படிப்பவர்களுக்குச் சில செய்திகள்
முற்றுப் பெறாமல் நமக்குக் கிடைத்த பாரதியின் கதைப் பொக்கிஷங்களுள் சின்னச் சங்கரன் கதையும் அடங்கும்.
இந்தக் கதைத் தொடர் தியாகசீலர் சுப்பிரமணிய சிவம் நடத்திய ஞானபாநு மாதப் பத்திரிகையிலே 1913 மே மாத இதழில் முதன் முதலாக வெளிப்பட்டது; 1914 மார்ச் மாத இதழுடன் கதைத் தொடர் பிரசுரமாகவில்லை . அதாவது, நான்கு அத்தியாயங்களே பிரசுரமாகி உள்ளன.
இந்தக் கதையைப் பாரதி தமது சொந்தப் பெயரில் எழுதாமல், சாவித்திரி என்ற புனைபெயரில் எழுதினார்.
கதையின் தொடர்ச்சியைப் பாரதி எழுதத் திட்டமிட்டிருந்தார் என்பது அவர் எழுதிய குறிப்பொன்றால் தெரிந்து கொள்ள முடிகின்றது.
1953ஆம் ஆண்டு மதுரை பாரதி அன்பர் திரு. வி.ஜி. சீனிவாசன் அவர்களின் முயற்சியால் நூல் வடிவம் பெற்றது.
புதுச்சேரியில் பாரதியோடு பழகியவரும், மூத்த எழுத்தாளருமான திரு. வ.ரா. அவர்கள் தாம் எழுதிய மகாகவி பாரதியார் நூலில் சின்னச் சங்கரன் கதையைப் பற்றிப் பின்வருமாறு எழுதுகிறார்:
", . , பல வகைகளிலும் அமளி நேர்ந்து கொண்டிருந்த சமயத்தில், மகத்தான நஷ்டம் ஒன்று பாரதியாருக்கு ஏற்பட்டது. அது தமிழ் நாட்டின் நஷ்டம் என்று சொல்லவும் வேண்டுமோ? “சின்னச் சங்கரன் கதை' என்று பாரதியார் ஒரு புத்தகம் எழுதி அனேகமாக முடித்து வைத்திருந்தார். இருபத்தொன்பது அத்தியாயங்கள் கொண்ட நூல் அது என்பது என் ஞாபகம், அருமையான புத்தகம்!
அது எதைப்பற்றிய நூல் என்று கேட்கிறீர்களா? அது நாவல் அல்ல; பாரதியாரின் சுய சரிதமும் அல்ல; விகடம் நிறைந்தது. ஆனால், வேடிக்கைக் கதை அல்ல; புராண மல்ல; உபதேச உபநிஷதமும் அல்ல; நாடகம் அல்ல; முழுவதும் கிண்டலு மல்ல.
என்றாலும், நான் மேலே குறிப்பிட்ட எல்லா அம்சங்களும் அந்தப் புத்தகத்தில் இருந்தன. அதையே, அக்காலத் தமிழர்களின் வாழ்க்கை வரலாறு என்றுகூடச் சொல்லலாம். , சோக ரஸத்தில் எழுதப்பட்ட நூல் அல்ல; நகைச் சுவையும் கிண்டலும் குமிழி விட்டுக் கொந்தளிக்கும் புத்தகம்.
'சின்னச் சங்கரன் கதை' யின் கையெழுத்துப் பிரதி எப்படி மாயமாய் மறைந்து போய்விட்டது என்று தெரியவில்லை."

