Chapter 1

சுதேச மித்திரன் 25.11.1915

ஐரோப்பிய வைத்தியம் சிறந்ததா? நாட்டு வைத்தியம் சிறந்ததா?

ஐரோப்பிய வைத்தியத்தின் சார்பாக இருப்போர் சொல்லுகிறார்கள்:- "எங்கள் வைத்தியம் சயன்ஸ்படி நடத்தப்படுகிறது. (சயன்ஸ் என்பது தற்காலத்து ஐரோப்பிய இயற்கை சாஸ்திரம்). 'உடலுக்குள் என்னென்ன கருவிகள் உண்டு? அவை எப்படி வேலை செய்கின்றன?' என்ற விஷயம் நாட்டு வைத்தியருக்குத் தெரியாது. தொற்று வியாதிகளுக்கு ஆதாரமான, கண்ணுக்குத் தெரியாத துளிப்பூச்சிகளின் செய்தியெல்லாம் நாட்டு வைத்தியர் படித்ததில்லை. மருந்துகளின் தொழில் மர்மங்களெல்லாம் நன்றாகத் தெரியவேண்டுமானால் ரசாயன சாஸ்திரம் கற்றிருக்க வேண்டும். நாட்டு வைத்தியருக்கு அந்த சாஸ்திரம் தெரியாது. நாட்டு வைத்தியத்தால் ஜனங்கள் பிழைப்பது ஒரு அச்சரியமேயன்றி வேறில்லை''.

நாட்டு வைத்தியத்தின் கட்சியார் சொல்லுகிறார்கள்:- ''அந்த ஐரோப்பிய சாஸ்திரங்களையெல்லாம் ராஜாங்கத்தார் எளிய தமிழில் மொழி பெயர்த்து வெளியிடுவார்களானால் நாங்கள் படித்துக் கொள்ளுவதில் ஆட்சேபமில்லை. ஆனால் வைத்தியனுக்கு முக்கியமாக வேண்டியது நோய் தீர்த்துவிடுதலே. இதில், இந்த தேசம் சம்பந்தப்பட்டவரை, ஐரோப்பிய வைத்தியரைக் காட்டிலும் எங்களுக்கு அதிகத் திறமையுண்டு. எங்களுடைய பூர்வீக மருந்துகளே இந்த தேசத்து சரீர நிலைக்கு அனுகுணமாகும்; இதை வேண்டுமானால் சோதனை செய்து பார்க்கலாம்''.

எனது நண்பர் ஒரு யோகீச்வர் இருக்கிறார். அவரிடம் இந்த இரண்டு கட்சிகளையும் சொன்னேன். அவர் சொல்லுகிறார்:- ''ஒருவனுக்கு வியாதிகள் வராதபடி தடுத்துக் கொள்வது நலம். தன்னை மீறி வந்தால்-நல்ல காற்று, நல்ல நீர், நல்ல வெளிச்சம், சுத்தமான உணவு, இயன்றவரை சரீர உழைப்பு, மனோதைரியம், சந்தோஷம் இவற்றால் பெரும்பான்மையான நோய்கள் இயற்கையிலேயே சொஸ்தமாய் விடும். வைத்தியர் அவசியமென்ற ஸ்திதிக்கு வந்துவிட்டால் பிறகு தெய்வ பலமுள்ளவர்கள் நிச்சயமாகப் பிழைப்பார்கள். சாகத்தான் வேண்டுமென்று தீர்ந்தால், அயல்நாட்டு மருந்தினால் சாவதைக் காட்டிலும், நாட்டு முறைப்படி சாவது நல்லது.

"நாட்டு வைத்தியம்" என்ற பேச்செடுத்ததிலிருந்து எனக்கு வேறொரு செய்தி யோசனைக்கு வருகிறது.

நமது ஜனங்களுடைய உடம்பைப் பற்றிய வியாதிகளுக்கு மருந்து கொடுப்பதைப் பற்றிப் பேசினோமா? அதிலிருந்து, நம்மவர்களின் ஆத்மாவைப் பற்றிய வியாதிகளுக்கு மருந்து கொடுக்கும் பெரிய வைத்தியத்தின் விஷயம் ஞாபகத்துக்கு வந்துவிட்டது.

'இந்த உலகத்து மேன்மைகளெல்லாம் அநித்யம். ஆகையால் நமக்கு வேண்டியதில்லை. செல்வத்தையும் கீர்த்தியையும் தேடி முயற்சி செய்பவன் அஞ்ஞானத்தில் அழுந்திக் கிடக்கிறான். நாம் ஆத்மலாபத்தை விரும்பி இவ்வுலகத்தை வெறுத்துத் தள்ளி விடவேண்டும்" என்பது ஒருமுறை.

மடங்களிலேயும், காலசேபங்களிலும், பஜனைக் கூட்டங்களிலும் புராண படனங்களிலும் மதப் பிரசங்களிலும், பிச்சைக்காரர் கூட்டத்திலும், வயது முதிர்ந்தோர் சம்பாஷணைகளிலும்-எங்கே திரும்பினாலும், நமது நாட்டில் இந்த "வாய் வேதாந்தம்" மலிந்து கிடக்கிறது.

"உலகம் பொய்; அது மாயை; அது பந்தம்; அது துன்பம்; அது விபத்து; அதை விட்டுத் தீரவேண்டும்" இந்த வார்த்தை தான் எங்கே பார்த்தாலும் அடிபடுகிறது. ஒரு தேசத்திலே படித்தவர்கள், அறிவுடையோர், சாஸ்திரக்கார் எல்லோரும் ஒரே மொத்தமாக இப்படிக் கூச்சலிட்டால், அங்கே லௌகிக காரியங்கள் வளர்ந்தேறுமா? மனம்போல வாழ்க்கையன்றோ?

பூர்வமதாச்சார்யர் 'பாரமார்த்திக' மாகச் சொல்லிப்போன வார்த்தைகளை நாம் ஓயாமல் லௌகிகத்திலே சொல்லிக் கொண்டிருப்பது சரியா? வெகு ஜனவாக்கு நமது தேசத்தில் பலித்துப் போய் விடாதோ? இகலோகம் துன்பமென்றும் நம்பினால், அது துன்பமாகத் தான் முடியும். இந்த உலகம் இன்பம். இதிலுள்ள தொழில். வியாபாரம், படிப்பு, கேள்வி, வீடு, மனைவி மக்கள், எல்லாவற்றிலும் ஈசன் அளவிறந்த இன்பத்தைக் கொட்டி வைத்திருக்கிறான். விதிப்படி நடப்போர் இந்த ஸ¤கங்களை நன்றாக அனுபவிக்கிறார்கள். ஈசனுடைய விதி தவறும் கூட்டத்தார் துன்பமடைகிறார்கள்.

* * *

"வேதாந்தம்" மற்றொரு சமயத்திலே பார்த்துக் கொள்வோம். "சட்டசபை" சங்கதியொன்று பேசலாம். சேலத்து ஸ்ரீ நரசிம்மையர். சிறு பிள்ளைகள் சுருட்டுக் குடிப்பதைக் குறைக்க வேண்டுமென்று சென்னைப் பட்டணம் சட்டசபையில் பேசப் போவதாகத் தெரிகிறது. இந்த விஷயத்தை மேற்படி வழக்கமுடைய ஒரு சிறு பிள்ளையிடம் நான் சொன்னேன். ''என்ன சட்டந்தான் கொண்டு வரட்டும். நான் சுருட்டுப் பிடிப்பதை அவர்களாலே தடுக்க முடியாது'' என்று அந்தப் பிள்ளை சொல்லுகிறான். புகையிலை ஆகாரத்தைக் குறைத்து விடுமென்று வைத்திய சாஸ்திரம் சொல்லுகிறது. அப்படியிருந்தும், அதை வழக்கமாகக் கொண்டவர்கள் விட மனமில்லாமலிருக்கிறார்கள். ஆனாலும், புகையை நம்பி உணவை வெறுக்கும் மனிதர்களை இந்த ஒரு விஷயத்தில் தானாபார்க்கிறோம்?