அணிந்துரை

பூக்கடைக்கு விளம்பரம்‌ தேவையில்லை. சு.சமுத்திரத்தின்‌ படைப்புகளுக்கு, முன்னுரை-அணிந்துரை எல்லாம்‌ தேவையில்லை. அவருக்கென்று ஒரு வாசகர்‌ வட்டம்‌ ஏற்கனவே உள்ளது. அந்த எளிமையான நடை, அதற்குள்‌ உள்ளாடிக்கிடக்கும்‌ ஒருவகை சமூக நையாண்டி அவரின்‌ படைப்புகளுக்கு தனிக்‌ கவர்ச்சியைத்‌ தந்து கொண்டிருக்கின்றன. த.மு.எ. ச. மீதுள்ள மதிப்பின்‌ காரணமாகவே இந்த அணிந்துரையைக்‌ கேட்டிருக்கிறார்‌ என நினைக்கிறேன்‌.

“செம்மலர்‌” ஏட்டில்‌ தொடராக வெளிவந்த இந்த நவீனத்திற்கு ஒரு தனிச்‌ சிறப்பு உண்டு. பாபர்‌ மசூதியை இடித்து இந்தியாவின்‌ மானத்தைக்‌ கப்பலேற்றினார்களே, அந்தக்‌ கொடுமையை மையமாக வைத்து எழுதப்பட்ட முதல்‌ தமிழ்‌ நவீனம்‌ இதுவாகத்தான்‌ இருக்கும்‌. தன்‌ காலத்தில்‌, தன்‌ கண்‌ முன்னால்‌ நடக்கிற அவலங்களை, அநீதிகளைக்‌ கருப்பொருள்‌ ஆக்குவதுதான்‌ ஒரு சமூகப்‌ பொறுப்புள்ள படைப்பாளியின்‌ கடமையாக இருக்கும்‌. பாரதியின்‌ கவிதைகளில்‌ மட்டுமல்ல, அவரின்‌ கதைகளிலும்‌ கூட அந்தக்‌ காலத்தின்‌ ஆகப்பெரும்‌ பிரச்சினையான அடிமை விலங்கு அடிச்சரடாய்‌ வந்துள்ளது. இன்று நம்‌ கண்முன்னால்‌ ஒரு மாபெரும்‌ அக்கிரமம்‌ நடந்துள்ளது. 450 ஆண்டுகளுக்கும்‌ மேலாக இருந்த ஒரு சின்னம்‌- இந்தியப்‌ பழமையின்‌ பாரம்பரியத்தின்‌ ஒரு சின்னம்‌- தகர்த்துத்‌ தரைமட்ட மாக்கப்பட்டது. தேச ஒருமைப்பாட்டு உணர்வின்‌ மீது பேரிடி வீழ்ந்தது. மூவாயிரத்திற்கும்‌ மேற்பட்டோரின்‌ உயிர்கள்‌ பிடுங்கப்பட்டன. அவர்களில்‌ பெரும்பாலோர்‌ சிறுபான்மை சமூகத்தினர்‌. இவ்வளவு பெரிய கொடுமை எத்தனை எழுத்தாளர்களின்‌ நெஞ்சைக்‌ குலுக்கியது? எழுத்தாளப்‌ பிரபலங்களில்‌ சு.ச.வைத்‌ தவிர வேறு யாரும்‌ இதை வைத்து நவீனம்‌ படைத்ததாய்த்‌ தெரியவில்லையே!

சமகால வாழ்வைக்‌ கலையழகோடு பிரதிபலிக்கும்‌ கண்ணாடிகளாக இலக்கியங்கள்‌ திகழ வேண்டும்‌. இங்கோ பல கண்ணாடிகள்‌ ரசம்‌ பூசப்படாதவையாக உள்ளன. அவற்றின்‌ வழியாகப்‌ பார்த்தால்‌ எழுத்தாளர்களின்‌ சுய வக்கிரங்களே, சுய குழப்பங்களே தெரிகின்றன. இவர்களிலிருந்து சு.ச. மாறுபட்டவர்‌ என்பது திண்ணம்‌. இவரது படைப்புகள்‌ வாழ்வின்‌ படப்பிடிப்புகள்‌. அவ்வாறே இந்த “மூட்டமும்‌'” உள்ளது.

இந்த நவீனத்தின்‌ பெயரே ஆயிரம்‌ அர்த்தங்களைச்‌ சுமந்து வருகிறது. இன்று இந்திய வாழ்வை ஒரு “மூட்டம்‌'" சூழ்ந்து வருகிறது. ஒரு தாய்‌ வயிற்றுப்‌ பிள்ளைகள்‌ மத்தியில்‌ பிளவுகள்‌, பிரிவுகள்‌ திட்டமிட்டு மூட்டப்படுகின்றன. அதிலும்‌ படித்தவர்கள்‌ நெஞ்சில்‌ புதுப்புதுக்‌ குழப்பங்கள்‌ உருவாக்கப்படுகின்றன. இந்த நவீனத்தில்‌ வரும்‌ இரண்டு ஆசிரியர்கள்‌ அந்நியோந்நியமாக இருந்த அழகு என்ன; பின்னர்‌ அது சிதைவு பட்ட கோரம்‌ என்ன!

மதம்‌ மனிதனை உருவாக்கவில்லை; மனிதன்தான்‌ மதத்தை உருவாக்கினான்‌. இந்த மெய்யைப்‌ பொய்யாக்கிக்‌ காட்டத்தான்‌ ஒரு சுயநலக்‌ கூட்டம்‌ விடாது வேலை செய்து வருகிறது. ஆனாலும்‌ மனம்‌ சோரத்‌ தேவையில்லை. அமுக்கப்படும்‌ இயல்பான மனிதநேய உணர்வுகள்‌ "விடுபட்டுக்‌ கிளம்பவே செய்யும்‌. பல நூறு ஆண்டுக்கால வரலாற்றில்‌ தமிழசம்‌ எத்தனையோ மதமோதல்களைக்‌ கண்டிருக்கிறது. அவற்றையெல்லாம்‌ மீறித்தான்‌ அது நிலைபெற்று வாழ்ந்து கொண்டிருக்கிறது. பிற மாநிலங்க ளோடு ஒப்பிடும்போது தமிழகத்தில்‌ சகிப்புத்‌ தன்மை யையும்‌. நல்லிணக்கமும்‌ எவ்வளவோ சிறப்பாக உள்ளது என்று தான்‌ கூற வேண்டும்‌. இதற்காக எத்தனையோ பெரியவர்கள்‌ பாடுபட்டிருக்கிறார்கள்‌, எத்தனையோ முற்போக்கு இயக்கங்கள்‌ பணிபுரிந்திருக்கின்றன. அவர்கள்‌ விதைத்த விதை என்றும்‌ வீணாய்ப்‌ போய்‌ விடவில்லை. மதப்‌ பெரியார்களின்‌ சதித்திட்டங்களையெல்லாம்‌ மீறி இங்கே இந்து- முஸ்லிம்‌-கிறிஸ்துவ ஒற்றுமை நிலவி வருவது அதற்குச்‌ சாட்சி. இந்த நவீனமும்‌ நம்பிக்கை மிகுந்த இந்த அடிப்படை யதார்த்தத்தோடு நிறைவு பெற்றிருக்கிறது. இந்த நவீனத்தின்‌ கதாபாத்திரங்கள்‌ நம்‌ மத்தியில்‌ உலவி வருபவர்கள்‌ தாம்‌. ஓர்‌ ஊரே முற்றுகையிடப்படுவதும்‌, போலீஸ்‌ அட்டூழியமும்‌ கூட புதிது அல்ல தான்‌. பத்திரிகை களில்‌ வந்த செய்திகள்‌-நமக்கு அவை செய்திகள்‌; சு.ச.விற்கோ அவற்றில்‌ இலக்கியம்‌ தட்டுப்பட்டிருக்கிறது. இதன்‌ மூலம்‌ மனித குலத்தின்‌ மீது பாசமிக்க ஓர்‌ உள்‌ ளத்தை வாசகர்கள்‌ கண்டு கொள்வார்கள்‌. சமகால வாழ்வு பற்றிய படைப்புகளில்‌ செய்தி அதிகமாகவும்‌, இலக்கியம்‌ குறைவாகவும்‌ இருப்பதாக சில நவீன பண்டிதர்கள்‌ முகஞ்சுளிக்கிறார்கள்‌. அப்படியா? அது உண்மையெனில்‌ ஏன்‌ இந்த மோதாவிகள்‌ இலக்கியம்‌ குறைவு படாமல்‌ சமகால வாழ்வைப்‌ பிரதிபலிக்கக்‌ கூடாது?

ஏன்‌ மனக்குகை மர்மங்களை, அதுவும்‌ மர்மமான மொழியில்‌ எழுதிப்‌ பயமுறுத்த வேண்டும்‌? அழகியல்‌ ஊனப்பட்டு விடக்கூடாது என்பதில்‌ முற்போக்கு எழுத்தாளர்களுக்கும்‌ முழு உடன்பாடு தான்‌. ஆனால்‌ அதை ஒரு சாக்காகக்‌ கூறிக்‌ கொண்டு நமது வாழ்வை நேரடியாகப்‌ பாதித்துக்‌ கொண்டிருக்கும்‌ பிரச்சினைகளைத்‌ தொடாமல்‌ தப்பித்து ஓடுவதை நாம்‌ அங்கீகரிக்க முடியாது. இந்த நவீனத்தில்‌ ஒரு முக்கியமான பிரச்சினை தைரியமாகவும்‌ இலக்கிய சீதனத்தோடும்‌ எதிர்‌ கொள்ளப்‌ பட்டிருக்கிறது. சிறுபான்மை மக்களின்‌ வாழ்வை, உணர்வுகளை பெரும்பான்மை வகுப்பைச்‌ சார்ந்த ஒருவர்‌ சித்தரிப்பது ஆரோக்கியமான முன்னுதாரணமாக உள்ளது. சு.ச.விற்கு நமது வாழ்த்து உரித்தாகிறது.

இரா.கதீரரசன்‌

பொதுச் செயலாளர்‌

தமிழ்‌ நாடு முற்போக்கு எழுத்தாளர்‌ சங்கம்‌