ஆய்வுரை : டாக்டர் பேராசிரியர் இராம. குருநாதன்
ஒரு குடும்பத்தில் ஒருவனோ, ஒருத்தியோ அலியாக மாறுகிறார்கள் என்பதைக் கண்முன் கொண்டு வருவோம்! அக்குடும்பம் என்ன பாடுபடும்? - 'நெல்லுல சாவியாகி, முட்டையிலே கூமுட்டையாகி ஆணிலேயும் சேராமல் பெண்ணிலேயும் சேராமல் அலியாகிப்போன இளைஞன் ஒருவனின் கதைதான் இது.
வண்ண மும் வடிவமும் (?) இருந்து உயிர்ப்பு அற்ற காகித மலர்களாக உலவும் அலிகளின் அவல வாழ்வு வித்தியாசமான பார்வையில் சொல்லப்பட்டிருக்கிறது.
அலிகள், ஆண்பாலா? பெண்பாலா? இவர்களை எப்பாலில் கூறுவது?. எத்திணையில் கூறுவது? என்ற ஆராய்ச்சி மிகப் பழங்காலத்தில் நிலவி வந்துள்ளது. இவர்களை உயர்திணையில் கூறுவது பால் வழுவமைதி! சேனாவரையர் 'பெண்மை திரிதலும் உண்டேனும், ஆண்மை திரிதல் பெரும்பான்மை' என்று தொல்காப்பியத் தொடர் ஒன்றிற்குப் பொருள் விரிப்பார். பெண்மை குறைந்து, ஆண்தன்மை மிக்கதை அலி என்ற சொல்லாலும், ஆண்தன்மை குறைந்து பெண்தன்மை மிக்கதைப் பேடி என்ற சொல்லாலும் குறிப்பர்.
கூத்துக்களில் ஒருவகையான பேடிக்கூத்து பற்றிச் சிலப்பதிகாரம் கூறுகிறது. ஆண்மை திரிந்த பெண்மைக் கோலத்துக்கூத்தாகும் இது. பெண் தன்மை மிகுந்து ஆண் தன்மை குறைந்தவனைப் பேடி என்கிறது நாலடியார்.
புராண இதிகாச காலங்களிலிருந்தே அலிகளும் பேடிகளும் இருந்துள்ளனர். அரவான், அர்ச்சுனன் மற்றும் பேடியோடு கலவியில் ஈடுபட்ட கண்ணன், பேடிக்கூத்து ஆடிய மன்மதன் எனப் பட்டியல் நீளும்.
அலிகள் வீரஞ்செறிந்தவர்களாக வாழ முடியும் என்பதற்கு வரலாற்றுச் சான்றாக இருந்தவன் மாலிக்காபூர் !
இவ்வாறு கடவுள் முதல் மனிதர்வரை அலிகள் பற்றிய வாழ்க்கை அவ்வப்போது புராண இதிகாச வரலாற்று நிகழ்ச்சிகளில் இடம்பெற்றுள்ளது. ஷேக்ஸ்பியரது நாடகங் கள் ஒருசிலவற்றில் அலிகள் நாடக மாந்தராகியுள்ளனர்.
நம் தமிழ் இலக்கியத்துள்ளும் அலிகள் வாழ்க்கை யைச் சிலர், குறுநாவலாகவும், கவிதையாகவும் தீட்டிக் காட்டியுள்ளனர். எழுத்தாளர் சு. சமுத்திரத்தின் இப்புதினம் அலிகள் வாழ்க்கையை முழுப்பார்வையுடன் காட்டும் புதினமாகும். இந் நாவலில், சுயம்புவை 'வாடாமல்லி'யாகக் காட்டுகிறார். குடும்ப வாழ்க்கை , பொதுவாழ்க்கை, தனிப்பட்ட வாழ்க்கை என்ற மூன்றிலுமாக அழுந்தி வாடி வதங்கிய சுயம்புவை 'வாடாமல்லியாக வழங்கியுள்ளார்.
சுயம்புவிடம், பத்து வயது முதலே காணப்பட்ட இயல்பு, பொறியியல் கல்லூரிக்குப் போன புதிதில் அவன் தன்னை உணர்ந்த நிலை, பின் அவனுள் இருக்கும் ஏதோ ஓருணர்வு - அவன் தனியே இனங் குறிக்கப்படல் - பேருந்தில் செல்லும் போது, கல்லூரி கலாட்டாவின்போது கிராம மக்களின் பார்வையில் படும்போது, குடும்பத்தில் சகோதரி திருமணத்தின்போது, காவல்காரர்களின் கண்ணில் படும்போது - இப்படிச் சென்ற இடங்களில் எல்லாம் அவனது பண்பைக் காட்டுவதாக இருப்பது எது? என்பதை அவனுள் ஏற்படும் பாலின மாற்றத்தினூடே விரியும் நிகழ்ச்சிகளாகச் சித்திரித்துக் காட்டுவதில் வெற்றி பெற்றுள்ளார் படைப்பாளர்.
கல்லூரியில், ஆண்களின் வேங்கைத்தனமான உடம்பை வேட்கைத் தனமாய் வேடிக்கையோடு பார்ப்பதும், பெண்களோடு பெண்ணாக ஒட்டி நிற்பதும் சுயம்புவை அலியாகவும், பெண்மை அவாவும் பேடி யாகவும் (Hermaphrodite) ஆகிய இரு நிலைகளுக்கும் ஆளானதைக் காண முடிகிறது. கிராமத்துப் பெண்கள் பார்வையில் 'பொம்பளைக் கள்ளனாகவே' தெரிகிறான் சுயம்பு.
பெண்மையைச் சிறையிட்ட, ஆண் உடம்பு பூண்ட சுயம்புவின் வாழ்க்கை நடப்பியல்படக் கூறப்பட்டுள்ளது. சுயம்பு சேலை கட்டிப் பார்ப்பதும், தன்னை பொம்பளை எனக் குடும்பத்தாரிடம் கூறிக்கொள்வதும் - அக்குடும்பத் தில் ஏற்பட்ட ஒரு மகாராஷ்டிர பூகம்பம்.
சுயம்புவை விரும்பும் உறவுப் பெண்ணிடத்துக்கூடக் காதலைப் பேசாமல், நெற்றி வகிடு எடுப்பது, சேலை கட்டுவது ஆகிய இவற்றையே பேசித் தன்னை அவள் இனமாகக் கருதுவதும், கல்லூரி நண்பனான 'டேவிட்' டிடம், சுயம்பு , கைக்கிளை உணர்வு கொள்வதும், சகோதரி திருமணம் நடக்க இருந்த சூழ்நிலையில் கதவைத் தாழிட்டுக்கொண்டு யாருக்கும் தெரியாமல் சேலை கட்டிக்கொள்வதும், நகைகள் அணிந்து கொள்வதுமான அவனுடைய அகப்புற மாற்றங்கள் பாலின மாற்றத்தை மெல்ல மெல்ல வெளிப்படுத்துதற்கான அறிகுறிகள். இவற்றின் எதிரொலியாக, தன் சகோதரிக்கு நடக்க இருந்த மணநாளன்று, மணமகன் வீட்டாரிடம் தன்னைப் பெண்ணுக்குத் தங்கச்சி என்று பறைசாற்றிக் கொண்டவன். அவர்களிடம், சில சமயம் பேண்ட் போடுவேன்; சில சமயம் சேலை கட்டுவேன். ரெண்டுமே பிடிக்கும்' என்கிறான். விளைவு? அவனுடைய சகோதரி, தன் திருமணம் நின்றுபோனதே என்று கவலைப்படாமல், சுயம்பு இப்படி மாறிவிட்டதற்காக வருந்தித் தற்கொலை செய்து கொள்வது ஓர் அசலான பார்வை.
சுயம்புவிடம் காணப்பட்ட இந்தப் போக்கு, சுயம்புவின் அண்ணி கோமளம் தன் கணவன் அறுமுக பாண்டியிடம், உளவியலான அச்சத்தை ஏற்படுத்த, கணவனும் சுயம்பு போலவே இருந்துவிடுவானோ என எண்ணி, 'பெண்டாட்டியிடம் புருஷனாக இருக்கோ மான்னு பாருங்கோ' என்று சொல்லவைப்பது இயற்கை யானது.
வீட்டைப் பிரிந்த சுயம்பு, சென்னை சென்று அலிக் கூட்டத்தாரோடு கலந்து விடுகிறான். அவர்கள் பார்வையில், சுயம்பு , 'பானையா மாறுமுன்னே எடுத்து வந்துவிட்ட பச்சை மண்!' கதை டெல்லிவரை நீள்கிறது. அலிகளோடு அலிகளாய் டெல்லியில் அவனும் ஒருவன்....! அங்கு, அலிகளின் தர்பாரை நடத்திக் கொண்டிருந்த அல்லிராணி கங்காதேவியின் கரையில்லாச் சொத்துக்கு வாரிசாகிறான் சுயம்பு . சுயம்பு 'மேகலை' என்று பெயர் சூட்டப் பெறுகிறான். இதுநாள் வரை கண்ணீர் சிந்திய அவலச் சுரப்பி, அலிகளின் அவலம் தீர்க்கும் அமுதசுரபி யாகியது!
அலிகளின் வாழ்க்கையை இவ்வளவு துல்லியமாகக் காட்டிவிட முடியுமா? அவர்களின் பண்பாட்டையும், சமுதாயத்தில் சரியாகக் காலூன்றாத அவர்களின் அவல நிலையையும் இவ்வாறு எழுத முடியுமா? முயன்றிருக் கிறார் சமுத்திரம்; வெற்றியும் பெற்றிருக்கிறார். அலிகள் வசிக்கும் இடங்கள், சூழ்நிலைகள், விழாச் சடங்குகள் ஆகியவை நன்கு உணர்த்தப்பட்டுள்ளன. அலிகளைப் பற்றிய சமுதாயப் பொறுப்புணர்ச்சியும், மனித நேயமும் மிகுந்த அக்கறையோடு இந்நாவலில் கூறப்பட்டுள்ளன. டேவிட், பச்சையம்மா ஆகியோர் அலிகள் பற்றி ஆங்காங்கே கூறியிருப்பது இரக்கத்தை வரவழைப்பதாகும். அதேபோல், டி.வி.யில் சுயம்பு, அலிகள் சார்பில் பேசுவதும் சமூகத்தில் அப்பிரிவினர் மதிக்கப்பட வேண்டும் என்பதை உணர்த்துகிறது.
தோழர் சு. சமுத்திரத்தின் புதினம் இப்படித்தான் இருக்கும் என்று முத்திரை குத்திவிடலாம். கிராமியப் பின்னணியைப் பகட்டாகப் புனையாமல், பட்டவர்த்தன மாகக் கூறுவது இவருக்குக் கைவந்த கலை. அசலுக்கு அணிகலன் பூட்டிப் பார்க்காதது இவரது நடை. இவர் தமிழ்ப் புதின உலகில் தனியாக மணக்கும் காட்டுச் செடி'. அதன் வாசம், இவருக்குத் தொலைதூரப் பார்வையையும் தந்துள்ளதை இப்புதினத்தால் அறியலாம்.
இவற்றின் அடிப்படையில், தமிழில் ஒரு புதிய கருப் பொருளைச் சமூகச் சிந்தனையோடு அணுகிய இவருக்கு, 'தமிழ் கூறும் நல்லுலகம்' நன்றி சொல்ல வேண்டும்.
28, பங்காரு குடியிருப்பு, இராம. குருநாதன்.
கே.கே. நகர், சென்னை - 78.

