Chapter 7

துரையப்பன் கதை தீர்ந்தது; அவன் எக்கேடு கெட்டாவது போகட்டும். ஆனால் நாகரத்தினமும், சந்திரமதியும் என்னவானார்கள்? அவர்களுக்கு வழியில் வேறு என்ன விபத்து நேர்ந்திருக்ககூடும்? ஐயோ, பாவம்? நல்ல குழந்தைகளாயிற்றே!

அப்புறம் சில தினங்கள் வரையில் எனக்கு வேறு எதிலும் புத்தி செல்லவில்லை. வீட்டிலும் வெளியிலும் ஆற்றங்கரையிலும் இலுப்பத் தோப்பிலும், எங்கே எதைப் பார்த்தாலும் சந்திரமதியின் ஞாபகமே வந்து கொண்டிருந்தது. உடன் நாகரத்தினத்தின் ஞாபகமும் சேர்ந்தே வந்தது. சிறிது சிறிதாக என் மனத்தில் ஒரு சந்தேகம் உதிக்கலாயிற்று. ஒரு வேளை... அப்படியும் இருக்குமோ? அவ்வளவு நெஞ்சழுத்தக்காரர்களா அவர்கள்?

எல்லாச் சந்தேகமும் அடுத்த சனிக்கிழமையன்று நீங்கிவிட்டது. அன்று எனக்குப் பின்வரும் கடிதம் வந்தது. என் மாணாக்கனாதலால் எழுத்துப் பிழைகளை மட்டும் நீக்கி விட்டுப் பிரசுரிக்கிறேன்:

"மகா-௱-௱-ஸ்ரீ ஸார் அவர்களுக்குத் தங்கள் அன்புள்ள மாணாக்கன் நாகரத்தினம் அநேக நமஸ்காரம்.

தங்களுக்கு நான் அதிகமான மனக் கஷ்டத்தைக் கொடுத்தேன். என்னைப் பற்றித் தாங்கள் விபரீதமான எண்ணங் கொள்ளவும் இடங்கொடுத்தேன். மன்னிக்க வேண்டும்.

நான் என்ன செய்யலாம்? சந்தர்ப்பங்கள் அப்படி நேர்ந்தன. என்னிடம் துரையப்பப் பிள்ளையும் உதவி கேட்டார்; கறுப்பு மீசைக்காரரும் உதவி கோரினார். அவர்களுக்கு இணங்கி நடப்பதாகக் காட்டிக் கொள்ள வேண்டியது அவசியமாயிருந்தது. கடைசியில் பகவானுடைய அருளால் என்னுடைய மனோரதமே ஈடேறிற்று.

ஸ்வாமி! எனக்கும் சந்திரமதிக்கும் இன்று நேற்று நேசம் ஏற்படவில்லை. தங்கள் பள்ளிக்கூடத்தில் நாங்கள் படித்த காலத்திலிருந்து ஏற்பட்டு வளர்ந்த நேசம். ஆனால் அது கைகூடுமென்று நான் கனவிலும் எதிர் பார்க்கவில்லை. எப்படியெப்படியோ நடந்து கடைசியில் எங்கள் எண்ணம் நிறைவேறிற்று.

என்னுடைய சித்தப்பன் ரங்கூனில் இருப்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். அவர் என்னை எத்தனையோ நாளாய் வரச்சொல்லிக் கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறார். நானோ சந்திரமதியைப் பிரிய மனமின்றிப் போகாமல் இருந்தேன். இப்போது இரண்டு பேரும் சேர்ந்து போகிறோம்.

நாட்டாண்மைக்காரரிடம், அவருக்கு எங்கள் பேரில் உள்ள கோபம் தணிந்து, கறுப்பு மீசைக்காரரும் ஊரை விட்டுப் போன பிறகு நாங்கள் திரும்பி வருவோமென்று தெரியப்படுத்தவும்.

உங்கள் ஆசீர்வாதத்தினால் தான் எங்களுக்கு இந்தப் பாக்கியம் கிடைத்ததாகச் சந்திரமதி தினம் நூறு தடவை சொல்கிறாள்.

இந்தக் கடிதம் கப்பலில் எழுதுகிறேன். ரங்கூனில் இறங்கியதும் தபாலில் சேர்ப்பேன். பிறகு, எங்களுடைய க்ஷேம லாபங்களைப் பற்றி அடிக்கடி கடிதம் எழுதிக் கொண்டிருப்பேன். தாங்களும் இந்த ஏழைகளை மறந்து விடாமல் அடிக்கடி கடிதம் எழுத வேணும்.

இப்படிக்குத்

தங்கள் ஊழியன்

நாகரத்தினம்."

மேற்படி கடிதம் எனக்கு எவ்வளவு சந்தோஷம் அளித்திருக்குமென்று வாசகர்களுக்கு நான் சொல்ல வேண்டியதில்லை. ஆனால் ஒரே ஒரு வருத்தந்தான்; என்னிடம் விஷயம் இப்படி என்று அந்தப் பயல் ஒரு வார்த்தை சொல்லியிருக்கக்கூடாதா? சொல்லியிருந்தால், பின்வரும் 'சந்திரமதி' பாட்டின் அடியை அவனுக்கு நான் கற்றுக் கொடுத்திருக்க மாட்டேனா?

"நீலக் கடலினிலே - நின்

நீண்டகுழல் தோன்றுதடி

கோல மதியினிலே - நின்

குளிர்ந்த முகம் காணுதடி

ஞால வெளியினிலே - நின்

ஞான ஒளி வீசுதடி

கால நடையினிலே - நின்

காதல் விளங்குதடி!"