Chapter 1
“ஹேய்… ஹேய்ன்னானாம்!” – அதோ, விரலைச் சொடுக்கிக் கொண்டு குதித்தோடி வருகிறதே, ஒரு ‘கரிக்கட்டை’ – அவன்தான் ராசாத்தியின் ஏகபுத்திரனான மண்ணாங்கட்டிச் சிறுவன்.
தென்னாற்காடு ஜில்லாவாசிகளைத் தவிர மற்றவர்களுக்குப் பெயர் வேடிக்கையாகத்தானிருக்கும். ராசாத்தியின் இறந்துபோன அப்பனின் பெயர் அது. கிழவன் மீது கொண்ட ஊமைப்பாசம் இப்பொழுது மகன்மீது சொரிகிறது…
இப்பொழுது மண்ணாங்கட்டிக்கு ஏகக் குஷி – ஏன் தெரியுமா? அடுத்த அடுப்பிலிருந்த சோற்றைத் திருடித் தின்ற எக்களிப்புத்தான்!
பூட்டா, திறப்பா? – பிளாட்பார வாழ்க்கைதானே? நாய் வந்து வாய் வைத்தாலும் அடித்துத் துரத்துவாரில்லை. அதுவும் இந்தத் திருட்டுக் கொட்டுப் பயல் பிறர் காணும்படியா அந்தக் காரிய்த்தை நடத்தியிருப்பான்? – பானையோடு தூக்கிக் கொண்டு தெருக் கோடியிலிருக்கும் அந்தப் பாழ் மண்டபத்துக்குத்தான் ஓடியிருப்பான் – அது அவன் வாசஸ்தலம்.
“ஒன்னெ வெட்டி வெக்க… எங்கேடா போயிருந்தே, சோமாறி?” என்று வரவேற்றாள் அவன் தாய் ராசாத்தி.
“யம்மோவ்… துட்டும்மா, ஹீம் துட்டு குடும்மா…” என்று அவள் சேலை முந்தானையைப் பிடித்துக் கொண்டு குதித்தான் சிறுவன்.
ராசாத்தி நிறைமாசக் கர்ப்பிணி. அவன் இழுப்புக்கெல்லாம் அவள் ஈடுகொடுக்க முடியுமா? – அவன் இழுத்த இழுப்பில் கீழே விழத் தெரிந்தாள்; சமாளித்துக்கொண்டு நின்ற வேகத்தில் ஆத்திரத்துடன் மண்ணாங்கட்டியின் முதுகில் இரண்டு அறை வைத்தாள்.
“ஒன்னெ பாடையிலே வெக்க… என்னெ இஸ்துத் தள்ளப் பாத்தியே… எங்கனாச்சும் ஒழிஞ்சு தொலையறது தானே?… துட்டு வேணுமாம், துட்டு… இவன் அப்பன் இங்கே கொட்டி வச்சிருக்கான் பாரு!”
“ஏம்மா, எங்கப்பன் ஆரும்மா?”
- ராசாத்தி என்ன பதில் சொல்லுவாள்?… அவளுக்கே தெரியாது. இப்பொழுது வயிற்றிலிருப்பதற்குத் தகப்பன்?…
- ஒரு நிமிஷம் எங்கோ நினைவு கூர்ந்து, சடையம்மன் கோவில் திருவிழாவில் சந்தித்துச் சில நாட்கள் உறவாடியிருந்த அந்தத் தாடிக்கார வளையல் வியாபாரியை, அவன் முகத்தை, அவன் சிரிப்பை, அவனது சேஷ்டைகளையெல்லாம் மனசில் நினைத்து நிறுத்திப் பார்த்தாள்.
அவள் முகத்தில் சிரிப்புக் குழம்பியது… அந்த ரகஸியங்களெல்லாம் மண்ணாங்கட்டிக்குத் தெரியுமா?…
“இங்கே வாடா, வாந்தி பேதியிலே போறவனே!” என்று பல்லைக் கடித்துக் கொண்டு அவனை எட்டிப் பிடிக்கக் கையை வீசினாள்.
ஒரே பாய்ச்சலில் அவள் பிடியிலிருந்து விலகி நின்ற சிறுவன், “ஹேய்ன்னானாம்!” என்று இரண்டு கைகளையும் தட்டிக் கொண்டு குதித்தான்.
“வா வா, புண்டம் கொட்டிக்க வருவே இல்லே” என்று விரலை ஆட்டிப் பத்திரம் கூறினாள் ராசாத்தி.
“நான்தான் துன்னுட்டேனே!” என்று வயிற்றில் தாளம் தட்டியவாறே ‘ஏவ்’ என்று பெரிசாக ஒரு ஏப்பம் விட்டுக் காண்பித்தான்.
மண்ணாங்கட்டியின் முதுகில் பின்னாலிருந்து ‘பளீரெ’ன ஓர் அறை விழுந்தது.
“தேவடியா பெத்த பயலே… வெறவு தூக்கிக்கினு போயிருக்கிறவருக்கு சோறு எடுத்து வச்சா அதைத் திருடித் துன்னுட்டு வந்து குதிக்கறதைப் பாரு?” என்று உறுமியவாறே நின்றிருந்தாள் மாரியாயி.
“வாடி, உத்தம பத்தினி… பத்தினி படபடா, பானை சட்டி லொட புடா…” என்று பச்சையான ‘பழமொழி’யை நீட்டி முழக்கி, சேலைத் தலைப்பை வரிந்துகொண்டு வந்தாள் ராசாத்தி.
“ஐய, ஒண்ணுங் கெட்ட மூளிக்கி ரோசத்துக்குக் குறைச்சலில்லே… அப்படியே தொங்கத் தொங்கக் கட்டிக்கினு பெத்தவ மாதிரிதான்” என்று முகவாயைத் தோளில் இடித்துக் கொண்டாள் மாரி.
“ஆமா ஒன்னே மாதிரி, தொங்கத் தொங்கக் கட்டிக்கினு ஊர் மேஞ்சா நல்லாத்தானிருக்கும்!”என்று திருப்பியடித்தாள் ராசாத்தி.
“ஆமா… நான் போவும்போது இவதான் வந்து வெளக்குப் புடிச்சா!”
- மாரிக்குத் தன்னைப்பற்றி யாருக்கும் தெரியாது என்ற துணிச்சல்.
“ஏண்டி, ஒரேமுட்டா அலட்டிக்கிறே… ஒன் அட்ரஸீ பூரா எங்கிட்டே இருக்குடி… அன்னிக்கு சொதந்தரத்துக்கு மொத நாளு மோர்மார்க்கட்டுத் துலுக்கனோட போனியே, எனக்குத் தெரியாதுன்னு நெனச்சிக்கினியா?”
- மாரிக்குச் ‘சுருக்’கெனப் பொத்துக் கொண்டு கோபம் வந்துவிட்டது. மேலே எதுவும் பேச முடியாமல், “இன்னாடி சொன்னே, அவிசாரி முண்டே!” என்று உறுமிக் கொண்டே ராசாத்தியின் கன்னத்தில் எட்டி அறைந்தாள்.
“அடி, எஞ் சக்காளத்தி” என்று மாரியாயியின் கூந்தலை எட்டிப் பிடித்துச் சிம்பினாள் ராசாத்தி.
வலி பொறுக்க மாட்டாமல் ராசாத்தியின் நெஞ்சில் குத்தினாள் மாரி. ராசாத்திக்கு வெறி அடங்கவில்லை. கூந்தலைப் பிடித்த பிடியை விடாமல் சிம்பினாள். மாரியின் கை வீச்சு காற்றைத் துழாவியது. இரண்டொரு குத்து ராசாத்தியின் நெஞ்சில் விழுந்தன. மூன்றாவது குத்து ராசாத்தியின் வயிற்றில் விழுந்தது.
“அடியே புள்ளத்தாச்சிடீ…” என்ற அலறலுடன் மாரியின் பிடரியில் அறைந்து அவளைப் பிடித்திழுத்தான் அப்பொழுதுதான் அங்கு வந்த மாரியின் புருஷன் மாணிக்கம்.
விலகி நின்ற இருவரின் முகத்திலும் கூந்தல் கலைந்து படிந்திருந்தது… ‘மூஸ்’ ‘மூஸ்’ என்று மூச்சு இளைத்தது. ராசாத்தியின் ரவிக்கை கிழிந்து தொங்க, அங்கமெல்லாம் வெளியே தெரிந்தன. தனது பெரிய வயிற்றை அசைக்க முடியாமல் பெருமூச்செறிந்தாள் ராசாத்தி.
“இன்னாம்மே, நீ என்னா பொம்பளையா, பிசாசா?… வாயும் வவுறுமா இருந்துக்கினு இப்பிடி பேயா அடிச்சிக்கிறியே… படாத எடத்துலே பட்டுதுனா இன்னா ஆவுறது…?”
“நா ஒண்ணுமே பண்ணலே, அண்ணே!” என்று அழ ஆரம்பித்தாள் ராசாத்தி.
கர்ப்பிணியான ராசாத்தி முகம் சிவந்து அழவும் மாணிக்கத்தின் மனசு என்னவோ போல் ஆகிவிட்டது.
“போம்மே, ராச்சஸி!” என்று தன் மனைவியைப் பிடித்துத் தள்ளிக்கொண்டு போனான் மாணிக்கம்.
“நீயும் வேற என்னெ அடிக்கிறியா?… அடி அடி… அந்தத் தேவடியா பெத்தது ஒனக்கு வெச்சிருந்த சோத்தைத் துன்னுட்டுப் போயிடுச்சி. அத்தெக் கேக்க வந்தா… அவ, என்னெ அங்கே போனவளே இங்கே போனவளேன்னு பேசறா… நீ வேற என்னெ அடிக்கிறே… நா ஏன்தான் பொண்ணாப் பொறந்தேனோ…” என்று நீட்டி முழக்கி ஒப்பாரி வைக்க ஆரம்பித்துவிட்டாள் மாரி.
“அதெ வாரிக்கிட்டுப் பூட… அதுதான் திருட்டுக் கொட்டா நிக்குதே. நா, எலும்பெ முறிச்சிப் பாடுபட்டுக் கஞ்சி ஊத்தறேன். இப்பிடித் திருடித் துன்னுட்டு வம்பு வலிச்சிக்கினு வருதே. இன்னிக்கு வரட்டும். கழுத்தெ முறிச்சிக் கூவ ஆத்திலே நுந்திடறேன்” என்று கருவினாள் ராசாத்தி.
ராசாத்தியின் அடி வயிற்றில் ‘சுருக்’கென வலித்தது. வயிற்றை அழுத்திப் பிடித்துக்கொண்டு தனது கூட்டினுள் போய்ப் படுத்துக் கொண்டாள்.
சட்டைப் பையிலிருந்த இரண்டனாவைத் தடவிப் பார்த்துக் கொண்டே, ‘நாஸ்டா’ பண்ணுவதற்காக டீக்கடையை நோக்கி நடந்தான் மாணிக்கம்.
இந்தச் சந்தடியில் மண்ணாங்கட்டிப் பயல் எங்கே போனான் என்று யாரும் கவனிக்கவில்லை.

