Chapter 5

கணபதி ராம சாஸ்திரிகள் மேல் மாடிக்கு வந்து சேர்ந்தார். ஆனால், காலையில் பார்த்த மாதிரி அமைதியான தோற்றமுடையவராயில்லை. முகமே மாறு பட்டிருந்தது. உடம்பெல்லாம் வியர்வை துளித்திருந்தது. நடக்கும் போது கால் தடுமாறிற்று. சுருங்கச் சொன்னால் திடீரென்று பத்து வருஷம் அதிக வயதானவரைப் போல் காணப்பட்டார். என் மாதிரியே, கல்யாணமும் அவனுடைய தகப்பனாரும் அதிசயத்துடன் அவரை நோக்கினார்கள்.

பெரியவர், "என்ன சாஸ்திரிகளே? விஷயம் என்ன? உடம்பிலே ஏன் இவ்வளவு படபடப்பு? உட்காருங்கள். உட்கார்ந்து நிதானமாய்ச் சொல்லுங்கள்" என்றார்.

கணபதிராம சாஸ்திரிகள் சாய்வு நாற்காலியில் தொப்பென்று விழுந்தார்.

தொண்டை அடைக்க, தழுதழுத்த குரலில், "நீங்கள் எல்லாருமாய்ச் சேர்ந்து என்னை மகா பாபத்திலிருந்து காப்பாற்றினீர்கள்" என்றார். உடனே முகத்தைத் துணியினால் மூடிக் கொண்டார். விம்மல் சத்தம் கேட்டது.

அவரை ரொம்பவும் ஆசுவாசப் படுத்தினோம். எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. என் மனதில் மட்டும், 'ஏதோ மர்மம் இருக்கிறது என்று நாம் எண்ணியது சரி; அது இப்போது வெளியாகப் போகிறது' என்று தோன்றிற்று.

"அன்று குலசேகரபுரத்துக்கு நீங்கள் இன்னும் அரை மணி நேரம் கழித்து வந்திருந்தால் எப்பேர்ப்பட்ட விபத்து நேர்ந்திருக்கும். அதை நினைத்தாலே எனக்குப் பயங்கரமாயிருக்கிறது. இதோ பாருங்கள் என் உடம்பில் மயிர் சிலிர்த்திருக்கிறது" என்றார் சாஸ்திரிகள்.

நாங்கள் பார்த்தோம். அவர் உடம்பிலே ரோமங்கள் குத்திக் கொண்டுதான் நின்றன.

"என் கை நடுங்குகிறதைப் பாருங்கள்" என்றார்.

பார்த்தோம்; கை நடுங்கிக் கொண்டிருந்தது.

"சமாசாரம் என்ன, சாஸ்திரிகளே? ஏதாவது நடவடிக்கை எடுத்து கொள்வது அவசியமாயிருந்தால் சீக்கிரம் சொன்னால் தானே தேவலை?" என்றார் பெரியவர்.

அந்த மாமண்டூர்க்காரர்கள், ஒரு வேளை, சாஸ்திரிகளைக் கொலை கிலை செய்ய முயற்சித்தார்களோ என்ற சந்தேகம் பெரியவருக்கும் உதித்திருக்க வேண்டும். அதனால்தான் நடவடிக்கையைப் பற்றி அவர் பிரஸ்தாபித்தார்.

கணபதிராம சாஸ்திரிகள் கொஞ்சம் தயங்கி யோசனை செய்துவிட்டு, "அடியே பிடித்துத்தான் சொல்லியாக வேண்டும்" என்றார்.

"பேஷாய்ச் சொல்லுங்கள். நிதானப்படுத்திக் கொண்டு சொல்லுங்கள்" என்றார் பெரியவர்.

எங்களுக்கெல்லாம் வியப்பையும் பரபரப்பையும் பயங்கரத்தையும் மகிழ்ச்சியையும் மாறி மாறி உண்டாக்கி வந்த பின்னவரும் அதிசயமான விவரத்தைக் கணபதிராம சாஸ்திரிகள் கூறினார்:-

கமலாவின் வரலாறு

"நீங்கள் காலையில் என் வீட்டிலிருந்து கிளம்பிப்போன பிறகு, எனக்கு இன்னது செய்வதென்று தெரியவில்லை. ஆரம்பத்திலிருந்தே, எனக்குக் கல்யாணம் செய்து கொள்வதில் இஷ்டம் கிடையாது. துர்போதனையில் மயங்கிப் போய்ச் சம்மதித்து விட்டேன். குலசேகரபுரத்தில் கல்யாணத்தன்றைக்குக் கூட எனக்கு மன நிம்மதியேயில்லை. நீங்கள் வந்து தடுத்ததும், நல்லதாய்ப் போயிற்று என்று நினைத்துக் கொண்டு கிளம்பி விட்டேன்.

இன்றைக்கு இவர்கள் மறுபடியும் வந்து சேர்ந்ததும் உங்களைக் கூப்பிட்டனுப்பினேன். நீங்கள் வந்தால் எப்படியும் அவர்களைத் திருப்பி அனுப்பி விடுவீர்களென்று நினைத்தேன். நீங்கள் திரும்பி வந்துவிட்டீர்கள். நீங்கள் வந்த பிறகு அவர்கள் இன்னும் நிர்ப்பந்தப்படுத்த ஆரம்பித்தார்கள். நான் யோசனை செய்து ஒரு தீர்மானத்துக்கு வந்தேன். உங்கள் பெண்ணின் இஷ்டத்தினால்தான் வந்திருப்பதாய்ச் சொல்கிறீர்கள். இதில் எனக்கு நம்பிக்கையில்லை. அவளிடம் தனியாய்ச் சற்று நேரம் பேச வேண்டும். பேசி உங்கள் நிர்ப்பந்தத்தினால் அவள் வரவில்லை என்று நிச்சயமாய்த் தெரிந்து கொண்ட பிறகுதான் முடிவாகப் பதில் சொல்வேன் என்றேன்.

அவர்கள் கொஞ்சங்கூட ஆட்சேபிக்காமல் அதற்குச் சம்மதித்தார்கள். பெண்ணை அந்த ஹாலிலேயே விட்டு விட்டு உள்ளே சென்றார்கள். நான் அந்தப் பெண்ணைப் பார்த்து, 'கமலா, உன் அப்பாவிடம் நான் சொன்னதைக் கேட்டுக் கொண்டிருந்தாயல்லவா? உன்னை இவர்கள் நிர்ப்பந்தப் படுத்தவில்லையென்பது நிஜந்தானா?' என்று கேட்டேன்.

"நிஜந்தான். அவர்கள், என்னை நிர்ப்பந்தப்படுத்தவேயில்லை. நான் தான் அவர்களை நிர்ப்பந்தப்படுத்தி அழைத்து வந்தேன்" என்றாள்!

"அப்படியானால் நிஜத்தைச் சொல்லு, என்னத்திற்காக என்னைக் கல்யாணம் செய்து கொள்ள வேண்டுமென்கிறாய்? அப்பா அம்மாவைப் பிடிக்கவில்லையா? அவர்களுடன் இருப்பது கஷ்டமாயிருக்கிறதா?" என்று கேட்டேன்.

"கஷ்டம் ஒன்றுமில்லை; ஆனால், அவர்களுடன் இனிமேல் இருக்க எனக்கு இஷ்டமில்லை!" என்று அந்தப் பெண் சொன்னாள்.

"ஏன்?" என்று கேட்டேன்.

அவள் பதில் சொல்லத் தயங்கினாள்.

"நான் உன்னை கல்யாணம் செய்து கொண்டால் வாழ்நாள் முழுவதும் உன்னோடு காலங்கழிக்க வேண்டுமே? உன்னிடம் எனக்குப் பூரண நம்பிக்கையிருந்தால்தானே அது முடியும்? இப்பொழுது நீ நிஜத்தைச் சொல்லாவிட்டால், உன்னிடம் எப்படி எனக்கு நம்பிக்கை ஏற்படும்?" என்று கேட்டேன்.

"நான் நிஜத்தைச் சொல்கிறேன். ஆனால் அதற்காக என்னை நீங்கள் நிராகரிக்கக் கூடாது. அப்பா, அம்மாவிடம் நான் சொல்வதைச் சொல்லவுங் கூடாது" என்று கெஞ்சுகிற குரலில் சொன்னாள்.

"அதெல்லாம் நான் ஒன்றும் வாக்களிக்க முடியாது. முதலில் நீ நிஜத்தைச் சொல்லு. உன்னிடத்தில் எனக்கு நம்பிக்கை உண்டானால், அதற்குப் பிறகு முடிவு சொல்கிறேன்" என்றேன்.

"அப்பாவும் அம்மாவும் ரொம்ப தரித்திரப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அப்பாவுக்கு வேலை போய் மூன்று வருஷம் ஆகிவிட்டது. எனக்கு ஐந்து பேர் தம்பி தங்கைகள். வீட்டிலே சில நாளைக்குச் சாப்பாடு கூடக் கிடைக்கிறதில்லை. நீங்கள் பணக்காரர் என்று எனக்குத் தெரியும். உங்களைக் கல்யாணம் செய்து கொண்டால், அவர்களுக்கெல்லம் ஒத்தாசை செய்யலாம் என்ற ஆசைதான். நிஜத்தைச் சொல்லிவிட்டேன். அப்புறம் நீங்கள் விட்டவழி விடுங்கள்" என்றாள்.

என் மனது இரங்கிவிட்டது. ஆனாலும், ஒருவாறு மனதைக் கடினப்படுத்திக் கொண்டு, "அப்படியானால் உங்கள், அப்பா அம்மாவின் கஷ்டத்தைப் பார்க்கச் சகிக்காமல் தான் என்னைக் கல்யாணம் பண்ணிக் கொள்ளச் சம்மதித்தாய் என்று சொல்லு; அவர்களுக்கு ஒன்றும் ஒத்தாசை செய்ய முடியாது என்று நான் சொல்லி விட்டால் என்ன பண்ணுவாய்?" என்றேன்.

"கல்யாணச் செலவு, எதிர் ஜாமீனாவது இல்லாமல் போய் விடுமோ, இல்லையோ? என்னை இத்தனை நாள் வளர்க்கிறதற்கே அவர்களுக்கு எத்தனையோ பணச் செலவு ஆகியிருக்கிறது."

"ரொம்ப அழகாயிருக்கே நீ சொல்கிறது? பெண்ணை வளர்த்துக் கல்யாணம் பண்ணிவைக்கிறது பெற்றவர்களுடைய கடமை. இதற்காக நீ என்னத்திற்குக் கவலைப்பட வேண்டும்?"

"பெற்றவாளாயிருந்தல் நீங்கள் சொல்கிறது சரிதான். ஆனால், அவாள் என்னைப் பெற்றவாள் இல்லை. என்னுடைய சொந்த அப்பா, அம்மா இல்லை."

எனக்குத் தூக்கிவாரிப் போட்டது.

"என்ன சொல்லுகிறாய், நிஜமாகவா?" என்று கேட்டேன்.

"உங்களுக்குப் புண்ணியம் உண்டு. கொஞ்சம் மெதுவாய்ப் பேசுங்கள். நான் இதையெல்லாம் உங்களிடம் சொன்னதாய் அவர்களுக்குத் தெரியக்கூடாது. ஒரு மாதத்துக்கு முன்னாலே தான் எனக்கே இது தெரிஞ்சுது. ஒரு நாளைக்கு அப்பாவும் அம்மாவும் தனியாகக் கதவைச் சாத்திண்டு உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். என் கலியாண விஷயமாய்த்தான் பேசுகிறார்கள் என்று தெரிந்து கொண்டு நான் ஒட்டுக்கேட்டேன். 'அதுக்காகக் கமலாவைப் பலி கொடுக்கணும் என்கிறாயா?' என்று அப்பா சொன்னார். அதற்கு அம்மா, 'பலி கொடுக்கிறது என்ன? நல்ல பணக்கார இடத்திலே தானே கொடுக்கப் போகிறோம்? நடுச்சாலையிலே அனாதையாய்க் கிடந்த குழந்தையை எடுத்துப் பதின்மூன்று வருஷமாக வளர்க்கலையா? அவளுக்கும் நம்ம சொந்தக் குழந்தைக்கும் ஏதாவது வித்தியாசம் பாராட்டினோமா? அவள் வந்த முகூர்த்தம் நமக்கு நாலைந்து குஞ்சு குழந்தைகள் ஏற்பட்டிருக்கின்றன. தரித்திரமோ பிடுங்கித் தின்கிறது. இத்தனை வருஷமாய் அவளை வளர்த்ததற்கு அவளாலே தான் நமக்கு ஏதாவது உபகாரம் ஏற்படட்டுமே! அதிலே என்ன பிசகு?' என்று சொன்னாள். அப்போதுதான் எனக்குத் தெரிந்தது. அப்படிப் பதின்மூன்று வருஷம் என்னை வளர்த்தவாளுக்கு நான் பதிலுக்கு உபகாரம் கட்டாயம் செய்யணும் என்று தீர்மானம் செய்து கொண்டேன். அதனால் தான் உடனே உங்களைக் கல்யாணம் செய்து கொள்ளச் சம்மதித்தேன். உங்களுடைய நல்ல குணத்தைப் பார்த்த பிறகு அந்த உறுதி அதிகமாயிற்று. நிஜத்தைச் சொல்லிவிட்டேன். நீங்கள் என்னைக் கைவிட்டால், திரும்பி அவர்கள் வீட்டுக்கு நான் போகப் போவதில்லை. வழியில் எங்கேயாவது ரயிலிலேயிருந்து குதித்தாவது உயிரை விட்டு விடுவேன்" என்றாள்.

இந்த அதிசயமான விவரத்தைக் கேட்டுக் கொண்டு நான் ஸ்தம்பமாய் உட்கார்ந்திருந்தேன். என் நெஞ்சு மட்டும் எதனாலோ, படீர், படீர் என்று அடித்துக் கொண்டிருந்தது. ஒரு பெரிய சந்தேகம் - பயங்கரமும் ஆனந்தமும் கலந்த சந்தேகம் - என் மனத்தில் உதித்து விட்டது.

"இப்போது உனக்கு என்ன வயது அம்மா" என்று கேட்டேன்.

"பதினாறு" என்றாள்.

"உன் சொந்த அப்பா அம்மாவைப் பற்றி ஏதாவது ஞாபகம் இருக்கா?" என்று கேட்டேன்.

"ஒன்றுமே ஞாபகமில்லை" என்றாள்.

"உன்னை எங்கே கண்டெடுத்தார்களாம். அதாவது தெரியுமா?" என்று கேட்டேன்.

"கும்பகோணம் மகாமகத்தின் போது அகப்பட்டதாகப் பேசிக் கொண்டார்கள்" என்று அவள் சொன்னதும், என்னுடைய பரபரப்பு அளவு கடந்துவிட்டது.

"இங்கே வா, அம்மா! கொஞ்சம் வலது காதை மடித்துக் காட்டு" என்றேன்.

அவள் தயங்கியதைப் பார்த்துவிட்டு, "பயப்படாதே அம்மா! இப்படி வா! ஒரு அடையாளத்துக்காகக் கேட்கிறேன்" என்றேன். அவள் அருகில் வந்ததும் அவளுடைய வலது காதை மடித்து விட்டுப் பார்த்தேன். அதன் பின்னால் மூன்று கறுப்பு மச்சங்கள் பளிச்சென்று தெரிந்தன.

"என் கண்ணே! நீ என் சொந்தப் பெண்ணடி!" என்று கத்திக் கொண்டே அவளைக் கட்டிக் கொள்ளப் போனேன். திடீரென்று கண் இருண்டு வந்தது. கீழே விழுந்து விட்டேன்.

இப்படிச் சொல்லிவிட்டு கணபதிராம சாஸ்திரி நிறுத்தினார். என் மனதில் காலையிலிருந்து உறுத்திக் கொண்டிருந்த மர்மமான விஷயம் இன்னதென்று இப்போது விளங்கிவிட்டது. அது கணப்திராம சாஸ்திரிக்கும் கமலாவுக்கும் முகபாவத்தில் காணப்பட்ட ஒற்றுமை தான்.

நாங்கள் மூன்று பேரும் எங்கள் அதிசயத்தைப் பல விதத்திலும் தெரிவித்தோம். "நீங்கள் ரொம்பப் புண்ணியம் செய்தவர். அதனால் தான் உங்களைப் பகவான் அப்பேர்ப்பட்ட பாவத்திலிருந்து காப்பாற்றினார். பெண்ணையும் கொண்டு வந்து சேர்த்தார்" என்று அவரைப் பாராட்டினோம்.

"பகவான் உங்கள் மூலமாக என்னைத் தடுத்தாட்கொண்டார். அதனால் பாக்கிக் காரியத்தையும் நீங்கள் தான் செய்து கொடுக்க வேணும். குழந்தைக்குக் கல்யாணம் பண்ணி வைத்த பிறகுதான் என் மனதில் ஏற்பட்டுள்ள பயங்கரம் நீங்கும்; நிம்மதி ஏற்படும் ஐயர்வாள்! வேறு எது எப்படியிருந்தாலும் வித்தியாசம பார்க்காமல் உங்கள் பிள்ளைக்கே அவளைக் கல்யாணம் செய்துகொள்ள வேண்டும். அடுத்த முகூர்த்தத்திலேயே கல்யாணம் ஆகி விடவேண்டும்" என்றார் கணபதிராம சாஸ்திரிகள்.

இவ்வாறு கல்யாணசுந்தரத்தின் கட்சியில் பகவானே இருந்து, அவன் மனோரதத்தை நடத்தி வைத்தார். பெரியவரின் சம்மதம் உடனே கிடைத்து விட்டது. அம்மாளின் சம்மதம் பெறுவது அவ்வளவு சுலபமாயில்லை. ஆனால் கணபதிராம சாஸ்திரிகள் கமலாவின் பேருக்குத் தம் முக்கால் லட்சம் சொத்தையும் எழுதி வைத்து உயிலையும் கொண்டு வந்து கொடுத்த பிறகு, அம்மாளின் சம்மதமும் கிடைத்து விட்டது. அடுத்த முகூர்த்த தினத்தில் கமலாவின் கல்யாணம் வெகு சிறப்பாக நடந்தேறியது.

இந்த விஷயத்தில் கல்யாணசுந்தரம் காட்டிய பிடிவாதமும் உறுதியும் அவனிடம் எனக்கு ரொம்ப மதிப்பை உண்டாக்கிவிட்டது என்பதைச் சொல்ல வேண்டும். அவனும் என்னிடம் மிகவும் நன்றியுடனிருக்கிறான்.

இதை எழுதிய பிறகு, இந்தக் கதைக்கு நான் கொடுத்திருக்கும் தலைப்பைப் பார்த்தேன். இரண்டு விதத்திலும் அது பொருத்தமாயிருப்பது தெரிய வந்தது. பிள்ளையாண்டான் இப்போது 'கமலாவின் கல்யாண'மாகத்தான் விளங்குகிறான். அப்பாவுக்குப் பிள்ளைதானே?