முன்னுரை

முப்பது வருடங்களுக்கு முன்பு என்னுடைய சிறுகதைத் தொகுதியான 'அக்கா' வெளிவந்தது. அதைப் படித்தவர்கள் பலரும் பாராட்டினார்கள். அதன் பிறகு தொடர்ந்து எழுதும வாய்ப்பு எனக்குக் கிட்டவில்லை. ஆனாலும், நான் சென்று வேலை பார்த்த இடங்களில் சந்தித்த மனிதர்களையும், நடந்த சம்பவங்களையும் என் 'சிறுகதைக் கண்களால்' அவ்வப்போது படம் பிடித்து மன அறையில் போட்டு வைத்திருந்தேன். சமயம் வரும் போது எடுத்து வெளியே விடலாம் என்று.

இங்கே எழுதிய கதைகள் எல்லாம் இப்படி பல வருடங்களாக மனதில் ஊறப் போட்டு வைத்தவை தான். ஒரு கதையாகிலும் சடுதியான ஒரு உத்வேகத்தில் பிறந்ததல்ல. இந்தக் கதைகள் வெளிவந்த பிற்பாடு நான் பார்க்கும் போது அவை மனதில் இருந்தபோது இன்னும் பிரமாதமாக இருந்தது போலத்தான் எனக்குப் படுகிறது.

சிறுகதைக்கு இலக்கணம் 'இதுதான்' என்று பலரும் வரையறுத்து கூறி இருக்கிறார்கள். சிறுகதை நாவல் அல்ல; சம்பவங்களையும் பாத்திரங்களையும் விஸ்தாரமாக விவரித்துக் கொண்டே போக முடியாது. சொல்ல வந்த விஷயத்தை சுற்றி வளைக்காமல் நேரே சொல்ல வேண்டியது அவசியம். மையக்கருத்து என்று ஒன்று தேவை; அதைத் தழுவியபடி சொல்லும் நடை முக்கியம். அடுத்தபடி பாத்திரங்களின் வார்ப்பு யதார்த்தமாக இருக்க வேண்டும். பரவலாக இது தான் ஏற்கப்பட்ட விதி.

இது தவிர இன்னொன்றையும் நாங்கள் யோசிக்க வேண்டி இருக்கிறது. ஒரு மனிதனின் சராசரி கவன ஈர்ப்பு பதினைந்து நிமிடங்களுக்கு மேல் நீடிக்காது என்கிறது விஞ்ஞானம். சிறுகதையானது இந்தக் கால நிர்ணயத்துக்குள் முடிந்து விடுவது நல்லது. ஒரு சிறுகதையை நாவலைப்போல தவணை முறையில் படித்து முடிக்கிறது என்பது விரும்பத்தக்க ஒன்றல்ல; ஒரே மூச்சில் படித்து முடிக்கக் கூடியதாக அது இருப்பதுதான் கவர்ச்சி.

அப்படியென்றால் விஷயத்தை மையக் கருத்தில் இருந்து நழுவாமல் சுவாரஸ்யமாக நகர்த்திக் கொண்டு போக வேண்டும். இப்படிச் சொல்லிக் கொண்டு வரும் போது சில இடங்களில் வர்ணனை தேவையாக இருக்கலாம்; சில இடங்களில் 'தாவ' வேண்டி வரும். எங்கே, எப்படி என்று நிர்ணயிப்பதில் தான் ஆசிரியரின் திறமை வெளிப்படும். வர்ணனையாயிருந்தாலும் அது கதையின் பிரதான அம்சமாக இருக்க வேண்டும்; அதை நீக்கினால் கதை படுத்து விடும் ஆபத்து உண்டு.

கதைகளில் 'தர்ம உபதேசம்' செய்வது பற்றி பல சர்ச்சைகள் இன்னும் நடந்த படியே இருக்கின்றன. ஒரு ஓவியத்தை ரசிப்பது போல, ஒரு சங்கீதத்தை அனுபவிப்பது போல சிறுகதையை என் ரசிக்க முடியாது என்பதுதான் வாதம்; அவைகள் 'ஈசாப்' கதைகளாக மாறக்கூடாது என்று கூறுவர் சிலர்.

ஓடும் ரயிலில் இருந்து குதிக்கும் ஒருவன் இறங்கிய பின்னும் ரயிலுடன் சிறிது தூரம் ஓடுகிறான் அல்லவா! அதுபோல, ஒரு நல்ல சிறுகதையைப் படிக்கும் வாசகனுடைய சிந்தனையானது கதை முடிந்த பின்னும் சிறிது தூரம் ஓடவேண்டும். சிறுகதையின் முழுமை அவன் சிந்தனை ஓட்டத்தில்தான் நிறைவேற வேண்டும். ஒரு உண்மையான சிறுகதை அது முடிந்த பிற்பாடு தான் தொடங்குகிறது. இது என்னுடைய சித்தாந்தம்.

இங்கே சொல்லிய சிறுகதைகள் அத்தனையும் உண்மையையும், கற்பனையையும் கலந்து கொடுத்தவை. சிலவற்றில் உண்மை கூடியும் கற்பனை குறைந்தும் இருக்கும்; மற்றவற்றில் கற்பனை கூடியும் உண்மை குறைந்தும் நிற்பதைக் காண்பீர்கள். இந்தக் கதைகளில் நான் சந்தித்த மனிதர்களையும், பார்த்த இடங்களையும், அவதானித்த பழக்க வழக்கங்களையும் பின்னணியாக வைத்து எழுதியிருக்கிறேன். எல்லாவற்றிலும் மனித மேம்பாட்டுக்கான ஏதோ ஒன்று மறைந்திருக்கும் . இது இந்தக் காலத்தில் அவசியமான ஒன்றாக எனக்குப் பட்டது. போதைப் பாருள் அடிமைத்தனம், சுற்று சூழல் அறிவு, விலங்கினங்கள் பராமரிப்பு இப்படியான சிலவற்றை மறை முகமாக கோடி காட்டிச் சென்றிருக்கிறேன்.

என் மனத்திலே வெகு காலமாகப் போராடிக் கொண்டிருந்த இந்தக் கருத்துக்களை உங்களுடன் இக்கதைகள் மூலம் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி. வாசகர்களுடைய மதிப்பீட்டை அறிய ஆவலாயிருக்கிறேன்.

இந்தப் புத்தகம் எழுதத் தூண்டுகோலாக இருந்த நண்பர் திரு.ரி.சிவானந்தன் அவர்களுக்கும், மெய்ப்புப்பார்த்து, ஆலோசனைகள் வழங்கிய நண்பர் செ. கணேசலிங்கனுக்கும், அழகாக அச்சிட்ட காந்தளகத்தாருக்கும் என் அன்புகூர்ந்த நன்றி.

House No.32 F8/3, Street 4, Islamabad, PAKISTAN

அ. முத்துலிங்கம் சித்திரை - 1995