Chapter 8

மின்சார விளக்குகளில் மினுமினுத்த மையிருட்டு தயிரின் தெளிந்த நீர் போன்ற ஆகாய வெளிச்சம். இரவின் பிறப்பா அல்லது இறப்பா என்று கண்டறிய முடியாத வேளை. விடியல் பிரசவத்தின் இயற்கை வெளிப்பாடுகளான குருவிச் சத்தமோ கோழிச்சத்தமோ கேட்கவில்லை. ஆனாலும் சிசேரியன் ஆப்பரேஷன் போல், இருளின் வெளிப்பாடுகள் தோன்றின. மாநகரப் பேருந்துகள் வெறுமையாக நகர்ந்தன. வைக்கப்போர், செங்கல், இரும்பு டப்பா லாரிகள் மாமூலாகப் போகாமல் மைனர் நடை போட்டன. மோட்டார் பைக்குகளிலும் ஸ்வட்டர்களிலும் பெண்கள் தலை முக்காடு களோடும், ஆண்களில் சிலர் சரிந்து வைத்த தொப்பிகளோடும் உட்கார்ந்தபடியே ஓடிக் கொண்டிருந்தார்கள்.

மனோகர், கரங்களைத் தலைக்கு முக்காடாக்கி நடந்தான். சிறிது தொலைவில் நாய்கள் குலைக்கும் சத்தம் மட்டும் கேட்கவில்லை யானால், தொடர்ந்து நடந்திருப்பான். தெரு நாய்களுக்குப் பயந்து, நான்கு பக்கமும் பார்த்தான் நல்ல வேளையாக பேருந்து நிழல்குடை அருகிலேயே இருந்தது. அதன் முன்பக்கமும் பின்பக்கமும் பிளாட்பார பிரஜைகள் மூட்டைகளாய் வளைந்து கிடந்தார்கள் அப்பன், பிள்ளை, மனைவி என்று பூஜ்யமாய் வட்டமிட்டு படுத்து இருந்தார்கள்.

மனோகர், அந்த நிழல் குடைக்கு வந்து அதன் இரும்பு தூணில் பின்பக்கமாய் கைசுற்றிச் சாய்ந்தான். அவ்வப்போது ஒரு காலை இன்னொரு காலால் பின்னிக் கொண்டான். நடந்ததை நினைக்க மனம் மறுத்தது. ஏதோ ஒரு மாயப் பேய் உருவம், அவனை உச்சி முதல் பாதம் வரை ஆக்கிரமித்து நெஞ்சைக் கோர நகங்களால் கீறியது. தொண்டையை அசுரப் பற்களால் கடித்தது. உலகின் அத்தனை பளுவும் தலையில் ஏறி அதைத் தாறு மாறாய் ஆடச் செய்தது. இப்படி நடக்குமா... நடக்குமா என்று மனம் அவனைக் கேட்டது. 'அவன்' மனதைக் கேட்டான். தொண்டைக்குள் ஒரு தேள் கண்களில் நெருப்புக் கதிர் வீச்சு மூளைக்குள் ஈட்டி முனைகள். வாய்க்குள் அரைப் பைத்தியமானது போல் முணு முணுப்பு.

நீலம் குடிவெறியில் தான் அப்படிப் பேசினாள் என்று ஒரே ஒரு சலுகையைத் தான் அவளுக்குக் கொடுக்க முடியும். மற்றபடி, ஆண்களைப் பிடித்துத் தின்னும் ராட்சசியாக நடந்து கொண்டது போலத்தான், அவனுக்குத் தோன்றியது. அவள் குடிக்கு கம்பெனி கொடுக்கவில்லை என்றதும், உதவாக்கரை' என்று திட்டியது கூட நட்புரிமைதான். முன்னாலேயே சேலை, பாவாடை சகிதங்களை அவிழ்த்துப் போட்டுவிட்டு கண்ணாடி கவுனை மாட்டிக் கொண்டது கூட காதலிக்கிறவள் என்ற முறையில் அதை ஒரு நெருக்கமாக ஒப்புக் கொள்ளலாம். அவன் உணவுக் கவளங்களை வாயில் ஊட்டி விட்டது, தாய் கூடக்காட்டாத வாஞ்சை. இவன் குழந்தையாகி, அவள் விரல்களை கடித்ததும், அவள், உடனே அவனை மடியில் போட்டு பஞ்சாபி மொழியில் தாலாட்டுப் பாடியதும், சங்கரியிடம் கிடைக்காத இன்பநேயம்.

அதேசமயம், படுக்கை அறையின் நான்கு சுவர்களிலும் தொங்கிய ஓவியங்கள், அதிகப்படியானவை மட்டுமல்ல அசிங்க மானவையும் கூட. சில ராஜஸ்தானிய அந்தப்புர விளையாட்டுப் படங்களாம். அந்தரங்கம் பகிரங்கப்படுத்தப்பட்ட பச்சையான விளையாட்டுக்கள். ஆடு மாடுகள் கூடச் செய்யாத காதல் களியாட்டங்கள்.

இந்த வகைப் படங்களை பார்க்க மறுத்து, அவன் தலை குனிந்தபோது, அந்தத் தலையை அவள் நிமிர்த்தியது கூட தண்டனைக்குரியது அல்ல. ஆனால், அத்தனை படங்களையும், நகலாக்கிப் பார்க்க வேண்டும் என்று அவள் வற்புறுத்தியது, அதிகப் பிரசங்கித்தனம். ஆனாலும், திட்டவட்டமாக மறுத்தவனுக்கு, அவள் விட்டுக் கொடுத்தது, அவளது பெருந்தன்மை.

முக்கால் இரவு வரை அந்தப் பெருந்தன்மையைக் காட்டத்தான் செய்தாள். முதல் ரவுண்டு இப்படித்தான் இருக்குமென்று அவனைத் திடப் படுத்தினாள். இரண்டாவது ரவுண்டும் இழுபறி ஆனபோது தூங்கிட்டு பார்ப்போம் என்று சொன்னவளும் அவள் தான் அவளை எழுப்பி விட்டது தப்பாய்ப் போயிற்று. மேஜைக்குத் தாவி அவனுக்காகவும் வாங்கி வைத்திருந்த அந்த திரவத்தை, அப்படியே விழுங்கிவிட்டு தாறுமாறாக ஆடினாள். இவன் பெண்ணாகவும் அவள் ஆணாகவும் மாற்றங் கொண்டது போன்ற நிலைமை. மூன்றாவது சுற்றும் முதலிரண்டு சுற்றுக்களானபோது, அவள் இப்படியா நாக் அவுட் செய்வது. "ஓடிப் போ பொட்டைப் பயலே - நல்ல வேளை... நீ என்னைக் கட்டிக்கலே.... கட்டியிருந்தே, நானே உன்னைத் துப்பாக்கியாலே சுட்டிருப்பேன்." என்றாள். இத்தோடவாவது அவள் விட்டிருக்கலாம். விடவில்லையே. "ஒன் பெண்டாட்டிய எவனும் இழுத்துட்டுப் போகும் முன்னால ஓடுடா.... நீ அவளுக்குச் செய்யத் தவறுவது கொடுமைடா... ஆந்திரா ஹைகோர்டுல இதுக்குன்னே ஒரு ஜட்ஜ்மென்ட் வந்ததுடா" என்றாள். பிறகு பஞ்சாபி மொழியில் புலம்பினாள். அவை திட்டு வார்த்தைகள் என்பது மட்டும் அவனுக்குப் புரிந்தது.

மனோகர், உள்ளமும் உடலும் அசைவற்றுப்போக நின்ற கோலத்திலேயே நின்றான். அந்த பேருந்து நிலைய தூண்களில் ஒன்றை, கட்டியபடியே தூங்கிவிட்டான்.

இதற்குள் மனித அரவங்கள் வெளிப்பட்டன. ஆவின் வேன் அலறியது. பக்கத்துப் பால் பூத்தில் வேலைக்காரப் பெண்களின் பிலாக்கணங்கள். சிறுவர்களின் பெரியமனித தோரணையான பேச்சுக்கள். அந்த நிழல் குடையைச் சுற்றியும் கடைக் கூடார பிளாட்பாரங்களிலும் படுத்துக் கிடந்தவர்கள், அசைந்து கொடுத்தார்கள். பொக்கிஷங்களான மூட்டைமுடிச்சுக்கள் இருக்கின்றனவா என்று படுத்தபடியே தலையைத் தூக்கியவர்கள், டப்பாக்களில் தண்ணீர் நிரப்பி அவற்றைத் தூக்கிக் கொண்டு நடந்தவர்கள், சேலைகளையே போர்வையாக்கிப் படுத்துவிட்டு அப்போது, போர்வைகளையே சேலையாக்கிக் கொண்டிருந்த பெண்கள், கடைகளின் படிக்கட்டுகளில் திட்டு வாங்கிய நோயாளிகள், சமையலறையான மூன்றுகல் அடுப்புக்களை மூலையோரமாய்க் கொண்டு போன முதியவர்கள்.

எவரோ ஒருத்தர் மனோகரை அதட்டலாகக் கேட்டார். சுவர் ஓரம் கிடந்த பிளாஸ்டிக் பானையை கொண்டுவந்து, முகத்திற்கு சதக் சதக்' என சத்தமிட நீரடித்தபடியே, "ஏரப்பா நீ.. உனக்கு இங்க என்ன வேலை...'' என்று அதட்டலாய்க் கேட்டார் பிறகு ''பஸ்ஸுக்கா நிற்கே...'' என்று அவனுக்கு ஒரு பதிலையும் சொல்லிக் கொடுத்துவிட்டுப் போய்விட்டார்.

தூங்கிப் போன மனோகர், கண் விழித்தான். வினாடி நேரம் நிர்மலமான மனதில், இரவு நிகழ்ச்சிகள் நினைவுகளாய்ப் பீறிட்டன. பழைய நினைவுகளையும் இழுத்து வந்தன. வெற்றுக் குடத்தை ஆற்றுப் பிரவாகத்தில் அப்படியே முக்கிய நிலை. நீரும் ஏறவில்லை .... குடமும் நிரம்பவில்லை .... அவன் பின் பக்கமாய்த் திரும்பினான். ஒரு இளம் பெண் பாவாடை மேல் ஒரு படுத்தாத் துணியை தாவணியாய்ச் சுற்றிக் கொண்டிருந்தாள். முந்தானை பரவாத முன் பக்கம். தற்செயலாய்ப் பார்த்த மனோகர் அப்படிப் பார்ப்பதையே ஒரு செயலாக்கினான். மனதில் இச்சை வந்ததோ இல்லையோ, அவன் மனப்பாரத்திற்கு அவள் நெம்புகோலானாள். இதற்குள் அந்தப் பெண் சீறினாள். "யோவ். இதுக்கு முன்னாடி நீ பொம்மனாட்டிங்களைப் பார்த்ததே இல்லியா. கஸ்மாலம்..." என்று கத்தினாள். அவள் போட்டக் கூச்சலில், மிச்சம் மீதியாய் படுத்திருந்தவர்கள் எழுந்தார்கள்; அவனை நெருங்கினார்கள்.

மனோகர், அங்கிருந்து நழுவி ஓடாக்குறையாக நடந்தான் பயத்தோடு திரும்பிப் பார்த்தான். எவரும் அவனை விரட்டுவது போல் பின் தொடரவில்லை. இப்படிப்பட்ட அனுபவங்கள் ஆயிரத்தைக் கண்டவர்கள் போல் அத்தோடு விட்டு விட்டார்கள். மனோகருக்குத்தான் மனம் கேட்கவில்லை. கொளுத்தும் வெயிலிலும் கிளுகிளுப்புச் சுகம் கொடுக்கும் குளிர்சாதன அறையும், மணி அடித்தால் மண்டியிடுவதுபோல் அலுவலர்கள் வருவார்கள். அலுவலர்களும் இன்டர்காமில் பேசினால், ஆயிரம் குழைவுகளோடு எவளாவது ஒருத்தி வருவாள். ஆனால், இப்போதைய நிலை....

ஒருத்தியிடம் பேடி..... இன்னொருத்தியிடம் பொம்பளைக் கள்ளனாய்... இது என்ன ரெட்டை வேடம்...? இதில் எது வேடம்...? எது மூலம்....? இதற்கெல்லாம் யார் காரணம்... சங்கரி... சங்கரியே... அவள் மட்டும் அழகாயிருந்து, பிற ஆண்களிடம் அளவோடு பழகி... தன்னிடம் பெண்மை குலுங்க நடந்திருந்தால்... இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது. நீலம் நேரடியாய்ச் சொன்னதை சங்கரி மறைமுகமாய்ச் சொன்னாள். எவனயாவது இழுத்துட்டுப் போவாளாமே... போகட்டும்... அதைப் பார்க்க இருக்கக் கூடாது. செத்துப் போகணும்... தற்கொலையாய் உடம்பைச் சிதைக்கணும்...

மனோகர், நடுச்சாலையில் நடந்தான். கிறீச்சிட்டு நின்ற பல்லவனுக்குள் இருந்த டிரைவர், கண்டக்டர், பயணிகள் ஜனநாயகக் கூட்டணி அமைத்து இவனைத் திட்டினார்கள் காலையிலேயே குடிச்சிட்டு ஆடுறியே... நீ மனுஷனாடா...?

மனோகர், குடிகாரனாய் நடந்தான். எதிரே தென்படும் ஆட்டோக்களில் ஒன்றை நிறுத்தி வீட்டுக்குப் போகலாம் என்ற சுரணை கூட இல்லை. அந்த வீட்டின் நினைவு கூட இல்லை. வீடற்றவனாய், நாடற்றவனாய், தனக்குத்தானே அற்றுப் போனவனாய் அந்தச் சாலையில் நடந்தான். எவளோ ஒருத்தி முன்னால் போனாள். பின்பக்கத்தை வைத்து அனுமானிக்க முடியவில்லை ! அவனுக்குள் ஒரு வேகம். மனம் அவளைச் சுமைதாங்கியாய்ப் பார்த்ததோ என்னமோ... அவளுக்கு இணையாக நடந்தான். அவளை, இணையாய்ப் பார்த்தான் மின்னும் கருப்பி... காதுகளைப் பாதி மூடும் சுருள் சுருளான தலைமுடி.... அவளும் அவன் பக்கத்திலேயே நடந்தாள். இவன், இன்னும் சூரியனே உதிக்கலே... இப்பவே இப்படி எரியுது...' என்று தன் பாட்டுக்குச்

சொல்வது போல் சொன்னபோது, அவள் ஏறிட்டுப் பார்த்தாள்... காறித்துப்பினாள்.

மனோகர் , யாரையோ தேடுவது போல் அங்கும் இங்குமாய்ப் பராக்குப் பார்ப்பதுபோல் பார்த்தான் சாலையின் மறுபக்கம் அவனது நண்பன், நடந்து கொண்டிருந்தான் மிடுக்கான நடை இவனோடு மிசௌரியில் குப்பை கொட்டிய ஐ பி எஸ் இப்போது எஸ்பி. இவனை ரொம்பப் பிடிக்கும் டா' போட்டுத்தான் பேசிக் கொள்வார்கள். அவனிடம் ஒரு வார்த்தை சொல்லிவிட்டால், ராமசாமிக்கு விலங்கு..... அம்மாவுக்கு கொண்டாட்டம். அக்காவுக்குத் துக்கக் குறைவு....

அந்த ஐ.பி.எஸ் நண்பனிடம் அக்கா சந்திக்கும் அநியாயமான அடாவடியை சொல்வதற்காக அவன் சாலையின் மறுபக்கம் போகப் போனான். அதற்குள் இன்னொருத்தி அவள் பார்த்த விதமே பன்னீர் தெளிப்பது போல் இருந்தது .... அவளை முண்டியடித்து நடந்து, முதுகில் முட்டப் போவது போல் தொடர்ந்து, அவளுக்கு முன்னால் நடந்து, திரும்பித் திரும்பிப் பார்த்தான். அவள், தனக்கு இணையாக வரும் வரை நின்றான். இணையாகவே நடந்தான். குரலைக் கனைத்தான் செருமினான். அவளுக்குச் செய்தி கிடைத்தது.... பதில் செய்தி கொடுத்தாள் 'ஏண்டா சோமாறி... கூடை வச்சுருக்குற பொண்ணுன்னா கூட வந்துருவான்னு அர்த்தமா... அதோ சைக்கிள்ல வர்றார். நீ ஆம்பளையா இருந்தா நில்லு.... நில்லுடா.'

மனோகர், நிசமாகவே ஓடினான் சைக்கிள் மணிச்சத்தம் கேட்கும் போதெல்லாம் மனதுக்குள் அலறினான். திரும்பிப் பார்த்தால், அவளைச் சுற்றி ஒரு சின்னக் கூட்டம். பக்கத்தில் சைக்கிள்... மனோகர் பதறியடித்து ஓடினான் சந்து பொந்து இல்லாத நெடுஞ்சாலை ஒளியக் கூட இடமில்லாத பெரிய பெரிய கட்டிடங்கள்.... கூர்க்காக்கள்.... எப்படியோ ஒரு ஆட்டோவை நிறுத்து என்று சொல்லாமலேயே, அதற்குள் துள்ளிக் குதித்தான்.

மனோகர், தன்னைத்தானே கூறு போட்டுப் பார்த்தான் அவன் செயல்பாடு அவனுக்கே அவமானமாகத் தெரிந்தது. இந்தப் பொம்பளைப் பொறுக்கித்தனம் எப்படி வருகிறது? எவள் கூப்பிட்டாலும், இவனால் இயலாது அப்போதைக்குப் பையில் பணமோ, உடம்பில் வீரியமோ இல்லை அப்படியும் ஏன் இப்படிப் பின் தொடர வேண்டும். ஊமையாய் அழும் மனம் அந்த ஒரு நிமிட இடைவேளையில் களியாட்டம் போடுகிறதா ? பில்லி சூன்யம் என்கிறார்களே, அப்படி யாராவது செய்திருப்பார்களோ? ராசியில்லாத சங்கரி வீட்டுக்கு வந்த வேளையா?

வீட்டுக்கும் வாசலுக்குமாய் நடை போட்டுக் கொண்டிருந்த சொர்ணம்மா, ஆட்டோவிலிருந்து இறங்கிய மனோகரைப் பார்த்து தலையில் அடித்தபடியே ஓடினாள் காந்தாமணி ஓடிப் போய் தம்பி என்று சொன்னபடியே அவன் கைகளைப் பற்றிக் கொண்டு விம்மினாள். திண்ணையில் இருந்து முற்றத்திற்குத் தாவிய சங்கரி, மாமியார் போட்ட கூச்சலில் திகிலடைந்து நின்றாள்

"அடே என் ராசா எங்கேடா போனே? ராத்திரி முழுசும் டெலி போன் மேலே டெலிபோனா போட்டோமேடா. காலம் இருக்கிற இருப்புல என்ன எல்லாமோ நினைச்சோமடா... இந்தச் சண்டாளி ஒன்ன என்னடா பண்ணினா ? இப்பவே இங்கேயே சொல்லுடா.. இந்த வீட்ல இந்தப் பேயாள மட்டும்தானா இருக்காள் ? நா இல்லி யா.... அக்கா இல்லியா... தெய்வமே... தெய்வமே... செத்துப் போன தெய்வமே. ஓடுற பாம்பை பிடிக்கிறது மாதிரி இருந்த என் பிள்ளை .. இந்தச் சண்டாளி வந்த பிறகு. பேயறைஞ்சது மாதிரி ஆயிட்டானே... ஏண்டா அப்படிப் பார்க்கே.. எனக்கு பயமா இருக்குடா.."

சங்கரி குன்றிப் போனாள். கால்கள் வளைந்து கொண்டிருந்தன. தலையும் கழுத்தும் சுருங்கிக் கொண்டிருந்தன. அம்மாவை அதட்டும் அண்ணி கூட, மவுனச் சம்மதமாய் நின்றாள். கொடுமையிலும் கொடுமையாகக் கட்டிய கணவன் பேசாமல் நின்றான். இதற்குள், தெருவோரம் சின்னக் கூட்டம். பட்டம் விட்டுக் கொண்டிருந்த சிறுவர்கள், அவற்றை இறக்கியபடியே, ஓடி வந்தார்கள். எதிர்வீட்டு மொட்டை மாடியில் நின்ற உமாவும், அவள் மாமியாரும், நெருங்கிய தோழிகளாய் நின்றார்கள். இந்திரன் மட்டும் கீழே வந்தான். எதுவும் நடக்காதது போல், மனோகரை நெருங்கினான்.

என்ன ஸார் இப்படிப் பண்ணிட்டீங்க...? ஒரு டெலிபோனாவது செய்யக் கூடாதா? ஒங்க ஒய்பும், ஒங்க அக்காவும், எங்க வீட்டுக்கு வந்து அழுத அழுகையில் எங்க உமா இன்னும் அழுதுகிட்டே இருக்காள்... போலீஸ்ல என்னை புகார் செய்யச் சொன்னாங்க. நான் தான் இன்னைக்குக் காலை வரை பொறுத்துக்கச் சொன்னேன்... ராத்திரி என்னசார் நடந்தது..."

மனோகர், இந்திரனை, அகலிகையின் ரிஷிக் கணவன் பார்த்தது போலவே பார்த்தான். 'மானங்கெட்ட பய, வலியப் பேசுறான்... எனக்காகவா பேசுறான்.... சங்கரி எப்படி அங்கே போகலாம் ? நான் ஒரு நாள் தலை மறைஞ்சதுக்கே இப்படின்னா... ஒரேயடியா மறைந்தால்..... இந்த அக்காவுக்கு புத்தி எங்கே போயிட்டு...? அவள் சூதில்லாம போயிருப்பாள். இந்த சங்கரிதான், இதைச் சாக்காக வைத்துப் போயிருப்பாள்.

மனோகர், இந்திரனுக்குப் பதில் சொல்லாமல், சங்கரியை அதட்டலாகப் பார்த்தான். அவசரப் பிரகடனச் சட்டத்தை வெளியிட்டான்... சட்டத்தின் அடிப்படையிலான தீர்ப்பல்ல. தீர்ப்பின் அடிப்படையிலான சட்டப் பிரகடனம்.

"ஏய்... சங்கரி... ஒண்ணு உள்ள போ... இல்லைன்னா வெளிலே போ இப்படி மானத்த வாங்கிட்டு நிற்காதே..."

சங்கரி, அதிர்ந்து திரும்பினாள். கூட்டம் மட்டும் இல்லை யானால், அவனிடம் நியாயம் கேட்டிருப்பாள். ஆனாலும், அவன் எந்த அர்த்தத்தில் அப்படிச் சொல்லுகிறான் என்பது புரியவில்லை. அந்தக் கூட்டத்தைப் பார்க்கப் பார்க்க அவளை, அவமானம் பிடுங்கித் தின்றது. மாமியார்க்காரி வேறு, அண்ணியின் கன்னத்துக்கு அருகே கையைக் கொண்டு போய், 'பெண்ணாடி பார்த்தே... சீமையில் இல்லாத பொண்ணு...' என்று கத்திக் கொண்டிருந்தாள்.

சங்கரி, சூனியப்பட்டு நின்றாள். பிறகு வாயில் முந்தானை முனையைச் சுருட்டிப் பந்தாய்த் திணித்தபடியே பின்னோக்கி ஓடினாள். படி நோக்கிப் பாய்ந்தாள். கட்டிலில் விழாமல், தரையில் வீழ்ந்தாள். வீட்டின் நினைப்பு கேளாமலே வந்தது. அப்பா, அவளைத் தாயாகப் பாவித்தார். அம்மாவோ, பேத்தி போல் செல்லம் கொடுத்தாள். என்ன கேட்டாலும் கிடைக்கும். எங்கே வேண்டுமானாலும் போகலாம். இவள் தான் கேட்டதில்லை.... போனதில்லை. அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள், தத்தம் பெண்களை சங்கரி இருக்காபாரு, நீயும் இருக்கியே பாரு என்பார்கள். ஆனால், இவள் சமயம் பார்த்து அந்தப் பெண்களை வீட்டுக்குக் கூட்டி வந்து, இக்கரைக்கு அக்கரை பச்சை என்று ஆற்றுப்படுத்துவாள். அந்தப் பெண்களும், அவளிடம் பகைமை காட்டியதில்லை. கல்லூரியில், அவளைப் பார்த்து சில மாணவர்கள் கிண்டலடித்தது உண்மைதான். காரைக்கால் அம்மையாராம்.... அன்னை தெரேஸாவாம்... இவளும் பதிலுக்கு அவர்களை நெருங்கி, அந்த அம்மையார்கள் போலவே ஆசீர்வாதித்து விட்டுச் சிரிப்பாள். அந்தச் சிரிப்பு , சிரிப்பாய்ச் சிரிக்கப்படவில்லை. அந்தக் கிண்டல், நையாண்டியாய் மாறியதில்லை. தோழிகள் கூட, எங்களை இந்தப் பாடு படுத்தறானுக... உன்னை ஏண்டி விட்டு வைத்திருக்காங்க.... சொல்லுடா...' என்று சுவைபடக் கேட்பார்கள். இவள் சிரிப்பாள். அந்தச் சிரிப்பு, அவர்களையும் தொற்றிக் கொள்ளும்.

இந்த வீட்டிற்கு வந்த பிறகுதான் இப்படிப்பட்டச் சுடு சொற்களைக் கேட்கிறாள். தெரு அவமானத்திற்கு உட்படுத்தப் படுகிறாள். பேசாமல் வீட்டுக்குப் போய் விடுவோமா... நீரிழிவு அப்பாவுக்கு கிட்னிதான் பெயிலாகும். அம்மா, அழுதே செத்துப் போவாள்... இன்று வரை தன்னை வியக்கும் ஊர், வாழாவெட்டி' என்று வம்புப் பேச்சு பேசலாம்.... கால வெளிப்பாட்டை அதன் போக்கிலேயே விட்டு விட வேண்டியது தான்...

கதவு தட்டப்பட்டது கேட்டு, அவள் தரையிலிருந்து கட்டிலில் உட்கார்ந்தாள் எதிர் பார்த்ததற்கு மாறாக, மாமியார் வாசல் பக்கம் நின்றாள்.

"கீழே குளிச்சிட்டு இருக்கான்... பேன்ட் சட்டையை வாங்கிட்டு வரச் சொன்னான்."

"அவரையே வந்து வாங்கிட்டுப் போகச் சொல்லுங்க..."

"என்ன அதிசயமோ தெரியவில்லை - ஒரு வேளை இவள் கண்களில் தெரிந்த கடுமையோ - சொர்ணம்மா பேசாமல் போய் விட்டாள். ஆனாலும், 'என் பிள்ளைய பழையடியும் துரத்துவாள் போலிருக்கே' என்ற வார்த்தைகள் மட்டும் கேட்டன.

சங்கரி, அலமாறியிலிருந்த ஒரு காகிதத்தை எடுத்து, அவன் கண்ணில் படும்படி மேஜையில் வைத்தாள். அவனை அப்படிப் பேசியதிலிருந்து அவள் பட்டபாடு அவளுக்குத்தான் தெரியும்.... 'துரத்திட்டேனே துரத்திட்டேனே' என்று இதே அறைக்குள் வெளிப்படையாகவே தலையில் அடித்துக் கொண்டவள். அவன், நேற்றிரவு வராத போது, ஒரு நிமிடம் கூட இமை மூடவில்லை . அவன் வந்ததும், அவன் காலில் விழுந்து மன்னிப்புக் கோர நினைத்தாள். 'நீங்கள் பக்கத்தில் இருந்தாலே போதும்... எனக்கு எதுவுமே வேண்டாம்.' என்று சொல்லத் துடித்தாள். ஆனால், அம்மாக்காரி அப்படிப் பேசிய போது, அதை அங்கீகரிப்பதுபோல் நின்றவரிடம் என்ன பேச்சு.... எல்லாரும் இளக் காரமாய் நினைக்கும்படி, கழுத்தைப் பிடித்து தள்ளாத குறையாக உள்ளே போகச் சொன்னவரிடம், என்ன ஒட்டு....? என்ன உறவு?

சங்கரி, கதியற்று, தனக்குள்ளே புலம்பிக் கொண்டிருந்தபோது, மனோகர் ஈரத் துண்டைத் தலையில் துடைத்தபடியே வந்தான். அவள் ஒருத்தி, அங்கே இருக்கிறாள் என்று அங்கீகரிக்காமலேயே, பீரோவைத் திறந்து, நீலப் பேண்டையும், மஞ்சள் சொக்காவையும் தேடினான். அந்தத் தேடலில், அவள் சேலை பாவாடைகளைக் கீழே சிதறடித்தான் கண்ணாடி முன்னாடி ஒப்புக்குத் தலை வாரினான். மேஜையில் பட்ட காகித ஓலையை பார்த்துப் பிரித்தான். இவள் கெட்ட கேட்டுக்கு ஸ்டாப் செலக்ஷன் கமிஷன்ல பாஸாயிட்டாளாம். இன்னும் ஒரு மாதத்துக்குள்ளே எந்த டிபார்ட்மென்ட்ல வேலைன்னு ஆர்டர் போடுவாங்களாம்.

மனோகர், காகிதத்தை கீழே வீசி அடித்துவிட்டு திரும்பிப் பாராமல் நடக்கப் போனான். இப்போது அவள் மனதிலும் ஒரு வீம்பு.

"நான் வேலையில் சேரப் போறேன்."

அவன் நின்ற இடத்தில் நின்றபடியே திரும்பினான். அவளுக்கு ஜீ.ஓ. போட்டான்.

"வேலையும் வேண்டாம்... கீலையும் வேண்டாம்... நான் ஒருத்தன் சம்பாதிக்குறதே போதும்."

"எனக்குப் பணம் முக்கியமில்லை ."

"லுக் சங்கரி! நீ வேலைக்குப் போகல. போகல்- போதுமா"

"எனக்கு அங்கேயாவது நிம்மதி கிடைக்கும்."

"என்னால முடியலைன்னு பழையபடியும் சொல்ல வர்ற ... அவ்வளவுதர்னே."

"அய்யோ ... நான் அந்த அர்த்தத்திலே சொல்லலே.... அந்த நினைப்பே இப்ப இல்லை... உங்க அம்மா படுத்தற பாட்டைத்தான் சொல்ல வந்தேன்"

"நீ எதைச் சொல்ல வந்தியோ... எனக்குக் கவலை இல்லை .... ஆனா ஒரு விஷயத்தை விளக்கி ஆகணும். மனைவிகிட்டே குறைகள் இருந்தால், அவள் புருஷனால முடியாதாம்.... முதல்ல உன்னை கண்ணாடிலே பாத்துக்கோ. உன் மனசை நீயா சோதித்துக்கோ... ஏன் முனங்குறே... முனங்கி முனங்கி என்னை முக்காடு போட வைக்காதே..... எதைச் சொல்ல வந்தாலும் வெளிப்படையாச் சொல்லு... சொல்றியா..... இல்லியா..''

"எங்கிட்ட எந்தக் குறையும் நீங்க கண்டு பிடிக்க முடியாது.. அப்படிக் கண்டு பிடித்திருந்தால் உங்களுக்கு என்னை நெருங்கவே மனசு வராது. ஆசையாத்தான் வாறீங்க. அப்புறமாத்தான் - சரி இப்ப இது ஒரு விவகாரமே இல்லை .... இப்ப விஷயம் என் வேலை சம்பந்தப்பட்டது...''

"போக முடியாது." "போய்த்தான் ஆகணும். போவேன்."

"அப்போ ... வேலையில் சேருறதா லெட்டர் எழுதிப்போடு... மிஸஸ்னு எழுதாம மிஸ்ஸுன்னு எழுதிப்போடு -. நம்ம ரெண்டு பேருக்குமே நிம்மதி ..”

மனோகர், வெளியேறிவிட்டான். சங்கரியையும் பிடிவாதம் பிடித்துக் கொண்டது....