிறது." என்று கூறிக் கொண்டே கத்தியை எடுத்துக் குத்த முயன்றான். இதற்குள் கீழே விழுந்து கிடக்கும் பெண்மணி "தாகம் தாகம்" என்று சைகை செய்தாள். இதைக் கண்ட பாலா ஒடோடியும் தண்ணீர் கொணர்ந்து அந்த பெண்பிள்ளையின் வாயில் வார்க்கப் போகையில் பாலா திடுக் கிட்டாள். "ஹா! அம்மா! நாம் ஏமாந்தோம். இதில் ஏதோ மோச மிருக்கிறது. பெண்பிள்ளையாக நடித்தது ஓர் ஆண் பிள்ளையே யாகும்." என்று பாலா கத்திக் கொண்டே விலகிக் கொண்டு மற்றொரு பெண்ணைப் பார்த்தாள். அவனும் ஆண்பிள்ளையாகவே இருப்பது கண்டு நடுக்கலுற்றாள்.

இதைக் கண்ட எல்லோரும் கடகடவென்று நகைத்து, எழுந்து நின்றார்கள். பாலாவுக்கோ ஒன்றுமே அர்த்தம் விளங்க வில்லை; விழிக்கின்றாள். எனினும் தைரியத்தை விடாமல் "ஐயா! இதென்ன நகைப்பு! என்ன செய்கை! ஒன்றும் எனக்கு விளங்க வில்லையே!" என்றாள்.

அதற்கு அங்கு வந்தவர்களில் முதலாளியாகியவன் "அம்மணீ! பயப்படவேண்டாம்! எங்கள் வேலை முடிந்தது; நாங்கள் சென்றுவருகிறோம். எங்கள் வரலாற்றைத் தெரிவிக்காமல் சென்றால் தங்கள் மனம் எவ்விதம் சமாதானமாகும். அம்மணீ! இந்த ஊரில் ஓர் சினிமா படமெடுக்கும் கம்பெனி நாங்கள் வைத்திருக்கிறோம். அதில் முதன்முதல் ஒரு கதையை நடிக்கப் பழக்குகின்றோம். அக்கதையில் இத்தகைய சம்பவம் வருகின்றது. அந்த பாகத்தைத் திறமையாக நடிக்கின்றார்களா! அதனால் பிறருக்கு உண்மையிலேயே அதற்கு வேண்டிய பயம், அச்சம், முதலிய உணர்ச்சிகள் உண்டா கின்றனவா! என்று பார்ப்பதற்கே திடீரென்று ஒரு வீட்டில் புகுந்து இந்த பாகத்தை நடிக்கச் செய்தேன். உங்களுக்கேற்பட்ட உணர்ச்சி களையும், மற்றையோரின் பீதியையும் கண்டு இவர்களின் நடிப்பு நன்றாக விருக்கிறதென்று அறிந்தேன். அம்மணீ! அனுமதி இன்றி உள்ளே வந்ததற்குக் கோபிக்கவேண்டாம். நடிப்புத் திறமையைக் காணவே அங்ஙனம் செய்தோம். இங்கு நடித்ததால் உங்கள் மூலம் இன்னும் சில விஷயங்கள் நடிக்கக் கற்றுக்கொண்டோம். இக்கம்பெனியில் பெண்கள் பாகத்தை பெண்களே நடிப்பதற்கான ஏற் பாடு செய்திருக்கிறது. பிரியமிருப்பின் நீங்கள் யாரேனும் சேரலாம். வித்தியாசம் எண்ணவேண்டாம்" என்றான்.

சங்கீதம் தெரிந்தவர்கள் இருவர் ஒரு இடத்தில் சந்தித்தால் "அவர்கள் தான் முதவில் பாடட்டுமே" என்று ஒவ்வொருவரும் சொல்லிக்கொண்டே இருந்துவிட்டுக் கடைசியில் ஒருவரும் பாடாமலே இருந்து விடுகிறார்கள்.

இதைக் கேட்ட பாலா முதலிய எல்லோருக்கும் பெரும் ஆச்சரியமுண்டாகி விட்டது. "அடாடா! ஒரு க்ஷண நேரத்தில் ஏமாந்து விட்டோமே! படக்காக்ஷிக்காரர்களா நீங்கள்! என்ன வியப்பு! என்ன சாமர்த்தியம். ஆகா! உண்மையிலேயே ஏதோ பெரிய விபரீதமான கொலை இவ்விடத்தில் நடக்கப்போகிறது. அதனால் எங்களுக்கும் பேராபத்து நோப்போகின்றது என்றல்லவோ நான் எண்ணிவிட் டேன். என்ன பயங்கரம்!" என்றாள்.

வந்தவன்.- அம்மா! அந்த துப்பாக்கியைக் கொடுங்கள். அது வெறும் துப்பாக்கி. தோடா இல்லை. இக்கத்தியும் சாதாரண அட்டையில் செய்த கத்தி. இன்று நடிப்பின் திறமையைக் கண்டு கொண்டு நாளைய தினம் படம் பிடிக்கலாமென்று உத்தேசம். அம் மணீ! நாங்கள் உத்தரவு பெற்றுக்கொள்கிறோம். இன்று நடந்த சம்பவத்திற்கு எங்களை மன்னிக்கவும். இப்படியே ஏதேனும் ஒரு சமயம் நடிக்க சந்தர்ப்பம் கிடைத்தால் இவ்விடம் வருவோம். வித்யாசமாக எண்ணவேண்டாம்." என்று கூறி விடைபெற்றுக்கொண்டு எல்லோரும் போய்விட்டார்கள்.

நாம் யாரைக் கண்டு பேசுவதற்குப் பயந்தோ சங்கோஜப் பட்டோ பின் வாங்கி நின்றோமோ அவர்களிடத்திலேயே பின்னர் ஒரு காலத்தில் நெருங்கிப் பேசி மிகவும் அக்தரங்கமான விஷயங்களிலும் அவர்களது ஆலோசனைப்படி நடக்க வேண்டி நேருகின்றது.

பிறகு பாலா பெரு நகை புரிந்தவாறு "அம்மா! உலகம் எவ் விதமிருக்கின்றது பார்த்தாயா! உண்மையில் போலீஸ்காரர்கள் தான் வந்துவிட்டதாக எண்ணி அப்பாவுக்கு இத்தகைய மொட்டச்சி வேஷங்கள் போட்டு நாமும் நடித்தோமே! இவ்விதம் திடீரென்று வந்து தடபுடல் செய்தால் என்ன நினைப்பது?" என்றாள்.

கங்காதரன்.--கண்மணி! பாலா! எனக்கு ஓர் தோன்றுகின்றது. எந்தவிதமான சம்பவத்தை உண்டாக்கியபோதி லும் கடவுள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு நன்மையை வைத்திருப்பார் என்பது பெரியாரின் வாக்கு; இன்று இந்த அதிசயமான சம்பவத்திலும் ஒருவிதமான நன்மை நமக்கு ஏற்படக்கூடுமென்று நான் நினைக்கின்றேன்! என் மனத்தில் கடவுள் அத்தகைய எண்ணத்தை உண்டாக்குகின்றார். அம்மனிதன் கேட்டதுபோல நாம் பிரியப்பட் டவர்கள் இந்தப் படக்காக்ஷியில் நடிக்கலாமல்லவா! என்னை என்னவோ ஒரு பெருங் குற்றம் சூழ்ந்துகொண்டிருக்கின்றது. நான் எந்த விடத்திலிருப்பினும் அவ்வாபத்து துடர்ந்து வந்தாலும் வரலாம். அவ்வாறு வந்தால் தப்புவதற்கு முடியாது, நான் இக்கம் பெனியில் சேர்ந்து அவர்களுடனேயே சுற்றிக்கொண்டிருக்கலாமா என்று தோன்றுகின்றது. ஏனெனில் படம் பிடிப்பவர்கள் ஒரே இடத்தில் எடுக்கமாட்டார்கள். பல இடங்கள் சுற்றுவார்கள். அவர்களோடு நான் சென்று சேர்ந்துவிடுகிறேன். அதோடு என்னைப் பார்த்தால் சாதாரணமாக அடையாளம் தெரியாது. நான் என்னோடு நீலாவையும் அழைத்துக் கொண்டு அப்படக் காட்சியில் சேர்ந்து நடிக்கிறேன். அவளோ சிறுமி. என்னை யப்படி கண்டு பிடித்துக் கேட்டால் நான் நீலாவுடன் தப்பித்துக் கொள்ளலாம் என்று தோன்றுகின்றது. ஆதலால் என்ன சொல்கிறீர்கள்?

சில அச்சாபீஸ்களில் ஆரம்ப முதல் வேலையை வெகு ஒழுங்காகவும் திருப்திகரமாகவும் செய்து அது முடிவு பெறுகையில் ஒரு சிறிய விஷபத்தில் தப்பு செய்து முழு வேலையையும் கெடுத்து விடுகிறார்கள். குதிரைப் பந்தயத் தில் வெகு ஜோராக முன்னால் வந்த குதிரை கடைசி நிமிஷத்தில் திடீரென்று நின்றோ,கீழே விழுந்தோ அபஜெயத்தை யுண்டாக்குவது போலிருக்கின்றது

பாலா - இதென்ன திடீரென்று ஏதோ பெரிய யோசனை செய்துவிட்டீர்களே! நீங்கள் குற்றவாளி என்ற பயத்துடனிருப்பவர்கள் ஒளிந்து மறைவிடத்தில் இருப்பின் நலமா! அன்றி பகிரங்கமாகப் படக்காட்சியில் சேருவது நலமா என்பதை யோசித்துப் பாருங்கள். நான் இது விஷயமாக உடனே பதில் கூறமுடியாது. சற்று நிதானித்து யோசித்துச் சொல்கிறேன்.

கோமதி;- பாலா! அப்பா சொல்வது எனக்கும் சரி என் தோன்றுகின்றது. ஏனெனில் அவர் எந்தவிதமாவது தப்பித்துக் கொள்ளும் வழியைச் செய்யவேண்டுவது நமது கடமையாகும். அவர் யாரோ சினிமாவில் நடிப்பவர் என்ற நிலைமையில் இந்த தீவை விட்டுக் கடந்து விட்டால் பிறகு நாமும் எந்தவித மார்க்கத்தைச் செய்தேனும் நமது தாய் நாட்டிற்குச் சென்றுவிடலாம். ஆதலால் அவருடைய விருப்பப்படிக்கு நீலாவையும் உடன்கூட்டி யனுப்பு வோம். நீலா! என்ன சொல்லுகிறாய்! எந்த சமயத்திலும் உன் சகோதரியின் சாமார்த்தியத்திற்கு நிகராக நீயும் நடக்கவேண்டும். நீ உன் பிதாவுடன் தனித்துச் சென்ற பிறகு அவருடைய உயிரைக் காப்பாற்றக்கூடியவள் நீதான். தெரியுமா! என்ன சொல்லுகிறாய்?

நீலா - நான் எல்லாவற்றையும் கவனித்தேன் வாஸ்தவம்தான். அப்பா சற்றுமுன் தெரிவித்ததுபோல எந்த சம்பவத்திலும் கடவுளின் மறைந்த நோக்கமும் நன்மையும் இல்லாமலில்லை. அதாவது இங்கு வந்தவர்களை நீங்களும் கவனித்தீர்கள்: நானும் கவனித்தேன். நீங்கள் ஆட்களின் செய்கையை மட்டும் கவனித்தீர்கள். நான் ஆட்களையே கவனித்தேன். அவர்களில் ஒருவன் அதாவது பிறகு ஓடிவந்தவர்களில் ஒருவன் முகம் அசல் அம்மாவின் முகம்போலவே இருக்கின்றது. அவ்வாறு அவனுக்கு நம்முடைய தாயாரின் முகம் இருக்கவேண்டிய காரணம் என்ன என்று யோசித்தேன்! அந்த தடபுடலில் அதை வெளியிடலாகுமா! கூடாதே என்று அஞ்சினேன்; பயந்தேன். அம்மா! நீ எங்களுடைய அண்ணன்மார் இருவரை இழந்துவிட்டதாக அடிக்கடி தெரிவிப்பாயே! அவர்களில் ஒருவனாக அம் மனிதனிருக்கக்கூடுமோ என்று என் மனம் அப்போதிலிருந்து சந்தேகப்படுகின் றது. முதலில் அந்த சந்தேகம் நிவர்த்தியான பிறகு நாம் மற்றைய விஷயங்களை யோசிக்கலாம் என்று எனக்குத் தோன்றுகின்றது" என்றாள்.

ஒரு காரியத்தைச் செய்ய வேண்டுமென்று ஒருவர் பலதரம் கெஞ்சிக் கேட்டும் அதற்கு ஒத்துக் கொள்ளாதவர், அதே காரியத்தைப் பற்றி வேறொருவர் கேட்கையில் முதல் தடவையிலேயே அதற்குச் சம்மதித்துவிடில், அதனால் முதலில் கேட்டவர் மற்றவரை உயர்த்தித் தன்னை அவமதித்து விட்டதாக நினைக்கவேண்டி சேருகின்றது. ஆனால் உண்மையில் அவ்விதமில்லை; ஏதோ சந்தர்ப்பத்தை உத்தேசித்து அவ்வாறு செய்தது என்பது அவர்கள் அறிவதில்லை.

இது கேட்ட மூவரும் வியப்புற்று "ஆ அப்படியா! ஐயோ! இந்த தடபுடலில் நாங்கள் அவனைக் கவனிக்கவில்லையே! என் கண்மணி கேசவனோ! அன்றி மருதப்பாவோ! இருவரையும் இனி நான் உயிருடன் காண்பேனா! ஆ! நீலா! நீ இச்செய்தியைக் கூற பயப்படலாமா? இதை அப்போதே எங்களில் யாரிடமாவது சொல்லி இருக்கலாகாதா! இனிமேல் நாம் அவர்களை எங்கு காண்பது? ஐயோ! என் செல்வர்களில் ஒருவனாக விருந்து நான் கண்ணால் கண்டால் உடனே என்னுடைய பிணி நீங்கிவிடுமே! கேசவா! மருதப்ப!" என்று கோமதி புலம்பவாரம்பித்தாள்.

பாலா - அம்மா! நீலா என்னை விடப் புத்திசாலி என்பதை இப்போதே நிதர்சனமாகக் காட்டிவிட்டாள். வந்தவர்களை நான் கவனியாது விட்டுவிட்டேன். இப்போதும் மிஞ்சி விடவில்லை. நான் எந்த விதத்திலாவது அவர்களைக் கண்டுபிடித்து அந்த மனிதனை உன் முன்பு கொண்டு நிறுத்துகிறேன். இதுவிஷயத்தில் நானே ஆண் பிள்ளைகளைப் போலத் துணிகரமாக வேலை செய்கிறேன். நீ பயப் படாதே!" என்று தேறுதல் கூறினாள்.

நாம் ஒருவரோடு பேசியதைப் பற்றி அவர்களைச் சேர்ந்தவரிடத்தில் சொன்னால் ஏதாவது அவர்கள் நினைத்துக் கொள்ளப் போகிறார்களே யென்று நாம் அவரைச் சந்திக்கவே யில்லையென்று மனச் சாக்ஷிக்கு விரோதமாகப் பொய் சொல்ல நேருகின்றது.

பிறகு தினந்தோறும் பாலா அந்தப் படக்காரர்களைச் சந்திக்கும் நோக்கத்துடனேயே வேலை செய்ய வாரம்பித்தாள். தன்னுடைய வேலையையும் கவனிப்பதோடு, தினந்தோறும் வீதி வீதி யாக அலைவது ஏதேனும் தகவல் கிடைக்குமா என்று பார்ப்பது இவ்விதமே சில நாட்கள் கஷ்டப்பட்டாள். ஒன்றும் புலன் கிடைக்க வில்லை. அதுவே கவலைகொண்டு சில மாதங்களைக் கடத்தினாள்.

கங்காதரன் வீட்டை விட்டு அசையவில்லை. சதா பெண் வேடத்திற்குள்ளேயே மறைந்திருந்தான். ஒரு தினம் வேலைக்குப் போய்விட்டுத் திரும்பி வருகையில் அன்று வந்த சினிமாவின் முதலாளி எதிரில் சந்தித்தான். உடனே அம்மனிதன் வெகு வணக்கத்தோடு, மரியாதையாய் "அம்மா! வந்தனம். என்னைத் தங்களுக்கு நினைவிருக்கிறதா!" என்று கேட்டான்.

உண்மையில் அவனைப் பார்த்துச் சிலகால மாகிவிட்டதால் அவளுக்கு நினைவு முதலில் இல்லை எனினும் உற்றுப் பார்த்தவளவில் நன்றாக ஞாபகம் வந்துவிட்டது. பிறகு "ஒகோ! தாங்களா! எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கின்றதே! தாங்கள் படக்காட்சியின் எஜமானரல்லவா! பேஷ்! அன்றைய தினம் நான் உண்மையில் நடு நடுங்கிவிட்டேன்! பிறகு தங்களைக் காண்பதற்கே இல்லாதுபோய் விட்டது. கம்பெனி எப்படி நடக்கின்றது. எத்தனை நாடகங்கள் நடித்தாயிற்று?" என்று சாதாரணமாக விசாரித்தான்.

எஜமானன்.-பிறகு ஐந்து நாடகங்கள் தயாராகிவிட்டன. சினிமாப் படம் தயாரிக்கையில் உங்களுக்கு டிக்கட்டு அனுப்புகி றேன். நீங்கள் பார்ப்பதற்கு வாருங்கள். நாங்கள் இப்படம் எடுப்பதற்காக காடுமேடுகள் எல்லாம் திரிந்துகொண்டிருக்கிறோம். ஆதலால் தான் தங்களைப் பார்க்க முடியவில்லை.

யாராரிடத்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டுமென்பதே சிலருக்குத் தெரிவதில்லை. ஆனால் அவர்கள் தங்கள் சுய மதிங்பைக் கெடுத்துக் கொள்வ அடன் தங்களைச் சேர்ந்தவர்களையும் மிதவும் இக்கிட்டான நிலைமையில் வைத்து விடுகிறார்கள்.

பாலா:- ஒ! அப்படியா! நானும் என் சகோதரியும் உங்கள் கம்பெனியின் நடிப்பைப் பார்ப்பதற்கு ஆவல்கொண்டோம். ஆனால் எங்கே நீங்கள் இருக்கின்றீர்கள் என்பதே எங்களுக்குத் தெரியா தாகையினால் சந்திக்கக்கூடவில்லை. மற்றொரு சமயம் பார்ப்பதற்குக் கூடுமானால்,

எஜமானன்;- ஏன் அப்படி கூடுமானால் என்கிறீர்கள். இப்போது ஒரு ரஸமான நாவல் வெகு அழகாக இருக்கின்றது. எங்கள் கம்பெனியில் உள்ள ஒரு நடிகன் தானே எழுதி நடித்து எடுக்கப்படுகிறது. அது நாளை நடிக்கப்படும். அதற்கான இடங்கள் தயார் செய்து வைத்திருக்கிறோம். அதைத் தாங்கள் பார்ப்பதாயின் நாளைக் காலையில் வரலாம். இதோ விலாசம்.

பாலா.- நாவல் எழுதக்கூடிய திறமையுள்ளவர்களே உங்களுக்கு நடிகராக இருப்பது மிக்க சிலாக்கியமானதல்லவா! அவர் யார்? அவருடைய பெயரென்ன!

எஜமானன்.- அவர் பெயர் சுப்பிரமணியனாம், வெகு நல்லவர். வெகு நல்ல மாதிரி தரிங்கள் நாளை வந்தால் அந்தக் கதையில் அவரே நடிப்பார்; பார்க்கலாம்.- என்றான். "சரி நாங்கள் வருகிறோம்" என்று கூறி உத்தரவு பெற்றுக்கொண்டு பாலா வீடு சென்றாள். இங்கு நடந்த விஷயங்களை பாலா தன் பெற்றோருக்குக் கூறினாள்.

இது கேட்ட பெற்றோரும் நீலாவும் சந்தோஷப்பட்டு அன்று காலை நேரத்தை எதிர்பார்த்துக் கொணடிருந்தார்கள். அழகான காலை நேரம் வந்தது. பாலா, நீலா, கோமதி மூவருமட்டும் ஓர் வண்டி யமர்த்திக்கொண்டு கடிதத்தில் கண்ட விலாசத்திற்குச் சென்றார்கள். கோமதியின் தேக நிலைமை வெகு கேவலமாக விருக்கிறதெனினும் இங்கு ஒருகால் தன் புத்திரனைக் காணக் கிடைக்குமோ என்று எதிர்பார்க்கும் ஓர் வாஞ்சையினால் அதைக் கவனியாது புறப்பட்டாள். 'அன்பு செய்யாத காரியம் அவனியில் உண்டா?"

சிலர் செய்யும் தப்பான காரியத்தைப் பற்றிப் பிறர் சொன்னால், சிலர் தங்கள் தப்பை ஒத்துக்கொண்டு தங்களை திருத்திக் கொள்கின்றார்கள். வேறு சிலர் தாங்கள் செய்ததே சரியென்று விதண்டா வாதம் செய்கிறார்கள், மற்றும் சிலர் அந்த விஷயத்னித மறைத்துவிட்டு ஏதோ விளையாட்டுத்தனமாகச் செய்ததாகச் சொல்லி சிரிக்கின்றர்கள். அவரவர் மனோ பாவத்திற்குத் தக்கபடி நடக்கின்றார்கள்.

இவர்களைக் கண்டதும் எஜமானர் வெகு மரியாதையாக வரவேற்று உட்காரச் செய்தார். இக்கதையின் முதல் சில பாகங்கள் ஏற்கெனவே நடந்துவிட்டதால், விட்ட இடத்திலிருந்து நடிக்க ஆரம்பமாயிற்று. அன்று ஆரம்பக் கதையில்,- ஒரு வீட்டு வாசலில் அனேகக் கூட்டம் நிறைந்திருக்கின்றது. அப்போது அக்கூட்டத்து மத்தியில் ஒரு பையன் அழுதுகொண்டு நிற்கிறான். போலீஸ்காரன் பையனைப் பிடித்துக் கொண்டு "இப் பையனா திருடினான்?" என்று கேட்கிறான். அங்கிருப்பவன் "ஆமாம். ஆமாம்." என்று பதில் சொல்கிறான். அந்த பையன் எதிரிலிருக்கும் ஒரு குழந்தை "இவன்தான் என் காப்பைக் கழட்டியது" என்று சொல்கிறது.

இந்த சம்பவத்தைக் கண்ட்கோமதிக்கு தன் மகன் ஆதியில் காப்புத் திருடிய சம்பவம் நினைவிற்கு வந்து துக்கம் பொங்கிவிட் டது. அதே சம்பவம் இங்கு நிகழ்வதாகவே தோன்றியது. தன் துயரத்தை அடக்கிக்கொண்டு பின்னும் கவனிக்கையில் ஓர் பெண்மணி மெல்ல நடந்து வருகிறாள். அவள் அந்த சம்பவத்தைக் கண்ட தும் அலறுகிறாள். அந்தப் பையன் "அம்மா! நான் இனிமேல் திருடவில்லை. அம்மா!" என்று அழுகின்றது. ஆனால் போலீஸ் காரன் பையனைப் பிடித்துக்கொண்டு போகிறான். உடனே அந்த வீட்டுக்காரர்கள். சகல தட்டுமுட்டு சாமான்களையும் வீதியில் எடுத்து எறிந்துவிடுகிறார்கள். அந்தப் பையனின் தாயார். புலம்பியபடியே இரு பெண் குழந்தைகளையும் ஒரு ஆண் குழந்தையையும் அழைத்துக் கொண்டு அழுதுகொண்டே வெளியே போகிறாள்.

எப்பொழுதும் பொய் சொல்வதே தங்கள் நியாயமான தொழில் என்று சிலர் நினைக்கின்றனர். ஒரு விஷயத்தைப் பேபரில் தாங்களே நேரில் பார்த்த தாகச் சாதிக்கின்றனர். பிறகு அந்த விஷயம் பேபரில் இல்லாமல் தாங்கள் சொன்னது முழுப் பொய்யென்று நிரூபிக்கப் பட்டுவிடின் தங்கள் மானம் போய் விடுமே என்கிற எண்ணமே அவர்களுக்குண்டாவதில்லை. மானம் என்றால் ஆகாசம் என்கிற ஒரு அர்த்தம்தான் அவர்களுக்குத் தெரியும் போலும்.

இந்த இடத்தைப் பார்த்ததும் கோமதிக்கு இது தன்னுடைய கதைதான் என்று நன்றாகத் தெரிந்துவிட்டது. அதற்குமேல் அவள் துக்கம் தாங்க முடியவில்லை. இடையில் தான் சென்று ஏதே னும் கேட்டால் தனது உருவமும் அப்புகைப் படத்தில் விழுந்து விடுமாகையினால் இன்னும் என்ன நடக்கின்றது பார்க்கலாம் என்று பொறுமையாக உட்கார்ந்திருந்தாள்.

போலீஸ்காரன் அழைத்துச்சென்ற பையனை நன்றாக உதைக்கின்றார்கள்; ஜெயிலில் போட்டு விடுகின்றார்கள். சில வருடங்கள் கழித்துப் பையன் விடுதலையடைகிறான். விடுதலை யடைந்ததாகக் கதையில் வரும் போது முன் நடித்த பையனின்றி வேறு ஒருவன் நடிக்கின்றான். அவனைப் பார்த்தவுடனே கோமதிக்கு திடுக்கிட்டது. அப்போது நீலா, "அம்மா! இவனைத்தான் நான் சொன்னேன். இவன் முகத்தைப் பாரு. அக்கா! இவன் முகத்தைப் பாரு. இவன் நமது தாயாரின் ஜாடையாகவே இருக்கின்றான் பாரு." என்று காட்டினாள்.

பாலாவும் கோமதியும் உற்று நோக்கி "ஆம்; ஆம். இவன் கேசவனல்ல! இவன் மருதப்பாவைப் போலிருக்கின்றது, "ஹா! மருதப்பன்தான் மருதப்பன் தான் " என்று தம்மை மீறி பேசிக் கொண்டார்கள். இதற்குள் நீலா "அம்மா! இவன் பெரிய அண்ணனா, சிறிய அண்ணனா?" என்றாள். அதற்கு கோமதி "அம்மா! இவன் தான் பெரிய அண்ணன். இவனை நான் சென்று அணைத்துக்கொள் கிறேன்" என்று பறந்தாள். நீலாவும், பாலாவும், " அம்மா! பொருள் நம்முடையது என்று தெரிந்துவிட்டது. இனிமேல் நம்மிடம் சேர்ந்துவிடும் சமயம் கிட்டிவிட்டது. இந்தக் கதையோ நமது சொந்த கதையாக இருக்கிறது. இதை எழுதியவனோ யாரோ சுப்பிரமணியனாம். அவனுக்கு நம்முடைய உளவுகள் எப்படித் தெரிந்தன. எந்த மட்டில் தெரிந்திருக்கிறது என்று இன்னும் சற்று நேரம் கவனிப்போம் இரு. இப்போது இடையில் கலைத்துவிட்டால் அவர்களுக்கும் கலைந்துவிடும். ஒருகால் படத்தில் நாமும் விழுந்து விடுவோம். ஆகையினால் நீ பேசாமலிரு" என்று அடக்கினார்கள்.

சிலருக்குப் பிற ஸ்திரீகளுடன் தாங்கள் தாராளமாகப் பேசவேண்டுமென்கிற ஆசை. ஆனால் தம் வீட்டு ஸ்திரீகள் அவர்களது நெருங்கிய உறவினருடன் பேசினாலும் அது பெருங் குற்றமாம். இது என்ன நியாயமோ?

பிறகு நாடகத்தில் விடுதலையான பையன் வெளியே வந்ததும் நேரே தன் வீட்டிற்குப் போகும்படியாகச் சொல்லியனுப்புகிறார்கள். பையன் வீட்டிற்குச் செல்லாது வேறு எங்கேயோ சுற்றி அலைகின்றான், சில சோதாக்களுடன் சேர்ந்து தத்தாரியாகத் திரிகின்றான். அவர்களோடு வேறு ஒரு வீட்டில் திருடுகிறான். அந்த பணத்தைக் கொண்டு துன்மார்க்கமான பல வழிகளிலும் செலவிடுகிறான். அவன் தன்னுடைய சோதாக்களுடன் பின்னும் ஒரு வீட்டில் திருடி தண்டனை யடைகிறான். அதிலிருந்து மீட்சி யடைந்த பிறகு, ஒரு குழந்தை நிறைய நகைகளோடு ஒரு கோயிலுக்குச் சென்று வழி தப்பிவிடுகிறது. அது அழுதுகொண்டே இருக்கையில் அக் குழந்தையைப் பார்த்த இவன் அதைத் தூக்கிக் கொண்டு ஓரிடத்திற்கு வந்து நகைகளை எல்லாம் கழட்டிக்கொண்டு குழந்தையைக் கிணற்றில் தள்ளப்போகிறான்.

அச் சமயம் அவனை யறியாத ஓர் விதமான உணர்ச்சி உண்டா கின்றது. "ஆ! இக் குழந்தை என் சகே தரி பாலாவின் சாயலாகவன்றோ இருக்கின்றது. குழந்தையைக் கிணற்றில் தள்ளிக் கொலை செய்வதற்கா நம் மனந்துணிந்து விட்டது. ஐயோ! திருட் டுப் புத்தியிலிருந்து கொலைக்குமா வந்து விட்டோம். குழந்தை பரிதாபமாக அழுவதைக் கண்டும் இரங்காமல் அதன் நகைகளைக் கழட்டினோம். குழந்தையைக் கிணற்றில் தள்ளப் போகிறோமா! சீச்சீ1 கொலை செய்ய வேண்டாம். அதிலும் பால் மணம் மாறாத குழந்தையைக் கொலை செய்ய வேண்டாம். குழந்தையோ கிருஷ்ண விக்ரகம் போன்ற ஆண் குழந்தையாக விருக்கிறது. ஐயோ! என் தாயார் எனக்குப் பல விதமான புத்திகளைக் கூறி எத்தனை விதத்தில் என்னைத் திருத்த முயன்றும் என் திருட்டு மதி என்னைக் கடைசி வரையில் விடாது பாழாக்கி விட்டதே! ஒருவித பாபமும் செய்யாத, உலகமே அறியாத ந்த பச்சைக் குழந்தையைக் கொலை செய்வதால் அதன் பெற்றோரின் வயிறு எவ்விதம் துடிக்கும்? அதன் ஆத்மா எவ்விதம் தத்தணிக்கும்? அடடா! இந்த யோசளை எனக்கு திடீரென்று உண்டானதற்குக் காரணம் யாதாக இருக் கும்?" என்று வெகு நேரம் யோசிக்கின்றான். திருடிய நகைகளை எல்லாம் ஒரு முறை பார்க்கிறான். திருட்டு ஆசையினால் அவைகள் மிக்க அழகாக விளங்குகின்றன. குழந்தையின் முகத்தைப் பார்க்கிறான். அவனை பறியாத விதமான உணர்ச்சி ஒன்று போராடுகின் றது. அவ் வுணர்ச்சிக்குக் காரணம் அவனுக்கே தெரியவில்லை. இவ் விதமான யோசனையுடன் சற்று நேரம் குழம்பிக் கொண்டே இருக்கையில் அவ் வழியாகச் சென்ற ஒரு பீட் சேவகன் இங்கு இவன் குழந்தையையும், நகையையும் வைத்துக் கொண்டு நிற்பதைப் பார்த்து விடுகிறான்.

ஒரு விஷயத்தைப் பற்றி இருவருக்குள் தர்க்கம் நேர்ந்த பிறகு அதைப் பற்றிப் பிறரிடம் சொல்ல தேருகையில் இருவரும் வெவ்வேறு விதமாகச் சொல்கிறார்கள். இதிலிருந்து எப்படி உண்மையைக் கண்டு பிடிப்பது?

அவ்வாறு பார்த்ததும் இவன் பழய கே-டி என்று தெரிந்து விடுகின்றது. உடனே அங்கு ஓடோடி வந்து இவனைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு "அடேய் திருட்டுப் பயலே! நீ இதுபரியந்தம் பலதரம் ஜெயிலிலிருந்தது போதாதென்று இப்போதும் உன் பழக்கத்தை விடாது ஆரம்பித்ததோடு குழந்தையைக் கிணற்றிலுமா போட்டுக் கொலை செய்யப் போகிறாய்!" என்று கூறி அவனை பலமாகப் பட்டார் பட்டார் என்று அடித்து " அடேப் திருட்டு நாயே! உன்னுடைய திருட்டுப் புத்தி உன்னை விட்டுப் போகவில்லையா !" என்று கூறிக் கொண்டு அவனை இழுத்துக் கொண்டு குழந்தையுடன் போலீஸ் ஸ்டேஷனுக்குச் செல்கிறான். அங்கு குழந்தை யாருடையதென்று விசாரித்து அதற்குரித்தான வர்களையும் வரவழைத்து வழக்கு விசாரணை செய்து அந்தக் குழந்தையைக் கொல்ல முயன்ற குற்றத்தில் அவனுக்குத் தண்டனை விதிக்கிறார்கள்.

ஒரு முக்கியமான காரியத்தைச் செய்வதற்கு நாம் எல்லா வகையிலும் தயாராயிருந்தும் அது நம்மை யறியாமலேயே தாமதப் படுகின்றது. இதனால் தான் ஆன்றோர் "அடுத்து முயன்றாலும் ஆகுநாளன்றி எடுத்த கருமங்கள் ஆகா“ என்றனர் போலும்.

அப்போது அவன் எதுவுமே வாய் திறவாது பிரமித்து கிலி பிடித்து விடுகிறான். தான் பெருங் கொலைசெய்ய எண்ணிய தப்பித்தத்தை எண்ணித் திடுக்கிட்டு பெருமூச்செறிகின்றான். அப்போது அவன் தாயை எண்ணிப் புலம்புகிறான். பிறகு அவனை சிறைச் சாலையிலடைத்து விலங்குமிட்டு விடுகிறார்கள். அவ்விதம் சிறைச் சாலையிலிருக்கையில் அவனுக்கு மாவு அரைத்தல், செக்கு இழுத் தல், கவலையில் தண்ணீர் பாய்ச்சல், நெல்லு குத்தல் முதலிய பல வேலைகளைச் செய்யும்படியாக தண்டனை விதிக்கின்றார்கள்.

இதற்கு முன்பு அவன் சிறைச்சாலையிலிருக்கையில் இத் தகைய தண்டனை எதுவும் அனுபவித்தறியவில்லை. ஏதோ சாதாரணமான வேலையைச் செய்து வந்தான். ஆதலால் அவனுக்கு இப் போதுதான் சிறையில் படும் துன்பம் நன்றாகத் தெரியலாயிற்று. இயந்திரக் கல்லைப் பிடித்து ஒரு தினம் மாவு அரைக்கையில் அவ னால் தாங்க முடியாமல் கோவெனக் கதறியழுது "ஹா! கடவுளே! நீ ஒருவன் இருக்கின்றாய் என்பதை இதுகாறும் தெரியாத பாவியாகி விட்டேனே! என் தாயே! குண பூஷணமே! பொறுமையில் சிறந்த புனிதவதியே! உன்னுடைய பொன்னுரையைக் கேளாது மூர்க்கனாய்த் திரிந்து அஷ்ட சகவாசம் செய்து துன்மார்க்கனாகி விட்டேனே! ஆ! என் அன்னையே! என் வினையன்றோ உன்னை மதியாது எதிர்த்துப் போராடும்படியாகச் செய்தது!” என்று கதறுகின்றான்.

இந்த பாகத்தைப் பார்த்துக் கொண்டே இருக்கையில் கோமதி யின் மனம் துக்கத்தினால் பொங்கி "ஆ! என் கண்ணே! மருதப்பா!" என்று கத்தக் கூடிய நிலைமைக்கு அவள் வந்து விட்டாள். இதையறிந்த பாலா "அம்மா! நாம் இங்கு இதை கவனிப்பதை அவன் அறிந்தால் மனம் முறிந்து வெட்கத்தினாலும் துக்கத்தினாலும் துன்பப்படுவான். ஆதலால் நாம் இருப்பதை இப்போது காட்டிக் கொள்ளக் கூடாது. மேலும் இவ் விஷயத்தை எல்லாம் நாம் அறிய வேண்டியது கடமையல்லவா! அவன் வெறுமனே வாயினால் சொல்லக்கேட்டு அறிவதைவிட இவ்விதம் பார்ப்பது நல்லது. இந்தக் கதையை பகிரங்கமாக நடிக்கையில் இதைப் பார்க்கும் இவனைப் போன்ற ஆசாமிகளும் துன்மார்க்கத்திலிறங்காமலும் ஈடுபடாமலும் இருக்கலாம்; இறங்கியவர்களும் திருந்தலாம். நாம் இப்போது சற்று பொறுமையை வகித்தோமானால் மற்றையோருக்குப் பெரும் உபகாரத்தைச் செய்தவர்களாவோம். மேலும் இப்போது அவன் நடிக்கின்றானே யொழிய உண்மையில் கஷ்டப்படவில்லையம்மா ! இதை முதலில் கவனி. அண்ணா! இப்போது நம்மைப்போல எதேச்சாதிகாரமாகத் தானிருக்கிறான். ஆகையினால் சற்று நிதானி." என்று தேற்றினாள். பிறகு கோமதியும் சற்று பொறுமையோடு அமர்ந்தாள்.

எல்வளவு அன்யோன்ய ஸதி பதிகளாயினும், அண்ணன் தம்பிகளாயினும், தகப்பன் பிள்ளையாயினும் சரி, பண விஷயத்தில் மனஸ்தாபம் ஏற்படா திருப்பது மிகவும் அர்லபம். இதற்குக் காரணம் மனிதரிடமுள்ள பாசத்தை விடப் பணத்தினிடம் அதிகமிருப்பது தான்.

பிறகு மாவு அரைக்கும் மனிதன் தன்னால் கேழ்வரகு அரைக்க முடியாமல் தத்தளிக்கின்றான். அதிகாரிகள் கொடுத்த நேரம் கடந்து விடுவதால் அதிகாரி சவுக்கு கொண்டு வந்து "ஏ கொலைகாரப் பாவியே! இன்னும் மாவு அரைக்கவில்லையா! இத்தனை நேரம் என்ன செய்தாய்! ஏன் அரைக்கவில்லை?" என்று கூறிக் கொண்டே சுளீர் சுளீர், என்று அடிக்கின்றான். அவன் அந்த அடியின் வேகத்தைத் தாங்காது "ஆ! கடவுளே! கடவுளே! எனக்கு இன யாவது நல்ல புத்தியைக் கொடுப்பாயா! ஐயோ! அம்மா!" என்று கதறி மூர்ச்சையாகிறான்.

தான் பகலிலுங்கூட ஓயாது தூங்குவது. எவ்வளவு முக்கியமான காரிய மாயினும் பிறர் தன்னை எழுப்பினால் நரஸிம்மாவதாரம் எடுப்பது. ஆனால் தான் யாரிடமாவது ஒரு காரியமாகப் போகையில் அவர்கள் அயர்ந்து தூங்கிக் கொண் டிருந்தால் அவர்களை உடனே எழுப்பும்படிச் சொல்வது. இதென்ன நியாயமோ?

அடுத்த நாள் செக்கு இழுக்கும்போது கண்ணீர் வடிகின்றது. "ஐயோ! கடவுளே! என்னைப் போன்ற துர்ப்புத்தியுள்ளவர்களை இனி உலகத்தில் பிறப்பிக்காதே. அவர்களை நல்வழிப்படச் செய்து விடு. நான் படித்து என்னுடைய அறிவை விருத்தி செய்து கொண்டிருந்தேனேயானால் இவ்விதம் சிறையில் சிறுமைப்பட வேண்டுவதில்லையே! என் போன்ற இளம் வாலிபர்களே! நீங்கள் 'கடவுள் ஒருவன் இருக்கிறான். ஆக்குவதும் அழிப்பதும் அவன்தான். அவனால்தான் உலகமிருக்கின்றது' என்று உங்கள் அறிவு உங்களுக்குத் தெரிந்த உடனேயே நம்புங்கள். என் போன்று பாபத்திற்குப் பங்குதாரி யாக வேண்டாம். துஷ்ட சகவாசம் செய்யவேண்டாம். சிறு பிரா யத்தில் கோலியாடித் திரிய வேண்டாம். தாயின் சொல்லை அலக்ஷயம் செய்ய வேண்டாம். என் போன்று செக்கு இழுக்கும் மனிதனாக வேண்டாம்" என்று தன் போக்காகக் கதறுகின்றான்.

இதைக் கண்ட அதிகாரி, "அடேய் திருட்டு நாயே ! உன் வேலைபைக் கவனியாது ஏதேதோ உளறுகின்றாயா! யாருக்கடா இங்கு புத்திமதி கூறுகின்றாய்! உன்னெதிரில் இருப்பவர்கள் உன் போன்ற பழைய-கேடிகள் என்பதை மறந்து உளறுகின்றாயோ? உன் பவிஷுக்குப் பெரிய வேதாந்தம் படிக்கின்றாயே! உன் வேதாந்த மூட்டையைத் தூரே கட்டி வை; அதை அவிழ்க்க செக்கு இழுக்கும் இடம் சரியல்ல! உம், நட!" என்று அதட்டி உதைக்கின்றான்.

அதற்கு அடுத்த நாள் கவலையில் தண்ணீர் பாய்ச்சுகிறான். மேலும், பள்ளத்திலும் ஏறி ஏறி இறங்குவதற்குள் சிரமம் தாங்காது மூர்ச்கையாகி விடுகிறான். பிறகு மறுதினம் வண்டி இழுக்கிறான். இவ்விதமான கஷ்டங்களைச் சிறையில் படுகையில் கொஞ்ச கொஞ்சமாய் புத்தி மாறுதலை யடைந்து தன் குற்றத்தை உணர்ந்து சதா கதறியவாறு தன் காலத்தைக் கடத்துகிறான். "எப்போது நான் விடுதலையடைந்து என் தாயைக் காண்பேன்?" என்கிற ஏக்கம் பிடித்துவிடுகின்றது. தன் சகோதரிகளையும் சகோதானையும் நினைத் துப் புலம்புகிறான். விசனத்தினாலும் கடின வேலையினாலும் உடம்பு எலும்புக் கூடாக ஆய் விடுகின்றது. சிறைச்சாலையிலேயே நடக்கவும் மாட்டாது மிக்க மெலிந்து போய் விடுகிறான்.

ஆயிரக் கணக்கான ரூபாய் விலையுள்ள பொருள்களை ஆயிரம் தம்பிடியும் பெறுமானமில்லாத காவற்காரன், தட்டான், வண்ணான் முதலியவர்களிடம் நாம் ஒப்புவித்து ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ளச் செய்கிறோம். ஆனால் அவர்களுக்குக் கூலி கொடுக்கையில் இன்னும் சில தம்பிடிகள் சேர்த்துக் கொடுத்து அவர்களைத் திருப்தி செய்து அவர்கள் இன்னும் அதிக நம்பிக்கைக்குப் பாத்திரமுள்ளவர்களாயிருக்கச் செய்ய நமக்கு மனம் வருவதில்லை.

சதா! "அம்மா! அம்மா!" என்று வாய்ப்பிதற்றுகிறான். பிறகு விடுதலை தினம் இன்னும் இரண்டு நாட்கள் தான் இருக்கின்றன என்ற செய்தி தெரிந்ததும் எங்குமில்லாத உற்சாகம் பொங்கிவிடுகின்றது. "என் தாயைக் கண்டு களிக்கும் நாள் சமீபித்துவிட்டது; இனி என்னுயிர் போனாலும் நான் தாயின் வாக்கை மறுப்பதில்லை, நான் இங்கிருந்து விடுதலை யடைந்தவுடனே முதல் முதல் தாயின் அருகில் ஓடி அவள் பாதத்தில் விழுந்து பலகோடி தண்டனிட்டு அவளிடம் நான் செய்த குற்றத்திற்காகக் கன்னத்திலறைந்துகொண்டு மன்னிப்புக் கேட்கப் போகிறேன். என் செல்வச் சோதரிகளை வாரியணைத்து முத்தமிடப் போகிறேன். நான் பட்ட கஷ்டங்களை எல்லாம் என் சகோதரனுக்கும் மற்ற சிறுவர்களுக்கும் கூறி அவர்களுக்கு நற்புத்தி புகட்டப்போகிறேன். என்னுடைய சகல துர்க் குணங்களையும் இச் சிறைச்சாலையிலேயே குழி வெட்டி மூடிவிட்டுப் போய் விடப் போகிறேன். தேவாதி தேவா! ஸ்ரீ பார்த்தஸாரதி! எனக்கு இனிமேல் இத்தகைய மதியை அளிக்காதே!" என்று பல விதமாக எண்ணமிட்ட வண்ணம் அந்த இரண்டு நாட்களையும் ஒரு நிமிடத்தை ஒரு யுகமாகக் கடத்தினான்.

ஆகா! அன்னையின் அன்பிற்கு ஒரு உவமை யுண்டா! அந்த தனிச் சுடரின் இன்ப மனுபவியாதவர்கள் பாபாத்மாக்கள் என்பதற்கு ஐயமே இல்லை. "அன்னையோடு அறுசுவை உண்டியும் போம்; தாயோடு போயிற்று அன்பு; தேரோடு முடிந்தது திருநாள். தாயில்லாப் பிள்ளையோ வாயில்லா ஊமையோ!" என்றெல்லாம் ஆன்றோரால் கூறப் பட்ட பழமொழிகள் பொய்த்து விடுமா! அந்தோ! தாயைப் போன்ற பாசத்தைக் காட்டி, ஊட்டி வளர்த்து விட்ட செவிலித் தாயின் அன்பே பெருத்த மலை போன்றிருக்கையில் தாயின் உண்மையான அன்பு கூறவேண்டுமா? தாயைப் பிரிந்து வருந்திய அந்த மனிதனுக்குத் தாயைப் பார்க்கப் போகின்றோம் என்கிற பெரிய ஆசை உண்டானதும் இழந்த பலமும், நீங்கிய தெம்பும் களைத்தெழுந்தது. அவன் அங்கம் அன்பின் வலுவால் பெருத்தது. விடுதலை செய்யும் நேரத்தை எதிர் பார்த்துக் கொண் டிருந்தான்.

சந்தோஷமும் திருப்தியும் இல்லாத புகழும் பணமும் மாத்திரம் இருந் தால் அவை எப்போதும் பரிமளிக்க மாட்டா. மனச் சாந்தி யிருந்தால் தான் சந்தோஷம் ஏற்படும். மனச் சாந்தியானது, சுகம் துக்கம் இரண்டிலும் ஆழ்ந்து அநுபவித்த பிறகே உண்டாகும். அது சில நாட்களிலும் மாதங்களிலும் அடைய முடியாது.

அந்த நேரம் வந்தது. அதினரிகள் அவனை அழைத்து அனேக புத்திமதிகள் கூறி "இனிமேல் இத்தகைய காரியம் செய்தால் தீவாந்திர சிக்ஷை விதிக்கப்படும்" என்று கூறியனுப்புகின்றார்கள். அவனும் "நான் இனி சத்தியமாக இவ்வித காரியத்தைச் செய்வதில்லை. இனி இப் பக்கமே நான் ஜென்மத்திற்கும் வருவ தில்லை." என்று கூறிவிட்டு வெளியே வருகிறான்.

அவன் விடுதலையாகி வெளியே வந்த உடனே தன் வீட்டை நோக்கி ஓடுகிறான். "அம்மா! அம்மா!" என்று கத்திக் கொண்டே உள்ளே நுழைகிறான். அவன் முதல் தரம் திருடிச் சிறைக்குச் சென்ற அன்றே வீட்டை விட்டு விலக்கப்பட்ட கோமதியின் செய்தி இப்போது அவனுக்கு என்ன தெரியும்? ஆதலால் அங்கு ஓடி அவளை அழைக்கின்றான். இவன் திருட்டு மதி மாறித் திருந்தியவன் என்பதை அறியாத வீட்டுக்காரர்கள் "சீச்சி! கே-டீ! வீட்டிற் குள்ளே வராதே! உன்னுடைய அம்மாளை அன்றே விலக்கி விட் டோம். நீ இங்கு நிற்காதே; ஓடிப்போ! அகப்பட்டதைச் சுருட்டிக் கொள்ளலாம் என்று வருகிறாயோ ஓடு பயலே!" என்று கடிந்து கூறுகிறார்கள்.

அயலாரை ஏமாற்றிப் பணம் சம்பாதிக்கும் சிலர், சமூக சேவைகளில் சுய நலம் பாராட்டாது ஈடுபட்டுள்ளவர்களை 'எல்லாம் அவர்கள் மாதச் சம்பளம் பெற்றுக் கொண்டு வேலை செய்கிறார்கள்" என்கிறார்கள். அவர்களுக்குள்ள அற்ப குணம் மற்றவர்களுக்கும் இருப்பதாகத் தோன்றும்படிச் செய்கின்றது போலும்.

இது கேட்ட பையன் வெகு தாழ்மையோடு "அம்மா! நான் என் புத்தி பிசகினால் தப்பிதம் செய்து விட்டேன்; திருடி விட் டேன். இப்போது என் புத்தி சரியாகி விட்டது. இனி நான் எந்தப் பொருளைக் கண்டாலும் செத்த பிணத்திற்கு ஒப்பாக நினைப்பேன். இது சத்தியம். என் மேல் சந்தேகப் படவேண்டாம். என் தாயார் எங்கே! என்னருமை கேசவனும் சகோதரிகளும் எங்கே? அவர்களை எங்கே அனுப்பினீர்கள்? அவர்கள் வேறு எந்த வீட்டிலிருக்கி? தயவு செய்து அதைக் கூறுங்கள் " என்று கெஞ்சிக் கேட்கிறான்.

இவன் வார்த்தையைச் சிறிதும் நம்பாத வீட்டுக்காரர்கள் "போடா திருட்டுப் பயலே! உன் அம்மாளை நாங்கள் அனுப்பிய பிறகு பார்க்கவே இல்லை. அவர்கள் எங்கு சென்றார்களோ! எக்கதி யானார்களோ? எங்களுக்குத் தெரியாது, நீ முதலில் வெளியே போ!" என்று தூரத்தி விடுகிறார்கள். அவ்வளவு தான் அவன் மனம் முறிந்து விடுகின்றது. 'அம்மா! அம்மா! உன்னைப் பார்க்க எண்ணிப் பேராவல் கொண்டுவந்த எண்ணமெல்லாம் மண்ணாகி விட்டதே! ஹா! உன்னை நான் இனி எங்கு தேடுவேன்! கேசவனையும், நீலா, பாலாவையும் எங்கு காண்பேன்! என் தாயே! அருமைத் தாயே! ஆருயிர்த் தாயே! என் இன்பத் தாவே! இணையிலா சகோதரிகளே! ஈடில்லாக் கேசவா!' என்று புலம்பிக் கொண்டே அலைந்தான்; திரிந் தான். எங்கெங்கோ விசாரித்தான். ஒரு தகவலும் தெரியவில்லை. அவன் தெரிந்தவர்கள் வீட்டிற்குச் சென்றால் உடனே அவர்கள் வெறுப்பும் பயமும் கொண்டு அவனைத் துரத்துவதிலேயே நாட்ட மாகித் துரத்தியும் விடுகிறார்கள்.

" புஸ்தகம் அஸ்த லக்ஷணம் " என்கிற பழமொழிப்படி சிலர் எப் போதும் மிகவும் உயர்ந்த புத்தகங்களை வைத்துக் கொண்டிருப்பது. ஆனால் அவற்றைப் படித்து அவற்றிலுள்ள நீதிகளின்படி நடப்பது என்பது கிடை யாது. சிலர் அதோடு நிற்காமல் படிப்பது புராணம்; இடிப்பது சிவன் கோயில் என்கிறபடிச் செய்கின்றார்கள்.

இவ்விதமே சில தினங்கள் அலைந்தும் பலன் கிடைக்காமையியினால் புலம்பிக் கொண்டே வெகு தூரம் போய்விட்டான். நடக்கும் இடம் தெரியாமல் அலைந்து திரிந்து "அம்மா! அம்மா!" என்று அலற்றிக் கொண்டே போகிறான். காலையிலும் மாலையிலும் கிராமத் தில் சிறு பிள்ளைகள் கோலி முதலிய ஆட்டங்கள் ஆடிக்கொண்டு திரிவதைக் கண்டதும் இவனுடைய பாலியப் பருவத்து நினைவு வந்து விடுகின்றது. அந்த பிள்ளைகள் விளையாடும் இடத்திற்குச் சென்று அவர்களுக்கு நல்ல புத்திகளைப் புகட்டி தனது சகல விதமான அனுபவங்களையும் எடுத்துக் கூறி அவர்களை வீணாக விளையாடாமல் திண்ணைப் பள்ளிக்கூடத்திலாவது படிக்கும் படிக்குச் சொல்லுகிறான். தானும் ஒரு திண்ணைப் பள்ளிக் கூடத்தில் படிக்க எண்ணங்கொண்டு சேர்ந்து படிக்கிறான். பள்ளிக்கூடத்துப் பிள்ளைகளை எல்லாம் கூட்டிக் கொண்டு இவன் தினந்தோறும் அங்கிருக்கும் ஒரு பிள்ளையார் கோயிலுக்குச் சென்று பிள்ளையாரின் எதிரில் நின்று,

விக்கினம் தீர்த்திட வா வா வா!

ஆனைமுகனே வா வா வா!

ஷண்முகப் பிராதா வா வா வா!

விகாயக மூர்த்தியே வா வா வா!

அம்பிகை பாலா வா வா வா!

சக்தி கணபதி வா வா வா!

என்று பாடலாக வினாயகர் பேரில் சொல்லிக் கொடுப்பதும், பிறகு "திருடக் கூடாது; பெரியாரை உதாசீனம் செய்யலாகாது. தாயின் வாக்கின்படி நடக்க வேண்டும். வீண் பொழுது போக்கலாகாது.' என்று அனேக நற்புத்திகளைப் போதிப்பதோடு தன்னுடைய சரிதையை அவர்களுக்கு ஓர் கதை போலச் சொல்லி ஆனந்தமாகப் பொழுதைக் கழிக்கச் செய்வான். இவன் பெரிய தடியனாக விருந்து கொண்டு திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படிப்பதனால் எல்லாப் பிள்ளைகளும் அவனைப் பரிகஸிப்பார்கள். எனினும் அவன் நல்லவிதமாக புத்தி புகட்டிக் கதை சொல்லுவதால் அவனைச் சுற்றிக் கொண்டிருப்பார்கள்.

அன்பு என்பது மனிதரிடத்தும், வளர்க்கும் மிருகங்களிடத்தும் மாத்திரம் இருப்பதில்லை. கடியாரம், பேனா, மோட்டார், குடை, செருப்பு முதலிய வஸ்துக்களின் மீதுள்ள அன்பினால் சிலர் அவற்றின் பிரிவாற்றாமைக்கு மிகவும் வருந்துகின்றார்கள்.

அவன் தினம் சில வீடுகளில் தண்ணீர் தூக்கிக் கொடுப்பது, துணி துவைப்பது, முதலிய வேலைகளைச் செய்து ஒவ்வொரு வேளை ஒவ்வொரு வீட்டில் சாப்பிட்டுக் காலத்தைத் தள்ளியவாறு நன்றாக எழுதவும் படிக்கவும் தெரிந்து கொண்டான். தன் தாயையும் சகோதர சகோதரிகளையும் எங்கு தேடியும் தகவலே கிடைக்காது வருந்தி மெலிந்து விட்டான். ஒரே இடத்தில் இருந்தால் எவ்விதம் அவர் களைத் தேடுவது என்ற எண்ணம் உதித்ததால் ஊர் ஊராகத் தேடத் தீர்மானித்து அவ்விதமே சுற்றி அலைய வாரம்பித்தான். எங்கு சென்றாலும் ஒருவிதமான தகவலும் கிடைக்கவில்லை.

மனம் முறிந்து விரக்தி மேவிட்டு விடுகின்றது. எந்த ஊருக்குச் சென்றாலும் தன்னாலான உதவியைப் பொது ஜனங்களுக்குச் செய்ய வேண்டுமென்கிற தீவிரமான எண்ணம் உண்டாகிவிட்டதால் ஏழைகள் அனேகர் தொழில் செய்வதைக் கண்டு அதில் மிக்க வயதானவர்கள், கர்ப்பிணிகள், அங்கஹீனர்கள் முதலியவர்களுக்குத் தன்னாலான உதவியைச் செய்வதும், அவர்களோடு உண்டு அன்று பொழுதைப் போக்குவதுமாக இவ்விதம் பல ஊர்களில் சுற்றி அலைந்து சில வருடங்களைக் கழித்தான்.

ஒரு தினம் ஒரு மலைப் பிரதேசத்திற்கு வருகிறான். அங்கு மலைமீது பெரிய ஒரு குகையும் அக் குகைக்குள் ஒரு கோயிலும் இருப்பதாகவும் அக் கோயிலுக்குள் ஒரு சாமியார் இருக்கிறார். அவர் ஜோஸியம் சொல்கிறார்; யார் அந்த மலையில் தைரியமாக ஏறி குகைக்குள் பயமின்றி சாமர்த்தியசாலியாக வருகிறார்களோ அவர்களுக்குச் சாமியார் பூர்ணமாக அனுக்ரகம் செய்து ஜோஸியமும் சொல்லி யனுப்புகிறாராம்; ஆனால் அவ்விதம் யாரும் நடந்தது கிடையாது. இத்தனை வருஷத்திற்காக இரண்டொருவரே தான் சென்று திரும்பியதாகக் கேள்வி. மற்ற அனேகர் இடையிலேயே மலை ஏற முடியாமலும், ஆகார வசதி இல்லாமலும், மழை, வெய்யில், இரவு, இருட்டு, மிருக பயம் முதலிய அனேக கஷ்டங்களினால் முற்றும் ஏறமாட்டாது திரும்பி விட்டதாயும், சிலர் இறந்து விட்ட தாயும், சிலர் துஷ்ட மிருகங்களுக்கு இரையாகி விட்டதாயும் பலர் சொல்லக் கேட்டான்.

தாங்கள் வெகு அன்பாக நினைத்துள்ள பொருள் தங்கள் எதிரில் படுங்கால் அதை ஆவலோடு எடுத்துக் கொள்வதற்கு மனம் தாவுகின்றது. அன்பின் ஆவேசமும் எழுகின்றது. அடுத்த நிமிஷம்" இந்தப் பொருள் அயலாருடையதாயிற்றே" என்கிற நினைவு தோன்றியவுடன் அப்படியே கண்ணீர் வடிய தலை சாய்ந்து விடுகின்றது, அந்தோ! என்ன பரிதாபம்!

அதைக் கேட்டதும் அவன் "எது எப்படியாவது இருக்கட் டும். மலையின் உச்சிக்குச் சென்று சாமியாரைப் பார்க்காமல் வருவதில்லை.” என்ற வைராக்கியங் கொண்டு மலையில் ஏறுகிறான். அப்போது மலைப் பக்கம் போவோர் வருவோர்கள் "ஐயா போகாதே! போகாதே!" என்று தடுத்து பயமுறுத்துகின்றார்கள். அதையும் கவனியாது சிறிது தூரம் ஏறுகையில் சினிமாப் படம் பிடிப் பவர்கள் அம்மலையில் சில முக்கியமான சீன்களைப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இவன் தைரியமாய் ஏறி வருவதைப் பார்த்து, 'நீ யார்! எங்கே மேலே ஏறிப் போகிறாய்?' என்கி றார்கள். அவன் தான் போகும் காரணத்தைக் கூறிவிட்டு மீண்டும் ஏறுகிறான்.

சினிமாக்காரர்கள் அவனைத் தடுத்துக் கூறியும் கேளாது பின் னும் ஏறுகிறான். இரவு சமீபித்து விட்டது. துஷ்ட மிருகங்களின் ஆரவாரம் இவனுக்கு அதிக பயங்கரமாக இருக்கின்றது. எந்த திக்கை நோக்கினும் கர்ஜனையே கேட்கின்றது. நாய், நரி முதலியவைகளின் ஊளை பிடுதலும், குரைப்பதும், இன்னு மற்ற மிருகங்களின் தொனிகளும் கேட்கக் கேட்க மார்பு படபடவென்று துடிக்கின்றது. தலை சுழலுகின்றது. அந்த மிருகங்களெல்லாம் இவனைத் தூரத்திக்கொண்டு வருவதாகவே மனத்தில் பீதி உண்டாகின்றது அப்பீதியினால் கால்கள் நடக்கமாட்டாது தத்தளிக்கின்றன.நடுக்கலுற்று விவிலத்துப் போய்விட்டன. உடனே அவன் அம்மலை மேலிருந்த ஓர் மரத்தடியில் உட்காருகிறான்.

"நாளை முதல் நாம் எல்லாக் காரியங்களையும் வெகு ஒழுங்காகச் (Systematically) செய்ய வேண்டும்" என்று சிலர் முதல் நாள் தீர்மானித் துக் கொள்வது. ஆனால் மறுநாள் உதயமானதும் வழக்கப்படியுள்ள சோம்பேறித் தனமும் தாமத குணமும்தான் முன் வந்து நிற்கின்றன. ஆகையால் எது செய்வதாயினும் இன்றே செய்தல் நன்று, நாளை, நாளை என்பது வீணே.

அவ்வாறு உட்கார்ந்த சிறிது நேரத்திற்கெல்லாம் ஒரு பெரிய சர்ப்ப த்வனி 'புஸ்' என்று கிளம்புகின்றது. அந்தோ! அந்த ஓசை பைக் கேட்டு மிரண்டு எழுந்து விலகி நிற்கிறான். இருளோ கப்பிக் கொண்டிருக்கிறது. ஆகாயத்தில் சிறு சிறு நக்ஷத்திரங்களே ஆங்காங்கு காணப் படுகின்றனவே யன்றி வேறு விதமான பிரகாசம் எதுவுமே இல்லை. இத்தகைய பயத்தோடு அவன் "ஏ கருணா நிதே! காருண்ய மூர்த்தே! உன்னையன்றி வேறு துணையில்லை. ஐயனே! ஆபத் ரக்ஷகா ! இந்த சர்ப்பத்தின் சீற்றம் எனக்கு மிக்க பயத்தை உண்டு பண்ணுகிறதே! நீ ஓர் மடுவில் சர்ப்பத்தை கையில் எடுத்து ஆட்டியதாக என் திண்ணைப் பள்ளிக்கூடத்து வாத்தியார் சொல்லிக் கேட்டிருக்கிறேனே! அத்தகைய சர்ப்பத்தை நீ இப்போது புற்றுக்குள்ளனுப்பி விடுவது கஷ்டமா! உன்னால் ஆகாத காரியமும் உலகில் உண்டா!

("ஐயா பழனிமலை வேலா' மெட்டு)

1. ஐயா! ஏழுமலையின் வாலா! எனைக்காத்திடுவாய் சர்வேசா!

உய்யும் வழி உன்னருளன்றோ! இதை உனக்கறிவித்தல் நன்றோ-

2. வையம் அளந்த திருபாதா! பையவே வரலாகாதா!

ஐயனே என்மேல் வாதா! இது அருளோ அறைவாய் நீதா!-

3. பீதாம்பர துளஸி ஹாரா! பேராதரிக்கும் ஒய்யாரா!

சாதக அசுர சம்ஹாரா! ஜெய கல்யாண சேஷகிரி வீரா-ஐ

என்ற பாடலைப் பாடிக்கொண்டே பகவானைத் தோத்திரஞ் செய்து நின்றான்.

ஒருவரைப்பற்றி அவதூறாகப் பேசுவதே சிலருடைய சுபாவம். வேறு சிலர் அதைக் கேட்டு, அது உண்மையா அல்லவா என்பதைத் தெரிந்து கொள்ளாமலே மற்றவரிடம் பரவச் செய்வது. மற்றும் சிலர் "அவர்கள் பெரிய மனிதர்களாயிற்றே பணக்காரராயிற்றே) அதனால் உண்மையாகத்தான் -இருக்கும்" என்று நம்பி விடுவது. பிறகு குற்றஞ் சாட்டப்பட்டவரைச் சந்தித்து உண்மையான நிலைமையை அறிந்த பிறகு வருத்தப்பட்டு "ஐயோ! பணக்காரர் (பெரிய மனிதர்கள்) சொன்னாரே என்று நம்பினேன்" என்பது. இக் காலத்தில் பணம் இருப்பவர்களெல்லாம்- குணமில்லாதவர்கள்—பெரிய மனிதர் போலும்.

இரவு ஏற ஏற பயங்கரம் அதிகரித்து விட்டது. மரத்தின் கீழே அனேக புத்துகள் இருப்பதாக அவன் காலுக்குத் தெரிந்ததும் மாத்தின் மேலே ஏறிக்கொண்டான், "ஹா! என் தாயே! உன் வார்த்தையை மதியாததின் பலன் இது. எங்கு அலைந்தும் உன்னைக் காணாமல் கலங்கிய நான் அந்த குகையிலிருக்கும் மகானின் தரிசனத்தினாலும் உத்தம வாக்கின் பலனாலும் உன்னைக் கண்டு களிக்க லாமென்று நான் கிளம்பி விட்டேன்! என்னுயிர் இடை வழியே சென்றாலும் சரி; அன்றி நான் எக்கதியானாலும் சரி. உன்னைக் காணும் வழியை அடைகிறேன். அம்மா! அம்மா!..ஹா! என் தாயை நான் காண்பதற்கு, அந்த மாயவனின் தாளை மறவாது துதித்தாலன்றோ நமக்குத் தாயின் சேவை கிடைக்கும்! இல்லையேல் தாயை எங்ஙனம் அடையக் கூடும். மாதவா! கேசவா! மது சூதனா!

(தன்யாசி ராகம். ஆதி தாளம்)

1. காரிருள் சூழ்ந்தாலும், கடலொன்று சேர்ந்தாலும்,

காருண்ய மூர்த்தியின் கழல் மறவேன்.

பாரெங்கும் புரண்டாலும், வாரிதி வரண்டாலும்,

தாரக நாமனின் தாள் மறவேன்.

2அஞ்சன வண்ணனின் கஞ்ச மலாடியில்

நெஞ்சம் பதித்திடும் நேர் மறவேன்.

கஞ்சனை வென்று, சஞ்சலம் போக்கியே

கண்ணன் அடி மறவேன்.

கருணாகரா! கக வாகனா!" என்று திண்ணைப் பள்ளிகூடத்து வாத்தியார் கற்றுக் கொடுத்த பாடல்களைப் பாடித் துதிக்கின்றான், இரவு பூராவும் தத்தளித்தான்; அவனைத் தாங்காமல் தூக்கம் சுழற்றுகின்றது. விடியற் காலம் வந்து விட்டது. கீழே இறங்கி ஒரு மாத்தடியில் "எதுவரினும் நீயே துணை" என்று நம்பிப் படுத்து விடுகிறான். நன்றாக அயர்ந்து தூங்கி விடுகிறான். பொழுது விடிந்ததே தெரிய வில்லை.

பிறகு கண் விழித்துப் பார்க்கிறான். ஒரு டேராவின் உள்ளே படுத்திருப்பதாகத் தெரிந்து சுற்று முற்றும் பார்க்கிறான். நல்ல நாகரிகமான சிலர் இவன் முன்பு இருக்கக்கண்டு வியப்புற்று "ஐயா! நீங்கள் யார்! என்னை யார் இந்த இடத்திற்குக் கொண்டு வந்தது? எனக்கு விவரங் கூற வேண்டும்" என்றான். அப்போது பிற்பகல் 3 மணி இருக்கும். இதுகேட்ட அவர்கள் "ஐயா! உடம்பு இப்போது ஒன்றுமில்லையா! சரியாகி விட்டதா! வலி எப்படி இருக்கின்றது?" என்று கேட்கிறார்கள்.

அதைக் கேட்டதும் அவன் ஆச்சரியமுற்று "என்ன! எனக்கு உடம்பா! என்ன உடம்பு! என்ன வலி! ஐயா! எனக்கு ஒன்றும் விளங்க வில்லையே! நான் விடிவதற்கு முன்னமேயே நன்றாகப் படுத்து நித்திரை போய் விட்டதுதான் எனக்கு நினைவிருக்கின்றது. வேறு ஒன்றும் நினைவில்லை. இப்போது முற்பகலா, பிற்பகலா!" என்று தன் தேகத்தை முற்றும் பார்க்கிறான். காலில் ஒரு கட்டு இருப்பதை அப்போதுதான் காண்கிறான். உடனே "இதென்ன கட்டு?” என்று கேட்கிறான்.

அதற்கு அவர்கள் "அப்பா! நீயோ வயதில் சிறியவனாகவே காணப்படுகின்றாய்! நீ நேற்று மலை ஏறும்போது நாங்கள் படம் பிடித்துக் கொண்டிருந்தது உனக்கு நினைவிருக்கலாம். எங்களில் சிலர் உன்னை ஏறவேண்டாம் என்றதற்கு நீ மறுத்து எங்களை லக்ஷயம் செய்யாமல் போய் விட்டாய்! நாங்கள் இந்த மலையிலும் மலை அடிவாரத்திலும் முக்கியமான சில சீன்களை சப்தத்தோடு கூடிய படம் பிடிக்க வந்திருக்கிறோம். ஆறுமாத காலமாக நாங்கள் சுற்று கிறோம். இன்று காலையில் மலையின் மேல் பாகத்தில் ஒரு சுனை இருக்கின்றது; அதைப் படம் பிடிக்கச் செல்கையில் நீ மரத்தடியில் படுத்திருந்தாய்! ஒரு பாம்பு உன் காலில் கடித்து விட்டுப் போவதைக் கண்டு, உடனே உன்னை எழுப்பாமல் இருக்க ஒரு பச்சிலையை உன் மூக்கில் முகரச் செய்தோம். அப்படியே மற்றொரு பச்சிலையின் காற்றை உனக்குள் செலுத்தினோம். வேறொரு பச்சிலையைக் கடித்த விடத்தில் கட்டினோம். இம் முறைகள் ஓர் பெரிய மகானின் மூலம் நாங்கள் பெற்றுக் கொண்டுதான் இந்த மலை வாசத்திற்குப் பயமின்றி வந்தோம்.

பிறகு உன்னை இங்கு கொண்டு வந்து விட்டோம். உன்னை யறியாமலேயே இரு முறை வாந்தி எடுத்தாய் ; அதில் நீல மாக விஷம் வெளியே வந்தது. பிறகு ஒரு பச்சிலையைக் கொடுத்தோம். இப்போது நீ தெளிந்து எழுந்தாய். விஷம் இல்லை; இறங்கி விட்டது என்று அர்த்தம், இனிப் பயமில்லை, பிழைத்துக் கொண்டாய் ! நீ இனிமேல் இவ்விதம் தனிமையில் செல்லவேண்டாம். அந்த குகையில் செல்வது சாமானியமன்று. நாங்கள் ஆயிரமாயிரமாய்ச் செலவு செய்து ஏரோப்ளேனில் பறந்து சென்று பார்த்தும் பயனில்லாது போய் விட்டது. ஆகையினால் நீ இந்த பெரிய காரியத்தில் இனி பிரவேசிக்காதே உன்னுடைய வரலாறு என்ன! நீ ஏன் இவ்விதம் கிளம்பினாய்?" என்று கேட்கிறார்கன்.

சிலருக்கு நல்ல கல்வி யறிவு, அநுபவ ஞானம், வாக்கு சாதுர்யம், இளகிய மனம், தயாள குணம், பெருந்தன் மையான போக்கு, பல பேர் மெச்சி புகழக் கூடிய தன்மை எல்லாம் ஒருங்கே அமையப் பெற்றிருக்கின்றன. ஆனால் பூர்வ ஜன்மாந்திர வாசனையினாலோ அல்லது இந்த ஜன்ம கர்ம வினையினாலோ அவர்களை யறியாமல் ஒரு பொருளின்மீது உயிர் லயித்து விடுகின்றது. அப் பொருளோ கிட்டாப் பொருள். கிட்டாதாயின் வெட்டென மற என்கிற வாக்கை அறிந்திருந்தும் அப் பொருள்பால் கொண்ட அபார அன்பினால் அதைப் பெறவும் மார்க்கமின்றி, மறக்கவும் கூடாமல் தத்தளித்து வருந்துகின்றார்கள்.

இதுகேட்ட அந்தப் பையன் மிக்க ஆச்சரியமும் திகைப்பும் அடைந்து "ஆ! என்னையா பாம்பு கடித்தது!.. நீங்கள் இந்த ஏழைப் பரதேசியின் மீது அன்பு வைத்து இத்தகைய உதவி செய்ததற்கு நான் என்ன கைம்மாறு செய்வேன் ?" என்று கூறித் தனது கதை முழுதும் கூறுகிறான்; இது கேட்ட அவர்கள் இவன் மீது. அனுதாபங் கொண்டு "அப்பா! நீ எங்கள் கம்பெனியிலேயே ஒரு நடிகனாகச் சேர்ந்துவிடு. நாங்கள் ஊரு ஊராக சுற்றக்கூடியவர்கள். அங்கெல்லாம் நீயும் வரலாம். அங்கு உன் தாயாரையும் தேடலாம். ஆகையினால் வருகிறாயா! எங்களாலாகிய உதவியைச் செய்கிறோம்." என்கிறார்கள். அதற்குப் பையன் சம்மதப்பட்டு "ஐயா! நான் உங்களிஷ்டப்படியே நடக்கின்றேன்" என்று உறுதியாய்க் கூறிவிடுகின் றான். பிறகு பையனை அவர்கள் அழைத்துக் கொண்டு போகிறார்கள். அவர்களோடு சென்று அவன் நடிக்கக் கற்றுக் கொள்கிறான்...

என்றது வரையில் அன்றைய நடிப்பில் முடிந்தது. இந்தக் கதை மலைப் பிரதேசத்தில் நடப்பதற்காகவே அதற்குத் தகுந்த இடமாக அமர்த்திக் கொண்டார்கள். "இம்மட்டுடன் இன்று நின்று விட்டது. இனிமேல் வெளிச்சம் குறைந்து விட்டது. நாளைய தினம் தான் நடிக்கப்படும். இது பேசும் படமாகத் தயாரிக்கின்றோம்" என்று முதலாளி பாலாவினிடத்தில் வந்து தெரிவித்தான்.

இதுகேட்ட பாலா, "ஐயா! உங்களிடம் நான் ஒரு விஷயம் தனிமையில் பேசவேண்டும். அதற்கு அனுமதிக்கப்படுமா?” என்று வெகு நயமாகக் கேட்டாள். அதற்கு இசைந்த எஜமானனிடம் பாலாவும் கோமதியும் சென்று "ஐயா! இந்த, கதையை இப்போது நடித்தவரே கற்பனையாக எழுதினாறா? அன்றி வேறு யாரேனும் எழுதியதை இவர் நடிக்கின்றாரா! அது உண்மையில் நடந்ததா" என்று கேட்டாள்.

எஜமா:- அம்மா! எனக்குத் தெரிந்த மட்டில் அவரே கற்பனையாக எழுதியதாகத் தெரிகின்றது. அவர் முன்பு வேறு ஒரு படக் கம்பெனியில் நடித்துக் கொண்டிருந்தார். அக் கம்பெனி இருவரால் சேர்ந்து நடத்தப்பட்டதால் சண்டை வந்து விட்டதாம். அதனால் கம்பெனி கலைந்து விட்டது. அதன் மானேஜர் எனக்குத் தெரிந்தவராதலால் நான் ஒரு கம்பெனி வைக்க ஆசையுற்று, இந்த தீவிலேயே நடத்த உத்தேசித்து நல்ல நடிகர்களை அனுப்ப வேண்டுமென்று எழுதினேன். அவர் சிலரை அனுப்பினார். அவர்களில் இவரும் ஒருவர். "நான் ஒரு கதை வெகு ருசிகரமாக எழுதி இருக்கிறேன்! அதை நடிக்க வேண்டும்" என்று கேட்டார். சரி, என்று இசைந்து இப்போது நடிக்கின்றோம். ஏனம்மா! எதற்காகக் கேட்டீர்கள்?

எந்தெந்த காலங்களில் எந்தெந்த ராகங்களை வாசிக்க வேண்டுமென்பதை மேளக்காரர்கள் முக்கியமாகத் தெரிந்துகொள்ள வேண்டும். காலை நேரத்தில் சுபமாக வீடு கட்டிக் கிரகப் பிரவேசம் செய்கையில் துக்ககரமான முகாரி ராகத்தைச் சிலர் வாசிக்கின்றார்கள். ஐயோ! இதென்ன அசம்பாவிதம்! இதன். காரணம் இரு திறத்தினரும் காலம், ராகம் முதலியவற்றின் குணங்களை அறியாமையே. இப்படியே ஒவ்வொரு விதத்திலும் நம் நாட்டில் யாவும் சீர் குலைகின்றன.

பாலா:- எதற்கு மில்லை; கதை வெகு ருசியாகவும், ஸ்வாரஸ்ய மாகவும் இருக்கிறதே! இத்தகைய கதையை யார் எழுதினார்கள் என்கிற ஆச்சரியத்தினால் கேட்டேன். நாங்கள் அவரை நேரில் பார்க்கலாமா! இந்த கதைக்கு முடிவு இன்னும் ஏற்பட்டிருக்காதென்று நினைக்கின்றேன்! ஆகையினால் எனக்கு ஓர் அருமையான கற்பனை தோன்றுகின்றது. அதை அவரிடம் தெரிவித்து முடிவு செய்விக்க நினைக்கிறேன். எங்களால்தான் முடிவும் நடக்கவேண்டும்." என்றாள்.

இதைக் கேட்ட மானேஜருக்குச் சிறிது சந்தேகம் உண்டாகி யது. அதை வெளியிடாது "சரி; அதற்கென்ன! தாராளமாய்ப் பார்க்கலாம்" என்றார். உடனே நீலா, பாலா, கோமதி மூவரும் எஜமானரோடு சென்றார்கள். அப்போது மருதப்பா கடவுளின் படத்திற்கு எதிரில் மண்டியிட்டு வணங்கியவாறு, “ஹா! கடவுளே! தேவாதி தேவா! என் அன்னையை நான் காணாமலேதான் உயிர் விடுவேனோ! என்னருமை உடன்பிறந்தோரைப் பார்க்காத பாவியாவேனே! என்னுடைய சரிதையை இன்று நடித்ததும் என்னைத் தாங்காத துக்கம் வந்து விட்டதே! நானாக வேண்டுமென்று இழந்து விட்ட என் வானிதியங்களை எங்கு தேடுவேன்! இனி என்று அடைவேன்?" என்று கண்ணீரை ஆறாய் விட்டுக் கதறிக் கொண்டிருந்தான். அது வரையில் பொறுமையாயிருந்த கோமதி அதற்குமேல் இழந்து “ஹா! என் செல்வா! மருதப்பா! மருதப்பா! இதோ நான் வந்து விட்டேனடா! கண்மணி” என்று அவன் கனவிலும் கருதாதவாறு அவனை இறுகத் தழுவிக் கொண்டாள். நீலாவும், பாலாவும், 'அண்ணா!' என்று ஆலிங்கனம் செய்து கொண்டார்கள். இந்த அற்புதமான காட்சியைக் கண்ட எல்லோரும் வியப்பே வடிவமாக நின்றார்கள்.

"நாம் இந்த காரியத்தைச் சாதித்தோம். நம்மால்தான் இந்த காரியம் நடக்கின்றது" என்கிற அகம்பாவ சிந்தையைப் போக்கி, என்று நாம் இரண்டு கைகளையும் விட்ட திரௌபதியைப் போல 'நம்மாலாவது ஒன்றுமில்லை; எல்லாம் அவனால்தான் நடக்கும்.' என்கிற தீர்மானத்தை அடைந்து அவனை ஸ்மகரிக்கின்றோமோ அன்றுதான் அவன் நம்மைக் காப்பாற்றுவான். இது வீண் கதையல்ல; கண்டறிந்த அநுபவமே.