முடிவுரை

தாம்பரத்தில் வண்டி நின்றது. மதிவாணர் எம்.ஏ., வண்டியிலிருந்து இறங்குவதற்கு முன்பு அவர் அமெரிக்கர்களைத் திட்டியதற்கு ஓரளவே கிடையாது. "இராவணாதி ராட்சஸர்களை விட அமெரிக்கர்கள் பொல்லாத காட்டுமிராண்டிகள். அவர்களாவது வயிற்றுக்கு உணவுக்காக மனிதர்களைக் கொன்றார்கள். இவர்கள் ஆராய்ச்சி என்ற பெயரில், ஒரு காரணமும் இல்லாமல் அல்லவா கொன்று விடுகிறார்கள்? ஐயாயிரம் வருஷத்துக்கு முந்தைய பழந்தமிழ் நாகரிகம் குடிகொண்டிருந்த ஒரு தீவையே அழித்து விட்டார்களே! பாவிகள். பழந்தமிழர்களும் அவர்களுடைய நாகரிகமும் எப்படியாவது போகட்டும்! என் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட மயில்விழி மானை இனி நான் என்று காணப்போகிறேன்? காண முடியாமல் செய்து விட்டார்களே, பாவிகள்!...ஆம். சொர்க்கலோகத்தில் கட்டாயம் அவள் எனக்காகக் காத்திருப்பாள் என்று நினைக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?"

இவ்வாறு சொல்லிக் கொண்டே மதிவாணர் எம்.ஏ., இறங்கிச் சென்றார். அவர் கூறியதில் எவ்வளவு உண்மையாயிருக்கும்? எவ்வளவு அவரது கற்பனையாயிருக்கும் என்பதை நேயர்களே ஊகித்துக் கொள்ளக் கோருகிறேன்.