Chapter 5

மறுநாள் பொழுது விடிந்து கொஞ்ச நேரம் ஆனதும் கேசவன் மகாராஜாவிடம் வந்தான். இரவெல்லாம் கண்விழித்ததனால் அவனுடைய கண்கள் கோவைப் பழம் போல் சிவந்திருந்தன. அவன் பேயடித்தவன் போல் காணப்பட்டான். கீழே சாஷ்டாங்கமாய் விழுந்து தண்டனிட்டு, "மகாராஜ்! கடமையில் தவறிவிட்ட பாதகன் நான், என்னைத் தண்டியுங்கள்" என்று கதறினான். சிவாஜி அவனைத் தூக்கி நிறுத்தி, "என்ன சமாசாரம்?" என்று கேட்டார். கேசவன் முதல் நாள் நடந்ததையெல்லாம் விவரமாகக் கூறினான். அவன் கூறி முடிக்கும் சமயத்தில், அங்கே வந்தது யார் என்று நினைக்கிறீர்கள்? ஆம்; அவன் பிள்ளை திருவேங்கடந்தான்!

கேசவன் அவனைப் பார்த்ததும் பரபரப்புடன் தன் பிச்சுவாவை உருவிக் கொண்டு, "அடே! துரோகி" என்று கூறியவண்ணம் குத்தப் போனான். சிவாஜி அவனுடைய கையைப் பிடித்துத் தடுத்தார். "கொஞ்சம் பொறு; முதலில் அவன் போன சங்கதி காயா, பழமா என்று சொல்லட்டும்" என்றார்.

"பழந்தான் மகாராஜ்!" என்றான் திருவேங்கடம். தன்னுடைய இடுப்பில் பத்திரமாய் முடிந்து வைத்திருந்த மகாராஜாவின் முத்திரை மோதிரத்தை அவிழ்த்து அவரிடம் கொடுத்தான்.

கேசவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. "மகாராஜா அதென்ன? தாங்கள் தான் இவனை அனுப்பினீர்களா?" என்று கேட்டான்.

"ஆமாம்; செங்கற்பட்டு ஏரியில் நம்முடைய சேனாதிபதி சில சைன்யங்களுடன் காத்திருக்கிறார். அவரை அங்கிருந்து நேரே வேலூருக்குச் சென்று தாக்கச் சொல்லிச் செய்தி அனுப்ப வேண்டியிருந்தது. அதற்காகத் தான் இவனை அனுப்பினேன். வேறு யாருக்கும் தெரியக் கூடாது என்று கட்டளையிட்டிருந்தேன். இந்த முக்கியமான வேலையைச் செய்து முடித்ததற்காகத் திருவேங்கடத்துக்கு ஜமேதார் பட்டம் அளிக்கிறேன்" என்றார் சத்ரபதி.

அதைக் கேட்டுக் கேசவன் வெறுப்புடன் 'ஹும்' என்னவும், சிவாஜி நிமிர்ந்து பார்த்தார்.

"மகாராஜ்! தாங்கள் இவனுக்குப் பட்டம் அளிக்கிறீர்கள். நானாயிருந்தால் நாலு அறை கொடுத்துப் புத்தி கற்பித்திருப்பேன். இந்த முட்டாளிடம் அவ்வளவு முக்கியமான வேலையைக் கொடுத்தீர்களே! எப்போது மகாராஜாவின் காரியமாகப் போகிறானோ, அப்போது யாராயிருந்தாலென்ன? கையிலே கத்தி இல்லையா? அப்படியா பேசிக் கொண்டு, பொய்ச் சாக்குச் சொல்லிக் கொண்டு நிற்பார்கள்? நான் அவனைச் சுட்டுக் கொன்றிருந்தால் என்ன ஆகியிருக்கும்? காரியம் கெட்டுப் போயிருக்குமே?" என்றான் கேசவன்.

"ஆமாம், அந்தக் குற்றத்திற்காக இவனைத் தண்டிக்கவும் போகிறேன்! ஆறு மாதத்திற்கு இவனை நமது வீர சைன்யத்திலிருந்து தள்ளியிருக்கிறேன்" என்றார் சிவாஜி.

"ஐயோ! மகாராஜா; நிஜமாகவா?" என்று திருவேங்கடம் கதறினான்.

"ஆமாம் நிஜமாகத்தான், கேசவா! சீக்கிரம் அந்த ரங்கம்மாளை அழைத்துக் கொண்டு வா! நமது முன்னிலையிலேயே கலியாணம் நடக்க வேண்டும். அவன் ஆறு மாதம் இல்லறம் நடத்திவிட்டு அப்புறம் நம்முடன் வந்து சேரட்டும்" என்றார் சிவாஜி.