கலிங்க ராஜ்யத்திலே
முன்னொரு காலத்தில், கலிங்க தேசத்து ராஜதானியாகிய கடக நகரத்தில் வல்லப் ராஜன் என்ற வேந்த னொருவன் அரசு செலுத்தி வந்தான். அவன் தனக்கு வரும் அரசிறையில் ஒரு பகுதியைத் "தாஸி நிதி" என்றொரு தனி நிதியாகப் பகுத்து வைத்தான், கோயில் நிதி, கல்வி நிதி, ராணுவ நிதி, விவசாய நிதி, தொழில் நிதி முதலிய மற்றெல்லா நிதிகளைக் காட்டிலும் அவ்வரசன் அந்த தாஸி நிதிக்கு அதிகத் தொகை ஏற்படுத்தினான். அந்த நிதிக்குத்தான் செலவும் அதிகம்.
வருஷத்துக்கு சுமார் நூறு, நூற்றிருபது தாஸிகளுக்குக் குறையாமல் அந்த ராஜா விலைக்கு வாங்குவது வழக்கம். அவர்களுக்குத் தன் அந்தப்புரத்தில் தனித் தனி வஸதிகள் செய்து கொடுத்தான். அவன் பட்டத்துக்கு வந்து பதினாறு வருஷங்களாயின. இது வரை சுமார் ஆயிரத்தெண்ணூறு தாஸிகள் அவன் அந்தப்புரத்தில் சேர்த்து விட்டான். தசரதன் அறுபதினாயிரம் ஸ்திரீகளை மணம் புரிந்து கொண்டதாகவும், துருக்கி ஸுல்தான்களில் பலரும். இந்தியாவில் பல நவாபுகள், ராஜாக்கள், நிஜாம்கள், திவான்கள் முதலியோர்களும் ஆயிரக்கணக்கான பெண்களை அந்தப்புரங்களில் சேர்த்து வைத்திருந்த தாகவும், புராணங்களிலும், சரித்திரங்களிலும், நவீன நடைகளிலும் அறிகிறோம்.
இதென்னடா சுத்த மோசமான வேடிக்கை! ஆயிரம் பெண்டாட்டிகளை வைத்துக்கொண்டு ஒரு மனிதன் எப்படிக் குடித்தனம் பண்ணுவான் என்பதை நினைக்கும்போது, எனக்குப் பெரிய வியப்புண்டாகிறது.
ஒரு பெண்டாட்டியை வைத்துக்கொண்டு காலம் தள்ளுவது பெரும்பான்மையான ஜனங்களுக்குப் பெரிய கஷ்டமாக இருக்கிறது. அப்படி யிருக்க, நூற்றுக்கணக்காகவும் ஆயிரக்கணக்காகவும் மனைவியரை ஒருவன் கட்டியாளத் துணிவு கொண்டதை எண்ணுமிடத்தே, எனக்கு நகைப்பும் துயரமும் கலந்து விளைகின்றன. இது நிற்க..
ஒருநாள், மேற்கூறிய வல்லபராஜன் கொலுவில் ஒரு கிழப் பிராமணன் இரண்டு அழகிய, இளமை யுடைய தாஸிப் பெண்களை அழைத்துக் கொண்டு வந்தான். இது வரை அந்த ராஜா விலைக்கு வாங்கிய பெண்களை யெல்லாம் ஸாதாரண வயிரங்களுக்கும், மற்ற மணிகளுக்கும் ஒப்பிடலாமெனில், இவ்விரண்டு பெண்களையும் கீர்த்தி பெற்ற 'கோஹினூர்' (ஒளிக்குன்று) என்ற ராஜ வயிரத்துக் கொப்பிடலாம். இவர்களை நோக்கி அவ்வரசன் அளவில்லாத மகிழ்ச்சி படைத்தவனாய், "இவர்களுக்கு விலை யென்ன சொல்லுகிறீர்?" என்று மேற்படி பிராமணனிடம் கேட்டான்,
"மூத்த பெண் மோஹனாங்கிக்கு விலை ஒன்பதினாயிரம் பொன், இளையவளாகிய லலிதாங்கிக்கு விலை பத்தாயிரம் பொன்" என்று பார்ப்பான் சொன்னான்.
இக்காலத்தில் சிலர் பல தேசத்துத் தபால் முத்திரைகள் சேகரித்து வைப்பதுபோல், அந்த ராஜா தாஸிகளைச் சேர்த்து வைத்துப் பழகி, அந்தத் தொழிலில் கை தேறியவனாய் விட்டபடியால் தாஸிகளுக்கு விலை நிர்ணயம் பண்ணுவதில் அவன் மஹா நிபுணனாயினன். ஆதலால், இப் பெண்களுடைய உண்மையான அருமை யுணராமல், அந்த நாட்டுப்புறத்துப் பார்ப்பான் இத்தனை ஸுந்தரமான மாதருக்கு இத்தனை குறைந்த விலை சொல்வதைக் கேட்டுக் களிப் பெய்தியவனாய்த் தன் கார்யஸ்த னொருவன் மூலமாகப் பொக்கிஷத்தினின்றும் அந்த க்ஷணமே இருபதினாயிரம் பொன் கொண்டு வரும்படி செய்து பிராமணன் கேட்டபடி விலை பத்தொன்பதினாயிரம் பொன்னும், அவனுக்கு இனாமாக ஆயிரம் பொன்னும் கொடுத்து, மேலே ஜோடி சால்வை, வயிரக் கடுக்கன், வயிர மோதிரம் முதலிய வரிசைகளும் கொடுத்து, அந்தப் பிராமணனை மரியாதை பண்ணி அனுப்பி விட்டு, தாஸிப்பெண்க ளிருவரையும், அந்தப்புரத்திலே சேர்ப்பித்து விட்டான்.
பிறகு, அந்தப் பார்ப்பான் அரசனிடமிருந்து வாங்கிய இருபதினாயிரம் பொன்னையுங் கொண்டு, தன் பிறப்பிடமாகிய நாகபுரத்துக்கு ஸமீபத்திலுள்ள கிராம் மொன்றுக்குத் திரும்பிப்போய் அங்கு, மேற்கூறிய வேசைப் பெண்களை விலைப்படுத்தி வரும்படி தன்னிடம் ஒப்புவித்த தாய்க் கிழவியிடம், "உன் பெண்களைத் தலைக்கு மூவாயிரம் பொன் வீதம் விற்றேன். ஆறாயிரம் பொன் கிடைத்தது. அதில் ஆயிரம் பொன் எனக்குத் தர கெடுத்துக்கொண்டேன். மிச்சம் ஐயாயிரம் பொன்னை உனக்குக் கொடுக்கிறேன்" என்று பொய் சொல்லி அவளிடம் ஐயாயிரம் பொன்னைக் கொடுத்து, மிஞ்சிய பதினையாயிரம் பொன்னையும் தன் கையில் அழுத்திக் கொண்டான்.
கலிங்க நாட்டு நிலை யறியாதவளாகிய அந்தத் தாய்க் கிழவியும், தன் பெண்களுக்கு இத்தனை உயர்ந்த விலை கொண்டு வந்த பிராமணனிடம் மிக நன்றியுணர் வுடையவளாய், அவனுக்கு ஒரு பசு மாடும், இரண்டு பட்டுக்கரை வேஷ்டிகளும், ஒரு பொற் கிண்ணமும் தானம் பண்ணினாள். இது நிற்க.
கலிங்க தேசத்தில் வல்லப ராஜன் தன் அந்தப் புரத்திலுள்ள ஆயிரத் தெண்ணூறே சில்லரை மாதர்களைக் காட்டிலும் லலிதாங்கியிடம் அதிக மோஹப் பைத்தியங் கொண்டு விட்டான். அரசன் இங்ஙனம் லலிதாங்கிக்கு அடிமையாய் விட்டதினின்றும், ராஜ்யத்தில் லலிதாங்கி இட்டதே சட்டமாய் விட்டது.
இதினின்றும் அந்த வேசைமகள் பொருள் சேர்ப்பதையே பெரிய வெறியாகக் கொண்டு ராஜ்யத்தைச் சூறாவளிக் கொள்ளை யிடத் தொடங்கி விட்டாள். மந்திரி உத்யோக முதல் வீதி பெருக்கும் சக்கிலி உத்யோகம் வரை, ராஜ்யம் முழுதிலும், யாருக்கு எந்த வேலை வேண்டுமானாலும், லலிதாங்கிக்கு லஞ்சம் கொடுக்காத வரை, அந்த வேலை கிடைக்காது.
பாடகர், நாட்டியக்காரர், வாத்யக்காரர், குஸ்தி செய்வோர், கவிராயர், நாடகக்காரர், மந்திரவாதிகள், வித்வான்கள், விகடகவிகள், கனபாடிகள், கூத்தாடிகள் - ராஜாவிடம் ஸம்மானம் வாங்கும் பொருட்டு யார் வந்தாலும், அவர்களுக்குக் கிடைக்கக் கூடிய ஸம்மானத் தொகைகளில் மூன்றிலொரு பங்கு லலிதாங்கிக்குக் கொடுப்பதாக முதலாவது ஒப்புக்கொண்டா லொழிய, அரண்மனையில் அவர்களுக்கு மூன்று காசுகூடக் கிடைக்க வழி யில்லாமல் போய்விட்டது.
வியாபாரிகளிடமும் தொழிலாளிகளிடமும் அவள் கொள்ளை யிட்ட திரவியங்களுக்குக் கணக்கே யில்லை. மேலும், ராஜாங்கத்தின் ஸாமான்யத் தீர்வைப் பணத்திலும் பாதிக்குக் குறையாமல் அவள் தனக்குப் புதிய புதிய ஆபரணங்கள் பண்ணுவதில் செலவிட்டுக் கொண்டு வந்தாள்.
அந்த வல்லப ராஜனுக்கு நீதி சிகாமணி என்ற மந்திரி யொருவன் இருந்தான். அவன் அரசனுடைய நடைகளை யெல்லாம் கண்டு, மிகவும் மனம் நொந்து, பலமுறை கெஞ்சியும் இடித்துச் சொல்லியும் அரசனைச் சீர்திருத்த முயன்றான். ஆனால், மஹா மூடனாகிய வல்லப ராஜன் தன் மந்திரியின் உயர்ந்த சற்போதனைகளைச் செவி கொடுத்துக் கேட்கவே யில்லை.
இதினின்றும், அந்த மந்திரி நிராசை கொண்டவனாய்ப் பின்வருமாறு தன் மனதுக்குள்ளே யோசிக்கலானான்:
"ஆஹா, இந்த அரசு நிச்சயமாகவே அழிந்து போய்விடும். அது உள்ளங்கை நெல்லிக்கனி போலவும், பசுமரத் தாணி போலவும் விளங்குகிறது. மூடனாகிய வல்லபன் நாம் எவ்வளவோ இடித் திடித்துச் சொல்லியும் கேளாமல், லலிதாங்கியின் மோஹ வலையில் வீழ்ந்து நாட்டைப் பெரும் பாழாக்குகிறான்.
நாட்டிலே பஞ்சமும், பிணிகளும், கொள்ளைகளும் தலைவிரி கோலமாகக் கூத்தாடுகின்றன. எந்தத் திசையிலும் நமக்குக் கடன் கொடுப்பாரில்லை. நாட்டுப் பொக்கிஷத்திலே காசென்ற லேசமே கிடையாது. தேசத்தை லலிதாங்கி யொருத்தி யிருந்து அட்டை உறிஞ்சுவதுபோலே உறிஞ்சுகிறாள். ஜனங்களைப் பஞ்சத்தின் வாயினின்று மீட்க வழியே இல்லை. சோறில்லாதவர்கள் கலகந் தொடங்குவார்கள்.
சென்ற சில மாஸங்களாக உள்நாட்டுப் போர் தொடங்குவதற்குரிய சூழ்ச்சிகள் ஒன்றன்பின் ஒன்றாக வெளிப்பட்டுக் கொண்டு வருகின்றன. இதுவரை வெளிப்படாத சூழ்ச்சிகள் இன்னும் எத்தனை இருக்கின்றனவோ, கடவுளுக்குத்தான் தெரியும். இந்த ராஜ்யத்தைக் கவிழ்க்கும் பொருட்டாகச் செய்யப்படும் வேறு சில சூழ்ச்சிகளைப் பற்றி நமக்கு உளவுகள் தெரிந்தாலும், நம்மால் அடக்க முடியாதபடி அவை அத்தனை வலியவரால் நடத்தப்படுகின்றன. இந்த அரசனுடைய நெருங்கிய சுற்றத்தார்களிலேயே சிலர் இவனுக்கு நாசந் தேடுகிறார்கள். நாமென்ன செய்யலாம்?
நாமே இந்த அரசனுக்கு முக்ய பலமாக இருப்பதை யுணர்ந்து இவனுடைய விரோதிகளிற் பலர் முதலாவது நம் உயிரைப் போக்கிவிட ஆலோசனை செய்து கொண்டிருக்கிறார்கள். இனி, இந்த நாட்டில் இருந்தால் நமதுயிருக்குச் சேதம் விளைவது திண்ணம்.
இந்த நாட்டின் பல திசைகளிலும் ஒன்று, பத்து, நூறு, ஆயிரமாக நமக்குக் கிளைத்து வரும் சத்துருக்க ளனைவரிலும் அதி பயங்கரமான சத்துரு லலிதாங்கி, லலிதாங்கியின் பகை யென்றால் பிசாச லோகம் முழுதும் பகையாவதற் கொப்பாகும்.
இவளுடைய கையாட்கள் எந்த இடத்தில் நம்முடைய விழிகளில் அக்னித் திராவகத்தை ஊற்றுவார்களோ? எந்த இடத்தில் நம்முடைய செவிகளை விஷந் தோய்த்த கத்தியால் அறுப்பார்களோ? எந்த நிமிஷத்தில், எங்கே, நம்முடைய சிரம் துண்டிக்கப்படுமோ? எங்கே, எந்த ஸபையில், எந்த விருந்தில், எந்த நேரத்தில் நம்மை விலங்கிட்டுக் கொண்டு போக ஏற்பாடு செய்வாளோ? எங்கே, நம்மைச் சித்திரவதை புரிய ஏற்பாடு செய்வாளோ? என்று பலவிதமாக யோசனை பண்ணி, ஓரிரண்டு தினங்களுக்குள்ளே தனக்குரிமையான நகைகளையும் பணங்களையும் எடுத்துக்கொண்டு, ரஹஸ்யமாக இரவிலேயே புறப்பட்டுத் தன் குடும்பத்தாருடன் காசிக்குப் போய்விட்டான்.
காசிக்குப் போய்ச் சேர்ந்த பிறகு, தைர்ய மடைந்தவனாய்த் தான் புறப்பட்டு வந்ததற்குரிய காரணங்களை யெல்லாம் விஸ்தாரமாக எழுதி வல்லப் ராஜனுக்கோர் ஓலை விடுத்தான்.
வல்லப ராஜனுக்கு மேற்படி நீதி சிகாமணி யென்ற மந்திரி ஒருவனே முக்கிய பலமாக இருந்தான். அவனைத் தவிர ஓருயிர் கூட வல்லப ராஜன் மீது இரக்கஞ் செலுத்தவில்லை. நாட்டார் அனைவரும் அவனையும் லலிதாங்கியையும் ஒழித்து விடவேண்டுமென்ற எண்ணங் கொண்டிருந்தார்கள்.
எனவே, மந்திரி நாட்டை விட்டோடிய பின் ஒரு வாரத்துக்குள் தேசத்தில் பெருங் கலகம் விளைந்தது. ஜனங்கள் வல்லப் ராஜனை ராஜ்யத்தினின்றும் நீக்கி அவனுடைய தாய் பாகஸ்தனாகிய மற்றொருவனைப் பட்டத்துக்கு வைத்தார்கள். அப்போது வல்லப ராஜன் ஒரு வாளால் தன் கழுத்தைத் தானே அறுத்துக் கொண்டு மாய்ந்தான்.
குலத் தொழிலிலே சித்தம் இயல்பாகப் பாயும். ஆதலால் வல்லப ராஜன் மடிந்தவுடன் மோஹனாங்கியும் லலிதாங்கியும் தத்தம் உடைமைகளை யெடுத்துக் கொண்டு கலிங்க ராஜ்யத்தினின்றும் தப்பியோடிப் போய் பிற நாடுகளுக்குச் சென்று, அங்கு தம்முடைய பரம்பரைத் தொழிலாகிய வேசைத் தொழிலையே நடத்த வேண்டுமென்று தீர்மானித்துக் கொண்டார்கள்.
மோஹனாங்கியிடம் லக்ஷக்கணக்காகவும், லலிதாங்கியிடம் கோடிக் கணக்காகவும் திரவியங்கள் இருந்தன. கலிங்க நாடு பஞ்சத்தினால் அழிய, அதன் செல்வத்தின் பெரும் பகுதியை இவ்விரண்டு தாசிகளும் வாரிக்கொண்டு போயினர்.
மோஹனாங்கி காசிக்குப்போய் அங்கு ஹரிச்சந்திர மஹாராஜன் சந்திரமதியை விலை கூறிய கடைத்தெருவில் ஒரு பெரிய மாளிகை கட்டிக் கொண்டு, அங்கு வேசைத் தொழில் புரிந்து வந்தாள்.
இளையவளாகிய லலிதாங்கியின் சரிதையை அடுத்த அத்யாயத்தில் விஸ்தாரமாகச் சொல்லுகிறோம்.

