Chapter 2
மாலை மயங்கிக் கொண்டிருந்தது.
பிளாட்பாரத்தின் தூண்கள் போல் நின்றவர்கள், தூங்கிக் கிடந்தவர்கள், சோம்பிக் கிடந்தவர்கள், ஆகாயத்தைத் துழாவிப் பார்த்தவர்கள், பூமியைக் குத்திப் பார்த்தவர்கள், வயிற்றைப் பிடித்துக் கொண்டவர்கள் - ஆகிய ஆண், பெண், சிறுவர், சிறுமியர் அத்தனை பேரும், வானத்தைப் பார்க்கும் மானாவாரிக் குளம் போல் மேஸ்திரிகளுக்காக நின்று ஒவ்வொருவராகப் போய்விட்டார்கள்.
அன்னவடிவும், அவள் கணவனும், அந்தத் தேநீர் கடைக்கருகே வெறுமையாய் உட்கார்ந்திருந்தார்கள். வருவோர் போவோர் கண்குத்திப் பாம்பாய் பார்ப்பதைப் பார்த்து கீரிபோல் சீறப் போனவள், எலிபோல் அடங்கிப்போனாள். கணவனைப் பார்த்து ‘எங்கே போனாலும். டவுனுப்பக்கம் வேண்டாம்' என்று தான் சொன்னதை அவன் கேட்காமலே இங்கு வந்ததை, 'பார்த்தியாளா என்று சொல்லிக் கண்டிக்கப்போனாள்.
பிறகு கஷ்டப்படும்போது குத்திக் காட்டுவது கொலையைவிடக் கொடுமையானது என்று உணர்ந்தவள் போல் உணர்வின்றி உட்கார்ந்திருந்தாள். அவனும் மோவாய் நிமிர, முன்தலை சாய, ஆகாயத்தில் இருந்து தேவதூதன் வருவது வரையிலும் காத்திருக்கக் கங்கணம் கட்டியவன் போல், கால நேர கன பரிமாண்ங்கள் மறந்துபோய் மரத்திருந்தான். அன்னவடிவு திடீரென்று அவன் முழங்காலை ஆட்டி, மகிழ்ச்சியோடு கத்திக் கொண்டே எழுந்தாள்.
"அந்தா. மூலவீட்டு. மாமாவும். அத்தையும் வாராவ. கும்புடப் போன சாமி குறுக்க வந்தது மாதிரி" என்றாள்.
அவனும் எழுந்தான்.
ஜரிகை வேஷ்டியுடன், பட்டுப்புடவையுடன், மோதிரக் கையோடு, வைரமூக்குத்தி மூக்கோடு, மைனர் செயின் கழுத்தோடு, அரைக்கிலோ நெக்லஸ் கொத்துச் செயின் வகையறாக்களோடு திருமுருகன் கோவிலுக்கு தேங்காய் பழத்தோடு போய்விட்டு, விபூதி பிரசாதம் குங்குமம் மறைத்த நெற்றிகளோடு, அர்த்தநாரீஸ்வர உருவம்போல் உடலோடு உடல் ஒட்ட, காலோடு கால் தட்ட திரும்பிக் கொண்டிருந்த துரைப்பாண்டியும், அவரது பத்தினி வெள்ளையம்மாளும் அவர்களைப் பார்த்து ஆச்சரியப்பட்டு, அந்த ஆச்சரியத்தால் அதிர்ச்சியுற்றார்கள். துரைப்பாண்டி அனிச்சையாகக் கத்தினார்.
"என்னடா. வேலு. திடுதிப்புன்னு இந்தப் பக்கம்."
"இப்பதான் சின்னையா. முருகனை வேண்டிக்கிட்டேன். 'எங்க ஊரு ஆளு யாரையாவது கண்ணுல காட்டுன்னு மனசுல குப்பிட்டேன். அவன் ஒம்மக் காட்டிட்டான்."
"என்னடா இது. திடுதிப்பின்னு? இது ஒன் சம்சாரமா?"
அன்னவடிவு, தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள்.
"என்ன மாமா, அப்படி கேட்டுப்புட்டிய? நான் முப்புடாதி பாட்டியோட பேத்தி. இவரு உம் அய்யாவுக்கு பெரியய்யா மவனாச்சே, அத்தையும் நீரும் வயலுக்கு வந்தப்போ, இவிய தேங்காய் பறிச்சாவே. நான் தேங்காய் சீவிக் கொடுத்தேனே. அந்த ஞாபகம் இருக்கா?"
"அத்தை" சிறிது தூரம் நடந்து போய் ஒதுங்கி நின்று கொண்டாள். மாமா பிடிகொடுக்காமல் பேசினார்.
"என்னப்பா. இப்டி சொல்லாமக் கொள்ளாம."
"என்ன சின்னய்யா செய்யறது? ஊர்ல. மழை தண்ணி இல்ல. விவசாயம் நடக்கல. நாங்க நடக்க வேண்டியதாப் போச்சு."
"இந்தா பாரும். மாமா கிட்டயும், அத்தை கிட்டயும் மறைக்காமச் சொல்லும் ஒரு பெரிய மனுஷன்கிட்ட சொல்லித்தான் ஆகணும்."
"அதுவும் சரிதான். ஓம் மகிட்ட எதுக்காக சின்னையா மறைக்கணும்? நாங்க. ஊர விட்டு வந்ததுக்கு. பஞ்சம் மட்டும் காரணமல்ல. தெக்குத்தெரு நாராயணன் மகன். அடைக்கலம் தெருயுமுல்லா? அந்தப் பயமவன். இவளப் பார்த்து ஏடாகோடமாய் பேசியிருக்கான். ஒரு தடவ. கைய வேற பிடிச்சி இழுத்திருக்கான். என்னால தாங்க முடியல. கோபத்துல ரெண்டு தட்டுத் தட்டுனேன். காயமுமில்ல. ரத்தமுமில்ல. அவங்க பங்காளிவ திரண்டு வந்துட்டாங்க. இந்த எளியவனால தாக்குப்பிடிக்க முடியுமா? நம்ம பங்காளிகல்ல பெரியவரு நீரு. ஒம்ம மாதுரி எல்லோரும் மெட்ராஸ் வந்தாச்சு. நான் ஒத்தயா என்ன பண்ண முடியும்? கொலை விழுற அளவுக்கு வந்துட்டு. அதப்பத்திக் கூட கவலப்படல. இவள ராவோட ராவாய் தூக்கிக்கிட்டு போறதுக்குக்கூட திட்டம் போட்டுட்டாவ. போலீஸ்காரன் கிட்ட சொன்னால், ஒன் பொண்டாட்டிய ஸ்டேஷனுக்கு வரச் சொல்லுங்கறான். ஒண்ணும் ஒடல. ஓடி வந்துட்டோம்"
"இனுமே என்ன செய்யுறதாய் உத்தேசம்?"
இதற்குள் விலகி நின்ற அத்தை "நீங்க வாரீங்களா. நான் போகட்டுமா?" என்று சொல்லிக்கொண்டே போய் விட்டாள். துரைப் பாண்டி சொன்னதையே சொன்னார்.
"இப்போ என்ன செய்யுறதாய் உத்தேசம்?"
"அதுதான் புரியலே சின்னய்யா. ஒரு இருபத்தஞ்சு ரூபா கொடுத்தால் காய்கறி வியாபாரம் செஞ்சி பிழைச்சுக்குவேன்."
"நான் இன்னிக்கு சீட்டுப்பணம் கட்டணும். அதுக்கே இல்ல."
"இல்லன்னா உங்க மில்லுலயாவது, மளிகைக் கடையிலாவது, அரிசி மண்டியிலாவது, மரத்தொட்டியிலாவது எந்த வேலையாவது கொடுங்க. அநாதை மாதிரி நிக்கோம்."
"அது வாரதுக்கு முன்னால தெரியணும்பா. ஒன்ன மாதிரி ஆளுங்களுக்கு இடம் பொருள் ஏவல் தெரியாண்டாமா? அந்தப் பய கையைப் புடிச்சா முன்னால், பெரிய மனுஷங்கிட்டே சொல்லாம. அடிச்சால்? அவனுவ வளையலாப் போட்டிருப்பான்? காலம் கலி காலம்பா. அதுக்கு ஏத்தாப் போலே நடக்கணும். சரி நான் வரட்டுமா?"
ஒரு பாதத்தை இன்னொரு பாதம் தேய்க்க, நிலை கொள்ளாமல் நின்று கொண்டிருந்த அன்னவடிவு அருகே நின்ற மின் விளக்குக் கம்பத்தில் முதுகைச் சாய்த்து உட்கார்ந்தபடியே 'மாமாவை போகவிடுங்கள்! அவரும் இவ்வளவு நேரம் நம்மகிட்ட பேசுனதே பெரிசு" என்றாள். வேலு, அவளை கோபமாகவோ தாபமாகவோ பார்த்தபோது, துரைப்பாண்டி (அந்த வட்டாரத்தில், அவர் டி பாண்டி) நழுவி விட்டார். வேலு மனைவியின் அருகே உட்கார்ந்தான்.
இருவரும், ஒருவருடன் ஒருவர் பேசவில்லை. போனவரையும் பார்க்கவில்லை. பொழுது கழிவதும் தெரியவில்லை. வேலு தலையைச் சாய்த்து கரங்களை அதற்கு அணை கொடுத்தபடி வெறித்து நோக்கினான். அவளோ, சற்று நேரத்திற்கு முன்புவரை, ஊர்க்காரர்கள் கண்ணில் படுகிறார்களா என்று ஆர்வத்தோடு பார்த்தவள். இப்போது அவர்களின் கண்களில் விழக்கூடாது என்று நினைத்து, முகத்தைக் கவிழ்த்தபடி, முதுகை நிமிர்த்தினான். பசி மயக்கத்தை மானமயக்கம் விழுங்கிவிட்டது. திக்குத் தெரியாத இடத்தில், திசை தெரியாமல் தங்களுக்குத் தாங்களே தனிமைப்பட்ட அந்த இளம் ஜோடி, ஒருவர் இருப்பது இன்னொருவருக்குத் தெரியாதது போல், உட்கார்ந்திருந்தார்கள். நெடியதோர் நேரத்திற்குப் பிறகு, வேலு தன் பாட்டுக்குப் புலம்பினான்.
"இந்த மனுஷனோட அக்காவ இதே மாதிரி ஒருவன் கிண்டல் பண்ணியிருக்கான். உடனே எங்கய்யா அவனை அவன் வீட்ல போயி தூக்கிக்கிட்டு முச்சந்தில கிடத்தி மிதிச்சாராம். அது, அந்தக் காலம். இவரு ஒன் கைய அந்தப் பய பிடிச்சத பெரிசா நினைக்கல பாரு."
"செத்த பேச்சை ஏன் பேசறியே? ஒருவன் நம்மள உதாசீனம் செய்யறான்னா, நாமும் அவனை உதாசீனம் பண்ணனும். இவரு என்ன நமக்குப் படியளக்கிற பரமசிவமா?"
"ஒன்னக் கூட்டிவந்து திக்குத் தெரியாத காட்ல."
"சும்மா பினாத்தாதேயும். ஊர்ல இருந்ததைவிட இப்போ சந்தோஷமாத்தான் இருக்கேன். அங்கே தாலிக்கயித்த பிடிச்சுக்கிட்டே தவமிருந்தேன். இங்க எது போன்ாலும் என் தாலிக் கயிறு போகாதுங்கிற தைரியத்துலே எந்தக் கஷ்டமும் பெரிசாத் தெரியலே."
"ஏதாவது வாங்கிட்டு வரட்டுமா, கையில் இரண்டு ரூபா மிச்சமிருக்கு."
"இருக்கட்டும். அதோ பாரும். நிறைய சனங்க ரோட்லயே சோறு பொங்குறாங்க. நாமளும் பொங்கலாம். ஒரு கிலோ அரிசி இருக்கு."
"கடவுளே! ஒனக்கா இந்தக் கதி?"
"இந்த ஜனங்களப் பார்க்காம. என்னை மட்டும் பார்த்து நீரு புலம்பினால் இன்னும் மோசமான கதி வரும். சரி எந்திரியும்."
இருவரும் எழுந்து, தெருவோரத்தில், பூமியை வீடாகவும், ஆகாயத்தை கூரையாகவும் கொண்டு, சந்திர சூரியர் சாட்சியாக, சமைத்துக் கொண்டிருந்த, வேகாமல் வேகும், மனித ஜீவிகள் பக்கமாக நகர்ந்தார்கள். சாலையோர வேலிக்காத்தான்போல், ஒரு கோணியே வீடாகவும், வாசலாகவும் விளங்க, அதுவே காற்றிலாடும் திரைச் சீலையாகத் தெரிய, மனிதத்துவத்தின் எச்சங்களாய், எச்சில் படர்ந்த பகுதிகளில் சமையலுக்காக, சமைக்கப்படும் பொருள்போல் இயங்கிக் கொண்டு இருந்தார்கள்.
அன்னவடிவு, மூன்று கற்களை எடுத்து முக்கோணம் போல் வைத்தாள். கோணிப்பையைத் திறந்து, ஈயப் பாத்திரத்தை எடுத்தாள். வேலு, அதை வாங்கிக் கொண்டு, தொலைவில் இருந்த கழிப்பறை பக்கம்போய், அரைமணி நேரம் காத்திருந்து தண்ணீர் பிடித்து வந்தான். பிறகுதான், சமையலுக்கு நெருப்பும், நெருப்பிற்கு விறகும் தேவை என்பது தெரிந்தது. யாரோ காட்டிய வழிப்படி நடந்து, சுள்ளி விறகுகளை வாங்கி வந்தான். நெருப்புப் பற்றியது. நீர் கொதித்தது. காற்று அணைத்து கல்லடுப்பு சாயப்போனது. அன்னவடிவு சுட்டகல்லைப் பிடித்து சுட்ட விரல்களை குழாய் மாதிரி அடைத்துக் கொண்டு "பச்சை மிளகாயும் உப்பும் வாங்கிட்டு வாரும்" என்று சொன்னபோது, அருகே அடுப்புப் போட்டிருந்த ஒரு "வாணுமுன்னா, இந்த அம்மில துவையல் அரைச்சுக்கோ. எந்த ஊரும்மா?" என்றாள்.
இதற்குள் ஒரு பையன் வந்து "துரைப்பாண்டி முதலாளி ஒங்களை, சீ. ஒன்னை கூட்டிட்டு வரச்சொன்னார்" என்று சொல்லிவிட்டு, தன்னை பெரிய மனிதன்போல் பாவித்துக் கொண்டு வயிற்றையும் துருத்தி, வேலுவை சின்ன மனிதன்போல் பார்த்தான். அது ஊராக இருந்திருந்தால் யாருல. நீ. ஒப்பனை உதைக்கிற பயலேன்னு வேலு கேட்டிருப்பான். இது ஊரல்ல. பணக்காரர்கள் வாழும் இருபதாம் நூற்றாண்டிலும் ஏழைகள் கல் அடுப்பில் சமைக்கும் கற்காலம். மாபெரும் சென்னை நகரம். அதோடு நரகம். டா போடாமல் கூப்பிட்டானே, அதுவே பெரிய சலுகை.
அடுப்பு ஊதுவதை முடிக்காத மனைவியிடம் சொல்லிவிட்டுப் போவதற்காக வேலு நின்றான். "ஒன்னதாம்பா. எத்தனை வாட்டி சொல்றது" என்றான் அந்தப் பையன். அன்னவடிவு ஊதி முடிப்பதுபோல் தெரியவில்லை. காற்றின் மூச்சு அவள் மூச்சை களைக்க வைத்தது. களைத்தாலும், இது பிழைப்பல்லவா. எண்சாண் உடம்பின் மூலமல்லவா அவள் காற்றோடு போட்டிபோட்டு, காத்தாடிபோல் ஆடி, கூத்தாடிபோல் பல்வேறு கோணங்களில் நகர்ந்து, ஊதினான். வேலு அந்த ஊதிய மனிதரைப் பார்க்கப் போனான்.
கால்மணி நேரம் கழித்து திரும்பிய கணவனைப் பார்த்து, இன்னும் அடுப்பூதும் பெண்ணான அன்னவடிவு, "ஓங்க சின்னய்யா எதுக்குக் கூப்பிட்டாராம்?" என்றாள். வேலு எரிச்சலோடு பேசியபோது, அவள், கண்ணுள் இருட்டான புகை எரிச்சலை சகித்து, மூடிய கண்களைத் திறந்தாள்.
"இந்தத் தெருவுல சோறுபொங்கித் திங்கறதைப் பார்க்க அவருக்கு அவமானமா இருக்காம். நம்மால, நாம் பிறந்த ஊருக்கே அவமானமாம். சாதிக்கே தலைக் குனிவாம். அதனால பத்து ரூபா தாரேன். இன்னைய ராத்திரி ஹோட்டலுல சாப்புட்டுக் கழிங்க. அப்புறமாய் வேற பேட்டைக்குப் போயிடுங்கன்னு சொல்லிவிட்டு, சொல்லி முடிக்கு முன்னாலேயே, பத்து ரூபா நோட்ட திணிச்சாரு."
"ஓங்க சின்ன அய்யா கொடுத்ததை என்ன செய்தீரு?"
"என்ன செய்திருப்பேன்னு நினைக்கே?"
"திருப்பிக் கொடுத்திருப்பீர்"
"பேசாமலா கொடுத்திருப்பேன்?"
அந்தப் பேச்சத்தான் இன்னொரு தடவ பேசுமேன்?"
"சின்னய்யா. தெத்தப்படாது. திருடப்படாது. நேர்மையா எதுல வேணுமுன்னாலும் இருக்கலாம். பங்களாவுல திருட்டுச்சோறு சாப்புடுறதவிட, ரோட்ல கஞ்சிச் சோறு சாப்புடுறது எவ்வளவோ மேலு. ஏழை பாளைகளை கசக்சிக் கசக்கிப் பிழிஞ்சு கரண்ட் அடுப்புல சோறு பொங்குறதவிட. கல்லடுப்புல பொங்குற சோற வயிறு தாங்கு"முன்னு சொல்லிட்டு அவரோடு சொல்லுக்குக் காத்திராமல் வந்துட்டேன்.
"பரவாயில்லை. நான் நெனச்சது மாதிரியேதான் பேசியிருக்கியரு. கொஞ்சம் இந்த அடுப்ப ஊதும். ஊதி ஊதி என் கண்ணுதான் ஊதிப்போச்சு."
சந்தி மனிதர்களின் சாப்பாட்டு விவகாரம் முடிந்து கொண்டிருந்தது. அதுவரை தங்களோடு தெருத்தம்பதியாக வந்து சேர்ந்த அவர்களைக் கவனிக்காத அந்த தெருப்புத்திரர்கள், தங்கள் வேலைச் சிரமத்தில் - சமையல் சித்தில் - தங்களையே மறந்திருந்த அவர்கள் இப்போது அவர்களை உற்றுப் பார்த்தார்கள். 'கடிச்சிக்கா ஏதாவது வேண்டுமோ என்பதுமாதிரி தாலாவில் கஞ்சியை ஊற்றி, பச்சை மிளகாயை கடித்து வறுமைக்குச் சூடு போடுவது போல், கஞ்சியை ஊத்தி, ஊத்திக் குடித்த வேலு, மனைவியின் தட்டில், தன் தட்டில் இருந்த கஞ்சியை ஊற்றப் போக, அவள், அவன் தட்டைத் தாழ்த்தி, தன் தட்டை உயர்த்தி, தன் கஞ்சியை அவனுக்கு எடுக்கப் போக, தட்டுக்கெட்ட ஊடல்கள் நடக்கும் வீடுகளுக்கு முன்னால் தட்டு ஊடல் நடந்தது. இதர தெரு மக்கள் பேச வந்ததை மறந்து, அவர்களை ரசித்துப் பார்த்தார்கள்.
அன்னவடிவு. "தெருவுல அடுப்பு முட்டி, தின்ன வேண்டிய நிலைமை ஆயிட்டே' என்று தன்னையறியாமலே நினைத்தவள், அங்கிருந்த மனிதர்களைப் பார்த்ததும், அவர்களின் ஆதரவான முகங்களைப் பார்த்ததும், கடந்த பத்து நாட்களாக இருந்த பீதி அடியோடு அற்றுப் போனது போல், அவர்களைப் பார்த்துப் புன்னகை செய்தாள்.
கிருஷ்ணாயில் வாங்கிக் கொண்டு, அந்தப் பக்கமாக வந்த தாயம்மா கொஞ்சம் கஞ்சி குடிக்கியா' என்ற குரல் கேட்டு நிமிர்ந்தாள். பிறகு அடி ஆத்தே. கட்சில. இங்கேயே "டேரா பூட்டுட்டியா. என்று சொல்லிக் கொண்டே, , குத்துக்காலிட்டு உட்கார்ந்தாள். ரோட்டு வாழ்க்கைக்கு பரிச்சயமில்லாத அன்னவடிவை, பரிதாபத்துடன் பார்த்தாள். பிறகு அந்தப் பரிதாபத்தையே பேச்சாக மாற்றினாள்.
"ஓங்க. ஜாதி சனத்துக்கிட்ட போகாம, இப்படியா செய்யறது?"
அன்னவடிவு, ஒரு டம்ளரில் கஞ்சியை ஊற்றி, தாயம்மாவிடம் நீட்டிக் கொண்டே "எங்க சாதி சனம் இதோ இங்க இருக்கவங்கதான்." என்றாள். தாயம்மா ஆச்சரியமாகக் கேட்டாள்.
"நானும் எத்தனையோ நாட்டுப்புறப் பொம்மனாட்டிகளைப் பார்த்துக்கினு இருக்கத்தான் செய்றேன். ஆனால் ஒன்னை மாதுரி துணிச்சலாயும், சூதுவாது இல்லாமலும் பேசுற பொம்மனாட்டிய இப்பத்தான் பார்த்திருக்கேண்டிம்மா."
அன்னவடிவு சிரித்தாள். ஒவ்வொரு பல்லும், தனித் தனியாகச் சிரிப்பது போல் கொள்ளைச் சிரிப்போடு, தாயம்மாவைப் பார்த்தாள்.
அவளோ, ஏதோ ஒன்றை யோசிப்பது போல தலையை ஆட்டிவிட்டு, பிறகு வடிவின் கையைப் பிடித்துக் கொண்டே கஞ்சியைக் குடித்து முடித்துவிட்டுப் பேசினாள்.
"நீ அறியாத பொண்ணு. என்னால தெருவுல தாக்குப் பிடிக்க முடியாது. பொறுக்கிப் பயலுவ வருவாங்கோ, பக்குவமாப் பேசணும். கார்ப்பரேஷன் லாரியைப் பார்த்தா நாய் ஓடி ஒளியற மாதிரி, நீயும் சட்டிபானையோட ஒளியணும். போலீஸ்காரன் மிரட்டிப் பார்த்தால் மிரளாமப் பார்க்கணும். இதுல்லாம் ஒன்னால முடியாது. பேசாம என் குட்சையிலே தங்கிக்கோ, அப்புறம் பார்த்துக்கோலாம். அய்ய, தெ ஒன்னைத்தான். எய்ந்திரு."
அன்னவடிவு கிராமத்தில் தனக்கு ஏற்பட்ட அவமானப் பின்னணியில் யோசிப்பவள் போல், கோவிலில் உள்ள தட்சிணாமூர்த்தி சிலையின் தோரணையில் ஆகாய வெளியில் அளவளாவுகிறவள் போல் பார்த்தாள்.
தாயம்மாவுக்கு, இப்போது அவள் தன்னோடு வரவேண்டும் என்பது தவிர, உலகில் வேறு எந்த லட்சியமும் இருப்பதாகத் தெரியவில்லை.
"ஏன் யோசிக்கிற? கடிச்சா தின்னுடப் போறேன்? எய்ந்திருமே. இந்தாப்பா ஒன்னத்தான், கோணியக்கட்டு நாலு நாளிக்கி இருந்துக்கலாம். அப்புறமா ஆனது ஆவட்டம். எனக்காக விட்டுக் கொடுத்த மவராசிப் பொண்ணு, நானு, கண்ணுக்கு முன்னாடியே பாத்துக்கினு இருக்கணுமுன்னு ஒரு ஆச."
அன்னவடிவு, தாயம்மாவைப் பார்த்தாள். பாகவதர் தலைமாதிரி அடர்த்தியாக இருந்தாலும், குட்டையாக இருந்த தலைமுடி, காதுகளை மறைக்க, உள்ளத்தைப்போல பெரிய கண்களோடு, உதடுகள் நேயத்தால் துடிக்க, வருடக்கணக்கான பழக்கத்தை, அதுவும் உறவு கலந்த பழக்கத்தை, ஒரு நொடிப் பழக்கமாக மாற்ற வைத்துவிட்டாள் இந்தம்மா, இதே இந்தத் தெருவில், அரைமணி நேரப் பழக்கத்தை, ஆயுள் பழக்கமாகக் கருதும் அந்த தாயம்மாவின் கழுத்தைக் கட்டிப் பிடித்துக் கொண்டாள், அன்னவடிவு தன்னையறியாமலே, விம்மப் போனாள்.
காலிப்பயல் ஒருவன் கையைப் பிடித்ததைப் பெரிதாக நினைக்காமல், 'இவளால கொலயே விழும் போலுக்கே" என்ன நடந்துதோ. ஏது நடந்ததோ. எவனாவது இசகுபிசகாப் பாத்திருப்பான். புருஷனுக்குத் தெரிஞ்சிடப் போவுதுன்னு இவள் முந்திக்கிட்டாள். கொலையும் செய்வாள் பத்தினி என்கிறது சும்மாவா? பொம்புள பேச்ச அப்படியே நம்பப்படாது" என்று ஊர் பொம்பிளைகளே பேசியதைக் கேட்டு, தன்னுள் மருகி, தனிமைப்பட்டு, தவியாய் தவித்து, நெருப்பாய் கொதித்து, பனியாய் உறைந்து பழக்கப்பட்ட அன்னவடிவால், தாய்மையின் தத்துவத்தை பெயரில் மட்டுமல்லாது பிறவியிலேயே கொண்டவள்போல் துலங்கிய தாயம்மாவை, விடாப்பிடியாகப் பிடிப்பவள் போல் பிடித்துக்கொண்டாள். பிறகு அழுவதை அவமானமாகக் கருதுபவள்போல், திடீரென்று எழுந்து சிறிது தூரம் நடந்து, தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு, திரும்பி வந்தாள்.
தாயம்மா, தன் கழுத்தில் தெறித்த ஈரத்துளிகளைத் துடைத்துவிட்டு, எதுவும் பேசாமல் பாத்திரங்களை எடுத்து, அருகே இருந்த கோணிக்குள் திணித்தாள். அவளின் அன்பு போல் அந்தக் கோணியும் பெருத்துக் கொண்டிருந்தது.

