லலிதாங்கி அமிர்த நகரத்தில் குடியேறியது
தெற்குக் கடலினிடையே சந்திரோதயத் தீவு என்றொரு விடமிருக்கிறது. அதற்கு இக்காலத்தில் மலேய பாஷையில் "பூலோ பூலாங்" என்று பெயர் - சொல்லுகிறார்கள். அந்தத் தீவின் ராஜதானிக்கு அக்காலத்தில் அமிர்த நகரம் என்று பெயர். அங்கு நமது கதை நடைபெற்ற காலத்தில் சந்திர வர்மன் என்ற தமிழ்வேந்தன் அரசு செலுத்தி வந்தான். சுற்றி, ஆயிரம் தீவுகள் அவனுடைய ஆட்சியின் கீழே யிருந்தன. எல்லாப் பக்கத்து மன்னர்களிடமிருந்தும் அவனுக்குக் காணிக்கைகள் வந்தன, "தென் கடல் தலைவன்" என்ற விருதுடன் வாழ்ந்தான். பூமண்டலத்தில் வியாபாரக் கப்பல் வீதிக்கு அவனே தனிப் பெருங் காவலனாக விளங்கினான்.
அக்காலத்தில், கலிங்க ராஜ்யத்தினின்றும் கப்பலேறி, லலிதாங்கி நேரே சந்திரோதயத் தீவில் அமிர்த நகரத்தில் வந்திறங்கினாள். கப்பலை விட்டிறங்கி அந் நகரத்தில் ஒரு தர்மசாலைக்குப் போய், அங்கே தனக்கென்று சில அறைகள் வாங்கிக்கொண்டு குடி புகுந்தாள்.
நகரத்தின் விசேஷங்களையும் வியாபாரப் பாங்குகளையும், அங்குள்ள விசேஷச் செல்வர்களின் குணம், நடை முதலிய விவரங்களையும் பற்றி விசாரணை செய்துகொண்டு, அந்த தர்மசாலையிலேயே சிறிது காலந் தங்கி யிருந்தாள். அப்பால், மாதம் முந்நூறு பொன் சம்பளம் கொடுத்து விதுரப்பிள்ளை யென்ற வேளாளன் ஒருவனைத் தனக்குக் கார்யஸ்தனாக நியமனம் செய்தாள்.
அப்பால் அவள் விதுரனைக் கொண்டு சில உயர்ந்த வியாபாரிகளைத் தருவித்துத் தன்னிடமிருந்த நகைகள், பொன், மணி, ரொக்க நாணயம் - எல்லாவற்றுக்கும் மொத்த மதிப்புப் போடுவித்தாள். கலிங்க நாட்டிலிருந்து அவள் கொள்ளை யிட்டுக்கொண்டு வந்த செல்வத்துக்கு மொத்த மதிப்பு முந்நூறு கோடிப் பொன் விழுந்தது.
முதலாவது, ஐந்து கோடிப் பொன் செலவிட்டு நகர் நடுவிலே அந் நாட்டரசனுடைய மாளிகையைக் காட்டிலும் மிகவும் அற்புதமான காட்சி யுடைய பெரிய மாளிகை யொன்று கூட கோபுரங்கள், ஏழு விஸ்தாரமான மாடிகள் - அதாவது, உப்பரிகைகளுடன் கட்டுவித்தாள்.
அந்த மாளிகை கட்டும் பொருட்டு, யவன தேசத்தினின்றும் கைதேர்ந்த சிற்ப சாஸ்திரி யொருவனை வரவழைத்தாள், மாளிகை முழுதும் பளிங்கு வேலை, உச்சத்திலே ஏழாம் உப்பரிகையிலிருந்த லீலா மண்டபத்தில் மாத்திரம் விதானத்திலும், தூண்களிலும், பொன்னும் விலையுயர்ந்த ரத்தினங்களும் இழைக்கப்பட்டிருந்தன.
எல்லா உப்பரிகைகளிலும் பல லீலா மண்டபங்களும், விருந்துக் கூடங்களும், நாடகசாலைகளும், சித்திர சாலைகளும் மிகவும் அழகாக நிர்மிக்கப்பட்டிருந்தன. மாளிகையைச் சுற்றிச் சதுரமாக, மிக விஸ்தாரமான தொரு பூஞ்சோலை செய்வித்தாள். அதில் பல நீரோடைகளும், சுனைகளும், பளிங்குத் தடாகங்களும், அருவிகளும், புஷ்பமாரி போலே நீர் தூவும் பொறிகளும் சமைப்பித்தாள்.
உலக முழுதிலுமுள்ள பல பல தேசங்களினின்றும் இனிய கனிதரு மரங்களும், அருமையான மருந்துப் பூண்டுகளும், மூலிகைகளும், பூச்செடிகளும், கொடிகளும் வரவழைத்து அத் தோட்டத்தில் வைத்தாள். அது தேவேந்திரனுடைய நந்தவனத்தைப் போல் விளங்கிற்று, அதற்கு "நந்தனம்" என்றே பெயருமிட்டாள்.
அப்பால், லலிதாங்கி தன் கார்யஸ்தனாகிய விதுரனை அழைத்து, "இந்தத் தீவு முழுமையிலும் தனக்கு நிகரில்லாத திறமை கொண்ட வைத்யன் ஒருவனை மாஸம் ஐந்நூறு பொன் சம்பளத்தில் நம்மிடம் வேலை பார்க்கும்படி திட்டம் பண்ணிக் கொண்டுவா" என்றாள்.
விதுரனும் அங்ஙனமே ஸாக்ஷாத் தன்வந்திரி முனிவருக்கு நிகரான லங்காபுத்ரன் என்ற மருத்துவனைத் திட்டம் பண்ணிக் கொடுத்தான்.
பிறகு, லலிதாங்கி விதுரனை நோக்கி, "ஆளுக்குப் பதினாறு பொன் மாஸச் சம்பளமாக, மாளிகை வாயில் காப்பதற்குப் பன்னிரண்டு வாட் சேவகரைத் திட்டம் பண்ணிக் கொடு" என்றாள்.
அவனும் அங்ஙனமே சுத்த வீரராகிய பன்னிரண்டு காவலாளர் திட்டம் பண்ணினான்.
அதன்பின் லலிதாங்கி, விதுரனை நோக்கி, "இருபது தாஸிப் பெண்களைத் தயார் செய்து கொண்டு வா. எல்லாருக்கும் ஏறக்குறையப் பதினான்கு அல்லது பதினைந்து மட்டத்தில் ஸம் வயதாக இருக்கவேண்டும்,
ஏறக்குறைய ஸமான உயரமும் அகலமும் உடையோராய், ஒரே சாயலுடையோராக இருக்க வேண்டும். ஒவ்வொருத்தியும் அருமையான அழகுடையவளாகவும் ஸங்கீதம், பரதம், எழுத்துப் படிப்பு முதலியவற்றில் மிக்க தேர்ச்சி யுடையவளாகவும் இருக்க வேண்டும். தலைக்கு நூறு பொன் சம்பளம் கொடுப்போம்" என்றாள்,
இது கேட்டு விதுரனும் அவள் சொல்லிய லக்ஷணங்க ளெல்லாம் பொருந்திய இருபது தாசிப் பெண்களைத் தயார் செய்து கொடுத்தான்.
அப்பால் லலிதாங்கி ஒரு பொற் பலகையில் வயிர எழுத்துக்களாலே பின்வருமாறு விளம்பரம் பெரிதாக எழுதுவித்து, வீதியிலே போவோருக் கெல்லாம் நன்றாகத் தெரியும்படி தன் மாளிகையின் வெளிப்புறத்திலே தொங்கவிட்டாள்.

