Chapter 4

எனக்கு அப்போது எவ்வளவு அதிசயமாக இருந்திருக்குமென்று நீங்களே ஊகித்துக் கொள்ள வேண்டியது தான். பல தடவை கண்ணை மூடித் திறந்து பார்த்தேன். அந்தக் காட்சி அதே மாதிரி தெரிந்தது. அந்த வீரர்கள் என் பேரில் அம்பை விடாததற்குக் காரணம், நான் அந்தப் பெண்ணுக்கு வெகு சமீபத்தில் இருந்தது தான் என்று தெரிந்து கொண்டேன்.

என் மூளை அந்த அபாயகரமான வேளையில் சரியான வேலை செய்தது. அடுத்த தீவில் உள்ள ராட்சத மக்களின் உணவு வழக்கம் நினைவுக்கு வந்தது. நான் விளையாட்டாகப் பேசிய பேச்சு அப்பெண்ணின் உள்ளத்தில் உண்டாக்கியிருக்கக்கூடிய கலக்கத்தை அறிந்து கொண்டேன்.

அதற்குள் அந்தப் பெண்ணுக்கும் கொஞ்சம் சந்தேகம் தோன்றியிருக்க வேண்டும்.

சட்டென்று நாலு அடி நடந்து வந்து அம்புகள் என் மேல் விழாமல் குறுக்கிட்டுத் தடுப்பவள் போல் நின்று கொண்டாள்.

"என்ன சொன்னீர்கள்? இன்னொரு தடவை சொல்லுங்கள்!" என்றாள்.

"உன்னைப் பார்த்தாலே போதும், பசி தாகம் பறந்துவிடும் என்று சொன்னேன்! நீ எதற்காகக் கூச்சல் போட்டாய்? இவர்கள் எல்லோரும் யார்? எதற்காக வில்லை வளைத்து அம்பு தொடுக்கிறார்கள்?" என்று கேட்டேன்.

அணுக்குண்டு - ஹைட்ரஜன் குண்டுகளைப் பற்றி உலகம் பீதி அடைந்திருக்கும் காலத்தில் வில்லும் அம்பும் வைத்துக் கொண்டு சண்டையிடும் வீரர்களும் இத்தீவில் இருக்கிறார்களே என்னும் அதிசயம் என்மனத்தில் பொங்கிக் கொண்டிருந்தது.

நான் கேட்டதற்குப் பதில் சொல்லாமல் அந்தப் பெண், "நீர் என்ன சாப்பிடுவது வழக்கம்?" என்று கேட்டாள்.

"இட்டிலி, தோசை, சாதம், முறுக்கு, சீடை, இடியாப்பம், பொரி விளங்காய் உருண்டை இன்னும் எது கிடைத்தாலும் சாப்பிடுவேன்!" என்றேன்.

அந்தப்பெண் ஒரு பெருமூச்சு விட்டுவிட்டுச் சுற்றிலும் நின்ற வில்லம்பு வீரர்களுக்கு ஏதோ சைகை காட்டினாள். அவர்களில் ஒருவன் அருகில் வந்தான். அவனிடம், "நலங்கிள்ளி! என் தந்தையை உடனே அழைத்து வா!" என்றாள்.

அந்த வீரனை அவள் அழைத்த பெயர் எனக்கு மிக்க வியப்பை உண்டாக்கியது. பழந்தமிழ் நாட்டுப் பெயராக அல்லவோ இருக்கிறது?

"உன் தந்தையின் பெயர் என்ன?" என்றேன்.

"இளஞ்சென்னி நெடுஞ்செழியன் சேரலாதன்!"

இதைக்கேட்டு நான் அடைந்த அதிசயத்தைக் காட்டிலும் அவளுடைய பெயரை அறிந்து கொள்ளும் ஆர்வம் அதிகமாயிற்று.

"உன் பெயர் என்னவோ?"

"மயில்விழி மான்!"

"என்ன என்ன? நீ இப்போது சொன்னது உன் பெயரா? அல்லது உன்னைப் பற்றிக் கவிஞரின் வர்ணனையா?"

"என் பெயர் தான்! இப்போது இங்கே கவிஞர்கள் யாரும் இல்லை. ஒரு வேளை தமிழ் நாட்டில் இருக்கிறார்களோ என்னமோ? நீங்கள் ஏதோ ஒரு தேசத்திலிருந்து வந்ததாகச் சொன்னீர்களே? அங்கே பக்கத்தில் செந்தமிழ் நாடு என்று எங்கேயாவது இருக்கிறதா?" என்று கேட்டாள்.

"மயில்விழி மானே! கேள். இந்தியா தேசத்தில் ஒரு பகுதிதான் செந்தமிழ் நாடு. நானே செந்தமிழ் நாட்டைச் சேர்ந்தவன் தான். மதுரைக்கு அருகில் ஒரு கிராமத்தில் பிறந்தவன்!" என்றேன் நான்.

"எந்த மதுரை? தமிழ்ச்சங்கம் இருந்ததே அந்த மதுரையா?"

"அதே மதுரைமா நகரந்தான்!"

"இன்னும் அங்கே சங்கம் இருக்கிறதா?"

"ஒரு சங்கமல்ல; வீதிக்கு வீதி சங்கங்கள் இருக்கின்றன!"

"அப்படியா? செந்தமிழ் நாட்டில் இப்போது தமிழர்கள் வசிக்கிறார்களா?"

"சுமார் இரண்டரைக் கோடி தமிழர்கள் இருக்கிறார்கள். தமிழ்க் கவிஞர்களும் இரண்டொருவர் இருக்கிறார்கள்!"

"அப்படியென்றால், இப்போது அங்கே ராட்சதர்களின் பயமே இல்லையா?"

"ராட்சதர்களா? எந்த ராட்சதர்கள்?"

"இலங்கையை ஆண்ட இராவணன் குலத்து ராட்சதர்கள்!"

"இலங்கையிலே இப்போது ராட்சதர்கள் இல்லையே!"

"பின்னே யார் இருக்கிறார்கள்?"

"இலங்கையிலே இப்போது சிங்களவர் என்ற சாதியார் ஆட்சி செய்கிறார்கள். தமிழர்கள் பலரும் அங்கே வசிக்கிறார்கள்."

"அந்தச் சிங்களவர்கள் நம் தமிழர்களைப் பிடித்துச் சாப்பிடுவதில்லையா?"

"இன்னும் அவ்வளவுக்கு வரவில்லை! தமிழர்களைத் தமிழ்நாட்டுக்குப் போகும்படி விரட்டியடிக்கத் தான் பார்க்கிறார்கள்! ஆனால் உங்கள் பக்கத்துத் தீவில் ராட்சதர்கள் இருக்கிறார்கள் போல் இருக்கிறதே!"

"ஆமாம்; தமிழ் நாட்டிலிருந்து எங்களைத் துரத்திக் கொண்டு வந்தார்கள். அவர்களுக்காகத் தான் இவ்வளவு பெரிய கோட்டை சுவர் கட்டியிருக்கிறோம். காவலும் வைத்திருக்கிறோம்."

"மயில்விழி மானே! என்னையும் அந்த ராட்சதக் கூட்டத்தைச் சேர்ந்தவனாகக் கருதிப் பயப்பட்டாய் அல்லவா?"

"இல்லை, இல்லை! நடுவில் உங்களுடைய ஒரு வார்த்தை அம்மாதிரி சந்தேகத்தை எனக்கு உண்டாக்கியது. அது தவறு என்று உடனே தெளிந்தேன். நீங்கள் தமிழராகத்தான் இருக்க வேண்டுமென்று உங்களைப் பார்த்தவுடனேயே எனக்குத் தெரிந்து போயிற்று. அதோ என் தகப்பனார் வருகிறார். நீங்கள் சொல்லுவதையெல்லாம் கேட்டால் மிக்க மகிழ்ச்சி அடைவார்!" என்று சொன்னதும், திரும்பிப் பார்த்தேன். சேர சோழ பாண்டிய மன்னர்களையொத்த கம்பீர தோற்றமுடைய ஒருவர் வந்து கொண்டிருந்தார்.

"உன் தந்தை இளஞ்சென்னி நெடுஞ்செழியன் பெருஞ்சேரலாதர் என் மீது கோபித்துக் கொள்வாரோ, என்னமோ?"

"எதற்காகக் கோபித்துக் கொள்ள வேண்டும்?"

"அநுமதியில்லாமல் கோட்டைக் கதவைத் திறந்து கொண்டு வந்ததற்காகத்தான்."

"உங்களைப் பார்த்துவிட்டு, வேண்டுமென்றே தான் கதவைத் தாழ் போடாமல் வந்தேன், செந்தமிழ் நாட்டைச் சேர்ந்த ஒருவர் வரவேண்டுமென்று நாங்கள் எவ்வளவு ஆயிரம் ஆண்டுகளாகத் தவங்கிடந்து வருகிறோம்?"

"மயில்விழி மானே! உன் வயது என்ன?" என்று கேட்டேன்.

"பதினெட்டு!"

"ஆயிரம் வருஷம் என்று சொன்னாயே?"

"என் பாட்டனாருக்குப் பாட்டனாருக்குப் பாட்டனார் - அவருக்குப் பாட்டனாருக்குப் பாட்டனாருக்குப் பாட்டனார், நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இங்கு வந்தார்."

"எதற்காக!"

"அதையெல்லாம் என் தந்தையிடம் கேளுங்கள்; விவரமாகச் சொல்வார். பசிக்கிறது என்று சொன்னீர்களே? நான் போய் ஏற்பாடு செய்கிறேன். இட்டிலி, தோசை, இடியாப்பம், இவற்றில் எது உங்களுக்கு அதிகமாகப் பிடிக்கும்?"

"அப்படியெல்லாம் எனக்குப் பாரபட்சம் கிடையாது. அறம், பொருள், இன்பம் இவற்றில் எது வேண்டும் என்று கேட்டால், என்ன பதில் சொல்கிறது? மூன்றும் வேண்டியதுதான்!"

மயில்விழி மான் என்னை விழித்துப் பார்த்துச் சிரித்துவிட்டு அவளுடைய தந்தைக்கு என்னைச் சுருக்கமாக அறிமுகம் செய்து வைத்தாள். பிறகு துள்ளிக் குதித்து ஓடினாள். அப்போது அவள் பெயரின் பொருத்தம் நன்கு வெளியாயிற்று.

"மானின் விழிபெற்று மயில் வந்ததென வந்தாள்" என்ற கம்பன் பாடலுக்கு மாறாக இருந்தாலும், மயிலின் பார்வையிலும் ஒரு தனி அழகு இருக்கத்தான் இருக்கிறது. மானின் துள்ளலில் உள்ள கவர்ச்சியைப் பற்றியோ சொல்ல வேண்டியதில்லை யல்லவா?