Chapter 6

தங்கத்தினிடம் ஸௌந்தரம் இலேசில் உண்மையைச் சொல்லி விடவில்லை. கேள்வி கேட்டும், கண்ணீர் விட்டும், ஆணை வைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக அவள் விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டியிருந்தது. அப்படியுங்கூட, ஒரு விஷயம் ஸௌந்தரம் அதிகப்படியாகக் கற்பனை செய்துதான் சொன்னான். ஒரு சிநேகிதன் 2000 ரூபாய் கடன் கொடுப்பதாகச் சொல்லியிருந்தாகவும், அது மறுநாள் வந்து விடுமென்று நம்பி பாங்கி பணத்தைப் போட்டு ஒட்டியாணம் வாங்கியதாகவும், அந்தப் பாவி பிறகு கையை விரித்து விட்டான் என்றும் கூறினான். தன்னுடைய குற்றத்தைக் குறைத்துக் கொள்ளும் எண்ணத்துடனேதான் ஸௌந்தரம் இப்படிக் கற்பனை செய்து சொன்னான். ஆனால் இது தங்கத்துக்குப் பெரிய ஆறுதல் அளித்தது! கவலையினாலும் கண்ணீரினாலும் பயத்தினாலும் வாடி வதங்கிப் போயிருந்த அவளுடைய முகம் ஒரு நிமிஷம் பிரகாசம் அடைந்தது. "அப்படியானால், எடுத்தது தெரியாமல் இப்போது கூடப் பணத்தைப் போட்டு விடலாமோ?" என்று கேட்டாள்.

"இப்போது ரொம்ப நாளாகி விட்டதே!" என்றான் ஸௌந்தரம்.

"அதனால் என்ன மோசம்? நான் பெண் பேதை, ஒன்றும் தெரியாதவள்தான். இருந்தாலும் இந்த ஒரு விஷயத்தில் நான் சொல்கிறதைக் கேளுங்கள். இந்த ஒட்டியாணத்தை நாளைக்குக் காலையில் கொண்டுபோய் விற்று விடுங்கள். நல்ல வேளையாகத் தங்க நகையாக வாங்கினோமே? வைரமாயிருந்தால், பாதிப் பணம் கூட வராது. விற்றுவிட்டால், கையில் பாக்கியுள்ளதையும் எடுத்துக் கொண்டு நேரே மேனேஜரிடம் போய் நடந்தது நடந்தபடி சொல்லி விடுங்கள். பகவான் இருக்கிறார். நமக்கு ஒன்றும் கெடுதி வராது" என்றாள் தங்கம்.

ஒரு விதத்தில் அது சரியான யோசனை என்று ஸௌந்தரத்துக்கும் தோன்றியது. இப்போதுள்ள பாங்கி நெருக்கடி காபராவில், மானேஜிங் டைரக்டர் கேஸ் நடத்துவதற்கு விரும்ப மாட்டார். பணம் வந்தால் போதுமென்று விட்டு விடுவார். உண்மையைச் சொல்லி, மன்னிப்பைக் கேட்டுக் கொண்டால், அதற்குப் பலன் இல்லாமலா போகும்? ஆனாலும், எவ்வளவோ ஆசையுடன் தங்கத்துக்கு வாங்கிக் கொடுத்த ஒட்டியாணத்தை உடனே விற்கிறதா? இப்போது அவள் சம்மதித்தாலும், பிறகு வாழ்நாளெல்லாம் சொல்லிக் காட்ட மாட்டாளா?

"என்ன யோசிக்கிறீர்கள்? நான் சொன்னபடி செய்கிறாதாக சத்தியம் செய்து கொடுங்கள். இல்லாவிட்டால் விடமாட்டேன்" என்றாள் தங்கம். அந்தப்படியே அவன் சத்தியம் செய்து கொடுக்கிற வரையில் அவள் விடவில்லை.

அடுத்த நாள் காலையில் ஸௌந்தரம் ஒட்டியாணத்தைக் கடைத் தெருவுக்கு எடுத்துக் கொண்டு போய் வேறொரு நகைக் கடையில் அதை விற்றான். வழக்கம்போல் கூலியைக் குறைத்துக் கொண்டு தங்க விலைக்கு எடுத்துக் கொண்டார்கள். அதிர்ஷ்டவசமாக அந்தப் பத்து நாளில் பவுன் விலை மூன்று ரூபாய்க்கு மேல் உயர்ந்திருந்தது. ஆகையால், ஒட்டியாணத்துக்குக் கொடுத்த பணம் அப்படியே திரும்பி வந்து விட்டது!

மானேஜிங் டைரக்டரிடம் கொண்டு போய் ஆயிரத்தைந்நூறு ரூபாயையும் வைத்து ஸௌந்தரம் விஷயங்களைச் சொன்னபோது, அவர் ஆச்சரியத்தினால் பிரமித்துப் போனார், "நல்ல வேளை; இன்றைக்கே கொண்டு வந்து கொடுத்தாய்; நாளைக்கு 'டூ லேட்' ஆகிப் போயிருக்கும்" என்றார். அவனை மன்னித்து விடுவதாகவும், அவன் மேல் வழக்குத் தொடுப்பதில்லையென்றும் வாக்குக் கொடுத்தார்.

இவ்வளவு சுலபமாகக் காரியம் நடந்து விடுமென்று ஸௌந்தரம் எதிர்பார்க்கவேயில்லை. ஆகவே, கொஞ்சம் தைரியமடைந்து, "ஸார்! தயவு செய்து அந்த ஸி.ஐ.டி. காரனை உடனே போகச் சொல்லுவிடுங்கள். அவன் முழித்துப் பார்த்துக் கொண்டேயிருந்தால், ஒரு வேலையும் ஓட மாட்டேன்கிறது" என்றான்.

மானேஜிங் டைரக்டரின் புருவங்கள் மறுபடியும் ஆச்சரியத்தினால் நெறிந்தன.

"எந்த ஸி.ஐ.டி. யைச் சொல்கிறாய்?" என்று ஒன்றும் தெரியாதவர் போல் கேட்டார்.

"எதிர் ஹோட்டல் மாடியில் இருக்கிறவனைத் தான், ஸார்! அவன் முகத்தை நினைத்துக் கொண்டால் இராத்திரியில் தூக்கம் வரமாட்டேன்கிறது" என்றான் ஸௌந்தரம்.

மானேஜிங் டைரக்டர் மூக்கிலே விரலை வைத்து, தம்முடைய ஆச்சரியத்தைத் தெரியப்படுத்தினார்.

"பலே கெட்டிக்காரன் நீ! ஸி.ஐ.டி. போட்டிருக்கிறதைக் கூட கண்டு பிடித்து விட்டாயே? இன்றைக்கு ஒருநாள் தான் அவன் இருப்பான்; நாளைக்கு வரமாட்டான்" என்றார்.

"ரொம்ப வந்தனம். 'கவுண்டருக்குப் போகிறேன், ஸார்!" என்றான் ஸௌந்தரம்.

"இவ்வளவு புத்திசாலி இந்தச் சின்ன வேலையில் இருக்கக்கூடாது. கூடிய சீக்கிரம் உன்னை ஒரு கிளை ஆபீஸ் ஏஜெண்டாகப் போடுகிறேன்" என்றார் ராவ் சாகிப் ஸகஸ்ரநாமம்.

ஸௌந்தரம் மிக்க உற்சாகத்துடன் கீழே சென்றான். அன்று நிம்மதியாக வேலை பார்த்தான். ஸி.ஐ.டி. காரனையோ அவனுடைய கழுகுப் பார்வையையோ கொஞ்சங்கூட இலட்சியமே செய்யவில்லை.

சாயங்காலம் வீட்டுக்குப் போனதும் தங்கத்தினிடம் எல்லா விபரங்களையும் சொன்னான். அந்த சந்தோஷத்தைக் கொண்டாடுவதற்காக இரண்டு பேரும் ஒரு ஹிந்தி டாக்கிக்குப் போய் விட்டு வந்தார்கள். ஹிந்தி டாக்கியில் ஒரு சௌகரியம் உண்டு. திரையில் பேசுகிறது என்னமோ இவர்களுக்குத் தெரியாது. இவர்கள் பாட்டுக்குத் தங்கள் சமாசாரம் பேசிக் கொண்டிருக்கலாமல்லவா?

இராத்திரி இரண்டு பேரும் வெகு நேரம் வரையில் பேசிக் கொண்டிருந்தாலும் பிறகு நிம்மதியாக தூங்கினார்கள்.

*****

மறுதினம் காலையில், அடுத்த வீட்டு அய்யாசாமி ஐயர் கையில் காலை தினசரிப் பத்திரிகையுடன் அவசரமாய் வந்தார்.

"என்ன மிஸ்டர் ஸௌந்தரம்! கடைசியில் கல்லைத் தூக்கிப் போட்டு விட்டீர்களே!" என்று கேட்டுக் கொண்டு வந்தார்.

ஸௌந்தரம் ஒன்றும் புரியாமல் "என்ன? என்ன?" என்று பரபரப்புடன் கேட்டான்.

"உங்களுக்குத் தெரியாதா, என்ன? 'குபேரா பாங்கி' கோவிந்தா ஆகிவிட்டதாமே? ஸகஸ்ரநாமம் எல்லோருக்கும் பெரிய நாமத்தைப் போட்டு விட்டுப் போய் விட்டானாமே?" என்று சொல்லிப் பத்திரிக்கையைக் கொடுத்தார். ஸௌந்தரம் அளவில்லாத திகைப்புடன் பத்திரிகையை வாங்கிப் படித்தான். அதில் பின்வரும் செய்தி, கட்டம் கட்டி, பெரிய எழுத்தில் போட்டிருந்தது.

"குபேரா பாங்கியில் சில நாளைக்கு முன் பரபரப்பு ஏற்பட்டிருந்தது நேயர்களுக்கு தெரியும். அந்தப் பரபரப்பு ஒரு வாரமாக அடங்கியிருந்தது. பாங்கிக்கு நெருக்கடி தீர்ந்து விட்டது என்று எல்லாரும் எண்ணியிருந்த சமயத்தில், திடுக்கிடும்படியான சம்பவங்கள் நேற்று இரவு நடந்திருந்தன. குபேரா பாங்கியின் மானேஜிங் டைரக்டர் ராவ் சாகிப் ஸகஸ்ரநாமம் நேற்று இரவு எழும்பூர் ரயில்வே ஸ்டேஷனில் கைது செய்யப்பட்டார். பாங்கியின் கையிருப்பிலிருந்து அவர் ஏராளமான தொகைகளைக் கையாடியிருப்பதாகத் தெரிந்தது. சில நாளாக இரகசியப் போலிஸார் அவரைக் கண்காணித்து வந்தனர். நேற்று இரவு கைது செய்யப்பட்டபோது அவர் வசம் சுமார் இரண்டு லட்சம் ரூபாய் பெறுமான சவரன்களும் தங்க நகைகளும் இருந்தன என்று தெரிகிறது. முந்தைய இரண்டு தினங்களில் அவர் மார்க்கெட்டில் ஏராளமாக சவரன்கள் வாங்கிச் சேகரித்திருந்தாராம். அவர் மதுரைக்கு டிக்கட் வாங்கியிருந்த போதிலும், உண்மையில் புதுச்சேரிக்குப் போக உத்தேசித்திருந்தாரென்று தெரிகிறது. அவரை நல்ல சமயத்தில் கைது செய்த ஸி.ஐ.டி. போலீஸாரின் சாமார்த்தியம் பெரிதும் பாராட்டப்படுகிறது."

இதைப் படித்ததும் சுமார் கால் மணி நேரம் வரையில் ஸௌந்தரம் ஸ்தம்பித்து உட்கார்ந்திருந்தான். யோசிக்க யோசிக்க அவனுக்கு எல்லா விஷயங்களும் தெளிவாகத் தெரிய வந்தன. ஸி.ஐ.டி. காரன் பாங்கியைக் காவல் புரிந்ததெல்லாம் தனக்காக அல்ல; மானேஜிங் டைரக்டருக்காகத்தான். தான் ஒட்டியாணம் வாங்கிய நகைக் கடையில் மானேஜிங் டைரக்டர் ஸவரன் வாங்கியிருக்க வேண்டும்; அவர் அங்கே என்ன செய்தார் என்றுதான் ஸி.ஐ.டி.காரன் விசாரித்திருக்க வேண்டும்! தனக்கு ஒரு ஆபத்தும் ஏற்பட்டிருக்கவில்லை; பணம் திருப்பிக் கொடுத்திருக்க வேண்டியதேயில்லை. வீண் பயம்! வீண் நஷ்டம்!

அவனுடைய மனம் ஒருவாறு தெளிவடைந்ததும், உள்ளே போய், தங்கத்தைக் கூப்பிட்டு விஷயத்தைச் சொன்னான். அவளும் ரொம்ப ஆச்சரியப்பட்டாள்.

"நாம் பயப்பட்டது எல்லாம் வீண்!" என்று ஸௌந்தரம் சொன்னபோது, அவனுடைய மனதில் இருந்ததைத் தெரிந்து கொண்ட தங்கம், "நல்ல வேளை நேற்றைக்கே ஒட்டியாணத்தை விற்றுப் பணத்தைக் கொடுத்துத் தொலைத்தீர்களே! இல்லாமற் போனால், அது நம் தலையில் எப்போதும் ஒரு பெரிய பாரமாயிருக்கும்" என்றான்.

இதற்கு என்ன பதில் சொல்வதென்று ஸௌந்தரத்துக்குத் தெரியவில்லை. சற்று நேரம் கழித்து, திடீரென்று, "தங்கம்! இதில் இன்னொரு சங்கடம் இருக்கிறதே! பாங்கியை மூடி விட்ட படியால் எனக்கு வேலை போய் விட்டதே!" என்று கவலையுடன் கூறினான்.

"வேலைதானே போச்சு? போனால் போகட்டும். நீங்கள் போகாமல் இருக்கிறீர்களே. அதுவே எனக்குப் போதும்" என்றாள் தங்கம்.

ஸௌந்தரம் வேறொன்றும் சொல்லத் தோன்றாமல், "என் தங்கமே!" என்றான்.

ஆனந்த விகடன் 28.7.40