முன்னுரை

காதல் என்பது உன்னதமான பொருள்.

காதல் எழுத்தாளர்களுக்கு என்றும் ஓர் அமுதசுரபியாக இருந்து வந்திருக்கிறது. தமிழர் சமுதாயத்தில் எல்லாத் தலைமுறைகளிலும் காதல் இருந்திருக்கிறது. எல்லாத் தலைமுறைகளிலும் காதலைக் கதையாக்கிச் சொல்பவர்கள் அதிகமாக இருந்திருக்கிறார்கள். எல்லாத் தலைமுறைகளிலும் காதல் கதைகளை ஆர்வமாகப் படிப்பவர்கள் இருந்திருக்கிறார்கள்.

ஆனால் எல்லாத் தலைமுறைகளிலும் காதல் மரியாதைக்குரிய ஒன்றாக இருந்திருக்கிறது என்று சொல்ல முடியாது. சில நூற்றாண்டுகளுக்கு முன் தமிழ்ச் சமுதாயத்தில் பெண்களின் உரிமைகள் கட்டுப்படுத்தப்படத் தொடங்கியபோது, ஒரு பெண் காதலிப்பது -- அதாவது தானே தனக்குத் துணையைத் தேர்ந்தெடுத்துக் கொள்வது -- ஒரு தவறு என்று கருதப்பட்டது. அவள் பெற்றோர்கள் சொற்படி அவர்கள் தேர்ந்தெடுத்த ஆடவனை மணப்பது என்பதுதான் அவளுக்குள்ள கடமை எனக் கருதப்பட்டது. ஆரியர்கள் பெண்ணுரிமையை அடக்கி வைத்த காலத்திலிருந்தே இது ஆரம்பித்திருக்கலாம்.

இன்று நாம் அறிவொளி பெற்ற சமுதாயத்தில் வாழ்கிறோம். பெண்களுக்குக் கல்வி பெருகிவிட்டது. பெரும்பாலும் தங்கள் பெற்றோர்களை விட (அறிவிலும் அனுபவத்தாலும் இல்லாவிட்டாலும்) கல்வியில் உயர்ந்தவர்களாக இந்தத் தலைமுறைப் பெண்கள் இருக்கின்றனர். குறிப்பாக மலேசியத் தமிழர் சமுதாயத்தில் இது உண்மை.

ஆனாலும் இந்தக் காதல் விஷயத்தில் சமுதாயம் ஒரு பிளவுபட்ட (schizophrenic) மனநிலையில்தான் இருக்கிறது. உண்மை வாழ்க்கைக்கும் கதைகளில் சொல்லப்படும் வாழ்க்கைக்கும் வேறுபாடுகள் அதிகம் உள்ளன. கல்வியில் உயர்ந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் கூட, தன் ஜோடியைத் தேர்ந்தெடுத்துக் கொள்வது தன் உரிமை என்று தெரிந்திருந்தும், காதலிப்பதில் ஒரு பயமும் வெட்கமும் இருக்கிறது. பெற்றோர்களுக்கும் தங்கள் பிள்ளைகளைச் சுதந்திரமாகக் காதலிக்க விடுவதில் சமுதாய பயமும் நாணமும் இருக்கிறது. பிள்ளைகளுக்கு ஜோடியைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு இல்லற வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பதில் தங்களுக்கே மிகப் பெரிய முக்கியமான பொறுப்பு இருப்பதாக அவர்கள் உணருகிறார்கள். பிள்ளைகள் தாங்களாகவே தங்கள் ஜோடியைத் தேர்ந்தெடுத்துக் கொள்வது இன்னமும் இரண்டாம் பட்சமாகத்தான் இருக்கிறது.

ஆனால் உடற்கூறு ரீதியாக இந்த இளம் வயதில் ஏற்படுகிற காதல் இதையெல்லாம் எதிர்த்துக் கொண்டு எழத்தான் செய்கிறது. அரும்புகிற கட்டத்தில் சமுதாயக் கட்டுப்பாடுகளை அது மீறத்தான் துடிக்கிறது. அறிவு இடையிடையே வந்து உறுத்தினாலும் இயற்கை உணர்ச்சி கொப்பளிக்கத்தான் செய்கிறது. இப்படி அறிவுக்கும் இயற்கை உணர்ச்சிக்கும் நடக்கின்ற மனப் போராட்டங்கள் காதலர்களுக்கு ஒரு பயத்தையும் அதே நேரத்தில் ஒரு சாகச இன்பத்தையும் ஏற்படுத்தி அவர்களை அலைக்கழிக்கின்றன.

இந்த உணர்வுகளை வடித்துப் பார்க்கத்தான் இந்தக் கதைப் பின்னணியை நான் அமைத்துக் கொண்டேன். இந்தக் காதல் விஷயத்தில் இந்த நாவலில் உணர்ச்சி அறிவு ஆகியவற்றின் பரிமாணங்கள் சரியாக வந்திருக்கின்றனவா என வாசகர்கள்தான் சொல்ல வேண்டும்.

இந்த நாவலை எழுதியதன் இன்னொரு காரணம் 24 ஆண்டுகளாக நான் கண்டு , நடந்து, பழகி, பருகிய மலேசிய அறிவியல் பல்கலைக் கழகத்தின் இயற்கை அழகின் ஒரு பகுதியையாவது ஒரு நாவலில் பதிந்து வைக்க வேண்டும் என்ற ஆசையும்தான். நாவல் பூர்த்தியடைந்து அதை மீண்டும் படித்த போது இந்த வளாகத்தின் இயற்கை எழில் என் எழுத்துத் திறத்தை விட மிகப் பெரியது என்று தெரிந்து கொண்டு வியந்து குனிந்திருக்கிறேன்.

இயற்கை என்பது மேலும் உன்னதமான பொருள்.

அன்புடன்,

(ரெ.கார்த்திகேசு)

kgesu@pd.jaring.my