Chapter 3

ஸ்ரீகாந்தன் வீட்டுக்குச் சென்றதும் அன்றைய பொதுக்கூட்டத்தைப் பற்றித் தன் தாயாரிடமும் சகோதரிகளிடமும் சொன்னான். (நாலு சகோதரிகளில் இரண்டு பேராவது எப்போதும் பிறந்த வீட்டில் இருப்பார்கள்) ஒரு பொம்மனாட்டி பேசினாள் என்று கேட்டதும் அவர்களும் ஆச்சரியப்பட்டார்கள்.

"ஏண்டா அப்பா, அவாள் என்ன ஜாதிப் பேரோ?" என்று கேட்டாள் தாயார்.

"சாக்ஷாத் பிராமணாள்தான் அம்மா! அதிலும் ஸ்மார்த்தாள்!" என்றான் ஸ்ரீகாந்தன்.

"அதுவும் அப்படியா? வடமாளோ, அஷ்டசஹஸ்ரமோ! அஷ்டசஹஸ்ரத்தில்தான் இப்படித் துணிந்து வருவார்கள்."

"பார் எவ்வளவு புத்திசாலித்தனமாய்ப் பேசுகிறாய்! ஜாதி தான் ரொம்ப முக்கியமான விஷயமாக்கும்? நீங்களும் பொம்மனாட்டியென்று பிறந்தீர்களே!" என்று வெறுப்புடன் கூறினான் ஸ்ரீகாந்தன்.

சற்று நேரத்திற்கெல்லாம் ஒரு சகோதரி, "அவளுக்கு எத்தனை வயது இருக்கும்?" என்று கேட்டாள்.

வஸுந்தராவைப் பற்றி யாருடனாவது ஏதாவது பேச வேண்டுமென்றிருந்தது ஸ்ரீகாந்தனுக்கு. எனவே, "இருபத்தைந்து வயதுக்குள்ளிருக்கும்" என்று பதில் சொன்னான்.

"ஆம்படையான், கீம்படையான் ஒருவரும் கிடையாதா?" என்று இன்னொரு சகோதரி கேட்டாள்.

"அதெல்லாம் உங்களுக்கென்ன கவலை?"

"ஏண்டா? பின்னே கவலையில்லையா? பிராமணாளாய்ப் பிறந்து காலாகாலத்திலே கலியாணம் செய்து கொள்ளா விட்டால் நன்றாயிருக்கோ?" என்றாள் தாயார்.

அதற்குள் சகோதரிகளில் ஒருத்தி அம்மாவின் காதில் வந்து ஏதோ சொன்னாள். உடனே அவள், "சிவ! சிவ! காலம் கெட்டுப் போயிற்று. ஏண்டா! அவள் கழுத்தில் தாலி இருக்கோ, பார்த்தயோடா?" என்றாள். பின்னோடு, "நான் பார்த்தேன்னாக் கேட்டுடுவேன். அவள் யாராய்த் தானிருக்கட்டுமே? எனக்கென்ன பயம்!" என்று தலையை ஆட்டினாள்.

ஸ்ரீகாந்தன், "நீங்கள் நாசமாய்ப் போனயள்!" என்று சொல்லிவிட்டு எழுந்திருந்து சென்றான்.

அது முதல் ஸ்ரீகாந்தன் காங்கிரஸ் கூட்டங்களுக்கு வழக்கமாகப் போய் வரலானான். இதனால் காங்கிரஸ்காரர்கள் சிலரோடு அவனுக்குச் சினேகம் ஏற்பட்டது. கொஞ்ச நாளைக்கெல்லாம் காங்கிரஸ் ஆபீஸுக்கும் போகத் தொடங்கினான். ஒரு மாஜி ஸப்ஜட்ஜின் புதல்வன் - பணக்கார இளைஞன் - காங்கிரஸில் ஊக்கம் காட்டுவது பற்றி அவ்வூர்க் காங்கிரஸ்காரர்களுக்கெல்லாம் மிகவும் சந்தோஷமாயிருந்தது. இரண்டு மாதங்களுக்குப் பிறகு புதிய காங்கிரஸ் கமிட்டிகள் அமைக்கப்பட்டபோது ஸ்ரீகாந்தன் தாலுகா காங்கிரஸ் கமிட்டியின் காரியதரிசியாக நியமிக்கப்பட்டான்.

அதற்கு மறுநாள் அவன் வஸுந்தராவின் வீட்டுக்குப் போனான். (அடிக்கடி பொதுக்கூட்டங்களில் சந்தித்ததில் அவர்களுக்குள் சொற்பப் பரிச்சயம் ஏற்பட்டிருந்தது) அவளிடம், "நான் காரியதரிசி பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கிறேன். அதை நன்கு நிறைவேற்றுவதற்கு நீங்கள் தான் உதவி செய்ய வேண்டும். உங்களால் தான் நான் இந்த காங்கிரஸ் வேலையில் ஈடுபட்டதே, தெரியுமல்லவா?" என்றான்.

வஸுந்தராவின் உள்ளத்தில் உவகை பொங்கிற்று துயரம் நிறைந்த தன்னுடைய வாழ்க்கையில் இப்படி ஒரு சந்தர்ப்பம் வருமென்று அவள் எதிர்பார்க்கவே இல்லை.

"என்னால் இந்த உதவி செய்யத் தடையில்லை. அதைவிட வாழ்க்கையில் என்ன சந்தோஷம் இருக்கிறது. ஆனால் முனிசிபல் சேர்மன் ஏதாவது ஆட்சேபிப்பாரோ என்று தான் யோசனை செய்கிறேன்" என்றாள்.

"முனிசிபல் சேர்மனை நான் போய்ப் பார்க்கிறேன். அவர் வேண்டுமானால் ஆட்சேபிக்கட்டும், பார்க்கலாம். அப்படியே நேர்ந்தால் இந்த வேலை என்ன பிரமாதம்? இந்த ஊரில் நாங்கள் இவ்வளவு பேர் இல்லையா? சும்மா விட்டுவிடுவோமா?" என்றான் ஸ்ரீகாந்தன்.

முனிசிபல் சேர்மன் ஆட்சேபிக்கவில்லை. உண்மையில் காந்தி-இர்வின் உடன்படிக்கை அமுலிலிருந்த அந்த வருஷத்தில் ரொம்பப் பேர் திடீரென்று காங்கிரஸ் அநுதாபிகள் ஆனார்கள். சர்க்கார் அதிகாரிகள் கூடக் காங்கிரஸ் நிர்வாகிகளின் நல்ல அபிப்பிராயத்தைப் பெற விரும்பினார்கள்.

இந்த 1931ஆம் வருஷத்தில் தமிழ்நாடெங்கும் காங்கிரஸ் நிர்மாண வேலைகள் தீவிரமாகத்தான் நடைபெற்றன. ஆனாலும் ஸ்ரீகாந்தன் காரியதரிசியாயிருந்த தாலுகா கமிட்டியைப் போல் அவ்வளவு வேலை எந்தக் கமிட்டியும் செய்யவில்லை என்று சொல்லலாம். இந்தப் பெருமை முழுவதும் வஸுந்தராதேவிக்கே சேரவேண்டுமென்று ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அசந்தர்ப்பத்திலும் ஸ்ரீகாந்தன் சொல்லி வந்தான்.

ஒருநாள் அவர்கள் இருவரும் தனியாயிருக்க நேர்ந்த போது, "நாம் இவ்வளவு நாள் பழகிய பிறகும் உங்களுடைய பழைய வாழ்க்கையைப் பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது. என்னைப் பற்றி ஒரு விவரம் பாக்கியில்லாமல் சொல்லியிருக்கிறேன். உங்களைப் பற்றி ஒரு வார்த்தை கூட நீங்கள் சொன்னதில்லை. இஷ்டமில்லாவிட்டால் வேண்டாம். ஆனால் எனக்கென்னவோ தெரிந்து கொள்ள ஆவலாயிருக்கிறது" என்றான் ஸ்ரீகாந்தன்.

வஸுந்தரா, "உங்களுக்கு என்ன வேண்டுமோ கேளுங்கள் சொல்கிறேன்" என்றாள்.

"உங்களுக்குக் கலியாணமே ஆகவில்லையா?"

"பேஷாய் ஆகியிருந்தது. அதற்கு அடையாளம் வேண்டுமானால் பார்க்கிறீர்களா?" என்றாள். அப்புறம் திரும்பி முதுகிலிருந்த துணியைச் சிறிது விலக்கினாள். செம்பொன் நிறமுடைய அம்முதுகின் மத்தியில் கறேலென்று இரண்டு நீளமான வடுக்கள் இருந்தன.

ஸ்ரீகாந்தன் கண்களை மூடிக்கொண்டான். அவை நெருப்புச் சுட்ட வடுக்கள் என்பதை உணர்ந்த அவன், "எனக்குப் பார்க்கச் சகிக்கவில்லை" என்றான்.

"என் மாமியார் சூடுபோட்ட வடுக்கள். அவளுடைய பிள்ளைக்கு மருந்திட்டேனென்பது என்னுடைய முதல் குற்றம். கொடுமை பொறுக்காமல் என் தகப்பனாருக்குக் கடிதம் எழுதியது இரண்டாவது குற்றம்" என்றாள்.

"அப்படிப்பட்ட கஷ்டம் அனுபவித்த நீங்கள் எப்படித்தான் இவ்வளவு உற்சாகமாகயிருக்கிறீர்களோ? எனக்கு ஆச்சரியமாயிருக்கிறது!" என்றான் ஸ்ரீகாந்தான்.

"முதலில் சங்கீதந்தான் எனக்கு மன ஆறுதல் அளித்தது. இந்த ஊருக்கு வந்த பிறகு உற்சாகத்திற்குப் புதிதாக இரண்டு காரணங்கள் ஏற்பட்டன. ஒன்றுதான் தேசத்தொண்டு; இன்னொன்று - இன்னொன்று உங்களுக்கே தெரியும்."

இதற்கு ஸ்ரீகாந்தன் ஏதோ பதில் சொல்ல வாயெடுத்தான். ஆனால் தொண்டை அடைத்துக் கொண்டது. ஏதோ தெளிவில்லாத சப்தந்தான் வெளி வந்தது.

கொஞ்ச நேரங் கழித்து, "உங்களைப் போன்றவர்களுடைய கதையைக் கேட்கும்போது, தேச விடுதலை கூட அவ்வளவு முக்கியமல்ல; சமூகத்திலுள்ள ஊழல்களை நீக்கப் பாடுபடுவதுதான் முக்கியமெனத் தோன்றுகிறது" என்றான்.

"இரண்டுக்கும் விரோதம் ஒன்றுமில்லையே. தேசத் தொண்டு, சமூகத் தொண்டு இரண்டும் சேர்ந்தாற்போல் செய்யலாமே?" என்றாள் வஸுந்தரா.