சங்கநாத எழுத்தாளர்
"மனிதனுடைய கடவுள் மனிதனே தான்''-20ஆம் நூற்றாண்டின் மராத்திய மறுமலர்ச்சி கர்த்தாக்களில் ஒருவராகிய திரு. வி.ஸ. . காண்டேகருடைய மனித நேயக் கருத்து இது.
"மனிதனுடைய முன்னேற்றத்திற்கும் எங்கே மனிதன் பாடுபடுகிறானோ அந்த புனித இடம்தான்,
நான் வணங்கும் கோயில்
நான் பிரார்த்திக்கும் கிறித்துவ தேவாலயம்
தொழுகின்ற இஸ்லாமிய பள்ளி வாசல்"
மனிதனுடைய விடுதலைக்கும் விமோ சனத்துக்கும் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட நவஇந்தியாவின் சிற்பி நேருஜியினுடைய வாசகங்கள் இவை.
மனித நேயம் இறுக்கமான அழுத்தமான மனித பாசம் இந்த இரண்டு மேற்கோள்களிலும் மேலோங்கி யிருக்கிறது, மின்னுகிறது.
புத்தனிலிருந்து அண்மையில்மறைந்த சின்மயானந்தா ஸ்வாமிகள் வரை வலி யுறுத்தப்பட்டு வந்து கொண்டிருக்கிற மிகவும் எளிதான, அதே நேரத்தில் மனிதனை தேவனாக்கும் அரிய பண்புதான் மனித நேயம் என்பது. மனித நேயத்தின் விரிவான பரிணாமம் சமூகப் பிரக்ஞை என்பார்கள்.
இந்த இரண்டு பண்புகளும், சொல்லோடு செயலோடு ஓடும் இரத்தத்தில் ஒவ்வொரு 'செல்' லோடும் இலட்சிய பூர்வமாக கலந்துவிட்ட காட்சியைத்தான் எழுத்தாள நண்பர் திரு.சு. சமுத்திரம் அவர்களிடத்தில் அவருடைய மாணவப் பருவத்திலிருந்தே நான் கண்டு வியந்த பெருமைப்பட்ட அருங்குணமாகும்.
அமெரிக்கப் பெரும் கவிஞன் வால்ட் விட்மேன் ஒரு இடத்திலே குறிப்பிடுகிறார்: இதை (அவருடைய புத்தகத்தை) தொடுபவன் ஒரு மனிதனைத் தொடுகிறான்” என்பதை உணரட்டும். "Any one who touches this touches a Man '"
திரு. சமுத்திரம் அவர்களுடைய உயிரோட்டமான படைப்புகள் எதுவாக இருந்தாலும் என்னுள் இயல்பாக எழுகின்ற உணர்வு இதுதான். மனிதனை பல கோணங்களில் பார்க்கிறார். அவனைப் பற்றி பீடித்திருக்கின்ற அழுக்கு இழுக்கு அவமரியாதைகளை துடைத்தெறிய சிறு கதை இலக்கியத்தை ஒரு போர்க் கருவியாக உபயோகிக்கிறார். அவனோடு சேர்ந்து அவனுடைய குற்றமற்ற மகிழ்ச்சியில் திளைக்கிறார் சிரிக்கிறார். அவனோடு சேர்ந்து அழுகிறார். தன்னையே வறுத்திவதைத்துக் கொள்கிறார்- அவருடைய எழுத்துக்களை உணர்வு பூர்வமாக படித்தவர்கள் இதை உணர்வார்கள்.
மனிதனுக்காக மட்டும்தானா அவர் அழுகிறார், அங்கலாய்க்கிறார்? இந்த கதைத் தொகுப்பில் ஒரு அற்ப காகத்தினுடைய அவல நிலைக்காக அவர் அல்லலுறுவதை முதல் கதையில் "இரையும் இறை யும்" உணர முடியும். காக்கையின் ஆன்மாவைப் பற்றி இந்த இளம் சித்தர் விளக்குகிறார்.
மற்ற கதைகளும் இதயத்திற்குக் குளிர்ச்சியும், அறிவிற்குக் கூர்மையும், உணர்வுகளுக்கு உத்வேகத்தையும், பார்வைக்கு தெளிவையும் தெம்பையும் கொடுக்கின்றன.
உளமாற சகோதர பாசத்தோடு சாகித்திய அகாடமி பரிசு பெற்ற இந்த சங்கநாத எழுத்தாளரை மேன் மேலும் செழித்து கொழித்து சிறப்படைய வேண்டுகிறேன்.
இது நீண்ட நெடிய நட்பின் உந்துதல் அல்ல. உயிரோட்டமான மனிதநேய மிக்க எழுத்துக்களுக்கு தன்னடக்கத்துடன் நான் அர்ப்பணிக்கின்ற காணிக்கை யாகும்.
பகத்சிங்
(தேசிய முழக்கம்)

