சொல்லாதது

அவளுக்கு, சுந்தரி என்ற பெயர் காரணப் பெயராகவே அமைந்தது என்று எந்த இலக்கணப் பண்டிதரும் சொல்லவில்லை. சொல்வானேன்? மலரை எடுத்து வைத்துக்கொண்டு ஆஹா ! என்ன மணம், எவ்வளவு இன்பம் !' என்று சொல்லாமலே, எவ்வளவோ பேர், முகந்து ரசிக்க வில்லையா? சுந்தரியின் சிறு பிராய முதலே அவளுடைய அழகைக் கண்டவர் களித்தனர். கடைவீதி போய் வீடு திரும்புவதற்குள், கன்னத்திலே எத்தனையோ முத்தம், கையிலே பலவகைப் பண்டம், அப்பெண்ணுக்கு . பள்ளி யிலே பலநாள் ஆசிரியருக்குக் கோபம், பாடத்லே அந்தப் பாவை நினைவைச் செலுத்தாததால் . அப்படிப் பட்ட மாணவியை, முட்டாள், தடிக்கழுதை, உதைக்கிறேன் பார், என்று எவ்வளவோ வசை மொழி சொல்லலாம். ஆசிரியருக்கு அகராதியா தெரியாது? ஆனால் அவர் ஒருநாளாவது, சொல்லவேண்டுமென்று எண்ணியதைச் சொன்னதேயில்லை. புன்சிரிப்புடன் தலையை அசைப்பார், சுந்தரியின் முகத்திலே கொஞ்சம் பயம் தட்டுப்படும். அது ஒரு புதுவிதமான களையைத் தரும், அதை ரசிப்பார் ஆசிரியர். வேறு மாணவியின் காதை இழுப்பார், கன்னத்தைக் கிள்ளுவார், தலையைக் குட்டுவார், சுந்தரி மீது சுடு சொல் வீசமாட்டார், அந்த மலர் வாடி விடுமோ என்று நினைத்து.

"குட்டி பெரியவளானால் மகா ரூபவதியாக இருப்பாள். கண்களே போதும் ஆளை மயக்க, அந்தப் புன்சிரிப்பு இருக்கிறதே, அதுபோல நான் கண்டதேயில்லை. சுருண்டு கருத்து அடர்ந்து, காற்றிலே அலையும் அவளுடைய கூந்தல் இருக்கிறதே, அட்டா என்ன நேர்த்தி, என்ன இலாவண்யம்" என்று, சுந்தரியின் பாலப் பருவ ரசிகர்கள் சொல்லவில்லையே தவிர, அவ்விதமும், அதற்கு மேலும் நினைக்காதவர்களே கிடையாது.

"சுந்தரி, நாமோ ஏழைகள், விதவிதமான துணிகள் உனக்குக் கிடைக்காது. நான் ஆப்பம் சுட்டு விற்று அதைக்கொண்டுதானே இரண்டு ஜீவன்கள் வாழவேண்டும்? உன் தகப்பனோ, எங்கோ தேசாந்திரம் போய்விட்டான். நாம் என்ன செய்யலாமடி கண்ணே! சோற்றுக்கு ஊறு காய்தான் உனக்கு வறுவல், கூட்டு, வடை எல்லாம் " என்று சுந்தரிக்கு அவளுடைய தாயார் தனபாக்கியவதி சொல்லவில்லை; சுந்தரிக்குத்தான் இது தெரியுமே. அந்தப் பச்சை நிறச் சொக்காயும், பாக்குக் கலர் பாவாடையும், அவளுடைய பவுன் நிற மேனிக்கு அழகாகத்தான் இருந்தது, பம்பாய் சில்க்கும் சீமை வாயிலும் அவளுக்கு எதற்கு? ' அழுமூஞ்சி அன்னம், பொட்டைக் கண் பொன்னி, வழுக்கைத் தலை வனிதா இவர்களுக்கு வேண்டும் இந்த மேனி மினுக்கிகள், என்று தனபாக்கியம் சொல்லவில்லை. ஆப்பம் சுட்டு விற்பவளுக்குப் பணக்கார வீட்டுப் பெண்களைக் கேலி செய்யும் உரிமை உண்டா?

சுந்தரியின் வளர்ச்சியும், வீட்டிலே வறுமையின் முதிர்ச்சியும், ஒன்றை ஒன்று போட்டியிட்டன. இந்த அமளியின் இடையே, அவளுடைய அழகு வளர்ந்தபடி இருந்தது, எதையும் சட்டை செய்யாமல்.

“எனக்கு மட்டும் கொஞ்சம் சொத்து, ஒரு சொந்த வீடு இருந்துவிட்டால், என் தங்கத்துக்கு ஏற்றவனாக ஒருவனைத் தேடிப் பிடித்துக் கலியாணம் செய்துவைக்க முடியும். கண்டேன் கண்டேன் என்று கைலாகு கொடுக்க எவரும் சம்மதிப்பார்கள். சுந்தரி, ஆப்பக் கடைக்காரியின் பெண்ணாயிற்றே, எந்தத் தடியனோ வெறியனோ எவனோ ஒருவனுக்குத்தானே வாழ்க்கைப் பட்டாக வேண்டும்" என்று தனபாக்கியம் சொல்லவில்லை. அவளுடைய கண்ணீர், ஏற்கனவே தூசு நிரம்பிக் கிடந்த தலையணையை மேலும் அதிகமாக அழுக்காக்கிவிட்டது.

"அழகான பெண், அடக்கமானவள், ஏதோ கொஞ்சம் படித்தும் இருக்கிறாள். ஏழைதான், இருந்தால் என்ன? நம் வீட்டிலே உலாவினாலே போதும், கிருக லட்சுமியாக இருப்பாள். நமது பையனுக்கு ஏற்ற பொருத்தமான பெண். என்ன செய்வது? அவள் ஆப்பக்கடைக்காரிக்கா பிறக்க வேண்டும்? அரச மரத்தை ஆறு வருஷம் சுற்றியும் பயனில்லாமல், அடுத்த தெருவிலே, அழுதுகொண்டிருக்கிறாளே தாசில்தாரின் சம்சாரம் தில்லை, அவள் வயிற்றிலே பிறந்திருக்கக் கூடாதா? நமது பையனுக்குக் கல்யாணம் செய்துகொள்ளலாமே" என்று லோகு முதலி சொல்ல வில்லை. மனதிவே இதுபோலப் பலமுறை அவர் நினைத்தார்; சொல்லவில்லை வெளியே. லோகு முதலி பணம் படைத்தவர், பெண்டு இழந்தவர், ஒரே மகன் அவருக்கு, ஒய்யாரமான பையன், அவனுக்குச் சுந்தரிடம் மையல்.

"கனகு, ஏனப்பா, அடிக்கடி அந்த ஆப்பக்கடைக்குப் போய்வருகிறாயாமே, அந்தப் பெண் சுந்தரியை நேசிக்கிறாயாமே" என்றும் லோகு முதலி சொன்னதில்லை, மகனிடம் இதுபோலப் பேசக்கூடாது என்ற சம்பிரதாயத்தினால்.

"எனக்கு என்னமோ அப்பா, அந்தக் கடைப் பக்கம் ஒரு நாளைக்கு ஒரு தடவையாவது போய்வராவிட்டால், சந்தோஷம் உண்டாவதில்லை. அப்பா, சுந்தரியின் அழகு என்னை என்ன பாடுபடுத்துகிறது தெரியுமா? தூக்கமே இருப்பதில்லை, தவறித் தூங்கினாலோ, கனவுதான். கனவிலே அந்தக் கிளிமொழியாள் பிரசன்னமாகிறாள் அப்பா, நான் என் உயிர்போவதானாலும் சுந்தரியைத் தவிர வேறு ஒரு பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்ளவே மாட் டேன். சத்தியமாகச் சொல்கிறேன் அப்பா, சுந்தரிதான் எனக்கு வேண்டும், இல்லாவிட்டால் கலியாணமே வேண் டாம்" என்று கனகசபேசன் சொல்லவில்லை. தந்தையிடம் தனயன் இதுபோலப் பேசுவது தகுமா?

.

சுந்தரியாவது சொன்னாளா மனதிலே நினைத்ததை, சொல்லவேயில்லை. அம்மா, கனகு, என்னைக் கண்டதும் ஒருமாதிரியாகச் சிரிக்கிறான். தண்ணீர் கேட்கிறானே, அப்போது நான் குவளையைக் கொடுக்கும் போது, வேண்டு மென்றே என்னைத் தொடுகிறான். என்னைத்தான் கலியாணம் செய்து கொள்ளப் போவதாகக் கூறுகிறான், என் காதில் படும்படி" என்று சுந்தரி சொல்லவில்லை. அவள் சொல்வானேன், சுந்தரியைப் போலத் தனபாக்கியமும் வாலிபப் பெண்ணாக இருந்தவள் தானே!

"சுந்தரி, உன்னை நான் கட்டாயமாகக் கலியாணம் செய்து கொள்கிறேன். எமாற்றி விடுவேன் என்று எண்ணாதே. ஏழை வீட்டுப் பெண்தானே என்று எங்கள் வீட்டிலே தள்ளிவிடுவார்கள் என்றும் கருதாதே. பார், எப்படியாவது எங்கள் வீட்டாரைச் சரிப்படுத்திக்கொண்டு உன்னைக் கலியாணம் செய்துகொள்கிறேன்."

"என்னையாவது நீங்கள் கலியாணம் செய்து கொள்வதாவது, அறுபது வேலிக்குச் சொந்தக்காரர் உங்கள் அப்பா, நான் ஆப்பக்காரி மகள். என்னையாவது நீங்கள் கலியாணம் முடிப்பதாவது. அதெல்லாம் நடவாத காரியம், ஏன் வீணாக என்னை ஏய்க்கப் பார்க்கிறீர்கள்!"

"சுந்தரி, சத்தியம் செய்கிறேன். என்னை நம்பு."

"சத்தியமா? ஆசைக்குக் கண்மண் தெரியாது. அதனாலே பேசுகிறீர்கள் இதுபோல வீணாக என்னைக் கெடுக்க வேண்டாம். நான் ஏழை."

"எங்கள் வீட்டிலே மண்டை உடையக்கூடிய சண்டை நடப்பதானாலும் சரி, உன்னைத்தான் கலியாணம் செய்து கொள்வது என்று நான் தீர்மானித்துவிட்டேன்."

"மனக்கோட்டை இது, இடிந்துபோகும். இலுப்பப் பட்டி மிராசுதார் மகள் முகம் இஞ்சி தின்ற குரங்கு போல இருக்குதாம்! இருந்தால் என்ன, அவள்தான் உனக்கு நாயகியாக வரப்போகிறவள்."

"சீ! அந்தக் குரங்கையா, நான் கலியாணம் செய்து கொள்வேன்?"

இவை சுந்தரிக்குக் கனகு சொல்லாதவை, கனகுக்குச் சுந்தரியும் சொன்னதல்ல!

சில காலத்துக்குப் பிறகு இலுப்பப்பட்டி மிராசுதாருக்குத்தான் கனகு மருகனானான்.

"குரங்கு போல இருக்கிறாயே, உன்னைக் கட்டிக் கொண்டேனே, நான் ஒரு மடையன். அப்பன் மிரட் டினால் என்ன, பிடிவாதமாக இருந்தால், எப்படி நடந்திருக்கும் இந்தக் கலியாணம் பாழான பணத்தாசை எனக்கும் பிடித்துக்கொண்டதால்தான், நானும் இதற்கு ஒப்புக்கொண்டேன். பத்தரைமாற்றுத் தங்கம் போன்ற சுந்தரியை இழந்துவிட்டேன். இனி உன்னோடு அழ வேண்டும், என் விதி! விதி என்ன செய்யும்? என் புத்தியைக் கட்டையாலே அடிக்க வேணும்' என்று கனகு சொல்லிக் கொள்ளவில்லை, எண்ணாமலுமில்லை. அவன்தான் என்ன செய்வான் பாவம்! அறுபது வேலி நிலமும் இலுப்பப்பட்டியாரிடம் அடகு இருந்தது, தன்னுடைய அழுமூஞ்சியைக் கனகு கழுத்திலே கட்டி விட்ட பிறகு தான், வட்டியும் அசலும் செல்லாகிவிட்டதாக மிராசுதார் எழுதிக்கொடுக்க இசைந்தார். பட்ட கடனுக்கு இது தண்டனை என்று கனகு நினைத்துக்கொண்டான். சொல்ல முடியுமோ?

தேசாந்திரம் செய்து கொண்டிருந்த திருவேங்கடம், 'எனக்கு மனைவி உண்டு, ஒரு மகளும் உண்டு, சிகப்பாக இலட்சணமாக இருப்பாள். என் மனைவி எப்படியோ கஷ்டப்பட்டு, ஏதேதோ பாடுபட்டு, என் மகளை வளர்த்து வருகிறாள். எனக்கு வேலை செய்ய முடிவதில்லை, வீட்டைக் கவனிக்க முடியவில்லை, இப்படி ஊரூராக அலைந்து, அரை வயிற்றுக் கஞ்சிக்கு ஆலாய்ப் பறக்க முடிகிறதே யொழிய வீட்டோடு இருக்கப் பிடிக்கவில்லை. நான் கட்டியிருப்பது காவிதான். ஆனால் கள்ளச் சாவி கிடைத்தால் போதும், போதைக்குச் சரியான "சான்சு" கிடைத்துவிடும். அது ஒன்றுதான் வாழ்க்கையிலே எனக்கு இருக்கும் திருப்தி" என்று, திருவேங்கடம் சொல்லவில்லை. ஆனால் அவன் எண்ணம் அதுதான். சுந்தரியின் பருவ நிலையைப் பற்றியோ, வீட்டின் வறுமையைப் பற்றியோ, கனகுவின் காதல் விஷயம் பற்றியோ, அந்தக் காதலை அவன் வீட்டு நிர்ப்பந்தத்தினால் கைவிட வேண்டி நேரிட்டதுபற்றியோ, ஊரூராகச் சுற்றிக்கொண்டு, ஓய்வுக்கு மடங்களிலே தங்கி, தேர் திருவிழாக் காலங்களிலே, திருப்தியாக வாழ்ந்துவந்த திருவேங்கடத்துக்கு யாரும் சொல்லவில்லை.

கனகுவின் மனைவியானாளே இலுப்பப்பட்டியார் மகள் காவேரி, அவளுக்குக் சனகுவோ, வேறு யாரோ சொல்லவில்லை. ஆப்பக்கடைக்காரியின் மகளிடம் கனகு காதல் கொண்டிருந்த கதையை எப்படி அவ்வளவு பணக்காரப் பெண்ணிடம் அதைப் பேசுவது என்ற பயத்தால்.

இவ்வளவுதானா, கனகுவின் இஷ்டப்படி சுந்தரி சில வேளைகளிலே நடந்து கொண்ட விஷயத்தை யாரும் தனபாக்கியத்துக்குச் சொல்லவேயில்லை.

இது ஏன் இந்தப் பெண் இவனோடு இப்படிக் குலாவுகிறாள்' என்று தனபாக்கியம் பல சமயங்களிலே எண்ணின துண்டு, சொன்னதில்லை. 'அடி அப்பா, ஜாக்கிரதை. அவன் அப்படி இப்படி என்று ஏதாகிலும் கெட்ட பேச்சுச் சொன்னால் கேட்காதே. அம்மாவிடம் சொல்லிவிடுவேன் என்று மிரட்டிவை' என்றும் சுந்தரிக்கு அவள் தாயார் சொல்லவில்லை. கனகு கெட்ட பேச்சுப் பேசியிருந்தால்தானே, சுந்தரி, அம்மாவிடம் தானாகவாவது சொல்லியிருப்பாள்? அவன் சொன்னதுதான் அவளுக்கு ஆனந்தமாக இருந்ததே கேட்க.

"அம்மா, வாயைக் குமட்டுகிறது, சாதம் பிடிக்கவில்லை, மயக்கமாக இருக்கிறது, என்னமோ போல இருக்கிறது உடம்பு' என்று சுந்தரி சொல்லாமலேயே, தனபாக்கியம் நிலைமையைக் கண்டு கொண்டாள். "ஐயையோ, மோசம் வந்துவிட்டதே, அந்தப் பயல் அநியாயமாக ஏதுமறியா என் மகளைக் கெடுத்துவிட்டான் போலிருக்கிறதே. நான் என்ன செய்வேன்? ஏழை என்பதற்காகவே இவளை நல்ல இடத்திலே யாரும் கேட்க வில்லை. இப்படியும் நேரிட்டுவிட்டால் என் கதி என்னாவது? அடி பாழும் பெண்ணே ! இப்படி என் அடிவயிற்றிலே நெருப்பைக் கொட்டினாயே, அவ்வளவு திமிரா உனக்கு? ஆணவமா? கொழுத்துப் போனாயா?" என்றெல்லாம் சொல்லித் தனபாக்கியம் சுந்தரியைக் கண்டிக்கவில்லை, விஷயம் வெளிவந்து விட்டால் விபரீதமாகிவிடுமே என்ற பயத்தால். ஆனால் தனபாக்கியத்தின் பெருமூச்சும், தானாக வழிந்த கண்ணீரும் சுந்தரிக்கு இதைவிட விளக்க மாகத் தாயின் மனோவேதனையைத் தெரிவித்தது.

"தம்பி, ஊரில் உனக்கு உத்தமன் என்று பெயர் இருக்கிறது. நல்ல குணமென்று புகழாதவர்கள் இல்லை. ஏழைகளிடம் இரக்கம் காட்டுகிறாய். இலுப்பப்பட்டி மிராசுதாரரின் இறுமாப்பினால் கஷ்டமடைந்தவர்களை யெல்லாம் உன் கருணையால் காப்பாற்றுகிறாய். இவ்வளவு நல்லவனான உன்னால் என் குடும்பமே பாழாகிவிட்டதே. அதோ சுந்தரி படும் வேதனையைப் பாரடா அப்பா! எந்தப் பாலி கொடுத்த மருந்தும் அதைக் கரைக்கவில்லையே. வளருகிறதே உன்னால் ஏற்பட்ட வம்பு. ஊரார் தூற்றுகிறார்களே. சுந்தரியின் கண்ணீர் என்னைச் சித்திரவதைக்கு ஆளாக்குகிறதே. ஏதோ பணத்துக்கு ஆசைப்பட்டுக் கொண்டோ, அப்பனுக்குப் பயந்தோ ஒருவளைக் கலியாணம் செய்துகொண்டாய். உன் அன்பு மொழியை நம்பினாளே இந்த அபலை, இவளையும் ஏற்றுக்கொள்ளக் கூடாதா இரண்டாந்-தாரமாக? இழிவு போகுமே," என்று தனபாக்கியம் கனகனிடம் கூறவில்லை. கூறிப்பார்ப்போம் என்று பலதடவை எண்ணுவாள். எப்படிக் கூறுவது, சொல்லிப் பயன் என்ன, என்று எண்ணி, ஏங்குவாள்.

”அம்மா, கன்னி கருவுற்றாள். ஊர் தாற்றும் என்று பயந்து ஓடிவந்துவிட்டோம். நீ காப்பாற்று," என்று சொல்ல மனம் இடந்தரவில்லை தனபாக்கியத்துக்கு . ஊரை விட்டுத் தொலைந்தால் போதும், என்று சுந்தரியை அழைத்துக்கொண்டு வேறு ஊர் வந்து குடி ஏறினாள். சுந்தரிக்குப் பத்தாம் மாதம்! மருத்துவம் பார்க்கவந்த கிழவியிடம், தனபாக்கியம், அபாக்கியவதி சுந்தரியின் அந்தரங்கக் கதையைக் கூறவில்லை. "அவளுடைய புருஷன் அக்கரைக்கு ஓடிவிட்டான் " என்று பொய்யுரைத்தாள். தாலி இருந்தது சுந்தரியின் கழுத்திலே, தாய் மகளுக்குக் கட்டிய தாலி!!

தங்க விக்ரஹம்போன்ற குழந்தை பிறந்தது சுந்தரிக்கு. பேரன் பிறந்தது தெரியாமல் பெருமாள் கோயிலிலே பலமான பூஜை நடத்திக்கொண்டிருந்தார் லோகு முதலி.

கலியாணமோ இல்லை, குழந்தையோ தவழ்ந்தது அந்தக் குடிசையிலே ! மாளிகையிலே, கனகனும் காவேரியும், கனபாடிகளின் பூஜை, காளி உபவாசியின் தாயத்து, சித்த வைத்தியரின் செந்தூரம் ஆகியவற்றை நம்பிக் கிடந்தனர், பலனின்றி .

"என் மகன் ராஜாபோல இருக்கிறான், எனக்கென்ன கவலை?" என்று கனகு யாரிடம் கூறுவான்? எப்படிக் கூறுவான்? விஷயமே அவனுக்குத் தெரியாது! தெரிந்தாலும் கூறமுடியுமா?

'போனவன் திரும்பவில்லையே!' என்று பலர், ஆயாசமும் ஆச்சர்யமும் கொண்டு, சுந்தரியைக் கேட்டனர். 'அக்கரை இல்லை அவருக்கு' ஆகவே அவர் அக்கரையில் இருக்கிறார், என்று சாக்குக் கூறுவது தவிர வேறு வழியில்லை. விழியிலே நீர் வழிய வழிய வதைபட்டுக்கிடந்த அந்த வனிதைக்கு, காலம், அவளுடைய கவலையைப் பற்றிய கவலையால் ஓய்ந்து விடுமா? அது ஓடிக்கொண்டேயிருந்தது. ஓராண்டு, ஈராண்டு, மூவாண்டு, ஐந்து ஆண்டுகள் கழிந்தன, தாலியுடன் மணமாகாத மங்கை உலவிக் கொண்டிருந்தாள். தகப்பனாரைக் காணாது தத்தி நடக்கும் பருவ மடைந்தான் தங்கராஜன், தாய் தங்கமே என்று கொஞ்ச, பாட்டி ராஜா என்று கொஞ்ச, இரண்டு ஆசை மொழிகளும் திரண்டு, குழந்தைக்குத் தங்கராஜன் என்ற பெயராக ஏற்பட்டது. தங்கராஜனின் தகப்பனாரின் "ராஜ்யம்", "தங்கம்" இரண்டுக்கும் தேய்வு ஏற்பட்டுக்-கொண்டே இருந்தது, இந்த ஐந்து வருஷங்களிலே! இலுப்பப்பட்டி மிராசுதாரருக்கு ஒரு வியாஜ்யம். அது முனிசீப்புக் கோர்ட்டிலிருந்து ஹைகோர்ட் சென்றது. இந்தப் பிரயாணச் செலவு மிராசுதாரரின் தங்க நகைகளை மார்வாடிக்கும், நிலத்தின் முக்கிய பகுதிகளை, வேறோர் ஜெமீனுக்கும் கட்டணமாக்கிவிட்டது.

"எந்த வேளையிலே நீ எனக்கு மருமகனாக வந்தாயோ, அன்றே என்னைச் சனி பிடித்துத் கொண்டது. என் முகத்திலே விழிக்காதே, உன்னைக் கண்டாலே எனக்குக் கடுங்கோபம் பிறக்கிறது."

"உனக்கு இவ்வளவோடா நின்றுவிடும், கேடு? நீ படவேண்டியது எவ்வளவோ இருக்கிறது. உன்னுடைய பணத் திமிரினால், எவ்வளவு ஏழைகளை கண் கலங்கச் செய்திருக்கிறாய்? அதனுடைய பலனை அடைகிறாய். என் மீது கோபித்துக் கொள்கிறாயே, உன் அட்டகாசத்தால் ஊரிலே உனக்குப் பகை. வியாஜ்யம் பிறந்ததும் உன் விரோதிகள் உன்னைத் தீர்த்துக்கட்ட வேலை செய்கிறார்கள். படு, எனக்கென்ன! நான் என்ன செய்வது? உன்னாலே நான் கெட்டேன். என்னாலே அந்தப் பெண் கெட்டுச் சீரழிந்து, எங்கோ போய்விட்டாள். உன் முகத்தைப் பார்க்கும் போதே எனக்கு வருகிற கோபம் கோடாரி யையோ அரிவாளையோ தேடச் சொல்கிறது."

மாமனாரும் மருமகனும் சொல்லிக்கொள்ளவில்லையே யொழிய, ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளும் போ தெல்லாம், கண்கள் இக்கருத்துகளையே காட்டின.

கேஸ் தோற்றுவிட்டது. கஷ்டம் முற்றிவிட்டது. இலுப்பப்பட்டி கைமாறி விட்டது போலத்தான் - என்று மிராசுதாரர் சொல்லவில்லை, அவருடைய வயிற்று வலி, வாந்தி, காய்ச்சல், இவைகள் வேறு என்ன கூறின !!

சீமானின் மருமகனாகிச் சிங்காரமாக வாழ நினைத்த கனகு, சீரழிந்த மிராசுக் குடும்பத்தைக் காப்பாற்றித் தீரவேண்டிய பொறுப்பைத்தான் பெற்றான், குளிக்கப் போனவன் சேறு பூசிக்கொண்ட கதைபோல!

தேசாந்திரி திருவேங்கடத்துக்குத் தன் குடும்பத்தின் நிலைமையை யாரும் கூறவில்லை. யாருக்கு என்ன அக்கரை ! அவன் ஒருநாள் அன்போடு, உபசரித்தான் ஒரு ஆண் டியை! அந்த ஆண்டி மாறுவேடத்திலே வந்திருந்த இலட்சாதிகாரி என்பதைத் திருவேங்கடத்துக்கு யாரும் சொல்லவில்லை. தனக்குக் கிடைத்த சோறு வேறொருவனின் பசியைத் தீர்க்க உதவட்டும் என்ற பெரிய தத்துவத்தையும் அவன் யாரிடமும் பாடங் கேட்டவனல்ல. அன்று அவலுக்குப் போதை! சோறு இருந்தது நிரம்ப, பசி இல்லை, பாதையிலே சுருண்டுக்கிடந்தான் ஒரு பரதேசி ; தூக்கி எடுத்துவைத்துக்கொண்டு உபசரித்தான் திருவேங்கடம்!

பரதேசிக்கோலத்திலே பல ஊர் சுற்றித் தர்மவான்களின் தப்பிலித்தனம், புண்ணியவான்கள் செய்யும் பாபச் செயல்கள், முதலிய லோக விசித்திரத்தைக்கண்டு அனுபவ அறிவு பெற்றுவந்த அருமைநாயகம் பிள்ளை, பல இலட்சத்தைப் பாங்கியில் வைத்திருந்தார். குடும்பம் கிடையாது. ஒரு ஆண்டிக்கு ஈரமுள்ள நெஞ்சு இருந்தது கண்ட அருமைநாயகம், அந்த ஆண்டிக்கே தன் சொத்து முழுவதையும் தந்துவிடுவது என்று தீர்மானித்து விட்டான். அதைச் சொன்னால் அவன் நம்பமாட்டான் என்பதற்காகத் தன் எண்ணத்தைச் சொல்லவில்லை. தன்னுடன் வரும்படி கூறினான். 'விடு நமக்கு நாடு முழுதுமே, ஓடு உண்டு கையில்' என்ற விருத்தத்தைப் பாடியபடி சம்மதித்தான் திருவேங்கடம். இருவரும், பல ஊர் அலைந்துவிட்டு அருமைநாயகத்தின் ஊராகிய ஆற்றூர் வந்து சேர்ந்தனர். அந்த வேற்றூரிலே, தன் குடும்பம் இருப்பதைத் திருவேங்கடத்துக்கு யாரும் சொல்லவில்லை. யாருக்குத் தெரியும்? ஆற்றூரிலே அங்கும் இங்கும் சுற்றிக்கொண்டிருக்கையில், தனபாக்கியத்தைத் திருவேங்கடம் கண்டான், ஆச்சரியமடைந்தான், குடிசை சென்றான், சுந்தரியைக் கண்டான், தங்கராஜனைக் கண்டான், தகதக வென ஆடினான் சந்தோஷத்தால். மெள்ள மெள்ள விஷயத்தைத் திருவேங்கடம் தெரிந்து கொண்டான். அவன் மனம் துடித்தது.

"எங்கே இருக்கிறான் அந்தப் பாவி? அவன் கழுத்தை முறிக்கிறேன்."

"வேண்டாம். அவன் பெரிய பணக்காரன். உலகம் அவன் பக்கம் பேசும்."

"துறவிக்கு வேந்தன் துரும்பு, தெரியுமா? அவன் மனிதனாடி? இந்தச் சொர்ண விக்ரகத்தை அவன் கண்டானா? அவன் பணக்காரனானால் எனக்கென்ன பயமா? சீ! நான் எத்தனையோ பணக்காரன் பரதேசிப்பயலாகி விட்டதைப் பார்த்திருக்கிறேன். இதோ இதே ஊரிலே இருக்கிறாரே அருமைநாயகம், இந்த ஆசாமி ஆண்டியாக இருந்தது எனக்குத் தெரியும். பணமாம் பணம். அது என்னடி செய்யும்?"

திருவேங்கடம். தன் மனைவியிடம் இதுபோலச் சொல்லிக்கொண்டு இல்லை, மனதிலே எண்ணினான் பல, சொல்ல வாய் வரவில்லை.

திருவேங்கடத்தின் குடும்பத்தின் நிலைமையைத் தெரிந்து கொண்டார் அருமைநாயகம். நிர்க்கதியாகி, நிந்தனைக் குட்பட்டுக்கிடந்த ஒரு குடும்பத்தைக் காய் பாற்றும் சக்தி தனக்கு இருந்ததற்காகச் சந்தோஷ மடைந்தார். குடிசை காலியாகிவிட்டது. தங்கராஜன், பெரிய தாத்தா மடியில் கொஞ்ச நேரமும், சின்னத்தாத்தா தோளில் கொஞ்ச நேரமும் இருப்பான், கூத்தாடுவான், கூவுவான். கண்டு களிப்பாள் சுந்தரி, மறுகணம், அவள் கண்களிலே நீர் பெருகும். ஏழ்மையிலே மூழ்கியிருந்த சமயத்திலாவது, சதா ஜீவனத்துக்கு வேலை செய்து கொண்டிருக்க வேண்டி யிருந்ததால், விசாரப்பட நேரம் கிடைப்பதில்லை. அருமை நாயகத்தின் ஆதரவால் ஜீவனக் கஷ்டம் இல்லாமற் போகவே, சுந்தரிக்கு விசாரம் விடாதநோயாகிவிட்டது.

இலுப்பப்பட்டியார் இறந்தார், கனகனின் தகப்பனார் அவரைத் தொடர்ந்தார், காவேரி காச நோய்க்குப் பலியானாள் . கனகன் கப்பலேறினான், பர்மாவுக்குக் கடைக் கணக்கப்பிள்ளையாக ! அக்கரையிலிருக்கிறான் சுந்தரியின் கணவன் என்று சொல்லி வந்த பொய்யே மெய்யாகி விட்டது!

தங்கராஜனுக்கு வயது பத்தாகிவிட்டது. அவனுக்குச் சொல்லவில்லை, தாயாரின் துயரத்தை. 'தகப்பன் அக்கரையிலே ஏன் இருக்கிறார், எவ்வளவு காலத்துக்கு இருப்பார்?' என்று அவன் கேட்கவுமில்லை. என்ன காரணத்தாலோ, மனைவியிடம் சண்டையிட்டு விட்டு, அவர் போய்விட்டார் என்று நம்பியிருந்தான்.

கனகன் வேலைக்கு அமர்ந்திருந்த கடையின் முதலாளி, கொடுமைக்காரன். அவன் தந்த இடி பொறுக்க மாட்டாமல், கனகன், தாய்நாடு சென்று அன்னக்காவடியாக வாவது வாழலாம் என்று அக்கரையை விட்டு இக்கரை வந்தான். சுந்தரி இருப்பதை, அவனுக்கு யாரோ சொல்லியல்ல அவன் ஆற்றூருக்கு வந்தது. ஆற்றூரிலே அருமைநாயகம் என்பவர், ஆலை வைத்திருக்கிறார், அங்கு சென்றால் வேலை கிடைக்கும் என்ற செய்தி தெரிந்து, வேலைக்காக அவர் வீடு வந்தான்.

கனகனுடைய வரலாற்றினைக் கேட்டார் அருமை நாயகம்.

"நீதானா அந்த ஆசாமி! அட மடையனே, உன்னாலே நிராகரிக்கப்பட்ட பெண்ணிடம் போய் மன்னிப்புக் கேட் டுக்கொள்" என்று அவர் சொல்லவில்லை.

"உட்கார் தம்பி! உட்கார்! உன்னைக் காணப் பல நாட்களாகக் காத்துக் கொண்டிருந்தேன். இலுப்பப்பட்டி மிராசுதாரரின் மருமகன் கனகு நீதானா. சரி, சரி ! உட்கார்" என்று கூறினார், அருமைநாயகம் . ஆச்சரியத்தால் திகைத்துப்போனான் கனகன்.

"தங்கம்! ராஜா ! டே, தம்பி, தங்கராஜ் " என்று அழைத்தார். "தாத்தா, இதோ வந்தேன்" என்று கூவிக்கொண்டே ஓடி வந்தான் பையன்.

"உன் அப்பா வந்திருக்கிறார்" என்றார், கனகன் மிரண்டான், பையனின் கண்கள் அகன்றன, வாய் திறந்தபடி நின்றான், முகத்திலே ஓர் விவரிக்கமுடியாத உணர்ச்சிக்குறி!

அடுத்த விநாடி 'அப்பா!' என்றான், பாய்ந்தோடி கனகுவின் கழுத்தைக் கட்டிக் கொண்டான், கனகனுக்கு ஒன்றும் புரியவில்லை.

"ஐயா ! இது என்ன? வேலை தேடிக்கொண்டு இங்கே நான் வந்தேன். இது யார் இந்தச் சிறுவன் என் மகன் என்று கூறுகிறீரே. அவனும் அப்பா என்று அழைக்கிறானே, இதென்ன விந்தை!" என்று கனகன் கேட்கவில்லை. அவனுடைய கண்களின் மிரட்சியைக் கண்டு, அருமைநாயகம் சிரித்தபோது, கனகன் இப்படிக் கேட்க எண்ணுகிறான் என்பதை அவர் தெரிந்தேதான் சிரித்தார் என்பது தெரிந்தது.

அடுத்த விநாடி துள்ளி ஓடினான் தங்கம்.

'அம்மா, அம்மா, அப்பா, அப்பா, அப்பா, வந்து விட்டார். ஓடிவா, சீக்கிரம் வா '- என்று கூவினான்; ஓடினான் வீட்டுக்குள் தாயைத் தேடிக்கொண்டு.

”அப்பா, அப்பா, அப்பா, வந்துவிட்டார்."ஆம், ஆம். அவனுடைய செவிகளுக்கு அந்த மொழி எவ்வளவு தான் இன்பம் தந்தது. பல நாட்கள் மெல்லிய குரலிலே, யாருக்கும் தெரியாதபடி, அவனாகக் கூறிக்கொள்வான், அப்பா, அப்பா, இல்லை, அப்பா இங்கே இல்லை, அப்பா வரவில்லை. அப்பா, இன்னமும் வரவில்லை, என்று. அப்பா வந்துவிட்டார், என்று கூவினான், மான் போலத் துள்ளிக் குதித்தான். தங்கராஜனின் ஆர்ப்பாட்டத்தைக் கண்ட சுந்தரிக்குப் பயமாகிவிட்டது, அவனுக்குப் பித்தம் பிடித்துவிட்டதோ என்று. தாயைக் கண்ட உடனே, கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு ஓடினான் தங்கராஜன், கனகன் இருந்த அறைக்குள். வாசற்படியருகே சென்றாள். உள்ளே இருந்த கனகன் "சுந்தரி." என்று கூவினான், இருவரிலே யார் முதலிலே பாய்ந்தது என்று தெரிய முடியாதபடி, ஒரு ஆனந்த அணைப்பு ஏற்பட்டது. ஒரு வயோதிகரும் ஒரு சிறுவனும் அங்கே இருந்ததை அவர்கள் அறிந்து கொள்ளவில்லை. இருவர் விழிகளிலும் நீர் குபு குபுவெனக் கிளம்பி வழிந்தது.

"சுந்தரி ! சுந்தரி ! கண்ணே சுந்தரி," என்று கதறினான் கனகு . முகத்தைத் தன் இருகரங்களிலும் பிடித்துக் கொண்டு உற்றுப்பார்த்தான். அவள் கன்னத்திலே புரண்டோடிய கண்ணீரைத் துடைத்தான், மீண்டும் அணைத்துக் கொள்ளச் சென்றான் ; கழுத்திலே தாலி இருக்கக்கண்டான் - பயந்தான், சுந்தரியின் முகத்திலே ஒரு குறுநகை பிறந்தது.

"தங்கம், சின்னத் தாத்தாவை அழைத்துவா" என்று கூறினாள், சிறுவன் ஓடினான், அவனைப் பின்தொடர்ந்து சென்றார் அருமைநாயகம். "அரை மணி நேரம் யாரும் அந்த அறைப்பக்கம் போகக்கூடாது" என்று உத்தரவிட்டார். சுந்தரி தன் சரிதத்தைக் கூறி முடித்தாள் கனகனிடம் . கனகன் தன் கதையைக் கூறினான், அவள் கட்டியிருந்த தாலியை முத்தமிட்டான்.

"அக்கரைக்குச் சென்றிருந்த சுந்தரியின் புருஷன் வந்துவிட்டார்' என்று ஆற்றூர்-வாசிகள் பேசிக்கொண்டனர். அவர்களுக்கு, சுந்தரியின் சோகக் கதையின் சூட்சமப் பகுதியை யாரும் சொல்லவில்லை, தாய் கட்டியதாலி, 'அக்கரைக்குப் போன அவள் புருஷன் வந்துவிட்டான். இனி இக்கரையிலேயேதான் இருப்பானாம்' என்று ஊரார் சொல்லிக்கொண்டார்கள். அவன் கட்டாத தாலி அவள் கழுத்திலே இருந்தது யாருக்குத் தெரியும்? அவனுடைய அந்த நாள் நடவடிக்கையை யார் அவர்களுக்குச் சொன்னார்கள்?

சுந்தரி : - தங்கம்! உங்க அப்பாவை ரொம்ப நல்லவ ரென்று எண்ணாதே ! ஜாக்கிரதை. ரொம்ப ரொம்பக் கெட்டவர். அவர் என்ன செய்தார் தெரியுமா? சொல்லி டட்டுமா?"

கனகன் :-"சுந்தரி, சுந்தரி, சொல்லாதே சுந்தரி ! உனக்குக் கோடி புண்யம், அதைமட்டும் சொல்லாதே!"

தங்கம் :-"அம்மா, அம்மா, சொல்லம்மா, சொல்லு! அப்பா, அம்மா வாயை மூடிடாதே! அம்மா, சொல்லு!

சுந்தரி :- "உங்க அப்பா என்ன செய்தாரு தெரி யுமா? ஒருநாள்.. ....

கனகு :-"ஆ, அப்பா அடிவயிற்றிலே வலிக்குதே, அப்பப்பா, பொறுக்க முடிய வில்லையே, தம்பி, ஓடிப்போய்க் கொஞ்சம் தண்ணீர் எடுத்துவா. (பையன் ஓடினதும், கனகன், சுந்தரியைக் கட்டித் தழுவிக்கொண்டு) சுந்தரி, கண்ணில்லே, சொல்லாதம்மா, தயவுசெய்து சொல்லாதே கண்ணு.

சுந்தரி :- இப்படித் தளுக்கு செய்துவிட்டுத்தானே என்னைத் தவிக்கவைத்துவிட்டுப் போயிட்டிங்க முன்னே.

கனகன் :-"அதற்காகத்தான் தீவாந்திர சிட்சையை அனுபவித்தாகிவிட்டதே!”

சுந்தரி :- ஐயோ! பாவம்! என்னாலே உங்களுக்கு இத்தனை கஷ்டம்.

(அறைக்கு வெளியே சிறுவன்)

தங்கம் :- அப்பா! இதோ தண்ணீர்.

(அறைக்குள்ளே சுந்தரி )

சுந்தரி :---விடுங்கள், பையன் வந்துவிடுவான்.

(உள்ளே நுழைந்த சிறுவன்)

தங்கம்:-- அப்பா வலி போயிடுத்தா?

சுந்தரி :- ஓ! கிலியும் போயிடுத்து.

தங்கம் :- நீ, என்னா புலியா, எங்க அப்பா கிலி அடைய. அது சரி, அம்மா ! சொல்றேன் சொல்றேனுன்னு சும்மா இருக்கறயே, சொல்லம்மா!

இந்த ரசமான நாடகம் அடிக்கடி நடந்தது, ஆனால் சுந்தரி ஒருநாளாவது, தங்கராஜனுக்குக் காவேரியிலே ஸ்நானம் செய்த கனகனின் கதையை மட்டும் சொல்லவே யில்லை, எப்படிச் சொல்ல முடியும் !!