Chapter 4

″சாப்பிடுடா, என் கண்ணில்லே…”

சட்டியில் சோற்றைப் பிசைந்து கொண்டே கெஞ்சினாள் மாரி.

அவன் மௌனமாய் வானத்தை வெறித்து நோக்கியவாறு அமர்ந்திருந்தான்.

“உம், சாப்பிடும்மா!” என்று ஒரு பிடி சோற்றை அவன் வாயருகே கொண்டுபோனாள் மாரி. அவன் அவள் முகத்தை உற்றுப் பார்த்தான் – உணர்ச்சியற்ற, வெறித்த பார்வை.

அவன் கை அவள் கையிலிருந்த ஒரு பிடி சோற்றை வாங்கியது. விழிகள் அந்தக் கவளச் சோற்றை வெறித்தன. வெறித்த விழிகளில் நீர் சுரந்தது…

கையிலிருந்த சோற்றை அருகே இருந்த தகரக்குவளையில் போட்டுக் கந்தல் துணியால் மூடி ஒரு பக்கம் வைத்தான்.

“இன்னாடா இது, இது எடுத்துத் துன்னு!”

“ஊஹீ… அது… அது… எங்கம்மாவுக்கு!”

குறும்புத்தனமும் துடிதுடிப்பும் குடியோடிப்போய், சாந்தமும் ஏக்கமும் நிறைந்த அவன் கண்கள் மீண்டும் வானத்தை வெறித்தன. கண்களில் நீர் பளபளத்தது-

“என்னடா, அப்படிப் பார்க்கறே?” என்று அவனைப் பிடித்து உலுக்கினாள் மாரி.

“அம்மா…ஆ…ஆ!” – அழுகையில் குரல் கரகரக்க மாரியைப் பிடித்து அணைத்துக்கொண்டு கதறினான் மண்ணாங்கட்டி.

“மவனே!” என்று அவனை உச்சிமோந்து இறுகத் தழுவிக் கொண்டு அழுதாள் மாரி.

“அம்மா…ஆ…!”

“மவனே…”