Chapter 1
'டிரிங்... டிரிங்... டிங்...'
- மை பிளேட் சுற்றுகிறது.
மை ரோலர்கள் மேலும் கீழும் ஓடுகின்றன.
'டங் - டட்டங்க்!'
- இம்ப்ரஷன்!
'டடக்... டடக்... டடக்... டடக்...'
- மூங்கில் குச்சி போன்ற ஒரு கால் பெடலை மிதிக்கிறது. ஆம் - அந்த இயந்திரத்தின் உயிர் அதில்தான் இருக்கிறது!
இந்தச் சப்தமேள சம்மேளத்தின் அர்த்தம்? - இருண்ட குகை போன்ற அந்தச் சிறிய அச்சுக்கூடம் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதுதான்!
அந்த அச்சுக்கூடத்திற்கு வயசு இருபதுக்குமேல் ஆகிறது. அங்கே நடக்கிற சராசரி வேலை கலியாணப் பத்திரிகைதான். சமயா சமயங்களில் 'பில் புக்'குகள், 'லெட்டர் பேடு'கள், 'விஸிட்டிங் கார்டு'கள் இத்யாதி வேலைகளும் இடம் பெறும். அங்கிருப்பதெல்லாம் அந்த 'டிரெடி'லைத் தவிர நாலைந்து 'ஜாப் டைப்கேஸ்'களும் ஒரு சிறிய 'கட்டிங் மிஷி'னும்தான்! - சின்ன பிரஸ்தானே? அப்படி என்ன பிரமாத லாபம் கிடைத்துவிடப் போகிறது?
ஆனால் பிரஸ்ஸின் முதலாளியான முருகேச முதலியார் மட்டும் இருபது வருஷங்களூக்குப் பின் எப்படியோ தமக்கென்று ஒரு சின்ன வீடு கட்டிக் கொண்டு விட்டார்.
கம்பாஸிட்டர் + பைண்டர் + மெஷின்மேன் எல்லாம் - அதோ, டிரெடிலின் அருகே நின்று 'வதக் வதக்'கென்று காலை உதைத்துக் கொள்ளுகிறானே, வினாயகமூர்த்தி - அவன்தான்!
மாதம் இருபது ரூபாய்க்குப் பஞ்சமில்லை. சில சமயங்களில் முதலியாரின் 'மூடு' நன்றாக இருந்தால் டீ குடிக்க, 'நாஸ்டா' பண்ண என்ற பேரில் கிடைக்கும் எக்ஸ்ட்ரா வரும்படியையும் சேர்த்தால் நிச்சயம் மாதம் முப்பது ரூபாய்க்கு மோசமில்லை!
வினாயகமூர்த்தி அந்த அச்சுக்கூடத்தில் 'ஸ்டிக்' பிடித்துக் 'கம்போஸ்' செய்ய ஆரம்பித்தது பன்னிரண்டு வருடங்களுக்கு முந்தி. அவன் முதன்முதலில் செய்த முதல் கம்போஸ் ஒரு கலியாணப் பத்திரிகைதான். அன்று முதல் எத்தனையோ பேருக்கு அவன் கையால் எத்தனையோ விதமான கலியாணப் பத்திரிகைகள் அச்சடித்துக் கொடுத்திருக்கிறான். ஆனால் தனக்கு..?
'எத்தினி பேருக்கு நம்ப கையாலே கலியாண நோட்டிஸ் அடிச்சிக் குடுத்திருக்கோம்... ஹ்ம்...'
இவ்விதம் நினைத்துப் பெருமூச்சு விடும் வினாயகத்துக்கு இப்போது வயது முப்பது ஆகிறது.
'இந்த ஓட்டல்லே போடற ஆறணா சோத்தை எவ்வளவு நாளைக்கு துன்னுகிட்டுக் கெடக்கிறது?...'
வினாயகத்தின் கை 'பிரேக்'கை அழுத்திற்று. 'பெட'லை உதைத்த கால் நின்றது. டிரெடிலின் ஓட்டம் நின்றது...
- அருகிலுள்ள மை டின்கள் வைக்கும் ஸ்டாண்டின் சந்தில் அவன் விரல்கள் எதையோ துழாவின. விரலில் சிக்கிய பொடி மட்டையைப் பிரித்து ஒரு சிமிட்டா பொடியை உறிஞ்சியவுடன், பொடியைத் துடைத்த புறங்கை அவன் மூக்கின் மீது மையைப் பூசியது!
அதைக் கவனிக்காமல் அருகே காயப்போட்டிருக்கும் பத்திரிகைகளில் ஒன்றை அவன் எடுத்துப் பார்த்தான்.
'மய்யிதான் இன்னா ஈவனா சப்ளை ஆயிருக்கு... எதுக்கும் அந்தக் கீழ் ரோலரை மாத்திட்டா 'ஸம்'முனு இருக்கும்... இம்ப்ரஷன் கொஞ்சம் கொறைக்கலாமா?... த்ஸ் உம் பரவாயில்ல... ஐயய்யோ!... இந்த எழுத்து இன்னா படலையே! மொக்கையா, இன்னா எழவு? கொஞ்சம் ஒட்டிக்கினா சரியாப் பூடும்."
இந்தச் சமயத்தில் 'ஏய், இன்னாடா மிசினை நிறுத்திட்டே? அந்த ஆளு இப்ப வந்துடுவான்டா!" என்று முதலியார் குரல் கொடுத்தார்.
"ஒரு நாலணா குடு ஸார்! காத்தாலே நாஸ்டா பண்லே; போயிட்டு வந்து மிச்சத்தைப் போடறேன்..."
"சீக்கிரம் வா. வேலெ நெறைய கெடக்கு!" என்று நாலணாவை எடுத்து மேசைமீது வைத்தார் முதலியார்.
"ஆவட்டும், சார்!"
- இது அவனது வழக்கமான பதில்.
காசை எடுத்துக்கொண்டு டீக்கடைக்கு நடந்தான்.

