பதிப்புரை

ஏகலைவன் பதிப்பகத்தின், இரண்டாவது வெளியீடு இந்தச் சிறுகதைத் தொகுப்பு. சு.சமுத்திரத்தின் “எனது கதைகளின் கதைகள்”, முதல் வெளியீடாக வந்துள்ளது. எங்கள் பதிப்பகத்திற்கு, ஏகலைவன் பெயரை, எதற்காகச் சூட்டினோம்,என்பதைச் சொல்ல வேண்டிய தில்லை. இந்தச் சிறுகதை தொகுப்பில் உள்ள 'ஏகலைவன்களைத் தேடி' என்ற சிறுகதை, இந்தப் பெயருக்கு, தக்கதோர் விளக்கமளிக்கும்.

இந்த ஏகலைவன் பதிப்பகம், தமிழ் இலக்கிய உலகிற்கு, இப்போது தேவைப்படுகிறது. அடித்தள மக்களைப் பற்றி எழுதிய விந்தன் போன்ற மகோன்னத எழுத்தாளர்கள், மேட்டுக்குடியினரால் ஏகலைவன்களாக ஆக்கப்பட்டார்கள். இவர்களுக்குப் பதிலாக, மேட்டுக்குடி மக்களின் ரசனைக்கேற்ப, அடித்தள மக்களின் முதுகில் சவாரி செய்யும், “அர்ச்சுன எழுத்தாளர்கள்” போற்றப்படுகிறார்கள். விந்தனுக்கு ஏற்பட்ட இந்த நிலைமை, சு.சமுத்திரம் போன்ற எழுத்தாளர்களுக்கும் வர இருந்தது. ஆனால், தமிழகத்தில் எண்ணில்லா இலக்கிய ஏகலைவன்களின் பெருவிரல்கள் முஷ்டிகளாகி விட்டதால், சு.சமுத்திரம் போன்றவர்களின் பெருவிரல்கள் பிழைத்துக்கொண்டன. நமது முன்னோன் ஏகலைவனுக்கு ஏற்பட்ட கொடுமையைக் கண்டு சீறிப்பாயும் ஆவேசமாக, இந்தப் பதிப்பகம் உருவாகியிருக்கிறது.

ஏகலைவன் பதிப்பகம் உருவாவதற்கு, இன்னொரு முக்கிய காரணமும் உண்டு. தமிழ் மக்களின் இன்றைய அடிமைத் தனத்தை, அவர்களுக்கு சொல்லிக்காட்ட வேண்டும் என்பதே எங்கள் நோக்கம், அன்றைய ஏகலைவன். தனது கட்டை விரலை மட்டுந்தான் கொடுத்தான். ஆனால், இன்றைய தமிழ் ஏகலைவன்களோ, அரசியல்- திரைப்பட கயவாளிகளின் கால்களுக்குள் தலைகளை கொடுத்து குப்புறக் கிடக்கிறார்கள். இவர்களை எழுத்து மூலம், தட்டி எழுப்ப, போராளியாய் புறப்பட்டுள்ளது இந்தப் பதிப்பகம். அடிமைத்தமிழனின் இன்றைய நிகழ்கால வரலாற்று பதிவேடாக, இந்தச் சிறுகதைத் தொகுப்பை வெளியிடுகிறோம். 1974 ஆம் ஆண்டில் தாமரையில், சு.சமுத்திரம் எழுதிய "ஐம்பெரும் விழா “ சிறுகதைக்கும், அண்மையில் தமிழன் எக்ஸ்பிரஸில் எழுதிய 'ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்' என்ற சிறுகதைக்கும் இடைப்பட்ட காலத்தில், தமிழன் மேலும், தேய்ந்துகொண்டுதான் இருக்கிறான் என்பதை வாசகர்களே உணர்வார்கள்.

இந்தச் சிறுகதைத் தொகுப்பிற்கு அணிந்துரை கொடுத்த, கோவை ஞானி அவர்களை நினைத்தால் வள்ளலார் அருளிய, "தோலெலாங் குழைந்திடச் சூழ் நரம்பனைத்தும், மேலெலாங் கட்டவை விட்டு விட்டு இயங்கிட' என்ற திருவருட்பாவின் கவித்துவ வரிகள் நினைவுக்கு வந்து, எங்களை ஊனுருக வைக்கிறது.

முன்னுரையின் அவசரத்தை உணர்ந்து, கண்கள், கரங்களின் இயக்கத்தைச் சரிபார்க்க முடியாத சூழலிலும், சிந்தனை வீச்சு மட்டுமே கரங்களை இயக்க, அரியதொரு அணிந்துரையை எழுதி அனுப்பிய சீரிய சிந்தனையாளர் தோழர் கோவை ஞானி அவர்கள், இந்த பதிப்பகத்தின் நிரந்தரமான நன்றிக்கு உரியவர். ஒரு வாரத்திற்கு உட்பட்ட கால அவகாசத்தில், மெய் வருத்தம் பாராது, அத்தனை கதைகளையும் படிக்கச் சொல்லி, கேட்டு, உடனடியாக தேவைப் படுகிற காரணத்தால், எழுத்துக்களை அனுமானத்தின் பேரில் ஆக்கி, அதை அனுப்பிய அவரது சகோதரத் தோழமைக்குத் தலை வணங்குகிறோம்.

இந்தத் தொகுப்பிற்கு அழகான, அட்டை படம் ஆக்கித் தந்ததுடன், அரிய யோசனைகளை தந்துதவிய தோழர் இளவேனில், இந்தத் தொகுப்பை, மின் அச்சு செய்து கொடுத்த தாமரை நிர்வாகத்திற்கும், குறிப்பாக தோழர் ஏ.எம்.கோபு அவர்களுக்கும், அவருடன் பணியாற்றும் தோழர்கள் கருத்திருமன், தனசேகரன் ஆகியோருக்கும் எங்கள் நன்றி உரித்தாகும். இவற்றை சரிபார்த்து செப்பனிட்ட, இந்திய அரசின் செய்தி விளம்பர அலுவலரும், இலக்கியத்தில் புலமைமிக்க வருமான நண்பர் தனசேகரன் அவர்களுக்கும் எங்கள் நன்றி உரித்தாகும்.இந்தத் தொகுப்பு பற்றி, வாசகப் பெருமக்கள் ஒருவரி எழுதிப்போட்டால், நன்றியுடையோம்.

ஏகலைவன் பதிப்பகம்,

9 - இரண்டாவது குறுக்குத் தெரு,

டாக்டர் ராதா கிருஷ்ணன் நகர், சென்னை. 600 041.