Chapter 1
சத்திரப்பட்டியைச் சுற்றிப் பதினைந்து மைல் விஸ்தீரணத்துக்கு, விதூஷகன் சின்னுமுதலியைப் பற்றி அறியாதவர் யாருமில்லை. சிறுபிள்ளைகள் முதல், கிழவர் கிழவிகள் வரையில் எல்லாருக்கும் அவனைத் தெரியும். எந்த ஊரிலே யார் நாடகம் போட்டாலும் அவனுக்கு அழைப்பு வராமலிராது. சின்னுமுதலி வருகிறான் என்றால் அன்று கூட்டம் இரண்டு மடங்குதான். அவனுடைய அகடவிகட அதிசய சாமர்த்தியங்கள் அந்தத் தாலூகா முழுவதும் பிரசித்தமாயிருந்தன.
கூத்து மேடைக்குச் சின்னுமுதலி வந்துவிட்டானானால் ஒரே குதூகலந்தான். சில சமயம் கோணங்கிக் குல்லா தரித்து, புலி வேஷத்தைப் போல் கோடுபோட்ட கால்சட்டையும், மேற்சட்டையும் போட்டுக் கொண்டு வருவான். அவனுடைய நடை, உடை, பாவனை ஒவ்வொன்றும் ஜனங்களுக்குச் சிரிப்பு உண்டாக்கும். அவனுடைய பொய் மீசை நிமிஷத்துக் கொருமுறை மேலும் கீழும் போய் வரும். பேசுவதற்கு அவன் வாயைத் திறந்து விட்டாலோ சொல்ல வேண்டியதில்லை. நாடகக் கொட்டகை கிடுகிடாய்த்துப் போகும். சில சமயம் வெள்ளைக்காரனைப் போல் தொப்பி போட்டுக் கொண்டு வருவான்.
"லேடீஸ் அண்டு ஜெண்டில்மென்" முதலிய ஐந்தாறு இங்கிலீஷ் வார்த்தைகள் அவனுக்குத் தெரியும். இவைகளை வைத்துக் கொண்டு அரை மணி நேரம் ஆங்கிலத்தில் பிரசங்கம் செய்வான். "அசல் வெள்ளைக்காரன் கெட்டான்!" என்று சொல்லி ஜனங்கள் குதூகலப்படுவார்கள்.
என்னதான் பேசினாலும், பாட்டுப்பாடத் தெரியாவிட்டல் "விதூஷக பார்ட்" ரஸப்படுமா? சின்னுமுதலிக்குப் பாட்டுப் பாடவும் தெரியும்; ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன் முதல், சிங்கார ரஸக்கீர்த்தனைகள் வரையில் அவன் வாயில் அகப்பட்டுப் படாத பாடுபடும். சுயமாகப் பாடும் சக்தியும் அவனுக்கு உண்டு.
"இம்மென்னு முன்னே யெழுநூறு மெண்ணூறும்
அம்மென்றா லாயிரம் பாட்டாகாதா-சும்மா
இருந்தா லிருப்பே னெழுந்தேனே யாயிற்
பெருங்காள மேகம் பிள்ளாய்"
என்று காளமேகப் புலவர் பாடினாரல்லவா? அந்தப் புலவரும் நமது சின்னுமுதலியிடம் பிச்சை வாங்க வேண்டும். அவன் வாயில் வருவதெல்லாம் பாட்டுத்தான். பிரஸங்கங்களைச் சரமாரியாய்ப் பொழிவான். "பாட்டு" என்று பாடத் தொடங்கினானேயானால் "பாட்டு, காட்டு, ஏட்டு, வாட்டு, சூட்டு, மேட்டு..." என்று அடுக்கிக் கொண்டே போவான். இவற்றின் பொருள் அவனுக்கும் தெரியாது; கேட்பவர்களுக்கும் விளங்காது. ஆயினும் இந்தப் பாட்டுக்களை எல்லாரும் கேட்டு விழுந்து விழுந்து சிரிப்பார்கள்.

